முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது கல்விச் சூழல் பேராபத்தில் உள்ளது! எளிய மக்களை கல்விப் புலத்திலிருந்து அப்புறப்படுத்தும் சூழ்ச்சியாக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, சத்தமில்லாமல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆபத்தை தடுக்கும் விதமான AISEC- யின் கருத்தரங்கில் அனல் பறந்தது.
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த தினத்தை ஒட்டி செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கணிசமான கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பலதரப்பட்ட சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு எழுச்சியுடன் பேசினர். அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திலகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
முதல் நிகழ்வாக, மேற்கு வங்கத்தில் தோன்றி, இந்திய மறுமலர்ச்சியின் முன்னோடியாகத் திகழ்ந்த மாமனிதர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீடு நிகழ்ந்தது .
சுவடு பதிப்பகத்தின் தோழர் நல்லு ஆர். லிங்கம் காலத்தின் தேவையை கணக்கில் கொண்டு இந்நூலை எழுதியுள்ளார். பேராசிரியர் மருதநாயகம் நூலை வெளியிட ஆசிரியர் கோமல் தமிழமுதன் பெற்றுக் கொண்டார். கோமல் தமிழமுதன் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் குறித்து சிறப்பானதொரு சிற்றுரையை நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாகக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்வியில் பெரும் அழிவினை விளைவிக்கின்ற தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் தாக்கம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக அறிவியல்பூர்வக் கல்வியின் தேவை குறித்து மிகப்பெரிய கருத்துரையாடல் நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்ற கல்வி செயற்பாட்டாளர் சு.உமாமகேஸ்வரி தனது தலைமை உரையில், ”தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வியில் தற்போது நடைமுறையில் பின்பற்றப்படும் திட்டங்கள் பலவும் (இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உட்பட பல திட்டங்கள்) எவ்வாறு தேசியக் கல்விக் கொள்கையின் சரத்துகளாக இருக்கின்றன என விவரித்தார். ஆசிரியர்கள் நியமனமின்மை , உட்கட்டமைப்பு வசதியின்மை, ஓராசிரியர் பள்ளிகளின் அவல நிலை என தனது அனுபவத்தின் வழியாக கல்வி சார்ந்த சிக்கல்கள் குறித்துப் பேசினார். உயர்கல்வியில் நான் முதல்வன் திட்டம் உட்பட அனைத்தும் தேசிய கல்வி கொள்கையின் வடிவங்களே. ஆனால் முதல்வர் தனது கனவுத் திட்டம் என்று கூறி வருகிறார். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை கல்விப் புரட்சி என்கிறார். கல்வித் துறை தற்போது பெரும் அவலத்தில் சிக்கி சீரழிகிறது” எனப் பகிர்ந்தார்.
AIFETO பொதுச்செயலாளரான அண்ணாமலை, ”எனது ஐம்பது ஆண்டுகால அனுபவத்தில் கல்வி எத்தனையோ மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால், தற்போதோ தமிழக அரசின் கல்விக் கொள்கை ஆசிரியர்களைப் பணியாற்ற விடாமல் எமிஸ் (EMIS) போன்ற கற்பித்தல் அல்லாத பணிகளை செய்ய நிர்பந்திக்கிறது. இது உளவியல் ரீதியாக ஆசிரியர்களை கடுமையாக பாதிக்கிறது. கல்வித்துறையின் பொறுப்பு ஆணையர்கள் கைகளில் சென்றுள்ளது! அவர்கள் சதா சர்வகாலமும் ஆசிரியர்களிடம் பல்வேறு அறிக்கைகளை கேட்டவண்ணம் உள்ளனர். ஆசிரியர்களை கற்பிக்கவிடாமல் இம்சிக்கின்றனர். கொரானா காலத்தில் சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால் அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் என்பதே இதுவரை இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டே அதில் உள்ள எல்லா திட்டங்களையும் திமுக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தீவுத்திடலில் பெரும் மாநாடு நடந்தது! அதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் முதல்வர் தங்களுக்கு ஏதேனும் நல்ல திட்டங்களை அறிவிப்பார் எனக் காத்திருந்து ஏமாற்றமடைந்து கண்ணீருடன் கலைந்து சென்றனர்.
