தமிழகத்தில் வெற்றி, வட இந்தியாவில் தோல்வி! காரணம் என்ன? கமர்ஷியல் ஆங்கிலுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கதைக்குத் தரவில்லை. ஒமர்முக்தார், ஜோதா அக்பர் போன்ற வரலாற்றுப் படங்களுக்கு கிடைத்த முக்கியத்துவம் இதற்கு கிடைக்காமல் போனது ஏன்? என்னென்ன அம்சங்களில் கோட்டைவிட்டார்கள்?
பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. பிரச்சினை என்னவென்றால், இது போன்ற பெரும் செலவில் மற்ற மொழிகளில் எடுக்கப்படும் வரலாற்றுப் படங்கள் வெறும் கமர்ஷியல் படமாக மட்டும் இருக்காது. புவியியல் அமைப்பு, மக்களின் வாழ்நிலை, போன்றவற்றை பிரதிபலித்தன. வரலாற்றை விளங்கிக் கொள்ளும் வகையில் நிதானமாக இருந்தன. படம் பார்ப்பவர்கள் சிந்திக்கவும், அசைபோடவும் வாய்ப்பளித்தன.
கிளியோபாட்ரா, ஓமர் முக்தார், ஜோதா அக்பர், காந்தி, அம்ராபாலி, 1921 போன்ற படங்கள் வேறு சில விஷயங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்தன.
படம் முடிந்து வெளியே வந்த பின்பும் ஒரு மணம் போல படம் மனதில் தங்கியிருந்தது. எனவே அந்தப் பகுதி மக்களைத் தவிர, பலதரப்பட்டவர்களை இந்தப் படங்கள் ஈர்த்தன.
இயக்குநர் மணிரத்தினம் எழுத்தாளர் கல்கியோடு சேர்த்து ஓவியர் மணியத்தையும் கொஞ்சம் ஆழமாக உள்வாங்கியிருக்கலாம். அப்படி உள்வாங்கி இருந்தால், இன்னும் சிறப்பான பரிமாணங்களை கண்டடைந்திருப்பார்.
கல்கியின் வாசகர்கள் படம் எப்படியிருந்தாலும் பார்க்கத் தயாராக இருந்தனர். பெரும் பாலானவர்களுக்கு படம் பிடித்தே இருந்தது. தமிழ் மக்கள் இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படத்தைக் கைவிட மாட்டார்கள் என்ற மணிரத்னத்தின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. பொன்னியின் செல்வன் தமிழ் சமூகத்தின் மேல் ஏற்படுத்தியிருந்த தாக்கம் அத்தகையது.
கமர்சியல் வெற்றி கைகூடியதா?
ஆனால், இப்படத்தின் இந்தி பதிப்பின் முதல் வார வசூல் 20 கோடி மட்டுமே. பொன்னியின் செல்வன் அகில இந்திய அளவில் வெற்றி பெறக்கூடிய பேன் இந்தியப் படங்களின் வரிசையில் சேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த இடத்துக்கு அருகிலேயே வரமுடியவில்லை.
பாகுபலி முதல் பாகம் 650 கோடியும் இரண்டாவது பாகம் 1810 கோடி ரூபாயும் வசூலித்தன. கேஜிஎஃப் முதல் பாகம் 596 கோடியும் இரண்டாவது பாகம் 1200 கோடியும் வசூலித்தன. பொன்னியின் செல்வனுக்கு இந்தி பார்வையளர்களிடையே வரவேற்பு பெரிதாக இல்லை என்கிறது பிசினெஸ் டுடே.
இதற்குக் காரணமாக படக்குழுவின் மார்க்கெட்டிங் உத்திகளில் இருந்த குறைகளை சினிமா சந்தை பாற்றிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். படத்தின் இந்தி மார்கெட்டிங் டெல்லி மும்பையை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தது.
மார்க்கெட்டிங், புரொமொஷன் ஆகியவை பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்களுக்கு பிரம்மாண்டமாக இருந்தன. சரியான விநியோகஸ்தர்கள் இப்படங்களைப் பிரபலப்படுத்தும் வேலையை முன்னின்று நடத்தினர். விளம்பரங்களுக்கு பணம் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டது.
