பாராளுமன்ற ஜனநாயகத்தைப்  படுகுழிக்குள் தள்ளும் பாஜக!

சாவித்திரி கண்ணன்

எந்த ஒரு இயக்கமும் ஜனநாயகத்திலும்,வெளிப்படைத் தன்மையிலும் எவ்வளவு உறுதியோடு இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் அது குறித்த மதிப்பீட்டிற்கு நாம் வரமுடியும்!

பாராளுமன்றத்தில் சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தி விவாதித்து, விவாதத்தின் பயனா சில திருத்தங்கள்,மாற்றங்களைச் சேர்த்து முழுமைப்படுத்துவது என்பது தான்  இதுவரையிலுமான மரபாகும்!

ஆனால், இந்த மரபைத் தூக்கிவீசி எறிந்துவிட்டு, நான் வைத்தது தான் சட்டம். விவாதத்திற்கே இடமில்லை  என்று பாஜக அரசு செயல்படுவதை PRS Legislative Research அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் சட்ட மசோதாக்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன, பாஜக ஆட்சியில் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன  என்பது குறித்து அந்த ஆய்வு தெரிவிப்பதாவது;குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான 14 மற்றும் 15 வது நாடாளுமன்ற கூட்டத்தில் 60%லிருந்து 71% வரையிலான மசோதாக்கள் நிலைக்குழு,தேர்வுக்குழுக்களுக்கு அனுப்பி முழுமைபெற்றுள்ளன.ஆனால்,பாஜக காலத்திலோ மிகச் சொற்பமான மசோதாக்களே நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளன!

14 வது நாடாளுமன்றத்தில் (2004-2009) 60%

15 வது நாடாளுமன்றத்தில் (2009-2014) 71%

16 வது நாடாளுமன்றத்தில் (2014- 2019) 26%

17 வது நாடாளுமன்றத்தில் தற்போது வரை அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மசோதாக்களில் 90% விவாதமின்றியும், தேர்வுக் குழுவிற்கோ, நிலைக்குழுவிற்கோ அனுப்பப்படாமலும் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

இது குறித்துச் சென்ற ஏற்கனவே 17 எதிர்க்கட்சிகள் கூட்டாக இந்திய துணை குடியரசுத் தலைவரும்,ராஜ்யசபை தலைவருமான வெங்கய்யா நாயுடுவிடம் புகார் கொடுத்தும் அதே நடைமுறையே சமீபத்திய கூட்டத் தொடரிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பது தான் வேதனை!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் இந்த நாட்டின் கோடிக்கணக்கான  மக்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியது,அவர்கள் வாழ்க்கையையே திசை மாற்ற கூடியது! அப்படிப்பட்ட சட்டங்களை உருவாக்கும் போது மிகுந்த கவனமும், நிதானமும் தேவை!ஆனால்,இது இரண்டும் தான் தற்போது பாஜக ஆட்சியில் பார்க்கமுடிவதில்லை!

இதுவரையிலுமான பாராளுமன்ற பாரம்பரியத்தில் முதலில் ஒரு மசோதா அறிமுகமாகும் போது அது தொடர்பான கருத்துகள் மனம் திறந்து விவாதிக்கப்படும்.சாதக,பாதகங்கள் அலசப்படும்.இதன் மூலம் அதில் உள்ள தவறுகள் களையப்பட்டு,முழுமைப்படுத்தப்படும். பல நேரங்களில் சபையில் ஒரு கருத்தொற்றுமை உருவாகவில்லையென்றால்,அது நிலைக்குழு,தேர்வுக்குழு ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படும்.அங்கே சம்பந்தப்பட்ட துறையில் அதிக ஈடுபாடுள்ள ஆளும்கட்சி,எதிர்கட்சி எம்.பிக்கள் மட்டுமின்றி துறை சார்ந்த நிபுணர்கள்,சமூக செயல் பாட்டாளர்கள் ஆகியோரை அழைத்து கருத்துகள் கேட்டு முழுமை வடிவம் பெறும்! இதன் பிறகும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு அமல்படுத்தப்பட்ட சட்டங்கள் என்ன விளைவைத் தருகின்றன என்றும் அலசப்படும்!

ஆனால்,இவற்றையெல்லாம் பாஜக அரசாங்கம் சுத்தமாக விரும்புவதில்லை!

அதிரடியாக மசோதாக்களை அறிமுகம் செய்வது,அராஜகமாக அதை நிறைவேற்றிக் கொள்வது என்ற போக்கு உள்ளது.அதுவும் சென்ற பல வருடங்களாக விவாதித்து அமல் செய்யப்பட்ட பல நல்ல சட்டங்களை சுயநல நோக்கத்துடன் மாற்றியமைத்து விவாதமின்றி நிறைவேற்றுகிறது. இருக்கின்ற தொழிலாளர் நலச்சட்டங்களை அழித்து கொடுமையான அணுகுமுறைகொண்ட சட்டங்களை ஒரு சில நிமிஷங்களில் எதிர்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் அமல்படுத்தியுள்ளனர்.விவசாய மசோதாக்களும் இப்படித்தான் நிறைவேறின.இந்திய ரிசர்வ் வங்கிக்குள்ள அதிகாரங்களை குறைத்து சட்டங்கள் ரயில்வே துறையில் அரசு முதலீடுகளைக் குறைத்து தனியார்கள் நுழைந்து எப்படி வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு மசோதா,ஆர்.டி.ஐ ஆக்டில்  திருத்தம்,என்.ஐ.ஏ, முத்தலாக், மோட்டார் வாகன திருத்தம் இப்படி அதிரடியாக சுமார் 50 மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டே போகிறார்கள்! பொருளாதார சரிவுகள் பற்றி விவாதமே நடத்தமுடியவில்லை! ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் உள்ள கேடுகளை சொல்ல முடியவில்லை என எம்.பிக்கள் கதறுகின்றனர்.

பாஜக செய்யும் இன்னொரு தந்திரம் என்னவென்றால், பாராளுமன்றத்தை மாலை நேரத்தில் ஆரம்பித்து நடு இரவு வரை நடத்துவதாகும். இதனால்,சில உறுப்பினர்கள் அதிக நேரம் நள்ளிரவில் விழித்துவிவாதிக்க வாய்ப்பில்லாமல் வெளியேறிய நேரமாகப்  பார்த்து ஆள்குறைவான நேரங்களில் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வார்கள்.அது போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக வெளி நடப்பு செய்யும் நேரமாகப் பார்த்தும் காரியத்தை முடித்துக் கொள்கிறார்கள்! மக்கள் பிரதி நிதிகளுக்கே இது தான் நிலையென்றால்,சாதாரண மக்களின் நிலைபற்றிச் சொல்லவும் வேண்டுமா?

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time