ராஜஸ்தானில் 90 சதவிகித எம்.எல்.ஏக்கள் விரும்பாத சச்சின் பைலட்டை முதல்வராக்கத் துடிக்கிறது டெல்லி தலைமை! ஜனநாயக பூர்வமாக தங்கள் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு மறுக்கபடுமானால், அங்கு காங்கிரஸ் காலியாவதை யாரால் தடுக்க முடியும்?
மீண்டும், மீண்டும் ஒரே தவறை செய்து கொண்டுள்ளது காங்கிரஸ் தலைமை! ‘ஜனநாயக முறைப்படி ஒரு மாநிலத்தில் அதிக எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றவர் முதல்வராக முடியாது. தலைமைக்கு வேண்டியவர் தான் முதல்வராக முடியும்’ என்பதை எழுதப்படாத விதியாக காங்கிரஸ் தலைமை கடைபிடிப்பது தான் அதன் ஆகப் பெரிய வீழ்ச்சிக்கு காரணமாகிறது.
ராஜஸ்தானில் சச்சின் பைலட் என்பவர் தந்தை ராஜேஷ் பைலட் மறைவை அடுத்து காங்கிரசில் வந்து முக்கியத்துவம் பெற்றவர். கட்சியில் சேர்ந்ததில் தொடங்கி அவருக்கு அதிமுக்கியத்துவ பதவிகள் தரப்பட்டன. ஆனால், அதற்கான தகுதிகளையோ, திறமையையோ, அவர் வளர்த்துக் கொள்ளவில்லை. உழைப்பையும் தரத் தயாரில்லை. ஆனால், சதாசர்வகாலமும் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார்.
மாறாக, அசோக்கெலாட் சாதாரண நிலைமையில் இருந்து படிப்படியாக கடும் உழைப்பையும், திறமையையும் வெளிப்படுத்தி உயர்ந்தவர். அசோக்கெலாட்டை வீழ்த்தி, தான் முதல்வராக வேண்டும் என்ற கனவில் அவசரப்பட்டு 17 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவுடன் பேரம் பேசி, அது படியாத காரணத்தால் மீண்டும் காங்கிரஸுக்குள் வந்தவர் தான் சச்சின் பைலட்!

‘இப்படிப்பட்ட சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும்’ எனத் துடிக்கிறது காங்கிரஸ் டெல்லித் தலைமை. ஆனால், ராஜஸ்தானில் உள்ள 108 எம்.எல்.ஏக்களில் சுமார் 90 பேர் சச்சினை ஏற்கவில்லை! ”சச்சின் பைலட்டை முதல்வராக ஏற்றுக் கொள்ளுங்கள்” என வலியுறுத்துவதற்காக டெல்லியில் இருந்து அனுப்பட்ட தூதர்களை சந்திக்கவும் மறுத்துவிட்டனர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!
‘ஒரு தனி நபருக்காக ஒட்டுமொத்த கட்சியையே காவு கொடுக்க துணிகிறதா டெல்லி காங்கிரஸ் தலைமை?’ என்ற கேள்வி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடமிருந்து எழுந்துள்ளது!
அசோக்கெலாட் முதல்வர் பதவியைத் துறந்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஏற்றால், ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரைத் தேர்வு செய்கிறார்களோ, அவர்களை அங்கீகரித்து வாழ்த்துச் சொல்லி, வழி நடத்த வேண்டியது தான் டெல்லி தலைமை செய்ய வேண்டியதாகும்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் அசோக்கெலாட்டுக்கு தன் மாநிலத்திற்கான முதல்வரைக் கூட ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மறுக்கபடுமானால், அவர் காங்கிரஸ் தலைவராவதில் தான் அர்த்தம் என்ன? காங்கிரஸ் தலைவர் என்பவர் நேரு குடும்பத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியை மட்டும் செய்தால் கட்சி வளருமா?
புதுச்சேரியில் ஜனநாயகத்தை மதிக்காமல், டெல்லி தலைமையின் விசுவாசியாய் இருந்த நாராயணசாமியை முதல்வராகத் திணித்ததின் விளைவு தான், இன்று காங்கிரஸ் கோட்டையாகத் திகழ்ந்த புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசு மலர்ந்துள்ளது! இது, காங்கிரஸ் அதிருப்தியாளர்களால் தான் சாத்தியமாயிற்று.
பஞ்சாபில் என்ன நடந்தது..? பாஜகவில் இருந்து வந்த சித்துவை – காங்கிரசிற்குள் கடுகளவும் ஆதரவில்லாத சித்துவை – தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தது டெல்லித் தலைமை! அவர் பஞ்சாப் முதல்வர் அமீந்தர் சிங்கிற்கு குடைச்சல் தந்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அமீந்தர்சிங் விரக்தியடைந்தார்! வெளியேறினார், பாஜக அவரை அரவணைத்துக் கொண்டது! சித்துவை வளர்த்ததால், ‘பஞ்சாபில் காங்கிரஸ் பஞ்சரானது’ தான் கண்ட பலன்!
