பொய்களின் புதையலே பொன்னியின் செல்வன்!

-சாவித்திரி கண்ணன்

சோழ மண்ணின் வரலாற்று அடையாளங்களே இல்லாத காட்சிப்படுத்தல்கள்!, சத்தியம் செய்து சொன்னாலும் கூட தமிழச்சிகள் என நம்ப முடியாத நடிகைகள்! நாளும், பொழுதும் போர்களோடும், சூழ்ச்சிகளோடுமாக மன்னர்கள் வாழ்ந்ததாக காட்டும் அறியாமை! பிரம்மாண்டம் காட்டிடும் பித்தலாட்டச் சினிமா!

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் படம் பற்றி எழுதுவதையே தவிர்த்து விடலாம் என்று தான் படம் பார்த்து முடித்ததும் தோன்றியது! அந்த அளவுக்கு படத்தில் வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், வன்முறைகள், ரத்தம் போன்றவை தூக்கலாக இருந்தது ஒரு காரணம்! ‘பண்டைய மன்னராட்சி காலம் என்றாலே அன்று இயல்பாக மனிதர்கள் இருந்திருக்க மாட்டார்களோ..’ என கதையை படிக்காமல் படம் பார்க்க வருவர்களை திகிலடைய வைக்கிறது படம்!

கல்கியின் கதையை நம்பியதை விட ஐஸ்வர்யாராய், த்ரிஷா ஆகியோரின் கவர்ச்சியையும், வாள்வீச்சு, அதீத சண்டைக் காட்சிகள், பிரம்மாண்ட காட்சிபடுத்தல் ஆகியவற்றைத் தான் மணிரத்தினம் பெரிதும் நம்பியுள்ளார் எனத் தோன்றுகிறது.

ஐஸ்வர்யாராய், த்ரிஷா என்ற வயதான முதிர் கன்னிகளை காட்சிபடுத்தலில் அழகுபட காண்பித்தாலும், ‘இளமை மிஸ்ஸிங்’ என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை! மைதா மாவைப் போல வெள்ளையாக காட்சியளிக்கும் இந்த இருவரையும் சோழ மண்ணின் தமிழச்சிகளாக ஏற்க மனம் ஒப்பவில்லை. இந்த கடந்த கால் நூற்றாண்டாக ஐஸ்வர்யா ராயை விட சிறந்த அழகியை மணிரத்தினத்தால் இந்திய திரையில் அடையாளம் காண முடியவில்லை என்பது அவரது தேங்கிய ரசனைக்கு அடையாளமாகும். அதே சமயம் ஐஸ்வர்யா, த்ரிஷா இருவரும் இளமையைக் கடந்தவர்கள் என்பதைத் தவிர, இவர்களின் அழகிலோ, நடிப்பாற்றலிலோ எந்தக் குறையும் சொல்ல முடியாது.

படத்தின் நல்ல அம்சங்கள் என சொல்ல வேண்டுமென்றால், மன்னராட்சி கால பிரம்மாண்டத்தை காட்சிபடுத்திய மெனக்கிடல்களை சொல்லியே ஆக வேண்டும்.ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. நடிகர், நடிகைகளின் திறமைகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக வந்தியத் தேவனாக வருகின்ற கார்த்தியின் நடிப்பு அசத்தலாக உள்ளது. வீரம், காதல், நகைச்சுவை, புத்திசாலித்தனம், மன்னர் முன் காட்டும் பணிவு, குதிரையில் பறக்கும் வேகம்.. என நவரச நடிப்பில் மிளிர்கிறார் கார்த்தி!

வந்தியத் தேவன் கதாபாத்திரத்தை சாதுர்யமிக்க ரசனைக்குரிய இளம் வீரனாக கல்கி படைத்திருந்தார். ஆனால், அவனை பெண்களிடம் ஜொள்ளு வழிபவனாக காட்சிபடுத்திவிட்டார் மணிரத்தினம். ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தை மிகவும் மிகைப்படக் காண்பித்துள்ளார் மணிரத்தினம். அதில் சாதுர்யமும், தந்திரமும் கொண்ட வைஷ்ணவ பிராமணரை தத்ரூபமாக கண்முன்பு நிறுத்தி விட்டார் ஜெயராம்!

ஆழ்வார்க்கடியானின் ஜாதி, மதப் பெருமிதங்களை வந்தியத் தேவன் துச்சமாக கிண்டலடித்து, அவரது திமிரை அடக்கி ஆளும் காட்சிகளின் வழியே தனது சார்பற்ற பொதுத் தன்மையை மணிரத்தினம் வெளிப்படுத்தியுள்ளார் என்பது கவனத்திற்கு உரியது!

ஜெயம் ரவியின் கம்பீரம் சிறப்பாக இருந்தாலும், ஏதோ ஒரு சோகக் கலை அவர் முகத்தில் சதா இருப்பது போல் இருந்ததை தவிர்த்து இருக்கலாம்! புங்குழலியாக வரும் பெண்ணும் நல்ல ‘பெர்பாமன்ஸ்’ தந்துள்ளார்.

