சிசேரியன் ஆபத்தாகும்! வீட்டுப் பிரசவம் குற்றமல்ல!

-கு. நா. மோகன்ராஜ்

வீட்டிலேயே சுகப் பிரசவம் நடப்பது என்பது நமது மரபில் பல்லாண்டுகளாக இருப்பது தான்! ஆனால், தற்போது வீடுகளில் சுகப் பிரசவம் நடப்பதை ஏதோ ஒரு குற்றச் செயல் போல சித்தரிக்கிறார்கள்! நவீன மருத்துவமனைகள் சிசேரியன் செய்வதை கட்டாயப்படுத்துகின்றன! சுயச் சார்போடு வாழ்வதற்கு சுதந்திரம் இல்லையா?

சீர்காழியில் ஒரு குழந்தை சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பிறந்தது. அதெப்படி வீட்டிலேயே சுகப் பிரசவம் செய்யலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் போலீஸ் பலத்தோடு வந்து பயங்கர பிரச்சினை செய்தது பெரிய செய்தியானது. ஆனால், தாயும்,சேயும் பரிபூரண ஆரோக்கியத்தில் இருப்பதை அறிந்து பிறகு விட்டுவிட்டனர்.

இந்தப் பெண்ணின் முதல் குழந்தை மருத்துவர்கள் அறிவுரைப்படி சிசேரியன் முறையில் பிறந்தது. இரண்டாவது குழந்தை மருத்துவர்களை நாடாமல், மருந்து மாத்திரைகள், ஸ்கேன் உட்பட எதுவுமடுக்காமல், மரபு வழியில் சுகப்பிரசவத்தில் பிறந்தது!

முதல் குழந்தை சிசேரியன் என்றாலே, இரண்டாவது குழந்தையும் சிசேரியன் தானே இருக்க முடியும்? எப்படி இரண்டாவது குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது? என்ற கேள்வி எழலாம்!

இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்லட்டுமா?

கோவையில் ஒரு தம்பதிக்கு, மருத்துவர்கள் வழிகாட்டலில் முதல் குழந்தை சிசேரியன். ஆனால் அதற்கடுத்த மூன்று குழந்தைகள் வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பிறந்தது. இதுவும் உங்களுக்கு பெரிய ஆச்சரியத்தையே கொடுத்திருக்கும்.இப்படிப் பரவலாக வீட்டிலேயே சுகப்பிரசவங்கள் நடந்த வண்ணம் உள்ளன!

ஆனால், இதையெல்லாம் விட பிரமாதம் ஒன்று உண்டு.

அது என்ன தெரியுமா?

திருப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, அந்தப் பெண்ணின் உறவினர்கள் பலர் மருத்துவர்களாக இருக்கும் சூழலில், கருவுற்ற நாள் முதல் மருத்துவர்கள் பரிந்துரைப்படி அனைத்தையும் கடைப்பிடித்த போதிலும், மூன்று முறை குழந்தையின் பிரசவங்களும் சிசேரியனில் தான் நடந்தன! ஆனால், பாவம் மூன்று குழந்தைகளும் இறந்தே பிறந்தன. மூன்று முறை சிசேரியன் நடந்த காரணத்தால், அந்த பெண்ணின் கர்ப்பப்பை வலு விழுந்து விட்டதாகக் கூறி, அடுத்த குழந்தை பேறுக்கு  முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். இந்தச் சூழலில், அந்தப் பெண் துணிச்சலாக மரபு மருத்துவத்தோடு இணைந்த அக்குபஞ்சர் மருத்துவம் எடுத்துக் கொண்டார். அந்த மருத்துவம் கற்றுத்தந்த வாழ்வியலை கடைபிடித்து நான்காவது முறையாக கருவுற்று, அந்தக் குழந்தையை சுகப்பிரசவமாக வீட்டிலேயே பெற்றெடுத்தார்.

