மானியத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் சூழ்ச்சிகள்!

-சாவித்திரி கண்ணன்

விவசாயிகளையும், விவசாயத்தையும் ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில்  மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள் தருவதாக சொல்கின்றன! இப்படி பல்லாயிரம் கோடிகள் விவசாயிகளுக்கு தரப்படுவதாக சொல்லப்பட்டாலும், விவசாயிகள் ஏன் வறுமையில் உழல்கிறார்கள்..?

இந்தியாவில், ‘விவசாயிகளுக்கு அள்ளித் தருகிறோம்’ என்ற கணக்கில் பல ஆயிரம் கோடிகள் விவசாய மானியங்களாக கணக்கு காட்டப்படுகின்றன! இவ்வளவு கோடிகள் தந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொன்ன போதிலும், நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக ஏன் மாறிக் கொண்டிருக்கிறது?

இந்த நாட்டில் வரலாறு நெடுக பார்த்தோமென்றால், விவசாயிகள் தரும் வரி வருமானத்தைக் கொண்டு தான் மன்னாதி மன்னர்களே ஆட்சி செய்துள்ளனர்! ஆனால், மக்களாட்சி மலர்ந்த பிறகு வள்ளல்களாக  இருந்த விவசாயிகள் எப்படி வறியவர்களாக மாற்றப்பட்டு உள்ளனர் என்பதற்கு தான் இந்தக் கட்டுரை விடை தருகிறது.

தற்போது இன்னின்ன வகைகளில் விவசாய மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அவை; விதை மானியம், உரம் மானியம், நீர்ப்பாசன மானியம், மின்சார மானியம், ஏற்றுமதி மானியம், கடன் மானியம், விவசாய உபகரணங்கள் மானியம், விவசாய உள்கட்டமைப்பு மானியம் என 8 பிரிவாக  வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விதைக்கான மானியமா? வில்லங்கத்திற்கான மானியமா?

நமது பாட்டன் காலத்தில் விவசாயிகள் விதையை விலை கொடுத்து வாங்கியதே இல்லை. அது அவரவர் வீட்டின் சேமிப்பு கிடங்கில் இருந்ததாகும்! ஆனால், பாரம்பரிய விதைகளை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டு, வீரிய விதைகளை வம்படிக்க திணித்தது நவீன அரசாங்கம். இன்று விதை ஆராய்ச்சிக்காக பல நூற்றுக்கணக்கான கோடிகள் செலவழிக்கபடுகின்றன. அதிக மகசூல் தரும் விதைகள் விற்பனை செய்கிறோம் என்ற வகையில், பற்பலவீரிய விதைகளை உருவாக்க தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒரு பெரும் தொகையை எம்.எஸ்.சுவாமிநாதன்  போன்றவர்களின் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அள்ளித் தருகிறது அரசாங்கம்!  இந்த ஆராய்ச்சி செயல்முறைகளுக்கான செலவை விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தின் ஒரு பங்காக எழுதிவிடுகிறது அரசு! உண்மையில் இந்த விதைகள் தான் இந்திய விவசாயத்தின் பாரம்பரிய விதைகளை காணாமலடித்த மிகப் பெரிய வில்லன்களாகும். மேலும், இந்த வீரிய விதைகளுக்கு இயற்கை உரம் பொருந்தாது, ரசாயன உரங்கள் அத்தியாவசியமாகும். இது பற்றித் தனியாக ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்.

உபயோகமற்ற உரமானியம்;

குறைந்த விலையில் இரசாயன அல்லது இரசாயனமற்ற உரங்களை விவசாயிகளுக்கு விநியோக்கிறோம் என்ற பெயரில் உர மானியம் தரப்படுகிறது.. இது நேரடியாக ஸ்பிக் போன்ற உர உற்பத்தியாளர்களுக்கு பல நூறு கோடிகளாக வழங்கப்பட்டுவிடும். ஆனாலும், அவங்க விவசாயிகிட்ட காசு வாங்கித் தானே உரம் தருகிறார்கள் என நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில் நாங்க அவருக்கு மானியம் தருவதால் தான் உங்களுக்கு குறைந்த விலைக்கு உரத்தை தருகிறார்கள் என்பதாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டு விவசாயிகள் நிலத்திற்கான உரத்தை தாங்களே தங்கள் சூழல்களில் இருந்து செலவில்லாமல் உற்பத்தி செய்து வந்தனர். ஆனால், அப்படியான விவசாயிகளை எல்லாம் தற்போது இந்தப் பெரு நிறுவனங்களைச் சார்ந்து வாழும்படி செய்துவிட்டதோடு, பெரு நிறுவனங்களை வாழ வைத்துக் கொண்டுள்ளது அரசாங்கம்!

உதாரணத்திற்கு தஞ்சை ஒரத்த நாடு பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறுவதாவது; சார் ஒரு ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் கடன் தருகிறோம் என வம்படியா கூப்பிட்டாங்க வங்கியில். சரின்னு போனா, அதுல 4,000 ரூபாய்க்கு இராசயன் உரத்தைக் கொடுத்து பணத்தை புடுச்சுகிட்டாங்க. ஆனா அந்த உரம் எனக்கு தேவைப்படலை. அது வேண்டாம் என்றால், இதை எடுத்துக்கோ என நகராட்சி குப்பைகளைக் கொண்டு வந்து இயற்கை உரம் என்று வயலில் கொட்டி அதற்கு என் பெயரில் ஒரு கணக்கு எழுதிடறாங்க! அந்த உரமோ பயன்படுத்தக் கூடிய நிலைமையில் இல்லை என்பது மட்டுமின்றி நிலத்தை பாழ்படுத்துவதாக உள்ளது’’ என்றார் கணேசன். ஆக, இது தான் உரமானியத்தின் லட்சணம்!

