ஜான் லுக் கோடார்டு : சினிமாவுக்கு விடுதலை தந்த கலைஞன்!

-தயாளன்
ஜான் லுக் கோடார்டு என்பவர் ஒரு கலையுலக புரட்சியாளர்! இலக்கணங்களை மீறிய இலக்கியமாக சினிமாவைக் கையாண்டவர்! வணிகத்தை மையப்படுத்திய சினிமாக்களுக்கு இடையே வாழ்க்கையை மையப்படுத்திய சினிமாவை தந்தவர்! உலக சினிமாவின் உன்னத முன்னோடியாக பார்க்கப்பட்டார்!

“ஒரு சினிமாவுக்கு ஒரு தொடக்கம், ஒரு நடுப்பகுதி, ஒரு முடிவுப்பகுதி இருக்க வேண்டும்; ஆனால் அவை அந்த வரிசையில் இருக்க வேண்டியதில்லை” என்கிற புரட்சிகரமான கோட்பாட்டை சினிமா உலகுக்கு அளித்த ஜான் லூக் கோடார்டு என்னும் மகத்தான சினிமா கலைஞன் கடந்த செப்டம்பர் 13ம் நாள் தனது மரணத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

சினிமா எனும் மகத்தான கலை,  கதாநாயகர்களின் கலைவடிவமாகவும், பெரு நிறுவனங்களின் ஸ்டூடியோ கட்டமைப்புக்குள்ளும் சிக்குண்டு கிடந்ததை பார்த்து வெடித்துக் கிளம்பிய ப்ரெஞ்சு புதிய அலை இயக்குனர்களின் தலைமகன் கோடார்டை பற்றி புரிந்து கொள்வதற்கு முன் அப்போதிருந்த சினிமாவை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 1930ஆண்டு பிறந்த கோடார்டு, தனது 20 வது வயதில் சினிமா குறித்த விமர்சனங்களை எழுதி வந்தார். அந்த்ரே பசின் என்கிற மிக முக்கிய இயக்குனரின் சினிமா இதழில் விமர்சனங்களை எழுதியதோடு, அப்போதிருந்த சினிமா உருவாக்கத்தையும் சினிமா உலகத்தையும் கடுமையாகச் சாடி வந்தார்.

ராபர்ட் பிரஸ்ஸோன், ப்ரான்சிஸ் த்ரூபோ  ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய கோடார்டு பிரெஞ்சு புதிய அலை சினிமாக்களின் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். அவருடைய ப்ரெத்லெஸ் (1960) என்னும் படமே அவருடைய சினிமா வருகைக்கு கட்டியம் கூறியது.  படம் முழுக்க கேமராவை கையால் எடுக்கும் (Hand-Held) முறையை பின்பற்றி படம் பிடிக்கப்பட்டது.  ஒளிப்பதிவுக்கு என்று தனியாக ஒளிக்கருவிகள் (Lights) எதுவும் பயன்படுத்தாமல் அந்தப் படத்தை எடுத்தார் கோடார்டு.  அவர் படமெடுக்கும் முறையைக் கண்டு பலர் நகைத்தனர். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், தான் நினைத்ததை சாதித்துக் காட்டினார் கோடார்டு.

படத்தொகுப்பில் மரபான எடிட்டிங் முறைக்கு மாற்றாக பல்வேறு முயற்சிகளை செய்தார் கோடார்டு. கண் அசைவு (Eye Matching Continuity) தொடர்ச்சியை நிராகரித்தார். ஜம்ப் கட் எனப்படும் முறை தாண்டிக் குதிக்கும் எடிட்டிங்கையும் தொழில் முறையில் அறிமுகப்படுத்தினார். அவருக்கு முன்பு ஜம்ப் கட் என்பது ஒழுங்கின்மையாக கருதப்பட்டது.  ஆனால், அதை அனாயசமாக தனது ‘ப்ரெத்லெஸ்’ படத்தில் செய்து காட்டினார். சினிமாவுக்கு நடிகர்கள், செட்கள் ஆகியவற்றைக் காட்டிலும் கேமரா கோணங்களும், படத்தொகுப்புமே முக்கியமானவை என்பதை அவர் ஆணித்தரமாக நிரூப்பித்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிய அவர் ப்ரெஞ்சு புதிய அலை சினிமாக்கள் உருவாக காரணமாக இருந்தார்.  ஒழுங்கற்ற எடிட்டிங்,  இயற்கையான ஒளி, நேரடியாக தெருக்களில் படம்பிடிப்பது என்று, அதுவரை சினிமா கண்டிராத அணுகுமுறையை கடை பிடித்தார்! மரபான சினிமாவில் கட்டி காப்பற்றப்பட்டு வந்த அத்தனை முறைமைகளையும்,கோட்பாடுகளையும் தலைகீழாக கவிழ்த்தார் கோடார்டு. ஒரு வகையில் சினிமாவின் ஒழுக்கவிதிகளை தகர்த்தார்.