இன்று  நவீன மருத்துவம் அறிவியல் பூர்வமானது என்றால், அதனால்,ஏன் சிசேரியன் தான் தீர்வு என்ற நிலையை மாற்றி சுகப்பிரசவம் செய்ய முடியவில்லை.அது தானே சிறந்த மருத்துவம் என்பதற்கு அத்தாட்சியாகும்!

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏழெட்டுக் குழந்தைகள் வரை சுகப்பிரசவமாக பெற்று வந்த சமூகத்தில், ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதே சிசேரியனாக மாறிப் போனது எப்படி?, பெரும்பாலான குழந்தை பேறுகள் சிசேரியன் முறையில் மட்டுமே நடப்பது ஏன்?

உலகில் ஜனித்த அனைத்து உயிர்களுக்கும், இனப்பெருக்கம் என்பது இயல்பானது. அனைத்து உயிரினங்களும் சுகப்பிரசவத்தில் தான் தன்னுடைய இனத்தை பெருக்கிக் கொள்கிறது. மனிதனும் அந்த ரகம் தான். ஆனால் இடையில் எங்கோ நாம் நமது மரபு வழிகளை தொலைத்து விட்டோம் என்பதே உண்மை. என்னதான் நாம் தொலைத்தாலுமே கூட, அந்த இயல்பான சுகப்பிரசவம் என்பது இயற்கை அல்லது இறைவன் என்னும் பேராற்றல் தான் நமக்கு வழங்கியது. அது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் அதே இயல்பை மீண்டும் எங்காவது ஓரிடத்தில் துளிர் விடச் செய்யும். அப்படி விட்ட துளிர் தான் இங்கே வீடுகளில் நடக்கும் சுகப்பிரசவங்கள்.

இப்படியான வீட்டு பிரசவங்களை முன்னெடுக்க எங்களுக்கு முன்னோடியாக வழிகாட்டியவர், இந்திய அக்குபங்சரின் தந்தை என்று சொல்லப்படும் டாக்டர் பஸ்லூர் ரகுமான் அவர்களாகும்!.

இன்று சிசேரியன் நடக்கிறது என்று சொன்னாலே சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒரு பெண் தன்னுடைய உணர்வுகளை இழந்துவிட்டார் என்பது தான் உண்மை.  என்ன உணர்வுகளை இழந்துவிட்டார்? தன் உடலில் என்ன விதமான மாற்றங்கள் நடக்கிறது என்பதை கூட உணர முடியாத ஒருவராக இன்றைய பெண்கள் மாறிவிட்டார்கள்.

அன்று  மாதவிடாய் நாள் தள்ளிப் போகும் பொழுதே ஒரு பெண்ணால் தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து தனக்குள் ஒரு உயிர் வளர்வதை புரிந்து கொள்ள முடிந்தது. இந்த அளவுக்கு நுண்ணிய உணர்வுகளோடு  இருந்த பெண்கள் தான் நம்முடைய பாட்டிகள் எல்லாமே. அதனால்தான் அவர்கள் எத்தனை குழந்தை பெற்றாலும் அதை வீட்டிலேயே சுகப்பிரசவ முறையில் பெற்றெடுத்தார்கள்.

இன்றும் அனைத்து பெண்களினுடைய உடலமைப்பும் சுகப்பிரசவத்திற்கான தகவமைப்போடு தான் இருந்து வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் இருக்கும் அந்த உணர்வுகளை புரிந்து கொண்டு விட்டாலே எந்த ஒரு மருத்துவரின் ஆலோசனையும் மருந்து மாத்திரைகளும் தேவையில்லை.

குழந்தை வயிற்றில் உருவானதை தானாகவே உணர்ந்து கொண்ட நம்முடைய பாட்டிகளுக்கு இருந்த மெய்யறிவு, இன்று மெத்தப் படித்த நமக்கு இல்லாமல் போனது ஏன்?

