தமிழுக்கும், தமிழருக்கும் இந்து மதத்தில் இடமில்லையா?

-செழியன்.ஜா

“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்பதற்கு இன்னும் எத்தனை காலம் போராடப் போகிறோம்? ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை? என்ன தடைகள்? யாரால் இந்தப் பின்னடைவு?  என்ன செய்யப் போகிறோம்? தீர்வு என்ன? அனைத்தையும் அலசியது இந்தக் கருத்தரங்கம்!

சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் – தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் “தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில்  சென்னை உயர் நீதிமன்றம் ஒரு குழப்பமான தீர்ப்பை தந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள அபத்தங்களை விளக்கியும்,  அர்ச்சகராவதற்கு சாதியோ.குலமோ தடையாக இருக்கலாகாது என வலியுறுத்தவும் தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்  சென்னை நிருபர்கள் சங்கத்தில் சிறப்புக் கருத்தரங்கம் அக்டோபர் 12 ல் நடைபெற்றது.

இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்கு, தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்றார். மூத்த வழக்கறிஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவையின் சிவ. வடிவேலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு – ஆதரிக்கும் திராவிட மாடல்” நூலின் வெளியீடும்,விளக்கமும் நடைபெற்றன.

நிகழ்வில், பல தமிழ் அமைப்புகளின் முக்கியஸ்தர்களும், ஆன்மீக அன்பர்களும், சமூக ஆர்வலர்களும் திரளாக பங்கேற்றனர்.

ஏற்கனவே தமிழில் அர்ச்சனையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று நடைமுறையில் இருக்கும்பொழுது ஏன் அதே விஷயத்தை பேசுகிறார்கள்…?’ என்ற எண்ணங்களோடு கருத்தரங்கை கவனித்த போது, ‘உண்மையிலேயே இவை இரண்டும் இன்னும் முழு நடைமுறைக்கு வரவில்லை, ஏகப்பட்ட தடைகள் இருக்கின்றன’ என உணர முடிந்தது.

முதலில் சிவா.வடிவேலன் பேச்சை தொடங்கினர். முக்கியமான ஒரு கருத்தை முன் வைத்து பேசினார். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று பலகை மாட்டி இருப்பார்கள். இதுவே எவ்வளவு பெரியதவறு தெரியுமா? தமிழ் பேசும் நாட்டில், பல ஆயிரம் வருடங்கள் தமிழ் பாரம்பரிய உள்ள நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று ஏன் பலகை மாட்டி உள்ளனர்?  எதற்கு தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்யபடும் என்ற பலகை? எனக் கேட்டார்.

மூத்த வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் சமீபத்தில் வழங்கிய உயர்நீதி மன்றத் தீர்ப்பை முன் வைத்தும், அதன் ஆரம்பகால வரலாற்றையும் விவரித்து பேசினார்;

சிறிது முன்னோக்கி 1970 வருடம் செல்வோம். அன்று இருந்த (திமுக) தமிழக அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதுவரை நடைமுறையிலிருந்த பரம்பரை அர்ச்சகர் முறையை நீக்கப்படும் என்பதே அந்த சட்ட திருத்தம் ஆகும். தாத்தா, தந்தை, மகன் என பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பம் மட்டுமே அர்ச்சகர் ஆகும் நிலை இருந்தது. இதில்தான் தமிழக அரசு மாற்றத்தைக் கொண்டு வந்து அதை நீக்கியது.

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர்.  இதற்கு உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கம் கொடுத்தது. கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் எல்லாம் அரசுப் பணியாளர்கள். அவர்கள்  தவறு செய்தால் அவர்களுக்குத் தண்டனை உண்டு. தவறு பெரியதாக இருந்தால் சிறைக்குக் கூட அனுப்ப முடியும். இது அர்ச்சகர்களுக்கும் பொருந்தும். அதனால் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தும் சரியானது என்று தீர்ப்பளித்தது.

இங்கு ஒன்றை  நாம் கவனிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை ஆகமவிதிப் படி வழங்கவில்லை. தமிழக அரசு கொண்டுவந்த திருத்தம் சட்ட திட்டத்திற்கு உட்பட்டதா? என்று ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியது.

அர்ச்சகர் நியமனத்தில் ஜாதி, குலம்,பிறப்பு, ஆகியவற்றை குறிப்பிட்டு வேறுபாடு காட்டக் கூடாது. அப்படிக் காட்டினால், அரசியல் அமைப்பு சட்டம் 14 மற்றும் 17 ஆகியவற்றின் படி மனிதர்களிடையே வேற்றுமைகள், பாரபட்சம் பின்பற்றப்படுகிறது தவறாகும். அப்பொழுது அரசியல் அமைப்பு சட்டமே மேலோங்கி செயல்படும் என்று உச்சநீதிமன்ற உறுதிபடக் கூறியது.

