நிர்பந்தப்படுத்தப்படுகிறதா நீதித்துறை..?

அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் மூத்த வழக்கறிஞர் ரத்தினம்! ‘எளிய, கடைக்கோடி மனிதனுக்கு நீதி மறுக்கபடக் கூடாது’ என்பதில் ஆர்வம் காட்டுவார்! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்! அம்பேத்கார் சட்டப் பணிகள் சங்கம் என்றும் பவுத்த பொதுவுடமை இயக்கம் எனவும் இயங்கி வருகிறார்!

நேற்றைய தினம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் பொது நலன் சார்ந்து செயல்படும் முக்கியமான வழக்கறிஞர்கள் பலர் ஒன்றிணைந்து மகாத்மா காந்தி, புரட்சியாளர் பகத்சிங் ஆகிய இருவரையும் மையப்படுத்தி நினைவுகூறும் விதமாக ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தனர்.

உள்ளபடியே முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியான சூழலில் நாடும், மக்களும் உள்ள நிலையில் வழக்கறிஞர்கள் அது குறித்து விழிப்புணர்வுடன் திரண்டு பேசுவது மகிழ்ச்சியான விஷயம் தான்! அதுவும் அஹிம்சை வழியில் முழுமையாக நின்ற காந்தியையும், அறச் சீற்றத்தில் உயர்ந்து நின்ற பகத்சிங்கையும் ஒரே புள்ளியில் இணைத்து புரிந்து கொள்வது வெகு சிறப்பானதாகும்!

மூத்த வழக்கறிஞர்கள் விஜயகுமார், ராஜாராம், அய்யாதுரை ஆகியோர் முன்னெடுப்பில் இளம் வழக்கறிஞர்கள் நிறைய பேரோடு மூத்த வழக்கறிஞர்கள் ரத்தினம், சங்கரசுப்பு, திருஞான சம்பந்தம் போன்றோரும் ஒன்று திரண்டிருந்தனர்! நீதித் துறையில் உள்ள நெருக்கடிகள் குறித்தும் பேசப்பட்டன! பொதுதளத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டன!

வழக்கறிஞர்களிடையே நான் (சாவித்திரி கண்ணன்) பேசிய போது..,

தீடீரென்று எதிர்பாராதவிதமாக என்னை வழக்கறிஞர் விஜயகுமார் வழக்கறிஞர்கள் மத்தியில் பேசச் சொன்னார். எந்த முன் தயாரிப்பும் இல்லாத நிலையில் அவர்களின் போராட்ட குணத்தை வாழ்த்தி இரண்டு நிமிடம் பேசினேன். ஜனநாயகத்திற்கு தற்போது ஏற்பட்டு வரும் ஆபத்துகளை மனவலிமையோடும், அஞ்சாமையோடும் எதிர்க்கத் துணியும் கூட்டமாக அது இருந்தது என்பதை நன்கு உணர்ந்தேன்.

78 வயதாகும் வழக்கறிஞர் ரத்தினம் ஒரு துண்டு பிரசுரத்தை அங்குள்ள வழக்கறிஞர்கள் அனைவருக்கும் தந்தபடி, அமைதியான வழியில் நிகழ்ச்சியின் அங்கமாக தன்னை வெளிப் படுத்தினார்.

அந்த துண்டறிக்கையை வாங்கிப் படித்ததும் பெரியவர் ரத்தினம் அவர்கள் மீதான என் மதிப்பும், வியப்பும் ஒரு சேர அதிகரித்தது! ஒரு கர்மயோகியைப் போல நீதித்துறையில் அவர் இயங்கி வரும் விதம் என்னை நெகிழ வைத்தது!

நீதி, நேர்மை, நியாயத்திற்கு எதிராக நீதிபதிகளே செயல்பட்டாலும் அவர்களை தட்டிக் கேட்கும் தார்மீகத் தகுதி கொண்டவராக அவர் இருக்கிறார் என்பதை அவரது அந்த அறிக்கை வெளிப் படுத்தியது! நீதிபதி கர்ணன் உள்ளிட்டவர்களின் ஊழலை அம்பலப்படுத்தி, ‘நீதி துறையிலும் முகமுடிகள்’ என்ற புத்தகத்தையே கொண்டு வந்தவர் தான் ரத்தினம். தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்ட நீதிபதி சிவப்பாவையும் அம்பலப்படுத்தி உள்ளார். தற்போது கள்ளக்குறிச்சி வழக்கில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு எந்த எதிர்பார்ப்புமின்றி பொது நலன் சார்ந்து இயங்கி வருகிறார்.