நான் முன்னமே சொன்னது போல இது நாள் வரையில் உலகத்தில் இருக்கும் அனைத்து பெண்களின் உடலிலும் சுகப்பிரசவம் நடப்பதற்கான தகவமைப்பை தான் பெற்றிருக்கிறார்களே தவிர, சிசேரியலுக்கான அவசியம் இல்லவே இல்லை.

கருவுறுதல் என்பது இயற்கையாக நடக்கும் ஒரு செயல் தானே. அப்படி உருவான கரு முழுமையாக வளர்ச்சி அடைந்த பிறகு நிச்சயம் தாயின் வயிற்றிலிருந்து அழகான முறையில் வெளியேறும். இது இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வு. அது தான் இயல்பும் கூட.

தாயின் வயிற்றில் இருக்கும் அந்த கரு எப்பொழுது முழு வளர்ச்சி அடைந்து முடிகிறதோ,  அப்பொழுது அந்தக் குழந்தை வெளியே வந்துவிடும். இது தான் அந்தக் கருவின் இயல்பு.

நமது முன்னோர்கள் குழந்தை வயிற்றில் இருக்கும் சமயங்களில் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில்லை. தற்போதும் தேவையில்லை.

காரணம் சத்து மாத்திரைகள் அனைத்தும் வெத்து மாத்திரைகளே.

நல்ல சத்துள்ள உண்வை எடுத்துக் கொண்டாலே  போதும். அது தாயை உடல் நலத்தோடும், பிறந்த குழந்தையை ஆரோக்கியத்தோடும் இருக்கச் செய்தது.

அந்தக் காலத்தில் இது போன்ற கருவுற்ற பெண்கள், புளிப்பு சுவைக்காக மாங்காய், அல்லது புளி, அல்லது எலுமிச்சை பழம், நாரத்தங்காய் அல்லது கொளுஞ்சிக் காய், கிடாரங்காய் போன்றவைகளை விரும்பி எடுத்துக் கொள்வார்கள். சில சமயங்களில் மண், சாம்பல், விபூதி, சிலேட்டு பல்பம், சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சுண்ணாம்பு போன்றவைகளையும் சாப்பிடுவதும் நடந்திருக்கிறது.

இதற்குப் பின்னால் பெரிய அறிவியலே ஒளிந்து இருக்கிறது.

புளிப்பு துவர்ப்பு போன்ற சுவைக்காக மண், சாம்பல் , மாங்காய் போன்றவைகளை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு உடல் அதற்குத் தேவையான சக்தியை தானே பெற்றுக் கொள்ளும். இன்று வீட்டுப் பிரசவம் செய்து கொள்ளும் பெண்கள் இந்த முறையை மிகத் தெளிவாகக் கையாளுகிறார்கள்.

துவர்ப்பு  சுவையில் உள்ள உணவுகளில் இருந்து அந்தப் பெண்ணின் மண்ணீரலுக்கு சக்தி கிடைக்கிறது. மாங்காய், புளி போன்றவைகளை சுவைக்காக எடுத்துக் கொண்ட பெண்களுக்கு புளிப்புச் சுவையிலிருந்து அந்தப் பெண்ணின் கல்லீரல் சக்தி அடைந்தது. இதனால் அந்தப் பெண்ணும் சரி, வயிற்றில் வளர்ந்த குழந்தையும் சரி ஆற்றலோடு இருந்தார்கள்.

ஆனால், இன்று கருவுற்ற பெண்களுக்கு,  வயிற்றில் குழந்தை உருவானதை கூட உணர முடியாமல் மருத்துவ பரிசோதனை செய்தே தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும் சுவையைக் கூட அவர்களால் உணர முடிவதில்லை. காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள். கருவுற்ற சமயத்தில் கொடுக்கப்படும் மாத்திரைகள் பெண்ணின் உடல் எடையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல்,  குழந்தையின் எடையையும் கூடவே கூட்டச் செய்கிறது. இந்த மாத்திரைகள் பல பெண்களின் உடலில் ஹார்மோன் சமநிலையையும் கெடுத்து விடுகிறது.