ஆனால் வழக்குப் போட்டவர்கள் நீதிபதியை பார்த்து, தமிழக அரசு இந்த தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு ஆகம விதிகளில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தால்,  அது ஆகமத்தை முற்றிலும் குலைத்துவிடும் என்று சொன்னார்கள். அதற்கு உச்சநீதிமன்றம் அப்படியெல்லாம் நடக்காது, வீண் பயம் கொள்ளாதீர்கள் என்று சொல்லிவிட்டு. அப்படி ஆகிவிதிகளில் மாற்றங்கள் வந்து பாதிக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதி கூறினார். இந்த வகையில் மீண்டும் நீதிமன்றத்திற்கு வரலாம் என்று  ஒரு சிறு வாய்ப்பு அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. இந்த தீர்ப்பு 1972ஆம் ஆண்டு வந்தது.  இந்த வழக்கை சேஷம்மாள் வழக்கு என்பார்கள்.

தீர்ப்பை நடைமுறைப்படுத்த தமிழக அரசு பெரிதாக முயற்சி எடுக்கவில்லை. எம்.ஜி ஆரைச்  சமாளிக்கவே அப்போது திமுகவிற்கு நேரம் சரியாக இருந்தது. பிறகு தீர்ப்பை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்று நீதிபதி மகாராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழு அமைத்தவர் MGR. ஆட்சி மாறியிருந்தது. குழு விரிவான அறிக்கையை எம்.ஜியாரிடம் கொடுக்கிறது. ஆனால், மேல்மட்ட நிர்ப்பந்தங்களால் அதை அவர் நடைமுறைப் படுத்தவில்லை.

அதன் பிறகு இந்த விஷயத்தைப் பற்றி 2005ஆம் ஆண்டு வரை எந்த அரசும் பேசவில்லை. 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருகிறது. 1972ஆம் ஆண்டு தீர்ப்பிற்குப் பிறகு 23-5-2006 ஆம் ஆண்டுதான்  ஒரு அரசாணை வெளியிடுகிறது தமிழக அரசு. இந்த அரசாணையின் முக்கிய நோக்கம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு வழி செய்தது. மேலும் நீதிபதி ஏ.கே ராஜன்  தலைமையில் குழு அமைத்து இதற்கு ஆய்வு செய்தனர். இதை எதிர்த்து மதுரை மீனாட்சி கோயில் சேர்ந்த அர்ச்சகர்கள்  உச்சநீதிமன்றம் சென்றார்கள்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது ஆகமத்திற்கு எதிரானது. ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும். அப்படி நியமிக்கவில்லை என்றால் ஆகம விதியை மீறியதாக ஆகும். இது சாதி சம்பந்தப்பட்டது இல்லை  ஆகம விதிப்படி நியமனம் வேண்டும்  என்று வாதிட்டார்கள்.

உச்சநீதிமன்றம் இங்குத் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்காமல் குழப்பமான ஒரு தீர்ப்பை வழங்கியது. அரசு வெளியிட்டுள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது செல்லும் மற்றும் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்கள் நியமனம் செய்ய வேண்டும். எந்த எந்த கோவிலில் எந்த ஆகமங்களைப் பின்பற்றப்படுகிறதோ அந்த ஆகமப்படி அர்ச்சகர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இதே போல் ஒரு வழக்கு கேரளாவிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. பிராமணர்கள் அல்லாதவர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது ஆகும். முதலில் கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு பிராமணர்கள் அல்லாதவர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம் அது சரியானதே என்பதாகும்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார்கள். இங்கு உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கியது. அர்ச்சகர் பணிக்கு வேறு சமூகத்தினர் முன்பு இல்லாத காரணத்தால் பிராமணர்கள் அர்ச்சகர்கள் ஆக்கினார்கள். ஆனால், இன்று தகுதியான நபர்கள் அனைத்து சாதியிலும் உள்ளதால் அவர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

கேரளா வழக்கில் தீர்ப்பு இரண்டு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு, மீனாட்சி அம்மன் அர்ச்சகர்கள் வழக்கில் கொடுத்த தீர்ப்பு ஐந்து நீதிபதிகள் வழங்கியது. அதனால் இரண்டு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை விட ஐந்து நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு முக்கியமானது என்று சொல்லி அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் அதே வேலையில் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர் நியமனம் நடக்க வேண்டும் என்று முடித்தார்கள்.

