ஒரு தெக்கன் தள்ளு கேஸ் – வன்மத்தின் அழகியல்!

-தயாளன்

சிறுகதை ஒன்றைச் சினிமாவாக்க, அதன் இலக்கியத் தரம் குறையாமல் மெனக்கெட்டு இருக்கிறார்கள். மனித மனங்களில் எழும் வன்மத்தையும், குரோதத்தையும் படம் பேசினாலும், காட்சிகளில் அந்த வன்முறை இன்றி நகைச்சுவையும், சுவாரஸ்யமுமாக உள்ளது. திரைக்கதையின் தெளிவுக்கு இது உதாரணம். பாத்திரங்களின் வடிவமைப்பும், நடிகர்களின் தேர்வும் இதை செய்து முடித்திருக்கின்றன.

திரையரங்குகளைத் தொடர்ந்து  தற்போது நெட்பிளிக்ஸ் இணையதளத்திலும் வெளியாகி இருக்கும் மலையாளப் படம் “ஒரு தெக்கன் தள்ளு கேஸ்”.   எழுத்தாளர் இந்துகோபன் எழுதிய ’அம்மிணி பிள்ளை வெட்டு கேஸ்’ என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத் திரைப்படம்.  இயக்குனர் ஶ்ரீஜித்தின் அறிமுக படம் இது.

கேரளாவின் வர்கலா அருகேயுள்ள சிறு கடற்கரை கிராமத்தில், உள்ளூர் பிரமுகர் அம்மிணி பிள்ளைக்கும், வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் பொடியனுக்கும் நடக்கும் ஈகோ மோதலை வைத்து இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. வழக்கம் போல எளிய சாதாரண கதை.
அம்மிணி பிள்ளை பொடியனை ஒரு பிரச்சினையில் அடித்து விடுகிறார். அந்த வன்மத்தை மனதில் கொண்டு, பொடியனும் இன்னும் நால்வரும் சேர்ந்து அம்மிணி பிள்ளையை வெட்டி விடுகிறார்கள்.  ஆனாலும், போலீசுக்கு வழக்கை கொண்டு செல்லாமல், விட்டு விடுகிறார். அவர் மனதில் வேறு ஒரு திட்டம் இருக்கிறது. எப்படி அந்த திட்டத்தை நிறைவேற்றினார் என்பதை தெள்ளத் தெளிவான திரைக்கதையில் நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கலந்து சொல்லி இருக்கிறார்கள்.

அம்மணி பிள்ளையாக வரும் பிஜூ மேனனுக்கு இந்த கதாபாத்திரம் அல்வா சாப்பிடுவதைப் போல அனாயசமாக நடித்திருக்கிறார்.  தனது உடல்மொழியிலேயே பாதி கதையை நகர்த்திவிடுகிறார்.  வெற்றிலையை புளிச் என்று துப்பிக் கொண்டே பெரிய விஷயங்களை போகிற போக்கில் டீல் செய்கிற காட்சியில் சற்று மிகையான ஹீரோயிச ஆக்‌ஷன் காட்சிகளிலும் ஜொலிக்கிறார். சண்டைக் காட்சிகளை முடிந்தவரை இயல்பாக எடுக்க முயற்சித்துள்ளனர்.

அம்மணியின் மனைவியாக வரும் ருக்மணியாக வரும் பத்மப்ரியா நீண்ட நாட்களுக்குப் பிறகு அசத்தி இருக்கிறார். 1980கள் காலகட்டத்தில் பெண்களின் உடையில் அவரும் பக்கத்து வீட்டு பெண் வசந்தியாக வரும் நிமிஷாவும் கச்சிதமான உரையாடல்களிலும் நடிப்பிலும் கவருகின்றனர். பத்மப்ரியா பிஜூ மேனனுடனான காதல் காட்சிகளில் கண்களாலேயே கிறங்க வைக்கிறார். பிஜு மேனனுக்கும் பத்ம ப்ரியாவுக்கும் இடையேயான காதல் காட்சிகள் மிக மென்மையாகவும் அதே சமயம் நுட்பமாகவும் சொல்லப்படுகின்றன.

அதே போல் பத்மப்ரியாவும், நிமிஷாவும் இணைந்து வரும் காட்சிகள் அனைத்தும் இரண்டு பெண்களின் அன்னியோன்யமான நட்பைக் காட்டுகின்றன.  அவர்களுக்குள் நிகழும் உள் அர்த்தங்களுடன் கூடிய  உரையாடல்களில் அவ்வளவு நுட்பம். ஆனால், அவை இரட்டை அர்த்த வசனங்களாக இல்லை.  பக்கத்து வீடுகளில் பேன் பார்த்துக் கொண்டு இரு பெண்கள் தங்கள் பாடுகளை பேசிக் கொள்வது போல, அத்தனை பாந்தமான காட்சிகள்.

