பி.எப்.ஐ மீதான ரெய்டுகள், கைதுகள் எதற்காக?

- ரியாஸ்

இந்தியாவின் 22 மாநிலங்களில் கிளை பரப்பி கணிசமான இஸ்லாமியர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா! 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பி.எப்.ஐ ஒரு ரகசிய இயக்கமா? சதி திட்டங்களில் தொடர்பு உள்ளதா? எதற்காக இந்த ரெய்டுகளும், கைதுகளும்?

எந்த அடிப்படைக் காரணங்களுமின்றி அதிரடியாக செப்டம்பர் 22 அன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அமலாக்கத்துறை மற்றும் சில மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகியவை இணைந்து 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்கள், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் என சுமார் 100 இடங்களில் சோதனை நடத்தினர். அதிகாலை 3 மணியளவில் தொடங்கிய இச்சோதனைகளின் முடிவில் 11 மாநிலங்களை சார்ந்த 106 நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக அறிவித்தனர். ஆனால், இந்த எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம் என்றும் சிலரை மாநில காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 மாநிலங்களில் 95 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என மொத்தம் 45 நபர்களை கைது செய்ததாக என்.ஐ.ஏ. அன்று மாலை அறிவித்தது. தமிழ்நாட்டை சார்ந்த 11 நபர்களும் இந்த பட்டியலில் அடங்குவர். தேசிய தலைவர் உள்ளிட்ட தேசிய நிர்வாகிகள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.ஐ.ஏ. ஏற்கெனவே பதிவு செய்த ஐந்து வழக்குகளில் இவர்களை இணைத்துள்ளனர். ஏனைய நபர்கள் யார் கஸ்டடியில் உள்ளனர் என்ற விபரம் இந்த கட்டுரையை எழுதும் வரைவெளியிடப்படவில்லை.

என்.ஐ.ஏ. வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் சோதனை என்று ஊடகங்கள் வாழ்த்துப்பா பாடின. அமித் ஷா மற்றும் அஜித் தோவலின் சர்ஜிகல் ஸ்டிரைக், மாஸ்டர் ஸ்ட்ரோக்  என்று புகழ்ந்து தள்ளின. பாராட்டுவதில் மோடியை ஏன் தவிர்த்து விட்டார்கள் என்று தெரியவில்லை.

ஆர்.எஸ்.எஸின்  செயல்திட்டங்களுக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான இந்நடவடிக்கையால் சங்கிகள் உச்சி குளிர்ந்தனர். எந்தக் காரணங்களும் இன்றி பாப்புலர் ஃப்ரண்ட்டை விரைவாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் மீது அரசு துறைகள் திடீரென இத்தாக்குதலை தொடுக்கவில்லை. ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் தங்களின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை போட்டு செயல்பட்டு வருகின்றது ஆர்.எஸ்.எஸ். அதன் ஓர் அங்கமே பாப்புலர் ஃப்ரண்ட் மீதான நெருக்கடிகளும் அடக்குமுறைகளும்.

அரசியல் சாசனத்திற்கு முரணாக இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக அறிவிக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.ன் முக்கிய இலக்கு. இந்த செயல்திட்டத்திற்கு முக்கிய தடைகளில் ஒன்றாக இருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை அரசு ஏஜென்சிகளை பயன்படுத்தி வேட்டையை தொடங்கியது. இதற்கு முன்னரும் இந்த அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் பலமுறை என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை ஆகியவை சோதனை நடத்திய போதும் இவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இருந்தால்தானே கிடைப்பதற்கு?

ஆனால், ஒரு பொய்யை தொடர்ந்து கூறி வந்தால் அதனை உண்மையாக்கி விடலாம் என்ற கோயபல்ஸ் திட்டத்தில் நம்பிக்கை கொண்டது பாஜக அரசு! இந்த பொய்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பலமுறை விளக்கம் கொடுத்த போதும் ஆர்.எஸ்.எஸ்.ற்கு விசுவாசமாக உள்ள ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் பொய்களுக்கு அரிதாரம் பூசி அழகுபடுத்தி வருகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்தது, ஆயுத பயிற்சி வழங்குவதற்காக பயிற்சி முகாம்களை ஒருங்கிணைப்பது, தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணைவதற்காக மக்களை தீவிரவாதிகளாக்குவது..இந்த குற்றச்சாட்டுகளையே பிரதானமானவையாக என்.ஐ.ஏ. தனது பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அமைப்பின் 20 வங்கிக் கணக்குகளில் 120 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு பெரளவு தொகையை மட்டும் வைத்துவிட்டு மீதி தொகை எடுக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி அதனை சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுடன் முடிச்சு போட்டது அமலாக்கத்துறை.

தங்களுக்கு நாடு முழுவதும் 20 வங்கிக் கணக்குகள் மட்டும் உள்ளதாகவும் 120 கோடி குற்றச்சாட்டை அமலாக்கத்துறை நிரூபிக்கட்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் சவால் விட்டது.

ஆனால், இதனை நிரூபிக்க முடியாமல் சில மாதங்களுக்கு முன் 60 கோடி என்று எண்ணிக்கையை மாற்றியது அமலாக்கத்துறை. இதையும் கூட இன்னும் நிரூபிக்கவில்லை.

தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதை அரசும் காவல்துறையும் ஊக்கப்படுத்தி வரும் நிலையில் அதை முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்பதற்காகவே குற்றப்பட்டியலில் இணைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். ஜூலை மாதம் தெலுங்கானா மாநிலத்தின் நிஸாமாபாத் பகுதியில் பயிற்சி எடுப்பதாக குற்றம் சாட்டிய காவல்துறை சோதனை மேற்கொண்டு ஒரு பிளக்ஸ், போர்ட், நோட்டுகள், சில பேப்பர்கள், இரண்டு செல்போன்களை கைப்பற்றிது. இந்த வழக்கு பின்னர் என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் பிடிக்கும் வேலையை பாப்புலர் ஃப்ரண்ட் செய்வதாக மற்றொரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்கள். இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் செயல்படும் இந்த அமைப்பு, ஐ.எஸ்.அமைப்பின் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால், பொருந்தாத ஒரு குற்றச்சாட்டை சுமத்தி மக்களை திசை திருப்ப முயல்கிறது பாஜக!

சாதாரண வழக்குகளையும் இல்லாத வழக்குகளையும் பாப்புலர் ஃப்ரண்ட் மீது சுமத்தும் என்.ஐ.ஏ. ஆர்.எஸ்.எஸ்.யுடன் எப்படி நடந்து கொள்கிறது? பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் முகமாக நீதிமன்றத்தில் ஒருபிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த யஷ்வந்த் ஷிண்டே. ஆனால், இதையெல்லாம் என்.ஐ.ஏ. கண்டுகொள்வதில்லை. ஷிண்டேயின் கூற்றை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறுகிறது!

ஆர்.எஸ்.எஸ் சம்பந்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணை 2014 ற்கு பிறகு தலைகீழாக மாறின. அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்த மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய வழக்குகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்தது என்.ஐ.ஏ.

முஸ்லிம்களை அங்கத்தவர்களாகக் கொண்ட இயக்கமாக இருந்தாலும் மதம், இனம், சாதி, மொழிகளை கடந்து பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டு வருகிறது. சுனாமி நிவாரணத்தில் தொடங்கி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில் இந்தியா முழுவதும் ஈடுபட்டு வரும் இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட்.

கொரோனா பெருந்தொற்றின் போது இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினர் கூட அடக்கம் செய்வதற்கு அச்சப்பட்டு தயங்கிய போது, தயங்காமல் இக்கடமையை நிறைவேற்றியவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர். நிவாரணத்தின் போது இவர்களின் உறுப்பினர்கள் சிலர் மரணத்தையும் சந்தித்துள்ளனர்.

இதனை மட்டும் செய்திருந்தால் சங்பரிவார்களின் கண்களை உறுத்தியிருக்காது. ஆனால் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் கல்வி உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கவனம் செலுத்தியதும் ஆர்.எஸ்.எஸின் பிரிவினைவாத சித்தாந்தம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்ததும் அதனை சிந்தனை களத்திலும், செயல்களத்திலும் எதிர்த்ததும் சங்பரிவார்களின் நிம்மதியை குலைத்தது. அதன் விளைவே இந்த கைதுகளும் சோதனைகளும்!.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், கிரீன்பீஸ் போன்ற அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு அவர்களின் பணிகள் முடக்கப்பட்டன. இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை நாட்டிற்கு வர முடியாமல் செய்தனர். பீமா கொரேகான் வழக்கில் தலித் செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்களை கைது செய்து ஜாமீன் கூட வழங்காமல் சிறையில் வதைத்து வருகின்றனர். சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை காரணமாக வைத்து மாணவர்களையும் அரசியல்வாதிகளையும் சிறையில் தள்ளினர். இந்த வரிசையில் தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் இணைந்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்டை மட்டுமல்ல யாரெல்லாம் இந்துத்துவ பாசிசத்தை எதிர்க்கிறார்களோ, அவர்கள் அனைவரையும் குறிவைக்கிறார்கள். இதனை உணர்ந்ததால்தான், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, சீமான் போன்றோரும் பாசிசத்தையும் சனாதத்தையும் எதிர்க்கக் கூடியவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான அடக்குமுறைகளை கண்டித்துள்ளனர்.

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO)  அமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் இந்த சம்பவம் குறித்து கூறி இருப்பதாவது, இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் சுமார் 106 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் தேனி மற்றும் நெல்லையில் நடைபெற்று வரும் இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அறிவகம் மதரஸாக்களிலும் அத்துமீறிய சோதனை நடைபெற்றுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.

சென்னையில் PFI ன் மாநில தலைமையகத்தில் தொடர்ந்து 2வது முறையாக தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. இம்முறை அலுவலகங்களில் உள்ள அலுவலக பொருள்களான கணினி, பிரிண்டர் உட்பட பல்வேறு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது வரம்பு மீறிய செயலாகும். தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் நடத்திய இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசின் சிறுபான்மையினருக்கு எதிரான பழிவாங்கும் அரசியலேயாகும்.’’என தெரிவித்துள்ளார்!

பாஜக ஆட்சியில் ஆயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்தது தொடங்கி தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் குற்றவாளிகளாக பாவிப்பது, மக்களின் உரிமைகளுக்காக போராடும் உரத்துப் பேசும் இயக்கங்களை ஒடுக்குவது என அரச பயங்கரவாதம் மக்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்தப்படுவது ஏற்புடையதல்ல!

கட்டுரையாளர்; ரியாஸ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time