சிசேரியன் செய்த பெண்களுக்கு முதுகுத்தண்டு படத்தில் போடப்படும் ஊசியின் விளைவால் வாழ்நாள் முழுவதும் இடுப்பு, முதுகு வலியில் அவஸ்தை படுவதும் நடக்கிறது.

சிசேரியன் செய்யும்போது ஏற்படும் சிறு பாதிப்பு கூட உயிருக்கு ஆபத்தாகவே முடிகிறது. சமயங்களில் குழந்தையின் இறப்புக்கும் கூட காரணமாகிறது. சிசேரியன் செய்யும் பொழுது மருத்துவர்கள் செய்யும் தவறுகளை எந்த ஒரு நோயாளியிடமும் மருத்துவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. மாறாகப் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. உதிரப்போக்கு அதிகமாகிவிட்டது என்றெல்லாம் காரணம் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்!.

இன்று பெரும்பாலான மருத்துவமனைகளில் பணத்திற்காகவே சிசேரியன் செய்வதும் நடக்கிறது.  தேவையில்லாத பரிசோதனைகள், தேவையில்லாத வெத்து சத்து மாத்திரைகள் அதைத்தொடர்ந்து உடலில் ஏற்படக்கூடிய பல ரசாயன மாற்றங்கள், மனதில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் இவைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ளவே மிகவும் எளிதான, பாதுகாப்பான வீட்டு முறை சுகப்பிரசவத்தை பெண்கள் நாடத் தொடங்கி இருக்கிறார்கள்!

வீட்டுப் பிரசவம் செய்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்? இதற்காக எங்காவது பயிற்சி பெற வேண்டுமா?

இன்றும் காடுகளில் மலைகளில் வாழும் பழங்குடி இன மக்கள் வீட்டுப் பிரசவங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது நடக்கிறது. அவர்கள் எந்த படிப்பும் படிக்கவில்லை, பயிற்சியும் பெறவில்லை. இன்றும் சாலையோரங்களில் படுத்து தூங்கும் நரிக்குறவர்கள் கூட்டத்தை நாம் அரசு மருத்துவமனைகளில் பார்த்திருக்கிறோமா? இவர்களுக்கு எல்லாம் சுகப் பிரசவம் எப்படி சாத்தியமாகிறது? இது மரபு வழுயாக அவர்களுக்கு இருக்கின்ற ஒரு புரிதல். அவர்களுக்கு புரிகின்ற இந்த விஷயங்கள் எதுவும் நமக்குத் தெரியாமல் போனது!

ஆக, இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது குழந்தை பிறப்பு என்பது இயல்பாக நடப்பது. எந்தவிதமான மெனக்கெடலும் இல்லாமல், இயல்பாகவே குழந்தை பெற்று வந்த நம் முன்னோர்களுக்கு தெரிந்த விஷயங்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது எப்படி?

எந்தவிதமான செலவும் இல்லாமல் மனிதர்களுக்கு எளிதாக இலவசமாக இயற்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற அனைத்தையும் காசாக்கிக் கொள்வது கார்ப்பரேட் மூளை. பயத்தை உண்டாக்கி அதன் மூலம் அவனது வியாபாரத்தை நம்மிடம் திணிப்பது இந்த ரகமே! இயற்கையாக கிடைத்து வந்த தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளியது அதுவே! வேப்பங்குச்சி,சாம்பல்,உப்பு எனக் காசில்லாமல் இருந்த பல்துலக்கலை இன்று லாபகரமானக் காசாக்கி இருப்பதும் கார்ப்பரேட் தான்! நவீன மருத்துவமும் கார்ப்பரேட் ஆகிவிட்டது.

