அரசு மருத்துவக் கட்டமைப்பையே அழிக்கிறார்களா..?

-சாவித்திரி கண்ணன்

மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்..என எல்லாவற்றிலும் பற்றாகுறை! பெருந்திரளான ஏழை,எளிய, நடுத்தர பிரிவு மக்களின் ஒரே புகலிடமாகத் திகழும் அரசு மருத்துவமனைகளை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.

அகில இந்திய அளவில் அரசு மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் மிக வலுவானது! ஆனால், சமீப காலமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும் விதமாக அரசு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்திக்க நேருகிறது!

சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு செலவழிக்க சக்தியற்ற நிலையில் அரசு மருத்துவமனையே தஞ்சமென வாழ்கின்றனர்! நெருக்கியடிக்கும் கூட்டம், நீண்ட வரிசை, சுகாதாரச் சீர்கேடு, மருந்து மாத்திரை பற்றாகுறை, மருத்துவர்கள், செவிலியர்களின் போதாமை.. என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அரசு மருத்துவமனையை விட்டால் வேறு கதியற்றவர்களாக மக்கள் பெருந்திரள் உள்ளனர் என்பதே உண்மை!

ஆனால், எட்டுக் கோடி சொச்சம் மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் வெறும் 19,000 அரசு மருத்துவர்களே உள்ளனர்! உண்மையில் இவர்களின் எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு கூடுதலாகத் தேவைப்படுகிறது! அரசு மருத்துவமனைகளில் தங்கள் சக்திக்கும் மீறிய அதிக உழைப்பை டாக்டர்களும்,செவிலியர்களும் தந்து சோர்வடைகிறார்கள்! இது மட்டுமின்றி துப்புறவு பணி செய்ய வேண்டிய பணியாளர்களும் கூட போதுமான அளவில் இல்லை! இதனால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் சொல்லி மாளாது! இத்தனைக்கு இடையில் மருத்துவ துறையை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் மாபியா கூட்டமான தனியார் மருத்துவமனைகளின் லாபி அரசு மருத்துவ கட்டமைப்பையே அழிக்கத் துடிக்கின்றது!

மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்திற்காக அரசு மருத்துவமனை கட்டமைப்பை வலுவாக்க செலவழிக்க வேண்டிய மக்களின் வரிப்பணம் தனியார் மருத்துவமனைகளுக்கும், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பெரிய அளவு மடைமாற்றம் செய்யப்படுகிறது! நேரடியாக மருத்துவமனைகளுக்கு தந்து விடக் கூடிய – இது வரையிலுமான – நடைமுறையை மாற்றி, இன்சூரன்ஸ் நிறுவனத்தை இடைத்தரகராக்கி, அவர்களிடம் அரசு மருத்துவர்களும், மக்களும், கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மற்றொருபுறம் எந்த ஒரு தனியார் மருத்துவமனையும் ஒதுக்கப்பட்ட இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதோடு திருப்தி அடைவதில்லை. கூடுதல் பணத்தை மக்களிடம் கறக்காமல் நிம்மதி அடைவதில்லை.

இதனால் இன்சூரன்ஸ் என்ற தூண்டிலில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் செல்வோர் தங்கள் வாழ்நாள் சேமிப்பையோ அல்லது இருக்கும் சொத்துகளை அழித்து தான் மீள்கிறார்கள்!

தமிழகத்தில் கிராமபுற மக்களின் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டவையே ஆரம்ப சுகாதாரமையங்கள்! அந்த ஆரம்ப சுகாதார மையங்களிலோ போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை. தேவையான மருந்து மாத்திரைகள் இல்லை. சிகிச்சைக்காக செல்லும் மக்கள் படும் துயரங்கள் கொஞ்ச, நஞ்சமல்ல.

சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விசிட் செய்தார். அவருடன் அதிகாரிகளும், உள்ளூர் அமைச்சர் துரைமுருகனும் சென்றனர். இந்த விசிட்டை தொலைகாட்சி சேனல்கள் கவரேஜ் செய்தன! அந்த சுகாதார மையத்தில்,” பாம்புக்கடிக்கான மருந்து இருக்கிறதா?” என அமைச்சர் கேட்கிறார். ”இல்லை” என அந்த பெண் மருத்துவர் கூறுகிறார். உடனே, அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டு, ”ஏன் இங்கே இல்லை. சுற்றுவட்டார மக்கள் பாம்புக் கடித்து வந்தால் என்ன செய்வீர்கள்?” என சத்தம் போட்டு, அந்த பெண் மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிடுகிறார். கூடவே இருந்த மூத்த அமைச்சர் துரைமுருகன், ”இந்தம்மாவை கன்னியாகுமரிக்கு தூக்கி அடியுங்கள்” என்கிறார்.

