சங்கிகளையே மிஞ்சும் சங்கி தான் சந்திரசேகர ராவ்!

-சாவித்திரி கண்ணன்

சந்திரசேகரராவ் பாஜகவையும் மோடி, அமித்ஷாவையும் கடுமையாக தாக்கி பேசுகிறார்! பாஜகவை எதிர்க்கும் அவரது அதிரடி பேச்சுக்களால் தொடர்ந்து அகில இந்திய கவனம் பெற்ற நிலையில், தன் கட்சியை தேசிய கட்சியாக்கிவிட்டார்! உண்மையிலேயே பாஜகவிற்கான மாற்று அரசியலை கே.சி.ஆர் தருவாரா?

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் எனச் சமீப காலம் வரை அறியப்பட்டு, தற்போது பாரத் ராஷ்டிரிய சமிதியின் தலைவராக உருமாறியுள்ள சந்திர சேகரராவ்  தற்போது அகில இந்திய கட்சித் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்! காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கியவர்! என்.டி.ராமாராவின் திவீர ரசிகரான இவர் தன் மகனுக்கு அவர் பெயரைச் சூட்டி மகிழும் அளவுக்கு அவரது சீடராகவும் இருந்தார்! என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சி தொடங்கியதும் அதில் இணைந்தார்! சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார்!

2001 ஆம் ஆண்டு தெலுகு தேசம் கட்சியில் இருந்து விலகி ஆந்திராவைப் பிரித்து தனி மாநிலம் தர வேண்டுமென்ற கோரிக்கையுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை ஆரம்பித்தார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்தார்! தெலுங்கானா மா நில கோரிக்கைகாக தன் மத்திய அமைச்சர் பதவியை ராஜுனாமா செய்தார்! இடைவிடாத போராட்டத்திற்கு பிறகு தனித் தெலுங்கானா மாநிலத்தை பெற்று 2014 ல் அதன் முதலமைச்சரானார். இரண்டாவது முறையும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று வரை அவரே முதல்வராகத் தொடர்கிறார்.

2019 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து தேசிய அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார் சந்திரசேகரராவ்! அதற்காக தொடர்ந்து இந்தியா முழுமையும் பயணப்பட்டு எதிர்கட்சி முதல்வர்களை சந்தித்து பேசி வருகிறார். பாஜக காங்கிரஸ் இரண்டுமற்ற ஒரு மூன்றாவது அணியை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் எனப் பேசி வருகிறார்! கே.சி.ஆர் எனப்படும் சந்திர சேகரராவ் ஆங்கிலம், இந்தி, உருது உள்ளிட்ட பல மொழிகள் தெரிந்தவர். சிறந்த பேச்சாற்றல் உள்ளவர். பாஜகவை எதிர்ப்பதில் ஒரு தைரியமான தலைவர் போல ஒரு தோற்றமும் அவர் மீது ஏற்பட்டு உள்ளது. எனவே, இவர் பாஜகவிற்கு மாற்றான ஒரு வலுவான எதிர்கட்சி அணியை உருவாக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு அகில இந்திய அளவில் எழுந்துள்ளது.

கே.சி.ஆர் மகளுடன்!                                                                                  கே.சி.ஆர் மகனுடன்

சந்திரசேகரராவின் அரசியலைப் பார்த்தால், அவர் தற்போது ஒரு பலமான குடும்ப ஆட்சிக்கு அடித்தளமிட்டு உள்ளதை நாம் பார்க்கலாம். அவரது மகனுக்கு அமைச்சரவையில் மூன்று முக்கிய துறைகள் தரப்பட்டு உள்ளன! மகளும், மருமகனும் கூட ஒரு சக்தி வாய்ந்த முக்கிய அதிகார மையமாகத் திகழ்கின்றனர். அவரும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஊழலில் எந்தவித கூச்சமும் இன்றி ஊறித் திளைக்கின்றனர். பல்வேறு மக்கள் போராட்டங்களை கே.சி.ஆர் மோடியைப் போலவே இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறார். எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விலைபேசி வாங்குவதில் பாஜகவுக்கு இணையாக உள்ளார்.

கே.சி.ஆர் மாளிகையின் வெளித் தோற்றமும், உட்புறமும்!

ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டில் மிகப் பிரம்மாண்ட மாளிகை ஒன்றை கட்டி குடிபோனார் சந்திரசேகர ராவ்! சுமார் பத்து ஏக்கர் நிலத்தில் ஒரு லட்சம் அடியில் அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை விஞ்சும் வகையில் மிக ஆடம்பரமாக மட்டுமின்றி மிக உயர்ந்த கோட்டைச் சுவர்களோடு கட்டப்பட்டது. அதில் குடியேறும் வைபவத்தை மிக ஆடம்பரமாக வாஸ்து பூஜை, சுதர்சன யாகம், பூர்ணாஹுதி உள்ளிட்ட கிரகப்பிரவேச பூஜைகள் செய்து மக்களை வாய் பிளக்க வைத்தார்.  முதலமைச்சரின் குரு என்று அறியப்பட்ட திரிதண்டி ஷ்ரீமன் நாராயண சின்ன ஜீயர் சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெற்றன.