கடைசி வரை இடதுசாரி ஆதரவாளராக இருந்த கோடார்டு, சினிமாவை அரசியல் கலையாக கருதினார். பெரு நிறுவனங்கள் சினிமாவை வணிகமாக பயன்படுத்துவதை எதிர்த்து வந்தார்.  வெர்தோவ் என்னும் மகத்தான சோவியத் இயக்குனரை தனது முன்னோடியாக கொண்டு தனது படங்களில் சினிமா நிஜத்தை காண்பித்தார்!

1960 முதல் 70கள் வரைக்கும் சினிமா போராளியாகவே தொடர்ந்து இயங்கி வந்தார்.  அவர் பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறார். சினிமா குறித்த அவரது பார்வைகள் புரட்சிகரமாக இருந்தது.  2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13ம் நாள் தனது 91வது வயதில் தற்கொலை செய்து கொள்ள உதவும்படி சுவிஸ் அரசின் அனுமதி கோரினார்.  சட்டபூர்வ தற்கொலைக்கு அந்நாடு கோடார்டு என்ற மகத்தான கலைஞனுக்கு அனுமதி அளித்தது. அதன்படி தனது வாழ்வைப் போலவே, மரபான வழிக்கு மாற்றாக, மரணத்தை விதியாக அல்லாமல் தனது தேர்வாக செய்து கொண்டார் கோடார்டு.

சினிமா என்பது 24 ப்ரேம்களில் செய்யப்படும் உண்மை என்று அவர் உரக்கச் சொன்னார். கோடார்டுக்கான இரங்கல் செய்தியில் ப்ரெஞ்சு அதிபர் மேக்ரோன் “அவர் சினிமாவை விடுதலை செய்த ப்ரான்ஸின் மகத்தான மேதை” என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு 2011ல் ஆஸ்கர் விருது அளிக்கப்பட்ட போது “புதிய வகை சினிமாவை உருவாக்கியதற்காக” இந்த விருது அளிக்கப்படுவதாக பிரகடனம் செய்யப்பட்டது. கோடார்டு உலக சினிமாவின் பல்வேறு படைப்பாளிகளை பாதித்திருக்கிறார்.  இன்றைய சினிமா உலகில் பெரும் இயக்குனர்களான, குவாண்டின் டோராண்டினோ, மார்டின் ஸ்கார்சிஸ் போன்றவர்கள் கோடார்டை தங்களது முன்னோடியாக கருதுகின்றனர்.

கோடார்டின் படங்களில் கதையை விட சினிமா அனுபவமே முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது.  அவரின் நான்லீனியர் சினிமாக்கள் ஏற்படுத்திய அதிர்வலைகள் சினிமாவை புரட்டிப் போட்டு விட்டது.  திரைப்பட விமர்சகரான அஜயன் பாலா “கோடார்ட் சினிமா இயக்குனர்களின் டான்” என்று குறிப்பிடுகிறார்.  திரைப்பட ஆய்வாளரான வெங்கடேஷ் சக்ரவர்த்தி “மரபை உடைத்த கலைஞன் கோடார்டு” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.  உலகெங்கிலும் உள்ள சினிமாக்காரர்களை கோடார்டு பாதித்த அளவுக்கு வேறு எவரும் பாதித்து இருப்பதாக சொல்லிவிட முடியாது.

சினிமாவை அதன் அடிமைத்தளைகளிலிருந்து விடுவித்த கோடார்டு என்னும் மாபெரும் கலகக்காரனின் மரணமும் அவரது சினிமாவைப் போலவே முடிந்து போயிருக்கிறது.  ஜம்ப் கட் கோடார்டு தனது வாழ்வையும் ஜம்ப் கட்டில் முடித்திருக்கிறார். வாழ்க கோடார்டு.

கட்டுரையாளர்; தயாளன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time