ஜெயகாந்தனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்!

-எழில்முத்து

20 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்களில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஜெயகாந்தன்! அவரது சிறுகதைகளும், நாவல்களும் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியவை! அவரது படைப்புகள் பலரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை உருவாக்கியவை!

ஜெயகாந்தன் படைப்புகள் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன! ஆங்கில மொழியிலும், ருஷ்ய மொழியிலும் கூட மொழி பெயர்க்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன! இந்திய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதை பெற்றவர் ஜெயகாந்தன். சாகித்திய அகாதமி விருதும் பெற்றவர்.ரஷ்ய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதும் ஜெயகாந்தனுக்கு தரப்பட்டு உள்ளது.

இவருடைய கதைகள் திரை வடிவமும் பெற்றுள்ளன! உன்னைப் போல ஒருவன், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறுபேர் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்!

திரை உலகில் நடிக்க வருபவர்களுக்கு சிவாஜிகணேசன் எப்படி ஒரு உந்து சக்தியாகத் திகழ்ந்தாரோ.., அது போல தமிழில் எழுத வருபவர்களுக்கு ஜெயகாந்தன் திகழ்ந்தார் என்றும் கூறலாம்! கம்பீரமான எழுத்தாளர் என்றவுடன் அனைவரது நினைவுக்கும் வரக் கூடிய ஒரு ஆளுமையாக திகழ்ந்த ஜெயகாந்தன் மறைவுக்கு பிறகு அவர் நினைவை போற்றும் நூல்கள் பல வெளிவந்துள்ளன!

நேற்றைய தினம் (அக்டோபர்-4) ஜெயகாந்தன் வாசகர் அணி  சார்பில் சென்னை டிஸ்கவரி புக் பேலசில் உள்ள ஜெயகாந்தன் குடிலில் ஜெயகாந்தனை தீவிரமாக நேசிக்கும் அன்பர்கள் கூடி விவாதித்தனர்!

இந்நிகழ்வில் கலை விமர்சகர் இந்திரன், ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்ரமணியம்  , ருஷ்ய வர்த்தகப் பிரிவு ச்செயலர் தங்கப்பன் கவிஞர் பரிணாமன், பேராசிரியர் ஸ்ரீகிருஷ்ணன் நந்திவர்ம பல்லவன், சூடாமணி சடகோபன் பா. தமிழ்த்தம்பி, தமிழ் இயலன், நான் மீடியாஆர்.ஜெ .நாகா , டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், எல். பழநி, C.E.சிவதாஸ், பாபு தாஸ், எழில் முத்து மற்றும் வாசக அன்பர்கள் கூடினர்.

இக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன்  “ஜெயகாந்தன் குடியில் அவரது நண்பர்கள் கூடி விவாதிக்கவும், ஜே.கே-யின் நற்காரியங்களை முன் முனைப்புடன் செயல்படுத்தவும் எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தவும், அவரது தமிழ் இலக்கிய குடும்ப நற்காரியங்களை நடத்தவும் ஏற்படுத்தியுள்ளதே இந்த ஜெயகாந்தன் குடில் ” என்றார்.

கலை விமர்சகர் இந்திரன் பேசும் போது, “நம் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர் ஜெயகாந்தன், எழுத்தே தவமாய் கொண்டு வாழ்ந்தவர். அவரது படைப்புகள் மற்றும், சிந்தனைகள் உன்னதமானவை! அவரோடு நெருங்கி பழகிய, அவரோடு சபையில் பயணித்த நண்பர்கள் அதனை சிறு நூல்களாக பதிவு செய்ய வேண்டும். மேலும், ஜெயகாந்தன் ரீடர்’ என்ற பெயரில் அவரது படைப்புகள்-சபை உரையாடல்கள்-கடிதங்கள் – சொற்பொழிவுகள் – என மொத்தத் தொகுப்பாக தமிழ் – ஆங்கிலத்தில் சாகித்ய அகாடமி வழியே நூல் வடிவமாய் கொண்டுவர வேண்டும்” என்றார்.

பேராசிரியர் ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள்” ஜெயகாந்தன் ஆளுமைகளை ஆங்காங்கே உள்ள ஜெ.கே.நண்பர்கள் பள்ளி – கல்லூரிகளில் ஆய்வரங்கம் – கருத்தரங்கம் நடத்தல் வேண்டும். மேலும் வானொலி – தொலைகாட்சிகள் ஆற்றிய உரைகளை நூல் வடிவமாய் கொண்டு வர வேண்டுமென்றார்”

ரஷ்ய கலாச்சார மையத்தின் தங்கப்பன் தனது உரையில்,” ஜெயகாந்தன் என்றும் சோவியத் நண்பர். அது இணந்திருந்த போதும் சரி, பிரிந்திருந்தபோது உற்ற நண்பராய், தோழராய் அந்த நாட்டுக்கு விடாது செயலாற்றியவர், அதன் பொருட்டே அந்த அரசு அவரை கௌரவித்தது. மேலும் ஜெயகாந்தனை முன்னெடுத்துச் செல்ல ஒரு டீம் ஓர்க்காக செயல்படுத்தி அவருக்குரிய மரியாதையை தற்போதைய அரசுக்கு கொண்டு செல்லும் வகையில் நமது கோரிக்கைகளை சமர்ப்பித்து அதனைச் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

மேலும், இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

# அவர் வாழ்ந்த கலைஞர் நகரில் ஒரு வீதிக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும்.

#  சென்னையில் ஜெயகாந்தனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

# ஜெயகாந்தன் பெயரில் படைப்பாளருக்கு விருதுகள் வழங்க வேண்டும்!

என தீர்மானங்கள் இயற்றினர்! இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக எழில்முத்து அங்கீகரிக்கப்பட்டார். இவருக்கு உறுதுணையாக கலை விமர்சகர் இந்திரன், ஆவணப் பட இயக்குநர் ரவிசுப்ரமணியம், ரஷ்யவர்த்தக பிரிவுச் செயலர் தங்கப்பன், கவிஞர் பரிணாமன், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோர் அடங்கிய குழு ஜெயகாந்தன் புகழை நிலை நிறுத்துவது தொடர்பாக அரசாங்கத்தை அணுகுவதென தீர்மானிக்கப்பட்டது!

செய்தியாக்கம்; எழில்முத்து

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time