உயிரைக் பலி கொடுத்தால் தானா?- பழங்குடியின சாதி சான்று!

-சாவித்திரி கண்ணன்

அனைவர் உள்ளத்தையும் உலுக்கி எடுத்துவிட்டது இந்த பழங்குடியின் மரணம்! சாதிச் சான்றிதழுக்காக 5 ஆண்டுகள் அலைந்த நிலையில் தன்னைத்தானே தீயிட்டு எரித்துக் கொண்டார் மலைக்குறவரான வேல்முருகன். தமிழகம் முழுக்க பல்லாயிரம் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் பெறுவது சவாலாகவே தொடர்வது ஏன்?

காஞ்சி மாவட்ட படப்பை மலைக்குறவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து, ”எனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் அரசு அலுவகத்திற்கு பலமுறை அலைந்து பார்த்து விட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே தீக்குளித்து சாகிறேன். இனியாவது உடனடியாக சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என நம்புகிறேன்” என சத்தமாக கத்தியுள்ளார். அவரை மீட்டு மருத்துவனையில் சேர்த்த போதிலும், பலனளிக்காமல் இறந்து விட்டார்!

இறந்தவர் மலைக்குறவர்! சூர்யாவின் ஜெய்பீம் படம் வெளியான போது முதலமைச்சர் ஸ்டாலின் நரிக்குறவர் பகுதிகளுக்கு நேரில் சென்றார். அவர்களுக்கு காலதாமதமில்லாமல் சாதிச் சான்றிதழ் தரும்படி அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். ஆனால், ஒருசில இடங்களில் மட்டுமே அந்த கட்டளை நடைமுறைபடுத்தப்பட்டது என்பது தான் வேதனையாகும்.

இது இன்று, நேற்று பிரச்சினையல்ல! பல ஆண்டுகாலப் பிரச்சினையாகத் தொடர்கிறது. தமிழகத்தில் 36 வித பிரிவுகளைக் கொண்ட சுமார் எட்டு லட்சம் பழங்குடிகள் வாழ்கின்றனர். பட்டியலிடப்பட்ட  இந்தப் பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதில் வருடக்கணக்கில் காலதாமதம் ஏற்படுவதாகவும், பல போராட்டங்களுக்கு பிறகும் கூட அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் சுலபத்தில் கிடைப்பதில்லை என்றும் அந்த மக்கள் வருத்தமுடன் சொல்கிறார்கள்!  இதனால் பழங்குடிகளுக்குரிய இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாமல் அவர்கள் பிள்ளைகளை பொதுப் பிரிவில் சேர்த்துப் படிக்க வைக்கும் நிலைக்கு  தள்ளப்படுவதாகவும் பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.

இதனால், மாணவர்களின் படிப்பு, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும், விசாரணை, சரிபார்ப்பு என்ற பெயரில் இழுத்தடிக்கப்படுவதாகவும், கூறும் இவர்கள் நேரில் சென்று விண்ணப்பித்தால் ஏற்காமல் ஆன்லைன் வாயிலாகச் சான்றிதழுக்கு விண்ணப்பைக்க சொல்கிறாரக்ள் என வருத்தப்பட்டனர். ஆன்லைனில் விண்னப்பிக்க ஒரு நபருக்கு ரூ100 செலவாகிறது. ஒரு குடும்பத்தில் ஏழெட்டு பேர் இருந்தால், இதை சமளிக்க முடியாது. பலருக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்கவும் தெரியாது. அதனால், நேரடியாகத் தரப்படும் விண்ணப்பத்தை ஏற்க வேண்டும் என்பதே பழங்குடிகளின் கோரிக்கையாகும்!