அதற்கு அடுத்து அப்படியே இந்த விஷயம் தூங்கியது. மீண்டும் 2020ஆம் ஆண்டு தமிழக (அதிமுக) அரசு தகுதி உள்ள அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று  “தமிழ்நாடு இந்து சமய நிறுவன ஊழியர்கள் விதிகள்-2022 கீழ்  அரசு ஆணையை வெளியிடுகிறது.

இந்த அரசு ஆணையை முன் வைத்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக(திமுக)அரசு பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களை பல்வேறு கோவில்களில் பணிக்கு அமர்த்தியது. இதை எதிர்த்து அனைத்து இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் மற்றும் சிலர் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள். 22-8-2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதில் மனுதாரர் நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை அர்ச்சகர் பணியமர்த்துவதற்கு முன்பு எது ஆகாமக்கோயில்கள் என்பதைக் கண்டறிந்த பின்தான் நடத்த வேண்டும் அவ்வாறு ஆகமக் கோயில்களைக் கண்டறிந்து வகை பிரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று சொன்னார்கள். நீதிமன்றம் இதை ஏற்றுக் கொண்டது.

மேலோட்டமாக பார்த்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குத் தடையில்லை என்ற புரிதல் வரும். ஆனால் எது ஆக விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளது, ஆகம வழிபாடு நடைபெறுகிறது என்று கண்டறிவது கடினமாகும். காலதாமதம் செய்யவே இது வழிவகுக்கும். இந்து சமய அறநிலையத்துறை கீழ் நாற்பதாயிரம் கோவில்கள் மேல் வருகிறது. எது எது ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில் , ஆகமப்படி வழிபாடுகள் நடந்து வருகிறதா?, எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகமப்படி கட்டப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது என்று கண்டறிந்து அர்ச்சகர்களைப் பணி அமர்த்த பல வருடங்கள் ஆகும். இதில் கொடுமை என்னவென்றால் தமிழக அரசு வழக்கறிஞர் இதை ஏற்ற ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோவில் ஆகம விதிப்படி வழிபாடு நடைபெறும் கோவில் கணக்கெடுக்கச் சம்மதம் தெரிவித்ததாகும்.

ஏற்கனவே நீதிபதி மகாராஜன், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை அமல்படுத்தினால் போதும் அவர்களே அனைத்தும் தெளிவாக அறிக்கை கொடுத்து உள்ளனர். ஆனால் அந்த இரண்டு குழுக்களும் கொடுத்த அறிக்கையை கண்டுகொள்ளவே இல்லை.

.கே ராஜன் மற்றும் மகாராஜன் அறிக்கை 

ஏற்கனவே தமிழகத்தில் கோயில்களில் தமிழில் தான் அர்ச்சனை நடந்தன, தமிழர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக இருந்தனர். தமிழகத்தில் எந்த கோவிலிலும் ஆகம விதிப்படி வழிபாடு நடைபெறவில்லை, அனைத்து கோவில்களிலும் ஆகம கலப்பும், ஒன்றுக்குப் பல ஆகமங்களைப் பின்பற்றுவதும் நடைபெறுகிறது.

உதாரணமாக ஜனவரி 1ஆம் தேதி  12 மணிக்குக் கோவிலைத் திறந்து ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடைபெறுகிறது. இது முழுக்க முழக்க ஆகம விதி மீறல் ஆகும். சென்னை கபாலீசுவர் கோவிலில் இரண்டு ஆகமங்களை “காரண ஆகமமும்”, ”காமிக ஆகமும்” பின்பற்றி பூசைகள் நடைபெறுகிறது. இது மிகத் தவறான முறையாகும். ஒரு கோவில் எந்த ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளதோ அதன்படிதான் பூஜைகள் நடைபெற வேண்டும். ஆனால் இங்கு இரண்டு முறையில் நடைபெறுகிறது.

ஆகம விதிப்படி தினசரி காலப் பூஜைகள் மட்டுமே நடக்க வேண்டும். அவை அனைத்திலும் அந்தந்த கடவுளுக்கு உரியக் கோத்திரங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். நடைமுறையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் பெயருக்கும், இராசிக்கும் பூஜைகள் நடைபெறுகிறது. புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தங்கள் வண்டி சாவி கடவுள் படிமங்களுக்கு முன்னால் அர்ச்சகர் வழியாக வைப்பதும் ஆகம விதிப்படி முரணானது.