படத்தின் பெரும் பகுதியை சண்டைக் காட்சிக்கு தந்துவிட்டபடியால் பிரபு, பார்த்தீபன், விக்ரம் பிரபு, மோகன்ராம், ஜெயச் சித்ரா போன்ற திறமையான கலைஞர்களுக்கு போதிய வாய்ப்பளிக்க முடியாமல் போய்விட்டதோ… எனத் தோன்றுகிறது.

பொன்னியின் செல்வன் மிக சுவாரஷ்யமான சோழர் கால வரலாற்று புதினம்! வரலாற்றை கொஞ்சம் மட்டுமே எடுத்துக் கொண்டு அதில் தன் புனைவுகளோடு,  பொய்யையும் சேர்த்தே கலந்திருந்தார், கல்கி! ஆதித்திய கரிகாலனைக் கொன்றது பார்ப்பனர்கள் என்பதை மறைத்து, பாண்டியர் எனச் சொல்லிய ஒரு பொய்க்கு வலு சேர்க்க பல புனைவுகளை வலிந்து, அவர் திணித்தார்! அதில் நந்தினியின் பாத்திர படைப்பு தொடங்கி ஆபத்துதவிகள் என்ற பாண்டிய படை வரை அனைத்தும் அந்தப் பொய்க்கு வலு சேர்க்க செய்யப்பட்ட பெரும் புனைவுகளே!

மணிரத்தினமும் தன் பங்கிற்கு அந்தப் பொய்யை வலுப்படுத்த அருவருக்கத்தக்க வகையில் பாண்டியர்களை நாகரீகமே இல்லாத காட்டுமிராண்டிகள் போல விகாரமாகக் காட்டியுள்ளார். இது மிகப் பெரிய பிழை என்பதைவிட, அநீதியாகும்! இத்தகையை சிறுமதியுடன் ஒரு வரலாற்றை படமாக்கியுள்ள அறியாமையை என்னென்பது?

ஆதித்திய கரிகாலன் மீது அன்றைய பார்ப்பனர்களுக்குத் தான் கோபம் ஏற்பட்டு போட்டுத் தள்ளி விட்டார்கள்! ஆனால், மணிரத்தினத்திற்கு என்னாச்சு? மிகையான போர் வெறியனாகவும், நிதானமற்ற பெண் பித்தனாகவும் காட்டியுள்ளாரே! ஏதோ நந்தினியையே சதாசர்வ காலமும் நினைத்து வாழ்க்கையை தொலைத்தவனைப் போல அவனை வெறிபிடித்தவன் போல காட்டி இருப்பது, அவனது சரித்திரப் பெருமைக்கே இழுக்காகும்!

சினிமா சோழப் பிரதேசத்தின் வரலாறு என்ற நிலையில், சோழ மண்ணின் வரலாற்றுத் தடயங்களோ, மக்களின் பண்பாட்டு கூறுகளோ  துளியும் இல்லாதவாறு படம் எடுத்து வெற்றி காண முடியும் என்பதை மணிரத்தினம் நிருபித்து உள்ளார். காட்சிப்படுத்தப்பட்டு உள்ள வட இந்திய பிரம்மாண்ட அரண்மனைக் கட்டிடங்கள் மிகவும் உறுத்தலாக உள்ளது.

அடிக்கடி ஆபத்துகளின் போது வந்து உதவும் ஒரு அமானுஷ்ய பெண் கதாபாத்திரம் சுந்தரச் சோழனின் சொல்லப்படாத துரோகத்திற்காக நேர்மறையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வீரப் பெண்ணின் தியாகமே என்பதை கல்கியைப் போலவே மணிரத்தினமும் தெளிவு படுத்தாமல் கடந்து விட்டார்! மன்னர் குடும்ப மகாத்மியங்களைத் தான் இவர்களால் பார்க்க முடியும். அதே காலகட்டத்தில் மண்ணில் உயிர்ப்போடு நடமாடிய எளியவர்கள் எவ்வளவு பெரிய தியாகங்களை செய்தாலும், இவர்கள் பதிவு செய்யவும் மாட்டார்கள், நன்றி பாராட்டவும் மாட்டார்கள் என்பதற்கு இதுவே அத்தாட்சி!

இந்து என்பது அரசியல் ஆயுதம்! ஆதிக்கத்தின் குறியீடு

மன்னர்களின் படாபடோப வாழ்வே எளிய மக்களின் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளால் தான் சாத்தியமானது என்பதைச் சொல்லும் நேர்மையை நாம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது! உண்மையான வரலாற்றை ஊனமாக புரிந்து கொள்ளத்தக்க வகையில், உருவாக்கப்பட்ட படமே பொன்னியின் செல்வன்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time