ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான எதிர்ப்பில் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து தனிமைப்பட்டு விட்டது திமுக! சமீபகாலமாக பாஜக எதிர்ப்பில் பம்முவது, மறைமுகமாக பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்துவது எனச் செயல்பட்டு வரும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி உறைவைப் பேண முடியுமா? என்பதே தற்போதைய பிரச்சினை!
ஆர்.எஸ்.எஸ்.பேரணி தொடர்பாக தமிழகத்தில் மிக எழுச்சியான சமூக நல்லிணக்கப் மனித சங்கிலியை திமுகவின் கூட்டணிக் கட்சிகள் நடத்தியுள்ளன! ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ இயக்கங்கள் தமிழகத்தில் மிக வலுவாக காலூன்ற வியூகம் அமைத்து செயலபடும் இந்த சூழலில் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பாக இடதுசாரி இயக்கங்கள், திராவிடக் கழகம், ம.திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள், விசிக போன்ற தலித் கட்சிகள் மற்றும் அமைப்புகள் திட்டமிட்டன! ஆனால், இதற்கு கிடைத்த பலத்த வரவேற்பு காரணமாக இந்த அணியில் 17 அரசியல் கட்சிகள் 44 இயக்கங்கள் இணைந்து கொண்டன!
எதிர்கட்சியாக இருக்கும் போது பாஜக எதிர்ப்புக்கு தலைமை தாங்கிய கட்சி தான் திமுக. ஆனால், அந்த திமுகவும் சரி, அதன் பல்வேறு கிளை அமைப்புகளும் சரி இந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ளவில்லை. முதலில் காந்தி பிறந்த நாளில் இதை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது! அது தான் பொருத்தமானதும் கூட! ஆனால்,ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த காரணத்தால் இதற்குமே திமுக அரசு அனுமதி மறுத்துவிட்டது! உண்மையில் திமுக அரசின் இந்த அணுமுறை திமுக கூட்டணிக் கட்சிகளை மிகவும் வருத்தமடையச் செய்தது. காரணம், ஆர்.எஸ்.எஸ் பேரணியையும், சமூக நல்லிணக்க மனித சங்கிலியையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிட்டது தான்! எனவே, மறுக்கப்பட்ட அனுமதியை மறுபடியும் முறையிட்டு வாங்கும் சூழலை திமுக ஆட்சி உருவாக்கியது என்பது தான்!
சரி, தங்களோடு அணி சேரத் தயார் இல்லை என்றாலும் கூட, தோழமையுடனும், அனுசரணையுடனும் மதவெறிக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புகளுக்கு திமுக அரசு இணக்கமாக இருக்கலாம். அதுவும் இல்லை என்பது தோழமைக் கட்சிகளுக்கு வெள்ளிடை மலையென தெளிவாக தெரிய வந்துவிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த தொடக்கமான ஒரு சில மாதங்களில் பாஜகவுக்கு மாறுபட்ட மன நிலையை சரியாக வெளிப்படுத்தி வந்தது. ஆனால், மெல்ல, மெல்ல அது குறைந்து போனதோடு, தற்போது முழுமையாக மத்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத சட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு தந்து வருகிறது! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக பள்ளி, கல்லூரிகளில் கமுக்கமாக அமல்படுத்தி வருவது அறிந்து அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் அதிர்ந்து போயுள்ளன! அதே போல, மத்திய அரசின் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்க்கவே இல்லை.
திமுக தலைமையின் பலவீனத்தை நன்கு புரிந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் இந்துத்துவ அரசியலை மிக வெளிப்படையாகவே செய்து வருகிறார். திராவிடக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான சனாதனக் கோட்பாடுகளை அவர் தூக்கி பிடிப்பதோடு, அரசின் அங்கமாக்கிடுவதையும் குறித்து எந்த எதிர்ப்பும் திமுக அரசு தரப்பில் இல்லை.
பாஜகவின் தமிழக தலைமை அண்ணாமலை நாளும்,பொழுதும் திராவிட இயக்கத்தை வசைபாடுவதற்கு திமுகவில் சரியான எதிர்வினை இல்லை! கள்ளக்குறிச்சி பாஜக பிரமுகர் நடத்திய பள்ளிக் கூடத்தில் நிகழ்ந்த மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தில் குற்றவாளிகளை தண்டிக்க தைரியமில்லை! பெரம்பலூர் சிறுவாச்சூரில் பெரியசாமி கோவில் சிலைகள் உடைப்பில் மத துவேஷத்தை தூண்டி, கோடிக்கணக்கில் கல்லா கட்டி கைதான பாஜக பிரமுகர் கார்த்திக் கோபிநாத்தைக் கூடத் தண்டிக்க தைரியமின்றி, விடுவித்துவிட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் கொடுத்த அறிக்கையில் குற்றவாளிகள் தெளிவாக குறிப்பிடப்பட்டும் கடுகளவும் நடவடிக்கை இல்லை!
ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் ஒருவர் மீதும் நடவடிக்கை இல்லை. ஜெயலலிதா மர்ம மரணத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி கமிஷன் பரிந்துரைப்படி சசிகலா மற்றும் அப்பல்லோ மீதான கூடுதல் விசாரணைக்கு சற்றும் ஆர்வம் இல்லை. இப்படி இந்த அரசின் கோழைத்தனத்திற்கான பட்டியல் மிகப் பெரியதாக உள்ளது! ஆக ‘இனி, திமுக அரசினால் தமிழக மக்களை பாதுகாக்க முடியாது’ என்ற உணர்வே மோலோங்குகிறது.
அதிமுகவில் தன் கையாளாகச் செயல்பட்ட ஒ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவிற்குள் நுழைக்க வேண்டும் அல்லது சின்னம், கொடி உள்ளிட்டவற்றை முடக்கி, அதிமுகவை பலவீனப்படுத்தி, தமிழகத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்திற்கு பின்னணியில் திமுக அரசு செயல்பட்டு வருவதும் கவலையளிக்கிறது.
‘இது போன்ற விவகாரங்களில் திமுகவோடு தொடர்ந்து நின்றால், மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வந்துவிடும்’ என திமுகவின் கூட்டணிக் கட்சிகள் உணரத் தொடங்கிவிட்டன! ஆர்.என்.ரவிக்கு திமுக அரசு அடிபணிந்து செல்வது என முடிவெடுத்தோடு அல்லாமல், ‘கூட்டணிக் கட்சிகளும் அதில் மெளனம் சாதிக்க வேண்டும்’ என எதிர்பார்ப்பது தான் இக்கட்டான சூழலை உருவாக்கி உள்ளன!
ஏனென்றால், கவர்னரை எதிர்த்து பேசினாலோ, போராடினாலோ திமுக அரசு அதை தர்ம சங்கடமாகப் பார்க்கிறது. கூட்டணிக் கட்சிகளின் பாஜக எதிர்ப்பு தன் ஆட்சிக்கு பாதகமாகிவிடுமோ எனப் பதறுகிறது! பத்தாண்டு காத்திருப்புக்கு பிறகு வரமாக கிடைத்த ஆட்சியை பாதுகாக்க வேண்டும் என்றால், பாஜக எதிர்ப்பை சும்மா பேச்சளவில் காட்டுவதோடு நிறுத்திக் கொண்டு காரிய சாத்தியமாக பாஜகவிற்கு முற்றிலும் அனுகூலமாக இருப்பது என்பதை திமுக தன் வழிமுறையாக்கிக் கொண்டதை தெரிந்தும், தெரியாதது மாதிரி தான் கூட்டணிக் கட்சிகள் அமைதி காக்கின்றன!
Also read
குறிப்பாக திமுக கூட்டணியில் சனாதன எதிர்ப்பை தூக்கலாகப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக தலைமை விரும்பவில்லை. கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் சம்பந்தமே இல்லாமல் தலித் இளைஞர்களை சகட்டுமேனிக்கு கைது செய்த விவகாரத்திலே வி.சி.க தன் ஆழமான மன வருத்தத்தை வெளிப்படுத்தியும், அசைந்து கொடுக்கவில்லை திமுக.
எனவே, இனி வரும் காலங்களில் இப்படியே புழுக்கத்தில் குமைந்து தொடர முடியாது. ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தில் திமுக அரசு தன் வாதத்தை உறுதிபட எடுத்து இயம்பவில்லை என்பது கண்கூடான உண்மை! அதன் விளைவு தான் ஆர்.எஸ்.எஸ் பேரணி! ஆக, ‘இனி திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக பொறுமை காத்தது போல இனி இருக்கமாட்டோம்’ என்பதை திமுக கூட்டணிக் கட்சிகள் ஒருமித்து காட்டியுள்ளன! இனி தன் வேஷத்தைக் களைந்து வெளியில் வந்தாக வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply