நம்பிக்கையூட்டும் மண்ணின் மருத்துவம்! 

எம்.மரியபெல்சின்

கொரோனாவுக்குப் பிறகு பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், சொட்டு மூத்திரம், முக்கிக்கொண்டு மலம் கழித்தல், தூக்கமின்மை, வயிறு மந்தம், வயிற்றுவலி என ஒவ்வொருவிதமான பிரச்சினைகள். மருத்துவர்களிடம் தீர்வு கேட்டால் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிறது.

முன்பைப் போல் உடம்பு ஒத்துழைப்பதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் பலரையே பார்க்க முடிகிறது. என்ன சாப்பிட்டாலும் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியவில்லை என்கிறார்கள். வயது வித்தியாசமில்லாமல் இளம் வயதினர் கூட நோய் தாக்குதலுக்குள்ளாகி அவர்கள் படும் பாடு சொல்லி மாளவில்லை.

`எத்தனையோ டாக்டர்களை பார்த்துவிட்டேன், என்னென்னவோ டானிக், மாத்திரையெல்லாம் சாப்பிட்டு பார்த்துவிட்டேன். ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. இனி, வாழ்க்கையை அதன்போக்கில் கடந்துவிட வேண்டியதுதான்’ என்று சலிப்புடன் சொல்லிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துபவர்களுக்கு நம்பிக்கையூட்டும்விதமாக நமது மண்ணின் மருத்துவம் இருக்கிறது . அது தான் இந்தக் கட்டுரை.

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலூன்றி நடக்கும் கிழவனும் கோலை வீசிக் குலுங்கி நடப்பனே… என்று சித்தர்கள் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ளது போல் காலையில் இஞ்சிச் சாறு அருந்தலாம். சிலநாட்களில் தேநீருடன் இஞ்சி,துளசி சேர்த்து அருந்தலாம். இஞ்சித் துவையல்கூட‌ செய்து சாப்பிடலாம். ஆனால், நாள்கணக்கில் இவற்றைத் தொடர வேண்டாம்.

எனக்கு இஞ்சி டீ இல்லாமல் ருசிக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். சுவைக்கு அடிமைப்பட்டதனால் தான் இன்றைக்கு நம்மில் பலர் பல்வேறுவிதமான நோய்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். மருந்தை மருந்தாக மட்டுமே சாப்பிட வேண்டும். அது சுவைக்கிறது என்பதற்காக அளவைக் கூட்டினால் அதுவே நோய்க்கு வித்திட வாய்ப்புள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இஞ்சி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இஞ்சியை சாறாக்கி அருந்தும்போது அதை தெளியவைத்து அதன் அடியில் படும் வெள்ளைநிற படிவத்தை விட்டுவிட்டு தெளிந்த நீரை மட்டுமே அருந்த வேண்டும்.

காலை உணவாக‌ இட்லி, இடியாப்பம், புட்டு என ஆவியில் வேக வைத்த உணவுகளாக இருப்பது மிகவும் நல்லது. இன்னும் சொல்லப் போனால் சில நாட்கள் பழங்களை மட்டுமே ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்தது. இது செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். பெரும்பாலான நோய்களுக்கு மலச்சிக்கலே முதன்மைக் காரணமாக இருக்கிறது என்பதால், முதலில் மலச்சிக்கலை சரி செய்ய வேண்டும். செரிமானம் சீராக நடைபெற்றாலே மலச்சிக்கலுக்கு விடை கொடுத்து விடலாம்.

சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்துவது, வெள்ளைப் பூண்டினை நெய் விட்டு வதக்கி காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிடுவது செரிமானம் சீராக நடைபெற உதவும். சாப்பிடவே பிடிக்கவில்லை, வாய் மழுமழுவென்று இருக்கிறது என்று சொல்பவர்கள் கொத்தமல்லி விதையை வறுத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். தனியா என்று சொல்லப்படும் கொத்தமல்லி விதையில் துவையல் செய்து சாப்பிடுவது காய்ச்சல் நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும். சுடு கஞ்சியுடன் கொத்தமல்லித் துவையல் சேர்த்துக் கொண்டால் அதைவிட சிறப்பான உணவு வேறு எதுவும் இருக்காது என்று சொல்லலாம். இதை உணவு என்பதைவிட மருந்து என்றுகூட‌ சொல்லலாம்.

சீரகத் தண்ணீர்

மதிய உணவில் முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, கரிசலாங்கண்ணி கீரை போன்றவற்றை மாற்றி மாற்றி சேர்த்துக் கொள்ளலாம். தரிசு நிலங்களிலும், வயல்வெளிகளிலும், சாலையோரங்களிலும் தானாக வளர்ந்துகிடக்கும் கானாவாழை என்ற கீரையை சமைத்துச் சாப்பிடுவது கூட நல்ல தெம்பு தரும். கானா வாழைக் கீரையுடன் தூதுவேளைக் கீரை, துவரம்பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் உடலுக்கு வலுக்கொடுப்பதுடன் உடல்நலிவுற்ற‌ குழந்தை முதல் ஆண்மைக்குறை உள்ளவர்கள் வரை அனைவருக்கும் இது தாதுவிருத்தி தரும். ஆயிரக்கணக்கில் லேகியங்களையும், மருந்து மாத்திரைகளையும் வாங்கிச் சாப்பிடுவதைவிட இந்த கானாவாழை, தூதுவேளை கூட்டணி போதும்.