பொன்னியின் செல்வனுக்கு பென் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மட்டுமே சந்தைப் படுத்தும் பணியைச் செய்தது. மற்றபடி படத்தை அகில இந்திய அளவில் பிரபலப்படுத்த போதுமான முயற்சி எடுக்கவில்லை என்கிறது koimoi.com. பொன்னியின் செல்வன் டிரைலரும் இந்தி பெல்ட்டின் கவனத்தை கவர்வதாக இல்லை. எனவே, படத்தை முன்னே தள்ளுவதற்கான உந்துதல் கிடைக்கவில்லை ரோஜா, பம்பாய் போன்ற மணிரத்னத்தின் படங்கள் பெரிய விளம்பரங்கள் இல்லாமலேயே பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. விக்ரம் வேதாவின் போட்டி வேறு. அடிப்படையில் இது எதைப் பற்றிய படம் என்று முறையாக விளம்பரமும் செய்யவில்லை. படமும் ஒழுங்காக விளங்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளில் இந்திப் படங்கள் மால் பார்வையாளர்களை குறிவைத்து நகர்ந்து விட்டன. சமீப கால இந்திப் படங்களில் காட்டப்படும் அதிநவீன உலகம் இந்தி பேசும் பகுதிகளில் உள்ள கிராமங்கள், சிறு நகரங்களில் வாழும் மக்களுக்கு எந்த விதத்திலும் ஒட்டாததாகிவிட்டது.
இந்த இடைவெளியில் நுழைந்த தெலுங்கு டப்பிங் படமான பாகுபலி இமாலய வெற்றியை அடைந்தது. புராணக்கதைகளின் பரிமாணத்தில் கொடுமைக்காரனை எதிர்த்துப் போராடும் நல்லவன் என்ற பார்முலா, தெலுங்கு சினிமாவில் புரளும் பணத்தால் விளைந்த பிரம்மாண்டம் எல்லாம் சேர்ந்து பாகுபலி சினிமா மார்க்கெட்டைப் புரட்டிப் போட்டது.
அடுத்தடுத்து வந்த கேஜி எஃப், ஆர் ஆர் ஆர், புஷ்பா போன்ற தென்னிந்திய படங்கள் அகில இந்திய அளவில் வசூலைக் குவித்து அகில இந்திய படங்கள் என்ற ஒரு தனி வரிசை படங்களே உருவாக வாய்ப்பளித்தன.
அகில இந்தியப் படங்கள் என்ற முத்திரைக்குள் நுழைய முயன்ற பல தமிழ் படங்கள் அங்கே தோல்வியடைந்தன. 2.0, அண்மையில் விக்ரம் இப்போது பொன்னியின் செல்வன். பிரச்சினை என்னவெனில், இந்திப் படங்களில் இல்லாத எதுவும் இந்தப் படங்களில் இல்லை. எனவே, படத்தில் புதிதாக ஆர்வத்தைத் தூண்டுகின்ற எதுவும் இல்லாததால் வட இந்தியாவில் மக்கள் இதனை நோக்கி ஈர்க்கப்படவில்லை. இது எந்த பிரிவினருக்கான படம் என்பதிலேயே குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
படத்தின் விளம்பரக் குழு படம் மாபெரும் வெற்றி, வசூலில் சாதனை என்று பிரச்சாரம் செய்தாலும் தமிழ் நாட்டிலேயே இந்தப் படம் மூன்றாவது இடத்தில் தான் இருக்கிறது. இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் முதல் நாள் வசூலில் முதல் இடத்தில் இருப்பது வலிமை. 36 கோடி ரூபாய். இரண்டாவது இடத்தில் இருப்பது பீஸ்ட் 25.5 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் பொன்னியின் செல்வன் 24 கோடி ரூபாய் வசூலுடன்.
அகில இந்திய அளவில் முதல் வார வசூல் 341 கோடி ரூபாய் என்று லைக்கா சொல்கிறது. இது தமிழ்நாட்டில் ஐந்தாவது அதிக வசூல் என்று zeebusiness கூறுகிறது.. சரி, அது கொஞ்சம் முன்னே பின்னே இருக்கக் கூடும். அமேசான், சன் டிவி உரிமைகள், இன்னும் படம் ஈட்டக் கூடிய வசூல் எல்லாம் சேர்ந்து முதல் பாகத்திலேயே படம் நானூறு கோடி ரூபாய் வரவை ஈட்டி விடக் கூடும். படம் தோல்வியடைய வாய்ப்பு இல்லை. ஆனால் அது இது அகில இந்திய படமாகவும் மாறவில்லை. புதுப்பாதையும் அமைக்கவில்லை.