இப்படி பல ஆகம விதிமுறைகளை பொருளாதார பலாபலன்களுக்காக அனுமதிப்பவர்கள் அர்ச்சகர் பணி நியமனத்திற்கு மட்டும் ஆகமவிதைப்படி சாதி,குலம் பார்க்க வேண்டும் என்கீரார்கள்!

இப்படி மிக விரிவான அறிக்கையை ஏற்கனவே நீதிபதி மகாராஜன் குழுவும், ஏ.கே ராஜன் குழுவும் வழங்கி உள்ளது இதைப் பின்பற்றி நடந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக எந்த தடையும் இல்லை என்று தெரியவரும்.

இந்து வேத மறுமலர்ச்சி இயக்க சித்தர் மூங்கிலடியார் பேச்சில் நூறு வருடங்கள் முன்பு மக்கள் கோவில் உள்ளேயே செல்ல அனுமதி இல்லை அதுவே பல போராட்டங்கள் பிறகு கிடைத்த வெற்றி. கொடி மரம் வரை செல்லவே பல நூறு வருடங்கள் ஆனது. கருவறைக்குள் செல்ல பல தடைகள் கடந்து செல்லும் சூழல்தான் உள்ளது.

நாம் ஏன் தமிழில் அர்ச்சனை வேண்டும் கேட்கிறோம். சிவபெருமான் காட்சி கொடுத்தபொழுது மக்களிடம் பேசிய மொழி தமிழ் மொழி. அதனால் கேட்கிறோம். மக்கள் கடவுளிடம் தமிழில்தான் கோரிக்கை வைக்கிறார்கள் கடவுள் கேட்பார், கவனிப்பார் என்ற எண்ணம் தானே காரணம். இடையில் எதற்கு நமக்கு புரியாத மொழியான சமஸ்கிருதத்தில் வழிபாடு’’என்றார்.

 அடுத்த பேசிய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், ’’ஆரிய இனம்தான் தமிழர்களின் உரிமையை பறிக்கிறது. பரந்தூரில் அமைய உள்ள விமானநிலையத்தை கட்ட நம்மூர்காரருக்கு கொடுக்கமாட்டார்கள். அதானிக்கு கொடுத்து உள்ளனர். ஏற்கனவே பழவேற்காடு துரைமுகம் அதானியிடம் கொடுத்துவிட்டனர். ஆரியர்,வைசியர்,அகர்வால்கள் தான் நாட்டை ஆள்கிறவர்கள்.   பொதுவாக  தமிழ்நாட்டில் நாலு வர்ணம் என்று சொல்வார்கள் அதெல்லாம் கிடையாது. இரண்டே வர்ணம் தான் ! ஒன்று பிராமணர், இரண்டாவது சூத்திரன்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆரியர்களுக்கு சாதகமான தீர்ப்பு, தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு என்று ஸ்டாலினுக்கு தெரியாதா? நன்றாக தெரியும். தெரிந்தேதான் செய்து இருப்பார்.

தமிழில் அர்ச்சனை 

விழாவில் கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு ஆதரிக்கும் திராவிட மாடல் என்று புத்தகம் விற்கப்பட்டது. எழுதியவர் கி.வெங்கட்ராமன். அதில் தமிழில் அர்ச்சனை குறித்தும் உயர்நீதிமன்ற தீர்ப்பும் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். அதில் தமிழில் அர்ச்சனை பற்றி சொல்லியிருப்பது

தமிழில் அர்ச்சனை என்பதும்  இதே போல் ஒரு குளறுபடியாகவே உள்ளது. அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் முதல்படியாக  47 கோவிலில் அமல்படுத்தினார்கள்.  அதுவும் மேலோட்டமாக நன்றாக உள்ளது ஆனால், இந்த திட்டத்திற்கு நிபந்தனை ஒன்றை விதித்தார்கள்.

தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் அதற்கென்று குறிப்பிட்ட அர்ச்சகரை மட்டுமே அழைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதாவது விரும்பி கேட்டால் மட்டுமே, அதுவும் முன்கூட்டியே அந்த அர்ச்சகருக்கு தகவல் சொல்லி வரவழைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். யோசித்துப் பாருங்கள் நடைமுறையில் இது சாத்தியமா என்று? இதனால் இந்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டது!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பதை அடைய இன்னும் நெடிய வருடங்கள் ஆகும் என்பதையே இந்த கருத்தரங்கம் உணர்த்தியது.

நிகழ்ச்சி தொகுப்பு; செழியன்.ஜா

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time