அரைக்கீரை, சிறுகீரைகளில் வடை செய்து சாப்பிடலாம். குறிப்பாக மழைக்காலங்களில் கல்யாண முருங்கை இலையை வடை மாவுடன் சேர்த்து வடை செய்து சாப்பிடலாம். இதை மாலை நேர சிற்றுண்டியாக வைத்துக் கொள்ளலாம். கூடவே, கொஞ்சம் சுக்கு, மல்லி தேநீர் செய்து குடிக்கலாம். இது நெஞ்சில் சளி சேராமல் பார்த்துக் கொள்ளும். மழை மற்றும் குளிர் காலங்களுக்கு ஏற்றது என்பதால் அவ்வப்போது இதை செய்து சாப்பிடுவது நல்லது. அதேபோல் இரவு தூங்கச் செல்லும் முன் பூண்டுப்பால் செய்து சாப்பிடலாம். பூண்டுப்பால் என்பது 10 பூண்டுப்பற்களை உரித்து 50 மில்லி பால், அதே அளவு நீர் சேர்த்து வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பனங்கல்கண்டு சேர்த்து நன்றாகக் கடைந்து குடிக்க வேண்டும்.

வில்வப் பழம்

சிலருக்கு உடல்சூடு அதிகரித்துக் காணப்படும். கண்ணெரிச்சல் மற்றும் உடல் மெலிந்து காணப்ப‌டுபவர்கள் வில்வப்பழத்தின் சதைப்பாகத்தை சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம். அவ்வப்போது தலையில் வில்வப்பழச்சதையை தேய்த்துக் குளிப்பதும் பலன் தரும். இது வலிப்பு நோயாளிகளுக்கும்கூட நல்ல மருந்தாகும். அதேபோல் வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்வது மிகவும் நல்லது. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் செய்வது நல்லது.

எண்ணெய்க் குளியலையும் முறைப்படி செய்ய வேண்டும். தலைக்குத் தேய்க்க தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் 5 மிளகு, கால் ஸ்பூன் சீரகம், ஒரு பல் பூண்டு, ஒரு சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் (காய்ந்த மிளகாய்) ஒன்று சேர்த்து எண்ணெயைச் சூடாக்க வேண்டும். அதன்பிறகு பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதுதான் எண்ணெய்க் குளியல் செய்யும் முறையாகும்.

கேரட், தக்காளி போன்றவற்றை பச்சையாகச் சாப்பிடுவது அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதும் உடல்நலனுக்கு நல்லது. தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி மோர், உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்துச் சாப்பிடலாம். இது சாப்பிட சுவையாக இருப்பதுடன் நலம் தரும் நல்லுணவாக அமையும். கல்யாண பூசணிக்காயில் ஜூஸ் செய்து குடிக்கலாம். அதையே மாலைநேரங்களில் அல்வா செய்து சாப்பிடலாம்.

அதிமதுரம் நல்லது என்பது நமக்குத் தெரியும். தேநீர் தயாரிக்கும்போது எது எதையோ சேர்த்துக்கொள்ளும்போது ஒருவேளை அதிமதுரத்தில் தேநீர் (டீ) செய்து குடிக்கலாம். பொதுவாக ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவது எல்லோருக்கும் நல்லது. குடல் காய்ச்சல் எனப்படும் டைபாய்டு நோய்க்கு ஆரஞ்சுப்பழம் மற்றும் சாத்துக்குடி பழங்களின் சாறு மட்டுமே போதும். அந்நோயிலிருந்து முழுமையாக விடுவிக்கும்.

வேப்பம்பூவை ஊற வைத்து அதன் தண்ணீரைக் குடிப்பது, வேப்பம்பூ ரசம் வைத்துக் குடிப்பது, அடிக்கடி வெண்டைக்காயை சமைத்துச் சாப்பிடுவதும்கூட பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பதுடன் நோய்கள் வராமலும் பார்த்துக்கொள்ளும். இரவில் வெண்டைக்காய்களை வெட்டிப்போட்டு நீரில் ஊற வைத்து காலையில் அதை வடிகட்டிக் குடித்தால் சர்க்கரை நோயிலிருந்து விடுவிப்பதுடன் சிறுநீரகக் கோளாறுகள், உடல்சூடு போன்றவற்றிலிருந்து நம்மை மீட்டெடுக்கும். பீட்ரூட்டை துருவி மோர் விட்டு உப்பு, மிளகு, சீரகம், இஞ்சி, மல்லித்தழை சேர்த்து தாளித்து பகல் உணவில் சாப்பிட்டால் ரத்தம் ஊறும். வாரத்தில் 3 நாள் செய்ய வேண்டும்.

தேங்காயில் துவையல் செய்யும்போது கசகசா சேர்த்துக்கொண்டால் அது சாப்பிடச் சுவையாக இருப்பதுடன் தூக்கமின்மையைப் போக்கும். ஆண்மைக்கோளாறினால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாகவும் அமையும். இதேபோல் கசகசா, மிளகு, பாதாம், சோம்பு, கொத்தமல்லி விதை நைசாக அரைத்து இஞ்சி, பூண்டு விழுது கொஞ்சம் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் குழைக்கவும். இதை உப்பு கலந்து பிரட் ஸ்லைஸ் மீது தடவி தோசைக்கல்லில் வைத்து எடுத்து சாப்பிடுவது வித்தியாசமான ஒரு மாலைநேர உணவாக இருக்கும்.

இப்படி நம் உணவுமுறையை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் நம் உடல்நிலையில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாமல் மருத்துவமனை செல்லாமல் நம் வீடுகளில் உள்ளவற்றைக் கொண்டே நோய்களைத் துரத்தலாம்.

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்

இயற்கை வழி மருத்துவர், உடல் நல ஆலோசகர், மூத்த பத்திரிகையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time