4,100 பேர் பங்கேற்ற மாபெரும் நாடகமே திமுக பொதுக்குழு!

-சாவித்திரி கண்ணன்

80 வயது துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும், 70 வயது ஸ்டாலினும் தான் மீண்டும், மீண்டும் பொறுப்புக்கு வர முடியுமா? 90 சதமான நிர்வாகிகள் அதே பழைய முகங்களா? புதியவர்கள் யாவரும் வாரிசுகளா? எனில், கட்சிக்கு முதியோர் முன்னேற்றக் கழகம், இளைஞர் அணிக்கு வாரிசுகள் வளர்ச்சிக் கழகம் என்பதே சரியாகும்!

நடப்பது நல்லாட்சியாம்! தமிழகத்தை திமுக தான் நிரந்தரமாக ஆளப் போகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லையாம்! இதில் திமுகவினரை விட மக்கள் உறுதியாக உள்ளனராம்! கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்! இது தான் ஸ்டாலினின் பயமாம்! ஏனென்றால்,மக்கள் அளித்த நற்பெயரைக் காப்பாற்ற வேண்டுமாம்!

எவ்வளவு பெரிய பகல் கனவு! கண்ணைத் திறந்து கொண்டே கனவு காண்பவர்களுக்கு, எதிரில் என்ன நடக்கிறது என்ற யதார்த்தம் கூடத் தெரியாது தானே! அது தான் திமுக தலைமையின் நிலை!

மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்! உங்கள் அகராதியில் நல்லாட்சி என்பதற்கு ஊழற்ற ஆட்சி என்ற பொருள் இருக்காது என அறிவோம். ஆனால், ‘ஊழல் குறைந்த ஆட்சி’ என்றாவது மதிப்பிட முடியுமா? இன்றைய ஆட்சியை!

ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து குவாரிகளை அதிகப்படுத்தி, ஆற்று மணல் பிரதேசங்களை எல்லாம் இன்னும் பள்ளத்தாக்குகளாக்கி, மணல் அள்ளும் மாபியா கூட்டத்தை வளர்ப்பதும், உயர்ந்தோங்கிய மலைகளை எல்லாம் தரைமட்டமாக்கி ‘ஸ்வாகா’ செய்து கொண்டிருக்கும் துரைமுருகன் தொடங்கி மின்வாரியத்தை மேன் மேலும் கடனாளியாக்கி, டாஸ்மாக்கை வீதிகள் தோறும் விரிவுபடுத்தி கொள்ளையடிக்கும் செந்தில் பாலாஜி வரை ஒவ்வொரு அமைச்சரும் அளவில்லாமல் ஊழலில் ஊறித் திளைப்பது தான் நல்லாட்சியா?

‘காவல்துறையோ தமிழக ஆட்சியாளர்களின் கட்டுபாட்டிலேயே இல்லை’ என்பது கடைசி தமிழன் வரை தெரிந்துள்ளதே கள்ளக் குறிச்சி மாணவியின் மர்ம மரண விவகாரத்திலேயே! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்களை அருணா ஜெகதீசன் அறிக்கை கிடைத்த பிறகும் இன்னும் தண்டிக்கத் துப்பில்லை! ஊழலில் திளைத்த முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடிக்கடி ரெய்டு நடத்தியதோடு அமைதியாகிவிட்டீர்களே! யாரையேனும் கைது செய்ய முடிந்ததா..?

அப்படியானால் பேரம் நடந்துள்ளதா என மக்கள் சந்தேகிப்பார்களே என்ற குற்ற உணர்வு ஒரு சிறிதும் இல்லையே!

என்ன நல்லாட்சி தருகிறீர்கள்? அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் நொந்து நூலாகியுள்ளனர். இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எல்லா அரசு துறைகளிலும் நிரந்தர ஊழியர்கள் என்ற நிலையை காலி செய்து, குறைந்த சம்பளம், தற்காலிக ஊழியர்கள் என்று அத்துக் கூலிகளாக, அடிமைகளாக பல்கலைக் கழக பேராசிரியர்கள் தொடங்கி பள்ளிக் கூடம் மற்றும் பாலிடெக்னிக் வரை நடத்தப்படுகிறார்களே..? நாளும், நாளும் நகரத்தை சுத்தப்படுத்தும் கடை நிலை ஊழியரான துப்புரவு தொழிலாளர்களுக்கு கூட எவ்வளவு போராடியும், கண்ணியமான ஊதியம் தந்து பணி நிரந்தரம் செய்ய முடியவில்லையே…? இவை எல்லாம் அநிதீயின் உச்சம் அல்லவா? போராடும் ஆசிரியர்களின் பிரதிகளோ, தொழிலாளர்களின் பிரதிநிதிகளோ முதல்வரை சந்திக்கவே முடியவில்லையே!

முதல்வரானது தொடங்கி மக்களிடம் இருந்தும், கட்சிக்காரர்களிடம் இருந்தும் ,கூட்டணி கட்சித் தலைவர்களிடம் இருந்தும், பத்திரிகையாளர்களிடம் இருந்தும் தன்னத்தானே அந்நியப்படுத்திக் கொண்டு… நாட்டில் எது நடந்தாலும் உங்களுக்கு சம்பந்தமில்லாதது போல வலம் வருகிறீர்களே எப்படி ஐயா?

