உண்மையில் விதி விலக்கான சினிமா தான்!

-பீட்டர் துரைராஜ்

காதல், உளவு, இராணுவம், சதி என  அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்து எடுக்கப்பட்டுள்ளது. சின்னச் சின்ன வசனங்கள். மிகச் சிறந்த திரைக்கதை. சற்றும் பிசிறின்றி போகிறது. ஹிட்லரின் சர்வாதிகாரம், மனித நேய கேப்டன் அருமை! நாடு என்பது மக்களா ? சட்டமா? என்ற கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது !

ஜெர்மனியின் சர்வாதிகாரி இட்லர் ஆட்சியை வைத்து எண்ணற்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இரண்டாம் உலகப்போர் முடிந்து பல பத்தாண்டுகள் ஆன பின்பும் இத்தகைய திரைப்படங்களுக்கு குறைவில்லை. The Exception (விதிவிலக்கு)  என்பது 1940 களில் ஹாலந்து நாட்டில் நடக்கும் ஒரு கதை.

ஜெர்மனியின் அரசரான கெய்சர்,  நாடு கடத்தப்பட்டு ஹாலந்து நாட்டில் வசிக்கிறார். ஆட்சியை இழந்து, இருபது ஆண்டுகள் ஆனாலும், அரசரை தனது இருப்பிற்கு இடைஞ்சலாக ஹிட்லர் பார்க்கிறான். மக்களுக்கு அரசர் மேல் இருக்கும் ஒருவகையான பக்தி, அவருக்கு கிறிஸ்தவ மதத்தோடு இருக்கும் தொடர்பு  போன்றவை  ஹி்ட்லருக்கு எதிரான சக்திகளை ஊக்குவிக்கலாம் என பெர்லின் நினைக்கிறது. இந்த நிலையில் மன்னர் இறந்து போனால் பழி ஹிட்லர் மீது விழும். எனவே, மன்னர்  உயிரைப் பாதுகாப்பது ஹிட்லருக்கு அவசியமாகிறது.

எனவே, ஹாலந்தில் இருக்கும் மன்னரைப் பாதுகாக்க பிராண்டிட் என்ற கேப்டனை இராணுவம் அனுப்புகிறது. யுத்த முனைக்கு அனுப்பாமல், பாதுகாப்பு வேலைக்கு தன்னை அனுப்புவதால் சலிப்போடு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறான். ஒரு அரசரைப் பாதுகாக்கும் பொறுப்பில் கர்னல் பொறுப்பில் உள்ள அதிகாரியை அனுப்பாமல், ஒரு கேப்டனை அனுப்புவது தனக்கு சமமானது அல்ல என நினைக்கிறார் அரசர்.  மன்னர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்,  ஹிட்லரின் இராணுவம் பிராண்டிட்டை சுட்டுவிடும் என்பதுதான் நிலை.

கேப்டனாக ஒரு இராணுவ அதிகாரிக்குரிய மிடுக்கோடு ஜெய் கோர்ட்டினி (Jai Courtney) நடித்துள்ளார். இந்த கேப்டன் போலந்து நகரில் போரிடுகையில் யூத மக்களை கொன்றொழித்ததை நேரில் பார்தவன். ஒரு யூத சிறுமி  மரணிப்பதை கண்கூடாக கண்டவன். அப்போது இருந்த இராணுவ அதிகாரிகள் அனைவரும், ‘யூத வெறுப்பை’ இயல்பாக பார்த்தபோது, அதனை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாதவனாக, விதிவிலக்காக இருக்கிறான். இந்த மரணங்களினால் சில இரவுகளில் திகில் அடைந்து விழித்துக் கொள்கிறான்.

மன்னர் கெய்சர், கடந்த கால நினைவுகளில் வாழ்பவர். உணர்ச்சி வேகத்தில் ஏதேனும் பேசி விடுபவர். அப்படி பேசியது ஹிட்லருக்கு தெரிய வந்தால், அவருக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை நிறுத்தப்பட்டுவிடும். உயிருக்குகூட ஆபத்து நேரலாம் என அவரது மனைவி அஞ்சுகிறாள். மன்னரது உதவியாளாக வேலைக்கு புதிதாக சேர்ந்து இருக்கிறாள் மியாக்கா. இவளது கணவனையும், தந்தையும் ஏற்கனவே ஜெர்மனியின் இராணுவம் கொன்றொழித்துள்ளது. அவள் ஆங்கிலேயே உளவாளி. சமயம் பார்த்து, ஆங்கிலேய அரசு சொல்லுவதை அவள் செய்ய வேண்டும். இவளுக்கும் கேப்டனுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அரசரின் பணியாளும், இராணுவ அதிகாரியும் உறவு கொள்வது சட்டவிரோதமானது என்பது தெரிந்தும் பழகுகிறார்கள்.