இந்த சம்பவம் தமிழக அரசு மருத்துவர்களை அதிர வைத்துள்ளது! ஒரு டாக்டர் சரியாக பணிக்கு வராமல் இருந்தாலோ, தன்னுடைய கடமையில் குறைபாடு உடையவராக இருந்தாலோ நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், மருந்து, மாத்திரைகள் போதுமான அளவுக்கு ஸ்டாக் இல்லாமல் போனால் நிர்வாகத்திற்கு தகவல் தந்து காத்திருக்கத் தான் முடியுமே அன்றி, தானே செலவழித்து வாங்க இயலாது. மருந்து கையிருப்பில் இல்லாததற்கு மருத்துவர் எப்படி பொறுப்பாக முடியும்? மருந்து, மாத்திரைகள் அனுப்ப வேண்டிய நிர்வாக அமைப்பு தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என மருத்துவர் அமைப்புகள் கொந்தளித்துள்ளன. ”சம்பந்தப்பட்ட பிரச்சினையின் மூலத்தை களைந்து எடுக்க முனையாமல், மீடியா கவரேஜ் கிடைப்பதால் அதிகார தோரணையில் மருத்துவர்களை தூக்கி அடிக்க வேண்டும் என ஆணையிடுவது ஏற்க முடியாத அராஜகமாகும்’’ என்கிறார்கள்!

அரசு சுகாதாரத் துறையில் மருந்து, மாத்திரை கொள்முதல் தொடங்கி மருத்துவ கருவிகள் வாங்குவது வரை பேரங்களும், ஊழல்களும் கொடி கட்டிப் பறக்கின்றன! அப்படி வாங்கப்பட்ட மிஷின்களை சரியான இடத்தில் நிறுவி பழுதில்லாமல் பயன்படுத்துவதே ஒரு சவாலாகிவிட்டது. மருத்துவமனை கட்டிடங்கள் பாழடைந்து உள்ளன! தண்ணீர் வசதி கூட போதுமான அளவுக்கு இல்லாமல் அரசு மருத்துவமனைகள் அல்லாடுகின்றன.

உள் நோயாளிகள் 2,000 பேர், வெளி நோயாளிகள் நாளொன்றுக்கு 4,000 பேர் என மக்கள் அதிகமாக புழங்கும் கோவை அரசு மருத்தவமனையில் எல்லாவற்றிலும் பற்றாக்குறையே நிலவுகிறது. டாக்டர்கள் எழுதி தரும் மாத்திரை மருந்தில் பாதி தான் நோயாளிகளுக்கு தர முடிகிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 60 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 30 பேர் தான் உள்ளனர். மருந்தாளுனர்கள் எனப்படும் கம்பவுண்டர்களும் மிகக் குறைவு! பல முக்கிய பிரிவுகளில் டாக்டர்களே சுத்தமாக இல்லை. இந்த பற்றாகுறை போதாது என ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் இவர்களை அனுப்புகிறார்கள் எனச் சொல்லபடுகிறது. கோத்தகிரி அரசு மருத்துவமனையில் 14 டாக்டர்களுக்கு பதிலாக ஆறு மருத்துவர்களே உள்ளனர்! பெரும்பாலான ஆரம்ப சுகாதார மையங்களில் ஐந்து டாக்டர்கள் பணி புரிய வேண்டிய நிலையில் மூவர் தான் உள்ளனர். அதாவது, ஆரம்ப சுகாதார மையங்கள் என்று எடுத்துக் கொண்டாலே சுமார் 2,000 மருத்துவர்கள் பற்றாகுறையால் திண்டாடுகின்றன!

இதே போல போதுமான செவிலியர்களும் இல்லை. செவிலியர் பணியிடங்களில் தற்போது சரிபாதி ஒப்பந்த கூலி முறையில் நிரப்பபடுகின்றன. உயிர்காக்கும் உன்னத சேவை செய்யும் செவிலியர்களை இப்படி பணிப்பாதுகாப்பற்ற அத்துக் கூலிகளாக அரசு நிர்வாகமே நடத்துவது எவ்வளவு பெரிய அநீதி?

மருந்து, மாத்திரை பற்றாகுறையே இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடித்துப் பேசுகிறார்! ஆனால், கடந்த நான்கு மாதங்களாக அரசு மருத்துவமனையை சார்ந்து வாழும் நோயாளிகளின் அனுபவங்கள் கசப்பானதாகவே உள்ளன.

இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளையிடம் கேட்ட போது, ”அரசு மருத்துவமனைகளில் கடந்த நான்கு மாதமாக போதுமான ஆண்டிபயாடிக் மருந்துகள் இல்லை. வலிப்புக்கு தரப்படும் மாத்திரைகள் இல்லை. அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து நிபுணர்களுக்கு தேவைப்படும் மயக்க மருந்துகள் இல்லை.

அறுவை சிகிச்சைக்கு பயன்படும் பிளேடுகள் கூட மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. ஒரு நாளுக்கு 12 ஆபரேஷன்கள் நடக்கின்றன என்றால், நான்கு பிளேடுகளே கையிருப்பில் இருக்கின்றன. ஒரே பிளேடை கழுவி துடைத்து அடுத்தடுத்த அறுவை சிகிச்சைக்கும் பயன்படுத்துவது நியாயமாகாது. மேலும், அது கூர்மை குறைந்த நிலையில் முக்கிய உறுப்புகளை அறுக்கும் போது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆபரேஷன் முடிந்ததவுடன் தையல் போட வேண்டும். அதற்கு போதுமான மெட்டிரியல் இல்லை. இதனால் திருப்திகரமாக தையல் போட முடியாத அவல நிலை நிலவுகிறது! இவையெல்லாம் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது! தயவுசெய்து இந்த விவகாரத்தில் பற்றாகுறையில்லாத நிலையை அரசு உருவாக்கித் தர வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்”என்றார்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time