தர்மபுரி மாவட்டத்தின் சின்னகாண அள்ளி பகுதியைச் சார்ந்த பழங்குடி தாயான ஜெயலட்சுமி என்பவர் தன் பிள்ளைகளுக்கான சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தார். ஆனால்,அவரது விண்னப்பத்தை கோட்டாட்சியர் நிராகரித்துவிட்டார். ஆனால்,ஜெயலட்சுமி சோர்ந்து விடாமல் மா நில அளவிலான கூர் நோக்கு குழுவிற்கு சென்று விண்னப்பைத்தார். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, ஜெயலட்சுமி பழங்குடி தான்.எனவே சாதிச் சான்றிதழ் தரலாம் பரிந்துரைத்தனர். அதன் பிறகும் கோட்டாசியர் அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் முறையிட்டுத் தான் ஜெயலட்சுமி சாதிச் சான்றிதழ் வாங்க வேண்டியதாயிற்று!

பேராசிரியர் பிரபா கல்யாணி

இது குறித்து பழங்குடியின பாதுகாப்புச் சங்கத்தின் பேராசிரியர் பிரபா கல்யாணி அவர்களிடம் கேட்ட போது, ”பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் பெறுவது என்பது 1989க்கு பிறகு தான் சிக்கலாக மாறியது. சிலர் போலியாக சான்றிதழ் பெற்ருவிடுவதை தடுக்கும் பொருட்டு தாசில்தாரால் தரப்பட்டு வந்த பழங்குடியின் சான்றிதழை கோட்டாட்சியர் தான் தர முடியும் என மாற்றியது தான் சிக்கல்! மேலதிகாரியான அவருக்கு பணிகள் அதிகம். அது மட்டுமின்றி, பழங்குடியின மக்கள் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும்போது, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரின் ஒப்புதல் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்து, சான்றிதழ் வழங்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் முடிவு எடுக்க முடியாமல் தவிர்த்துவிடுகிறார். இதற்கு ஒரே தீர்வு தாசில்தாரே தரலாம் என சொல்லிவிடுவது தான்!  ஒரே ஒரு முறை பழங்குடியினப் பகுதிக்கு வந்தால் போதும் விண்னப்பித்தவரின் இருப்பிடம்,வாழ் நிலை, அவர்களின் பெற்றோர் எனப் பார்த்தவுடன் தீர்மானித்துவிடலாம்! இதற்கு பெரிய ஞானோதயம் தேவையில்லை.

கடலூர் மாவட்டத்தில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு இருளர் பழங்குடிகளுக்கு சான்றிதழ் தராமல் அண்டுக்கணக்கில் இழுத்தடித்து வருகிறார். இந்த மாதிரி அதிகாரிகளால் எளிய பழங்குடியின இளைஞர்களின் எதிர்காலமே சூனியமாகிப் போகிறது. பண்ருட்டி,கடலூர்,குறிஞ்சிப்பாடி வட்டங்களில் 700க்கும் மேற்பட்ட இருளர்கள் சாதிச் சான்றிதழுக்காக வருடக் கணக்கில் காத்திருக்கின்றனர். குறிப்பாக எனதிரிமங்கலத்தில் கடைசியாக 2007 ஆம் ஆண்டு 129 பேருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டதோடு சரி. கடந்த 15 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட வழங்கவில்லை. இது போல மேல்மாம்பட்டு, கோண்டூர், வடலூர்,காரணிக்குப்பம், ஏரிப்பாளையம் போன்ற ஊர்களில் ஒருவருக்கு கூட சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐ.ஏ.எஸ் அறிவுறுத்தியும் கூட கோட்டாட்சியர் அதியமான் கவியரசு வழங்க மறுத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது

ஆனால், வருவாய் கோட்டாட்சியர் வரம் தந்தால் தான் சான்றிதழ் கிடைக்கும். அவர்களை யார் கேள்வி கேட்க முடியும். மாவட்ட ஆட்சியர் தான் கேட்க வேண்டும். மாவட்ட ஆட்சியரை பழங்குடிகள் அவ்வளவு சுலபத்தில் நெருங்க முடியாது! எத்தனை கலெக்டர்கள் பழங்குடிகளுக்கு ஒழுங்காக சாதிச் சான்றிதழ் கிடைக்கிறதா? என கவலைப்பட்டு இருக்கிறார்கள்! ”என்றார் பிரபா கல்யாணி!