வழக்கறிஞர் ரத்தினம் தற்போதைய நீதிதுறை குறித்து சில விஷயங்களை சுருக்கமாகப் பேசினார். இவர் பத்தாண்டுகளுக்கு முன்பே நீதித்துறையில் தவறாக செயல்படும் நீதிபதிகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரண விவகாரத்தில் பிணக்கூராய்வு செய்யும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பான ஒரு மருத்துவரை அனுமதிக்க அவர்கள் வேண்டினர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவ்வாறு அனுமதிக்கப்பட்டது. பல முக்கிய வழக்குகளில் இப்படிக் கேட்பதும், அனுமதிப்பதும் நடந்துள்ளது. ஆனால், தற்போதோ அப்படி அனுமதிக்க மறுத்து உத்திரவிட்டார் நீதிபதி சதீஸ்குமார்!

அதே போல மாணவி மர்ம மரண வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சக்தி பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு அவசரப்பட்டு ஜாமீன் கொடுத்துள்ளார் நீதிபதி ஜி.கே.இளந்திரையன். அத்துடன் மேற்கொண்டு இந்த வழக்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நற்சான்று தரும் விதமாக ‘லூஸ்டாக்’ செய்திருக்கிறார். இது குறித்து சி.பி.எம் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூட கண்டணம் தெரிவித்து இருந்தார். ( இந்த நீதிபதி தான் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி தந்தவர்)

இப்படியாக இந்த மாணவி மர்ம மரண வழக்கில் நியாயமற்ற உத்திரவுகளை போட்டு, இந்த இரு நீதிபதிகளும் நீதித் துறைக்கே மரியாதையற்ற நிலையை உருவாக்கி உள்ளனர்.

இது சம்பந்தமாக நாங்கள் வழக்கறிஞர்கள் பலர் மற்றும் பேராசிரியர்கள், சமூக செயற் பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என 94 பேர் கையெழுத்திட்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்றைய தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி அவர்களிடம் மனு கொடுத்தோம். அந்த மனுவில், மேற்படி விவகாரங்களை விளக்கி, ”சக்தி பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு தனி நீதிபதி கொடுத்துள்ள பிணையை உடனே ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறி இருந்தோம்.

மேலவளவு வழக்கில் கொடுத்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் இரு நீதிபதிகளின் அமர்வில் பட்டியலிட்டு, தலைமை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டு இருந்தோம். தலைமை நீதிபதியும் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால், அவர் செப்டம்பர் 12 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, அடுத்த நாள் செப்டம்பர் 13-ல் மதியம் இரண்டேகால் மணிவாக்கில் நான் பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமியிடம் எங்கள் மனு குறித்து தெரிவித்தேன்.

பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, ”பிணையை ரத்து செய்ய அரசல்லவா மனு செய்ய வேண்டும்?” என்றார்.

நான் தலைமை நீதிமன்றம் முன்பு கூறி இருந்த தீர்ப்பை சுட்டிக் காட்டினேன். ”மேலவளவு வழக்கிலும் பிணையை ரத்து செய்வது சம்பந்தமாக தலைமை நீதிமன்றத்தில் நான் முறையீடு செய்தேன்.. அதை தலைமை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இரு நீதிபதிகள் அமர்வின் முன் வைத்து நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உத்திரவிடப்பட்டது” என்றேன். அவரும் ஓய்வு பெற்றுவிட்டார்.

மேற்படி சம்பவங்கள் எல்லாம் நீதித்துறை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதற்கான சில உதாரணங்களாகும்.  நமது நீதித்துறைக்கு மத்திய ஆட்சியாளர்கள் நிர்பந்தம் தருகிறார்களா…? என சந்தேகமாக உள்ளது. இத்தகையை நிலையை விமர்சனம் செய்வதும், விவாதத்திற்கு உட்படுத்துவதும் இன்றைய அரசியல் சூழலில் முக்கியமாகிறது என நாங்கள் கருதுகிறோம்.

வழக்கறிஞராக பதிவு செய்யும் போது உறுதி மொழி எடுக்கிறோம். நீதிபதியாக பதவி ஏற்கும் போது உறுதி மொழி ஏற்கிறார்கள். ஆனால், அவை எல்லாம் வெட்டிச் சடங்குகளாகிவிடுகின்றன! மனசாட்சியற்ற நிலையில் சில நீதிபதிகள் செயல்படுவது சட்ட ஆட்சிக்கு பெரும் தீங்காகியுள்ளது. எனவே பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்டமைக்க வேண்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் கொலை தான் நடந்துள்ளது என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உறுதிபடக் கூறியதோடு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

இந்த கொலை வழக்கில் நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் இளந்திரையன் ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் குடியரசுத் தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு கூட்டாக மனு தயாரித்து அனுப்பி உள்ளோம். இது போன்ற சூழல்களை தடுக்க, ஒரு புதிய சட்ட அணுகுமுறையை உருவாக்க அந்த மனுவில் கேட்டு உள்ளோம்” என்றார் வழக்கறிஞர் ரத்தினம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time