பூச்சிக் கொல்லி மருந்துகள்! புதுப் புது வியாதிகள்!

-சாவித்திரி கண்ணன்

நஞ்சானது விவசாயம்! நலம் குன்றியது வாழ்க்கை! பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவுகதிகமான பயன்பாடுகள் அதிர்ச்சி தரும் விளைவுகள்! அரசுகளோ கார்ப்பரேட்டுகளின் கைப்பாவை! பெரு நிறுவனங்களின் லாபம், விவசாயிகளின் சோகம்! கலங்கடிக்கும் சுற்றுச் சூழல் ஒரு பார்வை!

60 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் செலவில்லாத ஒர் தொழிலாக இருந்தது விவசாயம்! விதை, உரம், தண்ணீர்,பூச்சிவிரட்டி எதற்கும் செலவில்லாமல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட தொழிலாக விவசாயம் இருந்தது.உணவு என்பது முற்றிலும் இயற்கையின் கொடை! பருவகாலம் அறிந்து பயிர் செய்வது ஒன்றே மனிதனின் கடமை என்பதாக இருந்தது!

ஆனால்,இன்றோ அந்த விவசாயம் என்பது பெரு நிறுவனங்கள் தரும் விதைகள், இரசாயன உரங்கள்,பூச்சி கொல்லி மருந்துகள் ஆகியவற்றை நம்பி மட்டுமே உயிர்த்திருக்கிறது! இது தான் நவீன காலத்தில் நடந்த தலை கீழ் மாற்றம்!

1954 ஆம் ஆண்டுவாக்கில் நமது நாட்டில் பூச்சிகொல்லி மருந்துகள் என்பனவற்றின் பயன்பாடு வெறும் 154 மெட்ரிக் டன்கள் தாம்! அது 1994 ஆம் ஆண்டில் 80,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துவிட்டன! தற்போதோ 2,00000 மெட்ரிக் டன்களைக் கடந்துவிட்டது!

இதனால் ஒரு ஹெக்டேருக்கு விவசாயம் செய்ய பூச்சிக் கொல்லிகளுக்கு மட்டுமே செலவழிக்கும் தொகை ரூ5,000 முதல் 6,000 வரையாகிறது! இது ஒரு பெரும் பொருளாதாரச் சுமை மாத்திரமல்ல, அந்த அளவுக்கு உணவையும், மண்ணையும், சூழலையும் நாம் நஞ்சாக்குகிறோம்.

இயற்கை முறையில் பயிர் விளைவிக்கப்பட்ட போது நன்றாக வளர்ந்து ஊட்டமுடன் இருந்த போது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை எதிர்கொள்ளும் திறன் அவற்றுக்கு இயற்கையிலேயே அதிகமாக இருக்கிறது. தேவையானால் வேப்பம் புண்ணாக்கு போன்ற இயற்கை வழிமுறைகளிலான பூச்சிவிரட்டிகள் பயன்படுத்தப்பட்டன!

எப்போது இயற்கையில் கிடைத்த விதைகள் புறக்கணிக்கப்பட்டு, விஞ்ஞானிகள் ஆய்வால் கலப்பின விதைகள் உருவாக்கப்பட்டனவோ அப்போது முதல் புதுப்புது பூச்சிகள் வரத் தொடங்கின! ஆகா! இதுவும் வியாபாரமாச்சு! புடியுங்க பூச்சி கொல்லி மருந்துகளை எடுங்கள் காசை! என்று பெரு நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்க தொடங்கிவிட்டன!

விவசாயத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு தொடங்கியது முதல் தான் கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்தன! மலேரியா ஒட்டுண்ணிகளைச் சுமந்துசெல்லும் கொசுக்கள் பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் திறன் பெற்றவையாகவும் மாறிவிட்டன!

இந்தியாவில் 273 வகையான பூச்சி கொல்லி மருந்துகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன! பதிவு செய்யப்படாமலும் பல பயன்பாட்டில் உள்ளன! மோனோகிரோட்டோபாஸ், எண்டோசல்பான் போன்ற ஆபத்தான பூச்சிக் கொல்லிகள் பலவும் தடையை பொருட்படுத்தாமல் உற்பத்தியும், விற்பனையும் செய்யப்படுகின்றன! பெரும் இயந்திரங்களை பயன்படுத்தி பூச்சி மருந்து தெளிப்புகள் நடக்கின்றன!

இந்த வகையில் உள் நாட்டு உற்பத்தி போதாது என இந்த நஞ்சை வெளி நாடுகளில் இருந்தும் பல்லாயிரம் டன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன!

பூச்சிக் கொல்லி மருந்துகளின் தீவிரம் மனிதர்களுக்கு புற்று நோய், சிறு நீரகக் கோளாறு மற்றும் நரம்புக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. சர்வதேச சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 13 – 19 வயதிலான குழந்தைகளுக்கு விவசாய நிலங்களை சுற்றி இருப்பவர்களுக்கு மூளைக் கோளாறு, உணர்ச்சி வெளிப்பாடு குறைவு போன்றவை ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூச்சி மருந்துகள் வியாபாரத்தின் விளைவாக நோய் பெருக்கம் ஏற்பட்டு மாத்திரை,மருந்துகளின் வியாபாரமும் பெருகிவருகிறது. மருத்துவமனைகளின் தேவைகளும் கூடுகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் நாட்டில் மக்கள்பல்வேறு ஆராய்சிகள் பூச்சிக் கொல்லி மருந்து உணவில் ஊடுருவுயுள்ள காரணத்தால் அவை மனிதர்களுக்கு ஒருவித மனச் சோர்வை உண்டாக்குகின்றன எனச் சொல்கின்றன!

கவனக் குறைவு, மறதி, நரம்புத் தளர்ச்சி மற்றும் தலைவலி, சுவாசப் பிரச்சினை பூச்சிக் கொல்லி பயன்பாடு காரணமாகின்றன! இன்றைக்கு பர்கின்சன் நோய், புற்று நோய் பரவலாக வருகிறது! அதற்கு முக்கிய காரணம் இந்தப் பூச்சிக் கொல்லிகளும், ரசாயன உரங்களுமாகும்! ஒவ்வொரு ஆண்டும் பூச்சி மருந்தின் வீரியம் காரணமாக வயல் வெளிகளிலேயே மயக்கமடைந்து மரணிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது!

உலகில் இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிரினத்திற்கும் ஒரு கடமை அல்லது தெவை என்பது இயற்கையாகவே தீர்மானிக்கப்பட்டு உள்ளது. பூச்சிகள் என்பவை தீமை மட்டும் செய்வதில்லை. நன்மைகளும் செய்கின்றன. பூச்சியினங்களை அழித்துவிட்டால் இயற்கையின் உணவு சுழற்ச்சியும் நின்றுவிடும். மனிதகுலமும் அழிந்துவிடும். உலக மக்களின் 90 சதவிகித உணவுத் தேவைக்கு பயன்படும் முக்கிய தாவரங்களின் மகரந்த சேர்க்கை என்பது பூச்சிகளின் தயவால் தான் நடக்கின்றன. அவ்வாறு நடப்பதன் விலைவாகத் தான் விளைச்சல் அதிகரிக்கின்றன!

ஏற்கனவே, இரசாயன உரப் பயன்பாடுகளால் உணவும், சூழலும் நஞ்சாக மாறி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன!

அரசாங்கம் இதற்கு ஒரு போதும் தீர்வு தராது. நாம் தான் இயற்கை வழிமுறையை விடாப்பிடிவாதமாக பின்பற்றி நஞ்சற்ற உணவு, நோயற்ற வாழ்வை வென்றெடுக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time