பழங்கால மரபாக கிராமங்களில் இன்றும் கூட ஒரு பழக்கம் உண்டு. புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, அதிகாலை காலை நேரத்தில் இளஞ்சூரிய வெயில் படும் இடத்தில் சில நிமிடங்கள் படுக்க வைப்பார்கள். இதில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலில் குழந்தைக்கு வேண்டிய விட்டமின் டி கிடைப்பதும், கண்களுக்கு நல்ல ஆற்றலும் கிடைத்து வந்தது. புதிதாக பிறந்த குழந்தைகளின் மஞ்சள் நிறத் தோல் இயல்பு நிலைக்கு மாறிவிடும்! அந்தக் குழந்தைகளுக்கு இந்த முறையானது மிகவும் உபயோகமானதாக இருக்கும். இன்றைக்கு இப்படியான ஒரு விஷயம் வழக்கொழிந்து போனது.

இங்கே புதிதாக பிறந்த குழந்தைகளை கவனிக்கும் neonatology துறை மருத்துவர்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலில் ஏற்படுகின்ற இந்த நிற மாறுதலை மஞ்சள் காமாலையோடு, ஒப்பிட்டு நம்மை பயமுறுத்தி இன்குபேட்டரில் குழந்தையை வைக்கச் செய்வார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் உடலில் பிலுருபின் மதிப்பு 1ml/DL என்ற அளவில் இருக்க வேண்டும் என்றும், அதற்கு அதிகமாக செல்லும் பட்சத்தில் அது மஞ்சள் காமாலையின் அறிகுறி என்றும் நம்மை பயமுறுத்தி அந்தக் குழந்தையை இன்குபேட்டரில் வைப்பதற்கு பரிந்துரை செய்வார்கள்! இதற்கு அதிக கட்டணம் வசூலிப்பார்கள்! இப்படி இன்குபேட்டரில் வைப்பதற்கு பதிலாக, காலை நேர சூரிய ஒளியில் குழந்தையை வைப்பது ஆயிரம் மடங்கு குழந்தைக்கு நன்மையாகும்!

இங்கே பரிசோதனை என்ற பெயரில் கருவுற்ற பெண்களை பயமுறுத்தி,  சிகிச்சை என்ற பெயரில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது இந்த நவீன மருத்துவம். இங்கே வீட்டு பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட எந்த ஒரு பெண்ணும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை தேடிப் போவது இல்லை. மருத்துவ பரிசோதனைகளில் காட்டக்கூடிய அளவீடுகள் நாளுக்கு நாள் நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவையே. இந்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைக் கொண்டு தாய்,சேயின்உடல் நலமாக இருக்கிறது என முடிவுக்கு வர முடியாது.‌ அதேபோல வீட்டுப் பிரசவம் பார்த்துக்கொள்ளும் பெண்கள் யாருமே  மருந்து மாத்திரைகளோ, ஊசிகளோ எடுத்துக் கொள்வதில்லை.  குழந்தை பிறக்கப் போகும் நேரத்தை அவர்களே தங்கள் உணர்வுகளைக் கொண்டு கணித்துவிடுவார்கள்!‌

மொத்தத்தில் பிரசவத்திற்கு மருத்துவம் என்பது தேவையே இல்லை. நோயாளிக்கு தான் மருத்துவம் பார்க்க வேண்டுமே தவிர, கருவுற்ற பெண்ணிற்கு மருத்துவம் பார்ப்பது அபத்தமாகும். ஒரு பெண் கரு உருகிறாள் என்றாலே, அதுவே உடல் நலத்தின் அடையாளமாகும்! அந்த சமயத்தில் அவளது முகத்தில் தாய்மையின் செழிப்பும், முகத்தில் ஒரு புது பொலிவும் உருவாகும். இவ்வாறு உடல் மற்றும் மனம் நலத்தோடு இருக்கும் ஒரு பெண்ணுக்கு எதற்காக சிகிச்சை? இந்த ஒரு அடிப்படை புரிதல் இருந்து விட்டாலே, நாம் மருத்துவத்தை தவிர்த்து விடலாம்.