இதற்கிடையில் ஹிட்லரின், வலதுகரமாக விளங்கும் ஹிம்லர் அரசனைப் பார்க்க வருகிறான். அவனுக்காக விருந்து நடக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் ஹிம்லரை கொன்றுவிடுவேன், ஆங்கிலேய அரசிடம் கேட்டுச் சொல் என தன்னுடைய தொடர்பில் இருக்கும் ஆங்கிலேயே உளவாளியிடம், மியாக்கா கூறுகிறாள். லில்லி ஜேம்ஸ் இந்தப் பாத்திரத்தில் நன்றாக  நடித்துள்ளார். (இவர் ஹிட்லர் காலத்தில் நடக்கும்  The Guernsey Literary and Potato Peel Pie Society  என்ற படத்திலும் நடித்துள்ளார். காதல் கதை. லண்டனிலிருந்து Guernsey தீவுக்குச் செல்லும் ஓர் எழுத்தாளரின் கதை )

ஜெர்மனியின் கடைசி மன்னரான கெய்சர் வில்ஹம் – II ஆக  நடித்துள்ள கிறிஸ்டோபர் பிளம்மர் அற்புதமாக நடித்துள்ளார். கால ஓட்டத்தோடு ஒட்டி வாழ முடியாதவராக இருந்தாலும், அரசியல் தெரியாதவரல்ல. ஒரு அரசனுக்குரிய கம்பீரத்தோடு, சதியைப் புரிந்தவராக  இருக்கிறார். தன்னை காவல் காக்கும் கேப்டன், அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு போலந்து நாட்டில் நடந்த போரில் இறந்து போன தனது பேரனை ஒத்தவனாக இருப்பதால் அவன்மீது அவருக்கு பிரியம் இருக்கிறது. தனது பணிப்பெண்ணாக இருப்பவள், தனது இளவயதில் தன்னுடைய காதலியை ஒத்தவளாக இருக்கிறாள் என்பதை வெளிப்படையாக அவளிடமே சொல்லும் அளவுக்கு சாதாரணமாக இருக்கிறார்.

இந்நிலையில் மன்னரை பார்க்க வந்த ஹிம்லர், அவர் விரும்பினால் மீண்டும் பெர்லின் வரலாம் என்று சொல்லுகிறார். மன்னரின் மனைவி அவருக்கு ஒரு உறையில் பணத்தை  ஹிம்லரிடம் கொடுக்கிறாள்; மன்னரைப் பற்றி ஹிட்லரிடம் நல்லவிதமாகச் சொல்லும்படி ஹிம்லரிடம் கூறுகிறாள். அதன் மூலம் மீண்டும் பெர்லினில்  ஒருவிதமான அரச அதிகாரத்தோடு வாழலாம் என நினைக்கிறாள்.

ஜெர்மனின் உளவு அமைப்பு உளவாளி நடமாட்டம் இருப்பதை அறிந்து கொள்கிறது. கேப்டன் பிராண்டிட்டிற்கு தன் காதலியைப் பற்றி உண்மை தெரிந்து விடுகிறது. அவள் ஒரு யூதர். என்ன செய்வது?  காதலா ?  சட்டமா ?

விருந்து முடிந்தவுடன், ஹிம்லர் கேப்டனிடமும், ஜெர்மனியின் ரகசிய காவல் ஆய்வாளரிடமும்  அரசரை மீண்டும் மன்னனாக ஆக்குகிறோம் என நம்ப வைத்துள்ளோம். அந்த மாளிகைக்கு  வந்துபோகும் நபர்கள், செய்திகளை தனக்கு நேரடியாக அனுப்பவேண்டும் என சொல்லி செல்கிறான். அப்போதுதான் அரசரோடு தொடர்பில் இருப்பவர்களைக் கண்டறிய முடியும் என்பது அவர்களது திட்டம்.

இந்தப் படத்தை டேவிட் லேவியாலெக்ஸ் (David Levealex) இயக்கி உள்ளார். படம் விறுவிறுப்பாகவும், அவள் பிடிபட்டு விடுவாளோ என்ற திகிலுடனும் இறுதிவரை செல்கிறது.  இந்தப் படத்தை  பிரைம் இணைய தளத்தில் பார்க்கலாம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமும் சுவாரசியமாகச் செல்கிறது.

விமர்சனம் : பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time