உத்திரபிரதேசத்தில் மக்கள் ஆதரவோ, கட்சியினர் ஆதரவோ இல்லாத பிராமணரான ஜதீன்பிரசாத்தை முதல்வர் வேட்பாளராக பிரகடனப் படுத்தினீர்கள்! காங்கிரஸ் பெரும் பின்னடைவைக் கண்டது. அவரோ, ‘காங்கிரஸ் தேறாது’ என பாஜகவிற்கு தாவிவிட்டார்.
ராஜபரம்பரையில் இருந்து வந்த வாரிசு என மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்திய சிந்தியாவிற்கு அதிமுக்கியத்துவம் தந்தது டெல்லித் தலைமை! அவரோ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத்தின் ஆட்சியைக் கவிழ்த்து பாஜகவிற்கு தாவிவிட்டார்.
அந்தந்த மாநிலங்களில் மக்களிடையே பணியாற்றி, கடும் உழைப்பையும், ஆற்றலையும் செலுத்தி முன்னேறி வருபவர்களை தயக்கமின்றி அரவணைத்து ஆதரித்தால் மட்டுமே காங்கிரஸ் தழைத்தோங்கும். தமிழகத்தில் தனிபெரும் தலைவராகத் திகழ்ந்த காமராஜரை ஓரம் கட்டி, பக்தவச்சலத்தை முதல்வராக்கியது அன்றைய டெல்லித் தலைமை! தமிழகத்தில் பக்தவச்சலத்தின் தலைமையிலான ஆட்சியால் காங்கிரஸ் படுகுழிக்குள் வீழ்ந்தது! 1967 தேர்தலில் காமராஜரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மறுத்துவிட்டது டெல்லித் தலைமை! அன்றைக்கு ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸால் இன்று வரை தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை!
சச்சின் பைலட், ஜதின் பிரசாத், ஜோதிராதித்திய சிந்தியா, ஜி.கே.வாசன் இவர்கள் எல்லாம் படிப்படியாக கட்சிக்கு பாடுபட்டு அடி நிலையில் இருந்து தங்கள் உழைப்பால், திறமையால் உயர்ந்தவர்கள் அல்ல! தங்கள் தகப்பன்மார்களை வைத்து, காங்கிரஸீல் அதிமுக்கியத்துவம் அடைந்தவர்கள்! அப்படி அவர்களுக்கு வாரிசு அடைப்படையில் முக்கியத்துவம் கொடுத்ததற்கான விலையைத் தான் காங்கிரஸ் இன்று பெற்றுக் கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற போது மணிப்பூர், மேகாலயா, மிசோராம், திரிபுரா, நாகலாந்து, சிக்கிம், புதுச்சேரி, கோவா, லட்சத் தீவுகள் ஆகிய எவற்றிலுமே பாஜகவிற்கு சுத்தமாக பிரதிநிதித்துவம் இல்லை. ஆனால், இன்றோ, இவை அனைத்திலும் பாஜக நேரடியாகவும், கூட்டணி மூலமாகவும் ஆட்சி செய்கிறது.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்திய சிந்தியா, கோவாவில் லூய்சின்ஹோ ஃபலேரோ, அசாமில் சுஷ்மிதா தேவ் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஜதீன்பிரசாதா, லலிதேஷ் திரிபாதி, ரீடா பகுகுணா, குஜராத்தில் தினேஷ் ஷர்மா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் பதவி பெற்றுள்ளவர்களில் சிலர்! காங்கிரஸ் தலைமை அந்தந்த மாநிலங்களில் உள்ள சரியான தலைவர்களை அடையாளம் காணத் தவறியதோடு, தொடர்ந்து உழைக்கத் தயாரில்லாத தலைவர்களுக்கே தலைமை பதவி தந்து வருவதால் 2014 தொடங்கி தற்போது வரை சுமார் 200 முக்கிய காங்கிரஸ் தலைவர்களை பாஜகவிடம் இழந்துள்ளது!
Also read
வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு முக்கியத்துவம் வழங்குவது, ஜாதி பின்னணியைக் கொண்டு பதவிகள் தருவது, உழைப்பு, அறிவாற்றல், கட்சிக் கொள்கையில் பிடிப்பு, மக்கள் செல்வாக்கு ஆகிய அளவுகோலை புறக்கணித்து, கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகள் தரப்படுவது..ஆகிய தவறுகளை தொடர்ந்து செய்த வண்ணம் உள்ளது காங்கிரஸ்! அதன் தலைமைக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் போன்றவர்களுக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. காங்கிரஸுக்கு வெளி எதிரிகளைவிட, அதன் தலைமையின் இந்த அணுகுமுறைகளே ஆபத்தானது!
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதற்கு ஏற்ப, காங்கிரஸ் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதை நிறுத்திக் கொண்டு, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். ‘ராஜஸ்தானில் சச்சின் பைலட் தான் முதல்வராக வேண்டும்’ என டெல்லித் தலைமை திணித்தால், அங்கு காங்கிரஸ் கட்சி காணாமல் போவதை அந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
கழுதை தேய்ந்து காங்கிரஸாக மாறிய கதையாகவல்லவா இருக்கிறது.
காங்கிரஸ் முக்கிய வீழ்ச்சியே இதுதான்
உழைப்பவன் உயர முடியாது.
இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும்.