ஏற்கனவே சொன்னது போல மிக எளிதாக உடலின் உணர்வுகளை மட்டுமே கவனித்து, அந்த உணர்வுகளுக்கு ஏற்ப நடந்து கொண்டாலே போதுமானது. கருவுற்றப் பெண்ணுடைய நாக்கு விரும்பிய துவர்ப்பு, புளிப்பு சுவை கொண்ட உணவுகளை அனுமதிக்க வேண்டும்.‌ அந்தப் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தி அறுசுவை உணவு சாப்பிடச் செய்வார்கள். ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உறுப்பை பலப்படுத்தி அந்த பெண்ணை மேலும் ஆரோக்கியமான ஒரு பெண்ணாக மாற்றிடும். இந்த சுவைகளால் அந்த உறுப்புகள் பலப்படுவது என்பது மரபு மருத்துவத்தின் பாலபாடமாகும்.

நவீன மருத்துவத்தில் மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைகள் அனைத்துமே ஒரு பெண்ணை சிசேரியனை நோக்கியே நகர்த்திச் செல்கிறது. மாறாக இயல்பாக இருத்தல் என்பதே மறுக்கபடுகிறது. பசித்துப் புசித்தல் என்கின்ற ஒரு பழக்கத்தை மிகத் தெளிவாக மக்களுக்கு சொல்லித் தருகிறது நமது மரபு மருத்துவம். இந்த பசித்து புசித்தல் என்ற இந்த நல வாழ்வுக்கான அடிப்படை சூத்திரத்தை கருவுற்ற சூழலிலும் பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

இந்த பிள்ளை பேரு காலத்தில் அந்தப் பெண்ணின் உடலில் நடக்கும் ஒவ்வொரு மாற்றங்களையும் இயல்பாக அதன் போக்கில் விடுவதே சிறந்தது. ஒரு சில பெண்களுக்கு வாந்தி உணர்வு இருக்கலாம்.‌ இது ஒரு வகையான கழிவு வெளியேற்றம்  ஒரு சில பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படும்! இவர்கள் உவர்ப்பு சுவையை எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். கருவுற்ற பெண்களுக்கு மருத்துவ பரிசோதனையில் சர்க்கரை அளவு கூடி விட்டதாகவும், தைராய்டு அளவு மாறிவிட்டதாகவும் சொல்லி அதற்கும் மாத்திரை தருவார்கள்! இது தேவையற்றது. இந்த மாறுபாட்டை பற்றி கவலைப்படுவதே அறியாமை தான்!.‌

கருவுற்ற பெண்களின் கருப்பையின் பனி கூடத்தில் தண்ணீர் குறைந்து விட்டது என்பது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சொல்லி நம்மை பயமுறுத்துவார்கள். ஆனால் வீட்டு முறையில் பிரசவம் பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு அதில் இருக்கும் தண்ணீரின் அளவு எவ்வளவு என்பது பற்றி கூட தெரியாது. ஆனால், அவர்கள் மிக எளிதாக நலமோடு பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள்! பனிக்குடத்தில் இருக்கும் நீரின் அளவைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. பனிக்குடம் உடைந்தால் மட்டுமே குழந்தை சுகப்பிரசவத்தில் வெளியே வரும். பணிக்குடம் உடைந்த வினாடியில் இருந்து குழந்தை வெளியே வருவதை எப்பொழுது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம். சில சமயங்களில் சில மணி நேரங்களோ அல்லது ஓரிரு நாட்களோ கூட தள்ளிச் சென்று குழந்தை இயல்பாக வெளியே வந்த சம்பவங்களும் வீட்டு பிரசவத்தில் உண்டு.‌ குழந்தை சுவாசிக்க ஆரம்பிப்பது முழுவதும் வெளியே வந்த பிறகு தானே, தவிர தாயின் கருவறையில் இருக்கும் வரை குழந்தை சுவாசிக்கப் போவதில்லை.‌‌