பலவீனமான திரைக்கதை, பக்குவமற்ற எடிட்டிங்!
அகில இந்திய படங்களுக்கான அல்லது சாதனைப் படத்துக்கான பல பொதுவான அம்சங்களை இந்தப் படம் தவறவிட்டிருந்தது.
பலவீனமான திரைக்கதையும் எடிட்டிங்கும் படத்தை ஒரு கோர்வையில்லாததாக ஆக்கிவிட்டிருந்தன. எடிட்டிங் தாவித் தாவிச் செல்கிறது. பார்வையாளர்களை வேறு காட்சிகளைப் பார்க்கத் தயார்படுத்தாமல் காட்சிகள் திடீர் திடீரென்று மாறுவதால் துண்டு துண்டாகத் தெரிகின்றன.
உதாரணமாக பழுவேட்டரையர் தலைமையில் மதுராந்தக தேவனை அடுத்த மன்னனாக முடிசூட்டுவதற்கு நடக்கும் சதியும் அதை முறியடிப்பதும் (அல்லது உண்மையான மதுராந்தகனுக்கு முடிசூட்டுவதும்) நாவலின் மையம். கல்கி, இந்த நாவலில் பழுவேட்டரையர் எவ்வளவு வலிமை வாய்ந்தவர் என்பதை அருமையாக விளக்கியிருப்பார்.
அந்த இடம் படத்தில் படுமோசமாகத் தவறவிடப்பட்டிருந்தது. நந்தினியின் மீது பழுவேட்டரையர் கொண்டிருக்கும் கண்மூடித்தனமான மோகம் அவரது தவிப்பு எல்லாமே படத்தில் தவறவிடப்பட்டிருக்கின்றன. படத்தில் நந்தினி தனது ஆபரணங்களை அகற்ற அவரை அனுமதிப்பது அந்த உறவில் இருந்த சிக்கல்களை அகற்றி அதை வழக்கமான உறவாக மாற்றிவிடுகிறது.
அதே போலத்தான் ஆபத்துதவிகள் யார், அவர்கள் நோக்கம் என்ன என்பது சரியாக விளக்கப்படவில்லை. அதே போல எந்த அறிமுகமும் இல்லாமல் பூங்குழலி வந்தியத் தேவனுடன் நடுக்கடலில் இருக்கிறாள். மதுராந்தக தேவர், சுந்தர சோழர் உறவு முறைகள் படத்தின் தொடக்கத்தில் விளக்கப்பட்டிருக்க வேண்டும். தொடக்க உரையில் கமல் வேறு எதையோ பேசுகிறார்.
படத்தில் நெடுஞ்சாலைகள், நகரங்கள், கிராமங்கள், துறைமுகங்கள் எதுவும் காட்டப் படுவதில்லை. அதனால், வந்தியத்தேவனின் பயணமும் சரியாக அமையவில்லை. சொல்லப்போனால் அது பயணமாகவே இல்லை.
பாகுபலி, மாகாதீரா போன்ற படங்களில் படுபயங்கரமான கமர்ஷியல் அம்சங்களை தாண்டி ஒரு சில அறிவான கம்பீரமான வசனங்கள் ஈர்த்து விடும்.
கூர்மையான அறிவுபூர்வமான வசனங்களே இல்லை. பொன்னியின் செல்வன் நாவலில் அத்தகைய இடங்கள் பல இருந்தாலும் படக்குழு அவற்றை மலிவானதாக்கி கீழிறக்கி விடுகிறது. சைவ மத நிபுணர்களிடம் வாதம் புரிந்து வெல்லக் கூடிய ஆழ்ந்த அறிவும், தந்திரமும் கொண்ட ஆழ்வார்க்கடியான் படத்தில் ஒரு கோமாளி போலச் சித்தரிக்கப்படுகிறார். அருள்மொழி வர்மன் ‘’என் அக்காவுடன் நீ மணமேடையில் நிற்பாய்’’ என்கிறான். பெரும் தளபதியின் மகளான வானதி கயிற்றில் தொங்கி ஆடுகிறாள். இது போன்ற சிதைப்புகள் படத்தின் கம்பீரத்தைக் கெடுத்து விடுகின்றன.