ஆயினும் ஒரு சில விதிவிலக்குகள் உள்ளனர். இதோ ஒரு விதிவிலக்கு;

விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு, முக்சியூர், கண்டாச்சிப்புரம், கஞ்சனூர், நந்திவாடி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இருளர்கள், மற்றும் காட்டுநாயக்கன் சமுகத்தைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் கேட்டுப் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தப் பழங்குடிகள் தங்களது குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கச் சாதிச் சான்று தேவைப்படுவதால் சாதிச் சான்றிதழ் கேட்டு  7 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் வந்தனர். இந்த சூழலில் சென்ற ஆண்டு மோகன் ஐ.ஏ.எஸ் விழுப்புரம் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். மாவட்ட ஆட்சியர் மோகனிடம் சாதிச் சான்று கேட்டு பழங்குடியினர் மனு கொடுத்தனர்.

இந்த மனு மீது நேரடியாகச் சென்று விரைவில் சாதிச் சான்று கொடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டார் மோகன். அவர்கள் போனார்களோ,இல்லையோ, ஆனால், மாவட்ட ஆட்சியர் மோகன் சில கிராமங்களுக்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்படி நந்திவாடி கிராமத்திற்கு நேரில் சென்ற ஆட்சியர் மோகன் 14 பேருக்கு இந்து இருளர் சாதிச் சான்று வழங்கினார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 66 மாணவ மாணவிகள் உட்பட 87 பேருக்கு இந்து காட்டுநாயக்கன் சாதிச் சான்று வழங்கினார்.இது போன்ற சம்பவங்கள் அபூர்வத்திலும் அபூர்வமாகும்!

முற்பட்ட சாதிகள் சில, இடஒதுக்கீடு பலன்களை அனுபவிக்க வேண்டி, அரசியல் அழுத்தம் கொடுத்து தங்களுக்கு பழங்குடி சான்றிதழ்கள் பெற்றுக் கொள்வது பரவலாக நடக்கிறது! இந்த வகையில் ரெட்டி, ரெட்டியார் போன்ற உயர்குடியினர் பழங்குடி கொண்டா ரெட்டியாகவும், பிற்பட்ட வகுப்பினரான நாய்க்கர், நாய்க்கன் மற்றும் நாயுடுக்கள் பழங்குடி காட்டு நாயக்கன் ஆகவும் காட்டி, பழங்குடிச் சான்றிதழகள் வாங்கி பலன் பெற்று வருகின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினரான  குரவர்கள், மலைக் குறவன் ஆகவும், பிற்பட்ட சாதியான ஊராளிக் கவுண்டர்கள் பழங்குடி ஊராளியாகவும், பிற்பட்ட வகுப்பு குச்சடிகார் பழங்குடி குறிச்சான் ஆகவும், பிற்பட்ட வகுப்பினரான குரும்பா, குரும்பர், குருபா, குரும்பக் கவுண்டர் பழங்குடி குருமன்ஸ் ஆகவும், பழங்குடிச் சான்றிதழ்களை பெற்று பழங்குடிகளுக்கான சலுகைகளை அனுபவிப்பதை ஏனோ தடுக்க முடியாமல் உண்மையான ப்ழங்குடிகளுக்கு சாதிச் சான்றிதழ் தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து சாகடிக்கிறார்கள் என்பது தான் வேதனை.இது வரை இந்த சாதி மாறிக் கொண்ட சந்தர்ப்பவாதிகள் தண்டிக்கப்பட்டதாக செய்திகளும் இல்லை.

அரசியல் கட்சிகளும் அதன் பழங்குடியினப் பிரிவுகளின் தலைவர்கள் சிலரும் ஆதாய அரசியலுக்காக அதிகாரிகளுக்கு நெருக்குதல் தந்து இப்படி போலிச் சான்றிதழ் பெறுவதை மிகப் பெரும் தண்டனைக்குரிய குற்றச் செயலாக அறிவித்து தண்டிக்காத வரை இதற்கு தீர்வில்லை. அதே போல பழங்குடியினர் சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அது தரப்பட்டாக வேண்டும். நியாயமான காரணங்கள் இன்றி அவை நிராகரிக்கப்படுமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக வேல்முருகன் மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கொலை குற்றத்திற்கான சிறை தண்டனை வழங்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time