குழந்தை பிறப்புக்கு என்று நாள் குறித்து, அந்த நாளில்  அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதினோரு மாதம் 12 நாட்கள் கழித்து வெளியே வந்த குழந்தையும் உண்டு. 12 மாதங்கள் முழுமையாக பூர்த்தி அடைந்து வெளியே வந்த குழந்தையும் உண்டு. இவை அனைத்தும் இயல்பாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் தான். இங்கே மருத்துவர்கள் குறிப்பிட்ட அந்த நாளில் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக சிசேரியன் செய்து கொள்வது‌ என்பது மிகவும் தவறான ஒன்றாகவே இருந்து வருகிறது.

நாள் கிழமை தேதி நேரம் பார்த்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுப்பது குழந்தையின் நலனுக்கு நல்லதல்ல! அந்தக் குழந்தை முழுமையாக வளர்ச்சி பெறுவதற்கு முன்பே நாம் குழந்தையை வெளியே எடுத்து விடுகிறோம் என்பதே உண்மை. இதனால் எடை குறைந்த குழ்ஹந்தைகள் பிறக்கும்!

பிரசவத்திற்கான பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது என்று சொல்லி சிசேரியனுக்கு முற்படுவது நவீன மருத்துவம். ஆனால் இந்த ரத்த அழுத்தம் தான் குழந்தைகளை மிக எளிதாக சுகப்பிரசவத்தில் வெளியே கொண்டு வர உதவும் என்பது தான் உண்மை.

குழந்தை கொடி சுற்றி பிறப்பது என்ற ஒரு இயல்பான வழக்கு தான்! அவ்வாறு கொடி சுற்றி வரும் குழந்தைகளை உடனடியாக அந்த கொடியை வெட்டி அகற்றுவது நவீன மருத்துவம். ஆனால் வீட்டு முறை பிரசவங்களில் அவ்வாறு செய்வது இல்லை. அவ்வாறு சுற்றி இருக்கும் கொடியை நாம் எதுவும் தீண்டாத வரையில், அந்தக் குழந்தை சீக்கிரமே வெளியே வருகிறது என்பது எங்கள் குழுவில் கண்டறிந்த உண்மை.

பெண்களுக்கு நாட்கள் நெருங்க நெருங்க, வயிற்றில் ஏற்படும் வலியை இது பிரசவ வலி தானா என்பதை அறிந்து கொள்வதில் சில சிக்கல்கள்  ஏற்படும்! இது பிரசவ வலியா இல்லையா என்பதை அறிந்து கொள்ள, பெண்களுக்கு சீரகம் போட்டு காய்ச்சிய நீரை பருகக் குடிக்கும் பொழுது அந்த வலி  நின்று விடுவது நடந்தால் அது பிரசவ வலி அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்!. ஒருவேளை சீரகம் நீர் குடித்தும் வலி நிற்கவில்லை என்றால், அது பிரசவ வலி என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக குழந்தை வெளியே வரும்பொழுது அந்தப் பெண்ணின் இடுப்பு எலும்புகள் குறுத்தெழும்புகள் போல இளக்கமடைந்து , குழந்தை வெளியே வருவதற்கு ஏற்றது போல விரிந்து கொடுக்கும்! யோனி வழியே குழந்தை வெளியே வரும்போது, யோனியும் அதற்குத் தகுந்தார் போல் விரிந்தே இருக்கும்.இந்த சமயத்தில்தான் பெண்களுக்கு வயிற்றில் வலி இருக்கும் உணர்வு தெரியும். இந்த சூழலை மற்றும் சற்று பொறுத்துக் கொண்டு விட்டால், நம் குழந்தை அடுத்த ஒரு சில வினாடிகளில் அல்லது நிமிடங்களில் நம் கையில் அழகாக வீறிட்டு கத்த ஆரம்பிக்கும்.