மாணவர்கள் தவறு செய்தாலும் ஆசிரியர்களின் மீதே நடவடிக்கை, மண்டல ஆய்வு என பாடம் நடத்தவிடாமல் அதிகாரிகள் செய்யும் போக்கு தமிழக அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமோ என அச்சமாக உள்ளது. சில பள்ளிகளை இழுத்துமூடி பள்ளிகளை இணைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் எந்தப் பள்ளியிலும் இல்லை. ஆனால், மாதிரிப் பள்ளிகளை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
பாடநூல் அச்சடித்து வகுப்பறைகளில் பயன்படுத்தப்படாமலேயே வீணாகிறது. வகுப்புக்கு ஓராசிரியர் இல்லாமல் மூன்றாம் வகுப்பு வரை பாடநூலை நடத்த விடாமல் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கட்டாயப்படுத்துகின்றனர். இப்படியாக தேசிய கல்வி கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆனால், மக்களிடம் நாங்கள் தமிழ்நாட்டில் அதனை உள்நுழைய விடமாட்டோம் என பொய் பேசி வருகின்றனர். இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டும்” என்றார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர், ஜெ.காந்திரராஜ் தனது அனுபவத்தையே முன்வைத்து உரையாட ஆரம்பித்தார். ”நான் கல்லூரியில் சேர்ந்து படித்ததற்குக் காரணம் இட ஒதுக்கீடு தான். ஆனால் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் இட ஒதுக்கீடு என்ற பதமே ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை. அப்படியென்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே கல்வி கிடைக்க வேண்டும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கை உறுதியாகத் திட்டமிட்டுள்ளது. நமக்கென்று ஒரு கல்விக் கொள்கை வகுக்க வேண்டும் என அனைவரும் கேட்டதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 14 பேர் அடங்கிய கல்விக் குழுவை தமிழக அரசு நியமித்தாலும் குழு உறுப்பினர்கள் யாவரும் அமர்ந்து பணியாற்றுவதற்கென ஒரு அலுவலகத்தைக் கூட தரவில்லை. அக்குழு எப்படி செயல்பட முடியும். இதை வருத்ததுடன் பதிவு செய்கிறேன்” என்றார்.
உயர்கல்வி முழுவதும் தேசிய கல்வி கொள்கை ஊடுருவி வருகிறது. திறன் மேம்பாடு என்ற பெயரில் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்விப் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. இது தேசிய கல்விக் கொள்கையில் உள்ள கல்வி கிரெடிட் பேங்க் முறையை அடிப்படையாகக் கொண்டு (ABC) நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திறன் மேம்பாடு கல்வி உயர்திறன்கள் அன்றி, சாதாரண திறன்களையே மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ளது ஆன்லைன் கல்வி வழியாக கொண்டு வரப்படும் இது, கல்வி தரத்தை மிகவும் சீரழிக்கவே வழிவகுக்கும்.
மாணவர்கள் எண்ணிக்கை அளவின் அடிப்படையில் கல்லூரிகளை மூடவும் திட்டமிட்டு வருகின்றனர். 45,000 கல்லூரிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில், அவற்றை சில நூறு பல்கலைக்கழகங்களாக அல்லது தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். உயர்கல்வி இன்னும் சில வருடங்களில் எட்டாக்கனியாகிட வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. கல்வியை முழுமையாக வியாபாரமயமாக்கிடவே இக்கல்வி கொள்கை வழிகாட்டுகிறது.
மத்திய அரசின் வழியில் மாநில அரசு தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதால் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பும் உருக்குலையும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றின் அபாயத்திலிருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் காக்கப்பட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’’ என்றார்.
பேராசிரியர் P.சிவக்குமார் (மேனாள் முதல்வர் , குடியாத்தம் கலைக் கல்லூரி) ”தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் பாதகங்கள் இன்று புதியதாக உருவானவை அல்ல. ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 1986இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை அன்றே விமர்சித்து கூட்டங்கள் நடத்தினோம் என்று தனது மாணவர் பருவம் முதல் இன்று வரை கல்விக் கொள்கை குறித்தான பல பாதகங்களை முன்வைத்தார். உயர்கல்வியின் வியாபாரமயமாக்கல், அரசு உதவி பெறும் தனியார் நிறுவனக் கட்டணக்கொள்ளை எனத் தோலுரித்ததுடன் சுயநிதிக் கல்லூரிகளின் நிலை குறித்து விரிவாகப் பேசினார்.
சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் நிலை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது என்றும் புரிய வைத்தார். ஆகவே ஒன்றிணைந்து இந்த கல்விக் கொள்கையின் அபாயங்களைக் களைய முற்படவேண்டும்” என்றார்..
TNGCTA மாநிலத்தலைவர் பேராசிரியர் T.வீரமணி, ”தேசிய கல்விக் கொள்கை வரைவு வந்த காலத்தில் இருந்து பேசி வருகிறோம். ஆனால் மிக சாமர்த்தியமாக மத்திய அரசின் போக்குக்கு ஏற்ப மாநில அரசு எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்றோம், ஆனால் ஒரு பக்கம் அதற்கு தயாராகிக் கொண்டே இருக்கிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் வழியாக திறன் மேம்பாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.எதையாவது நிறுத்த முடிகிறதா?