மூச்சுக்கு முன்னூறு தரம், ”பெரியார், அண்ணா, திராவிட மாடல்” என்கிறீர்கள்! ஆனால், நடைமுறையிலோ, அதற்கு முற்றிலும் எதிரான ஒரு ஆட்சியைத் தான் தந்து கொண்டு உள்ளீர்கள்! ஊழலில் ஊறித் திளைக்கும் காரணத்தால் மத்திய ஆட்சியாளர்களிடம் மறைமுகமாக மண்டியிட்டு, அவர்களின் அத்தனை மக்கள் விரோத சட்டதிட்டங்களையும் அமலப்படுத்தி வருகிறீர்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தேசிய கல்வி கொள்கையில் சுமார் 70 சதவிகிதத்தை தமிழகத்தில் கமுக்கமாக அமல்படுத்தி விட்டீர்கள்!

உயர் நீதிமன்றமே ”கோவில் கும்பாபிஷேகங்களை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் சம பங்களிப்பில் நடத்த வேண்டும்” என ஆணையிட்டும் ஏன் இந்த திராவிட மாடல் ஆட்சியாளர்களால் அதை அமல்படுத்த முடியவில்லை. ‘100 சதவிகிதம் பார்ப்பனர்களை வைத்து சமஸ்கிருதத்தில் தான் கோவில் கும்பாபிஷேகங்களை நடத்துவோம்’ எனச் செயல்படுவது தான் திராவிட மாடலா? அதுவும், உங்கள் குடும்பமே வெளிப்படையாக வேள்விகள், யாகங்கள் என்று கோவில் கோவிலாக சென்று செய்து கொண்டிருப்பதை திராவிட உணர்வுள்ள எந்த திமுககாரனாலும் ஏற்க முடியாது. கடவுள் நம்பிக்கை என்பது பாதகமில்லை. ஆனால், மூட நம்பிக்கையில் முதல்வர் குடும்பமே திளைப்பது அவமானமில்லையா?

 

திமுக பொதுக் குழுவில் இந்த ஆட்சியின் தோல்விகள் தொடர்பாகவும், ஆட்சித் தலைமை பாஜகவினரைக் கண்டு பயந்து நடுங்கும் விதமாக நடந்து கொள்வது குறித்தும் எந்த ஒரு விவாதமும், முணுமுணுப்பும் கூட இல்லையே!

ஆளுநர் ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் அடித்து முன்னேறி நகர்வதும், திமுகவின் ஆட்சித் தலைமையோ அஞ்சி நடுங்கி பின்வாங்குவதையும் திமுக தொண்டர்களே விரக்தியோடு சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகிறார்களே! பொதுக் குழுவில் இது தொடர்பாக யாரும் வாய் திறவாது பார்த்துக் கொள்வது சாமார்த்தியமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அடிப்படையில் இந்த கட்சியும் ஆட்சியும் அடித்தளமே பலமில்லாமல் உளுத்துப் போய்க் கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் முகத்தில் அறைவது போல தெரிய வந்த நிலையிலும், எதுவும் தெரியாதவாறு, பாலாறும், தேனாறும் ஓடுவதாக பேசி சந்தோசப்பட்டுக் கொள்வது அறியாமையா? அல்லது அகந்தையா?

கட்சித் தேர்தலையாவது ஜனநாயகமாக நடத்த முடிகிறதா உங்களால்? மக்களிடமும், தொண்டர்களிடமும் செல்வாக்கு பெற்றவர்களை மாவட்டச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறீர்களா? அண்ணா காலத்தில் உட்கட்சித் தேர்தல் எவ்வளவு ஜனநாயகமாக நடந்தது? தலைமையின் தலையீடுகள் இன்றி தங்கள் சொந்த செல்வாக்கில் உள்ளூர் தலைவர்கள் வெற்றி பெற்று வந்தார்களே? இன்று உங்கள் குடும்பத்திற்கு அடிமை சேவகம் செய்பவர்களே கட்சியில் எந்த பொறுப்புக்கும் வர முடியும் என்பதை எழுதப்படாத விதியாக்கிவிட்டீர்களே?

கலைஞர் காலத்திலாவது பொதுக் குழுவில் தலைமைக்கு மாறுபட்ட கருத்தை கட்சி மற்றும் ஆட்சியின் நலன் கருதி வீரபாண்டி ஆறுமுகம், முரசொலி மாறன், தென்சென்னை அன்பழகன் ஆகியோர் தயக்கமின்றி எடுத்துப் பேசும் சுதந்திரம் பெற்று இருந்தனரே! சுய மரியாதையும், சுய சிந்தனையும் உள்ள பொதுக் குழு உறுப்பினர்களே கட்சியில் இல்லை என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அதைவிட அறியாமை வேறில்லை. பலரும் பேச முடியாமல் உள்ளார்களே அன்றிப் பேசத் தெரியாமல் இல்லை.

இளைஞர்களுக்கு மாவட்டம் தோறும் திராவிடக் கொள்கைகள் தொடர்பாக பயிற்சி பாசறை நடந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல அம்சம் மட்டுமாவது தொடர்வது ஆறுதல் அளிக்கிறது! இன்னும் மூத்த கொள்கை பற்றாளர்கள் சிலராவது உயிர்ப்போடு செயல்பட முடிந்த இடமாக திமுக திகழ்வதைக் கடந்து, மகிழ்ச்சிடைய எதுவுமில்லை இந்த பொதுக் குழுவில்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time