பாகுபலி, ஜோதா அக்பர் போன்ற படங்களில் பாத்திரங்களின் கம்பீரம் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஒரு நிதானத்துடன் கூடிய வேகம் இருக்கும். விக்ரமின் கூச்சல் எரிச்சலே தருகிறது.
காட்சிப் பிழையும், கவசப் பிழையும்!
தஞ்சை ஒரு மதில் சூழந்த நகரம். அதில் கடை வீதிகளும், பல மாளிகைகளும், நந்தவனங்களும் இருப்பதாக கல்கி எழுதுவார். படத்தில் அப்படி எதுவுமே வருவதில்லை. பழுவேட்டரையர் மாளிகை தமிழகத்துக் கட்டடக் கலையின் சாயலே இல்லாமலிருக்கிறது. சுரங்கங்கள் காமெடி போலிருக்கின்றன. திண்ணைக் கதவைத் திறந்ததும் பாதாள அறையும் கருவூலமும் வருவது போலிருக்கிறது. இலங்கையில் பல புராதன இடங்களைப் பற்றி இரண்டாம் பாகத்தில் கல்கி சொல்லியிருந்த போதிலும் படம் அங்கெல்லாம் போகாமல் தாய்லாந்தைக் கொண்டு ஒப்பேற்றுகிறது.
புழுவேட்டரையர் மாளிகை டென் கமெண்ட்மெண்ட்சில் வரும் எகிப்து மன்னன் ராம்சேஸின் அரண்மனையை நினைவுபடுத்துகிறது. இதோ இப்போது யூல் பிரென்னர் வந்துவிடுவார் என்ற எண்ணம் உண்டாகிறது. பழம் தமிழகத்தின் நகர அமைப்புக்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஸ்ரீரங்கம் இருக்கிறது. தஞ்சைப் பகுதியில் பல பழமை மாறாத கிராமங்கள் உள்ளன. கோவில்கள் உள்ளன. ஆனால் படத்தில் வரும் தூண்கள், சுவர்கள் அனைத்தும் தமிழ்நாட்டுக்குச் சம்பந்தமே இல்லாமலிருக்கின்றன.
நாளெல்லாம் தோல் கவசத்தை அணிந்து கொண்டே சுற்றும் வழக்கம் தமிழகத்து வீரர்களிடம் எப்போது வந்தது என்பது வியப்பாக இருக்கிறது. சொல்லப் போனால் இவர்கள் கவசமே அணியாமல் போருக்குப் போகிறார்கள் என்று மார்கோ போலோ சொல்கிறார். இங்கே, எல்லோரும் எப்போதும் கவசம் அணிகிறார்கள். அதுவும் தோல் கவசம். நமக்கே இறுக்கமான ஆடைகளில் உட்கார்ந்திருப்பது போன்ற சங்கடம் ஏற்படுகிறது. மணியம் ஓவியங்களில் இப்படி இல்லை. எம் ஜி அர் கூட அடிமைப் பெண் போன்ற படங்களில் ஹாலிவுட் ரோம் படங்களை காப்பியடித்து ஒருவிதமான கவசம் அணிந்து வருவார். நன்றாகத்தான் இருக்கும். பொன்னியின் செல்வன் கவசம் அழகாகவும் இல்லை. யதார்த்தமாகவும் இல்லை.
அரசியல் உள் நோக்கங்கள்!