இவற்றின் பாதிப்பு நமக்கு இப்போது தெரியாது.ஆனால் ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் அனைத்தையும் இழந்திருப்போம். நம் மாணவர்கள் அத்தனை பேரும் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். மக்களுக்காக தரமான கல்வியை முழுமையாக இலவசமாகக் கொடுக்கும் போக்கு எந்த அரசுக்கும் இல்லை. கல்விக்குழு தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டதோடு சரி, இது வரை அதன் செயல்பாடு என்ன என்பதே தெரியவில்லை. கூடியதா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. கல்வியில் தொலைநோக்குப் பார்வை என்பதே மத்திய மாநில அரசுகள் இரண்டுக்கும் இல்லை. அதனால் பாதிக்கப்படுவது மாணவர் சமுதாயமே! இதை முறியடிக்க உடனடியாக அனைவரும் ஒன்று கூட வேண்டும்’’ என்றார்.
AISEC, தமிழ்நாடு, பேராசிரியர் K.யோகராஜன், புதிய தேசிய கல்வி கொள்கை புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும். மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு தலைப்பிலும் இருக்கும் கடுமையான பாதகங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இதில் மறைந்திருக்கும் பாதகங்களை நம்மால் உணர முடியும்.
தேசிய கல்விக் கொள்கை, கல்வி அமைப்பை முழுமையாக மத்தியத்துவப்படுத்த விளைகிறது. மேலும் மதவாத குருட்டுத்தனங்களையும், மூடநம்பிக்கைகளையும் பரப்ப 3 வயது முதல் 8 வயது வரை பாடத்திட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு முனைகிறது. எதிர்கால சமுதாயத்தை அழிக்க, நினைத்துப்பார்க்க முடியாத கோணங்களில் திட்டமிடுகிறது!
5+3+3+4 என்ற இத்திட்டம் மழலையர் கல்வியிலிருந்து கட்டாயப் பாடத்தை திணிப்பதாகக் கூறுகிறது.இதை நாம் ஏற்கக்கூடாது. குழந்தைப் பருவத்திலிருந்தே புராணங்கள் இதிகாசங்கள் மற்றும் கலாச்சார கல்வியைத் திணிக்கத் திட்டமிடுகிறது . முதல் தலைமுறை மாணவர்களைக் கல்வியிலிருந்து தள்ளி வைக்கும் வேலையை கல்விமறுக்கப்படும் சூழலைத் தான் இந்த புதிய தேசிய கல்வி கொள்கை ஆவணம் வலியுறுத்துகிறது. ஆகவே நாம் ஒன்றிணைய வேண்டும். அமைப்பால் திரள வேண்டியதன் அவசியம்” எனப் பதிவு செய்தார்.
Also read
சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் கதிரவன் மற்றும் விவசாய அமைப்பின் தோழர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பதிவு மிக இன்றியமையாதது. ”இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் உள் அரங்குகளில் பேசுவது? போராட்டத்திற்கான நாளைக் குறியுங்கள்” என்றனர்.
நிகழ்வின் இறுதியாக அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி சார்பில் சுதாகர் நன்றி கூறினார். ”புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து அடுத்த தலைமுறையை ஆபத்திலிருந்து காக்க ஒன்று திரள்வோம்” என்ற முழக்கத்துடன் நிகழ்வு முடிவுற்றது.
தொகுப்பு; சு. உமா மகேஷ்வரி
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது கல்விச் சூழல் பேராபத்தில் உள்ளது – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Uma Maheswari Gopal
தேசிய கல்விக் கொள்கை எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட ஆபத்தானது அதை எதிர்ப்பதாகச் சொல்லிவிட்டு அதை அமுல்படுத்துவது.
காவிமயம். நவீனகாலத்தின் வளர்ச்சிக்கு உதவாதகல்விதிட்டம். மாணவர்களின் அறிவுதிறன் பாழாகிற கல்விதிட்டம்.இதைஆரம்ப நிலையிலிருந்து எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றினைவோம் நோக்கில் பாஜகவிற்கு எதிரான ஜனநாயகசக்திகள் ஒன்றுதிரண்டு கன்டன குரல்எழுப்ப வேண்டும்*
முதல் தலைமுறை மாணவர்கள் – இன்னும் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள்? ஏதாவது மதிப்பீடுகள் இருக்கின்றனவா?