இங்கேதான் இன்னும் ஒரு முக்கிய விஷயம் நடக்க இருக்கிறது.

அது அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் உடல் நலத்தோடு வாழ்வதற்கான ஒரு விஷயம் இங்கே நடக்கும்.  அதுதான் தொப்புள் கொடி மற்றும் நஞ்சுப்பை. குழந்தை வயிற்றில் இருக்கும் வரை குழந்தையின் தொப்புளோடு ஒட்டி இருக்கும் தொப்புள் கொடியின் மறுமுனை நஞ்சு கையோடு இணைந்து கர்ப்பப்பையில் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும்!

தாயின் உடலில் இருந்து பெறப்படும் ஆற்றல் இந்த நஞ்சுப்பை வழியாக சவ்வுடு பரவல் (osmosis)  என்ற முறையில் உட்கிரகிக்கப்பட்டு தொப்புள்கொடி  வழியாக குழந்தைக்கு கடத்தப்படும்.  இதுவே தாய்க்கும் குழந்தைக்கும் இருக்கும் உறவு முறையாகும்.‌ வீட்டு முறை பிரசவங்களில், குழந்தை வெளியே வந்த பிறகு தொப்புள் கொடியை வெட்டாமல், தொப்புள் கொடியும் அதனுடன் இணைந்த நஞ்சுப்பையும் முழுதாக தாயின் கருப்பையில் இருந்து தானாக வெளியே வரும் வரை காத்திருப்பது என்பது ஒரு முக்கிய செயலாகும்!

மருத்துவமனைகளில் குழந்தையை கையில் எடுத்த அடுத்த வினாடி அந்த தொப்புள் கொடி வெட்டப்படும். உடனடியாக தொப்புள் கொடி வெட்டப்பட்டு தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைக்கு உடல் நலத்தோடு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைகிறது. அதற்கு மாறாக, வீட்டுப் பிரசவங்களில்  ஒரு சில நிமிடங்களில் இருந்து சில மணி நேரம் வரை அந்தத் தாய் காத்திருக்கும் பட்சத்தில், தொப்புள் கொடியோடு இணைந்த நஞ்சுப்பை முழுவதும் தாயின் கர்ப்பப்பையில் இருந்து தானே வெளியேறுகிறது. இப்பொழுதுதான் தாயின் உடலில் இருந்து குழந்தைக்கு கிடைக்கும் ஆற்றல் முற்றுப்பெறுகிறது. அதன் பிறகு தொப்புள் கொடியோடு இணைந்த நஞ்சுபையானது தானே காய்ந்து விழும் வரை வைத்திருந்து அதனை அப்புறப்படுத்துவது என்பதுதான் பழங்கால முறை.

இதுவே மருட்டி முறை பிரசவம் என்றும் அழைக்கப்படுகிறது.  இதில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுமைக்கும் நலமோடு வாழ்வதற்கான வழி கிடைக்கும். தாயின் வயிற்றிலிருந்து முழுவதும் வெளியேறிய நஞ்சுப்பையோடு இணைக்கப்பட்ட தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம் செல் முழுவதும் அந்த குழந்தையின் உடலுக்குள் சென்று சேர்வதற்கு வழிவகுக்கும். இந்த ஸ்டெம் செல் பிற்காலத்தில் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அந்த பாதிப்பை சரி செய்வதற்கு உதவும்.

இந்தப் பிரபஞ்ச விதிகளை பின்பற்றி, நல்ல உடல் நலத்தோடும் மனநலத்தோடும் உணர்வுபூர்வமான குழந்தைகளை பெற்றெடுத்து சமூகத்தில் தவழவிடும் போது இந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கவனப்படுத்தி, உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

கட்டுரையாளர்; கு. நா. மோகன்ராஜ்

மரபுவழி அக்குபங்சர் சிகிச்சையாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time