நிர்மூலமாக்கப்பட்ட பாரம்பரிய நீர் மேலாண்மை

ஆற்றுப் பாசனம், கால்வாய் பாசனம், குளத்து நீர் பாசனம் என பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்தவற்றை சரியாக பராமரிக்காமல் ஒழித்துக் கட்டி விட்டனர்! விவசாயத்திற்கான தண்ணீர் என்பதை இயற்கையில் பெற்ற நிலையை மாற்றி, அதை காஸ்ட்லியானதாக்கி, அதற்கு மானியம் தருகிறார்கள்!

நீர்ப்பாசன மானியம் பம்ப் செட், ஆழ்துளை கிணறுகள், குழாய் கிணறுகள் மற்றும் பல நீர்ப்பாசன முறை போன்றவைகளில்  விவசாயிகளை முதலீடு செய்ய வைக்க ஊக்குவிக்கிறது நீர்பாசன மானியம் . அதாவது ஒழுங்காக நீர் மேலாண்மை செய்து தண்ணீரை விவசாயிகள் இயற்கையாக பெற முடியாமல் செய்துவிட்ட அரசாங்கத்தின் கையாலாகத்தனத்திற்கு மாற்றாக விவசாயிகளை செலவழிக்கத் தூண்டுகிறது!

ஷாக் அடிக்கும் மின்சார மானியம்

மின்சாரம் விவசாயிகளுக்கு கட்டணமில்லாமல் மாநில அரசால் தரப்படுகிறது!  விவசாயிகளுக்கு அவர்கள் பெறும் மின்சாரத்திற்கான கட்டணத்தை மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு சுளையாக அள்ளிக் கொடுக்கிறது அரசாங்கம்!

ஏடா கூடமான ஏற்றுமதி மானியம்

இந்த மானியம் விவசாயிகளுக்கு தரமான விவசாய உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தூண்டுகிறது. இதை விவசாயிகளின் பெயரால் பெரும்பாலும் ஏற்றுமதி யாளர்களே பெற்று அனுபவிக்கின்றனர். ‘இந்தியாவின்  முதல் தரத் தேயிலை, ஏலக்காய், மிளகு, முந்திரி பருப்பு உள்ளிட்ட பல உயர்தர பொருட்கள் ஏற்றுமதிக்கு பிறகு தான் உள்ளூர் மக்களுக்கே’ என்பது தான் அரசின் அறிவிக்கப்படாத பாலிசியாகும்.

இது பற்றி கேட்டால், ”உலக அளவில் போட்டியிட , ஏற்றுமதி மானியங்கள் என்பது ஏற்றுமதியைத் ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் நிதிச் சலுகைகள் ஆகும்”என அரசாங்கம் ஜால்ஜாப்பு செய்யும்.

 வேளாண் உபகரணங்கள் மானியம்

வேளாண்மை இயந்திரமயமாக்கலின் திட்டமாக பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில அரசுகள் மூலம் விவசாயிகளுக்கு விவசாய பணிகளுக்காக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் மானியமாக வழங்கப்படுகின்றன. இது எந்த லட்சணத்தில் தரப்படுகிறது என்பதற்கு தஞ்சை விவசாயி தங்கசாமி திருப்பதியின் அனுபவமே சாட்சியாகும். ”சார், நான் அரிசியை மதிப்புக் கூட அவல் தயாரிக்கும் இயந்திரம் வாங்க கடன் கேட்டேன். அவர்களோ மரச் செக்கு எண்ணெய் ஆட்டும் இயந்திரம் வாங்க ரூ 2, 30,000 கடன் தருவதாகத் தெரிவித்தனர். இதில் ஒரு லட்சம் நான் முதலீடு செய்ய வேண்டும் என்றனர். மீதியை மானியமாகத் தருவதாகச் சொல்லி கோவையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் வாங்க பரிந்துரைத்தனர். நான் விசாரித்த போது அந்த இயந்திரத்தின் ஒரிஜினல் மதிப்பே 1,30,000 தான் என்றனர். ஒரு லட்சம் செலவழிக்கும் எனக்கு கூடுதலாக 30,000 செலவழிக்க முடியாதா? எதற்கு கடன் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்” என்றார்.

விவசாய உள்கட்டமைப்பு மானியம்!
விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்கு, நல்ல சாலைகள், சேமிப்பு வசதிகள், மின்சாரம், சந்தை நுண்ணறிவு, துறைமுகங்களுக்கு போக்குவரத்து போன்றவை அவசியம் என்ற பெயரில் சாலை போட்டதற்கும் விவசாய மானியமாக கணக்கு காட்டுகிறார்கள்!

ஆக, விவசாயிகள் பெயரால் எப்படியெல்லாம் பணம் செலவழிக்கப்படுகின்றன, அதில் அதிகார வர்க்கமும், தனியார் முதலாளிகளும் எப்படி பலன் அடைகின்றனர் என்பதை கவனித்தால் கடைசி வரை இவர்கள் காலமெல்லாம் விவசாயியை பிச்சைக்காரனாக வைத்திருப்பார்களே அன்றி தற்சார்பை நோக்கி விவசாயிகள் செல்வதை விரும்பமாட்டார்கள் என அறியலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time