இன்றைய பிஜேபியின் இந்துத்துவ இந்தியாவில் ஒரு தேவை இருக்கிறது. அமித் ஷா அதை கூர்மையாக ஒரு மேடையில் சொல்கிறார், “இந்தி சினிமாக்காரர்கள் வரலாற்று சினிமா என்றால், மொகலாயர்களிடம் போய் நிற்கிறார்கள். மௌரியர்கள் ஐநூறு ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். சோழர்கள் அறுநூறு ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை”
அதாவது, இந்துத்துவவாதிகள் இந்துத்துவ கலை இலக்கியங்களை, சினிமாவை,, ஓவியத்தை உருவாக்க விரும்புகிறார்கள். ஒரு கோட்பாடானது, தத்துவம் கலை இலக்கியங்களால் தாங்கிப் பிடிக்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் அது மக்கள் ஆதரவை இழந்துவிடும். இந்தத் தேவையையும் பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் நிறைவு செய்தன. இந்த அடிப்படையில் தான் அதீதமாக தேசபக்தி பேசும் பல இந்திப் படங்கள் வெளியாகின்றன.
மணிரத்னம் அமித் ஷா சொன்னதைக் கேட்டு இந்தப் படத்தை எடுத்திருக்க வாய்ப்பில்லை. இந்துத்துவவாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 2007 லில் இருந்தே இதற்கு முயன்று வருவதாக கேள்விப்படுகிறோம். இருந்த போதிலும் படம் சைவப் பெருமை பேசும் படமாக மாறியிருக்க வாய்ப்பு இருந்தது. படத்துக்கு வசனம் எழுதிய ஜெயமோகனே கூட, அமித் ஷாவின் அஜெண்டாவை முன்னெடுத்துச் செல்லும் இந்துத்துவவாதியாக இருந்த போதிலும், நல்வாய்ப்பாக தெளிவில்லாத திரைக்கதை, தமிழ்நாட்டில் நிலவும் இந்துத்துவ எதிர்ப்பு மனப்பான்மையால் மணிரத்னம் குழம்பிப் போனது ஆகியவை படத்தை முழுமையாக அந்த இடத்துக்குத் தள்ளாமல் காப்பாற்றிவிட்டன.
ஆனால், படத்தை ஒட்டி அரசியல் விவாதங்கள் தொடங்கிவிட்டன. சைவமும் இந்துவும் ஒன்றா? அதித்த கரிகாலனை கொன்றவர்கள் பிராமணர்கள் என்று ஏன் காட்டவில்லை? சோழர் கால சமூக அமைப்பின் பிரிக்க முடியாத சமூகப் பிரிவினையான சாதி, அடிமைகள், நரபலிகள் ஏன் காட்டப்படவில்லை என்ற கேள்விகள் தொடர்ச்சியாக எழுகின்றன.
Also read
தமிழ் தேசியவாதிகள் ராஜராஜ சோழனை தமிழர் குலத்தின் முதல்வனாகக் கருதுகின்றனர். எனவே, அவனை ஏதோ ஒருவிதத்தில் இந்து மதத்துடனும், இந்தியாவுடனும் இணைப்பதை அடியோடு வெறுக்கின்றனர். இந்துத்துவ வாதிகள் ராஜராஜன் இந்து என்று சாதிக்க முனைந்து நிற்கின்றனர். திராவிட இயக்கத்தினர் ராஜராஜனைக் கொன்ற ரவிதாஸன் பிராமணன் என்பதை நினைவூட்டுகின்றனர். பொதுவுடமைவாதிகள் சோழர் கால சமூக அமைப்பு ஒரு சுரண்டல் அமைப்பு என்பதை கவனப்படுத்துகின்றனர்.
கல்கியே இந்தப் பக்கம் போகவில்லை. எனவே மணிரத்னத்திடம் நாம் எதிர்ப்பார்க்க வாய்ப்பில்லை. ஆனால், இந்தக் கேள்விகள் தமிழ் சமூகம் விழிப்புடன் இருக்கின்றது, ஒவ்வொரு அரசியல் பிரிவும் அரசியல் சம நிலையைக் கோருகிறது என்பதே செய்தியாகிறது.
கட்டுரையாளர்; இரா.முருகவேள்
எரியும் பனிக்காடு, புனைப்பாவை, செம்புலம் போன்ற நாவல்களின் ஆசிரியர். குறிப்பாக புனைப்பாவை வரலாற்று புதினத்தில் சோழப் பேரரசின் போர்முறைகளையும், கொங்குச் சோழர்களின் இயல்புகளையும், வணிகக் குழுவான ஐநூற்றுவர் ஆதிக்கத்தையும் துல்லியமாக விளக்கி இருப்பார்.
சிறப்பான அலசல்