பொடியனாக வீம்பு கேரக்டராக வரும் ரோஷன் மேத்யூ முனுக்கென்று கோபம் வரும் முன் கோபக்காரனாக பொருந்திப் போகிறார்.  ஆனாலும், நிமிஷாவுடனாக காதல் காட்சிகளில் குழைவாகவும் நண்பர்களுடன் வீராப்பு காட்டும் நேரங்களில் விறைப்பாகவும் நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார்.

படத்தில் இந்த நான்கு முக்கியமான பாத்திரங்கள் தவிர, பொடியனின் நண்பர்களாக வரும் குஞ்சுபக்கியாக அருண் சங்கரன்,  பிரபா குட்டனாக ரெஜு சிவதாஸ், குஞ்சுகுஞ்சுவாக அகில், லோபெஸாக வரும் அஸ்வத் லால் ஆகியோர் படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள்.

அம்மிணி பிள்ளையை தாக்கிவிட்டு ஓடி ஒளிந்து விட்டு, பின் அவரிடம் ஒவ்வொருவராக அடிவாங்கி சமாதானம் அடையும் பாத்திரங்களில் ஒவ்வொருவரும் தங்களுக்குள் நடிப்பில் வேறுபாட்டையும், உடல்மொழியையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

குஞ்சுபக்கியாக வருபவரின் உடல் மொழி அனாயசம்.  நம்முடைய தமிழ் சினிமாவில் வடிவேலு அடி வாங்குவதையே ஒரு கலையாக மாற்றியதை போல இவர்கள் ஒவ்வொருவரும் அடிவாங்கும் போது வெளிப்படுத்தும் நடிப்பு இந்த சினிமாவை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்கிறது.
படங்களில் ஏராளமான சிறு சிறு கதாபாத்திரங்கள், பனிக்கராக வருபவர், ஆயில் விற்பவர், மீனவப் பெண்மணியாக வருபவர் என்று எல்லாரும் மனதில் நிறைகிறார்கள்.

படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு. மது நீலகண்டனின் கேமரா காலத்தையும் நிலத்தையும், அழகியலோடு முன்வைக்கிறது. அதிலும் ஒரு நீண்ட காட்சியில் அதாவது ஒரு சிங்கிள் ஷாட்டில், இரண்டிரண்டு பேராக பேசிக் கொண்டே போகிறார்கள். பேருந்தில் தொடங்கி கடற்கரையில் ஒருவர் படகில் ஏறும் வரை ஒருவரிடமிருந்து தாவி இன்னொருவருக்கு சென்று நிறைவடைகிறது. சிங்கிள் ஷாட் என்பதை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லித் தருகிறது கேமரா நகர்வு.

கலை இயக்கம் காலத்தின் ஓர்மையை ஊட்டுகிறது. பின் புலங்களில் வரையப்படும் ஜேசுதாஸ், ஜானகி, கபில்தேவ் ஓவியங்களும், இயல்பான நிலக் காட்சிகளும், உறுத்தாமல் வரும் செட் ப்ராப்பர்டிகளும், நம்மை கதை களத்துக்கு மட்டுமில்லாமல், காலத்துக்கும் அழைத்து செல்கிறது. அந்த சாராயக்கடை மிகச் சரியாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.


இசை நுணுக்கமாகவும், ஸ்டைலிஷ்ஷாகவும் இருக்கிறது. பின்னணி இசை அட்டகாசம். குஞ்சிபக்கியாக போலீஸ் வேடத்தில் வரும் அருண் சங்கரன் அடி வாங்க தயாராகும் காட்சியில் வரும் அந்த பீட் குபீரிட வைக்கிறது.

எடிட்டிங் கதைக்கு தேவையான ரிதத்தை தருகிறது. சில காட்சிகள் எதிர்பாராத ஷாட்டில் தொடங்குகிறது. குறிப்பாக நிமிஷா அறிமுகம் ஆகும் அந்த முதல் ஷாட் ஆச்சரியத்தை தருகிறது.  சண்டை நிகழப் போவதை முன் கூட்டியே உணரும் மக்கள் அந்த இடத்தில் கூடும் போது, எடிட்டிங் குளோசப் காட்சிகளால் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது.

படத்தின் இயக்குனர் ஶ்ரீஜித்திற்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

விமர்சனம்; தயாளன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time