இது மட்டுமின்றி சந்திரசேகர ராவ் ஆட்சியில் அமர்ந்தது தொடங்கி கோவில்களுக்கு அரசு செலவில் தங்க, வைர, வெள்ளி நகைகளை கிலோ கணக்கில் அள்ளித் தந்து கொண்டு இருக்கிறார்! திருப்பதி பெருமாள் கோவிலுக்கு ஐந்து கோடி செலவில் 19 கிலோ தங்க நகைகள்! வாரங்கால் பத்திரகாளி அம்மனுக்கு 11 கிலோ தங்க நகைகள், யாத்திரி லட்சுமி நரசிம்மர் கோவிலை 1,800 கோடியில் புனரமைத்து 125 கிலோ தங்கம் தந்துள்ளார். கனக துர்க்கை அம்மனுக்கு 137 கோடியில் வைர மூக்குத்தி தந்துள்ளார்.

இந்தப்பட்டியல் வெகு நீளமானது என்பதால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக ஆளும் வேறு எந்த ஒரு மாநிலமும் தன்னுடன் போட்டி போட முடியாத அளவுக்கு கோவில்களுக்கு நாளும், பொழுதும் அள்ளி இறைத்து வருகிறார்! மக்கள் நலக் காரியங்களுக்கு செலவழிக்க வேண்டிய பணத்தை இப்படி கோவில்களுக்கு அள்ளி இறைப்பதா? என்பது போன்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகளின் விமர்சனங்களை கே.சி.ஆர் பொருட்படுத்துவதே இல்லை.

பெருமழை, வெள்ளம், கொரானா காலங்களில் கே.சி.ஆர் தன் மாளிகையை விட்டு வெளியே வரவே இல்லை. இவரது ஆட்சி காலத்தில் தெலுங்கானாவில் மட்டுமே 8,000க்கும் அதிகாமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்! அது பற்றியெல்லாம் சிறிதும் குற்றவுணர்ச்சியற்றவராக அதிரடி அரசியல் செய்து வருகிறார்,கே.சி.ஆர்! கவர்ச்சிகரமான இலவசங்கள் மற்றும் நிதி அளிப்பு ஆகியவற்றால் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துவிடலாம் என்பதாக கே.சி.ஆர் ஆட்சியின் நடவடிக்கைகள் உள்ளன!

சரி, அவரது பாஜக எதிர்ப்பு தேசிய அரசியலுக்கு வருவோம். பாஜகவை எதிர்ப்பதில் காங்கிரசை தவிர்க்க வேண்டும் என கே.சி.ஆர் வலியுறுத்துகிறார். இதன் மூலம் எதிர்கட்சிகள் ஓட்டை பாஜகவிற்கு சாதகமாக சிதறடிக்கவே அவர் திட்டமிடுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது. ஆனால், அவர் காங்கிரசை விடவும் அடிக்கடி பாஜகவை தாக்கி பேசுவதன் மூலம் இதனை சமன் செய்யப் பார்க்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்! ஆனால், காங்கிரஸ் தான் தெலுங்கானாவில் வலுவான எதிர்கட்சி, அதை புறக்கணித்து பாஜகவை பற்றி மட்டுமே பேசுவதன் மூலம் பாஜகவை ஒரு முக்கிய எதிர்கட்சி போல கவனப்படுத்துகிறார் என்பதை புறந்தள்ள முடியாது.

பாஜவை கடுமையாக விமர்சித்தாலும் பாஜக அரசு கொண்டு வருகிற மக்கள் விரோத சட்டங்களுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பிக்கள் ஆதரவாகவே ஓட்டு போட்டு வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்கள், தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் சட்டங்கள் ஆகிய பலவற்றை கே.சி.ஆர் கட்சியினர் ஆதரித்தனர் என்பதை எப்படி புரிந்து கொள்வது? சி.ஏ.ஏ. என்.ஆர்.சி போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்த போது கூட, மிக மென்மையாகத் தான் தன் எதிர்ப்பை பதிவு செய்தார் கே.சி.ஆர். அந்த மென்மையான எதிர்ப்பும் கூட தெலுங்கானாவில் அதிகமான எண்ணிக்கையில் உள்ள இஸ்லாமிய வாக்காளர்களை கவனத்தில் கொண்டு தான் என்பதே உண்மை!

ஒன்றுபட்ட ஆந்திராவையே ஏற்க மறுத்து, தனி தெலுங்கானாவே உயிர் மூச்சு எனச் சொன்னவர், தற்போது தெலுங்கானா சமிதி என்ற அடையாளத்தையே துறந்து, அகில இந்திய அரசியலின் ஆளுமையாகத் துடிக்கிறார். மகனிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்து விட்டு, பிரதமராக வேண்டும் என காய்  நகர்த்தி வருகிறார்! அதற்கு தேசிய அளவில் பாஜக மீது மக்களுக்கு ஏற்பட்டு உள்ள திருப்தியை காங்கிரசிடம் இருந்து மடைமாற்றி அறுவடை செய்ய நினைக்கிறார்.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கே.சி.ஆர் பாஜகவிற்கு மாற்றான ஒரு ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க தகுதியானவர் தானா? என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time