புழுதி கிளப்பும் விமர்சனங்கள் நியாயமானவையா?

-திரு.வீரபாண்டியன்

எத்தனை வகையான விமர்சன அம்புகள், அவதூறுகளை வீசினாலும் அவற்றையெல்லாம் தாண்டி, இந்தப் படம் மக்கள் மத்தியில் சென்று மகுடம் சூட்டிக் கொண்டு விட்டது. அறிவு ஜீவிகள் சிலர் பேசுகிற பேச்செல்லாம் காற்றில் கலந்து போய் விடும். அணுவணுவாக ரசித்து, கொண்டாடி மகிழத் தான் எத்தனை அம்சங்கள் இருக்கின்றன..!

அமரர் கல்கி இலக்கிய உலகத்தில் கொடி கட்டிப் பறந்தவர். இந்திய விடுதலைப் போராட்ட கால தேசபக்தர். அவர் சாதி, மத,இன, மொழி, வேறுபாடுகளைத் தாண்டி வாழ்ந்த தேசியவாதி. அவர் தமிழர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்றோ, தமிழ் நிலத்தின் மாண்புகளைக் கீழிறக்கம் செய்ய வேண்டும் என்றோ தன் பேனாவை எடுத்திருப்பார் என்று நம்புவதற்கில்லை. ஒரு வரலாற்றைச் சொல்ல முனைகிற போது, வேறு சில கதாபாத்திரங்களையும் உருவாக்கிக் கொண்டு, சம்பவங்களையும் புதிதாக இணைத்துச் சோதனை செய்வது தான் எழுத்தின் மரபு. வரலாறும் அப்படித்தான். அது பட்டுப்பாவாடைக்கு ஜரிகை பார்டர் கட்டுவதைப் போன்றது. இதனாலெல்லாம் பிழை நேர்ந்து விட்டது என்று சிந்திப்பது சரியான போக்கு அல்ல.

இந்த நாவலை படமெடுக்க எம்.ஜி.ஆரும், கமலஹாசனும் எண்ணி முயன்றும் இயலாமல் போனது. அந்தப் பெரிய கலைஞர்களின் கைவண்ணத்தில் வந்திருக்க வேண்டிய இந்தப் படைப்பு இன்று மணிரத்தினம் என்கிற மகத்தான கலைஞனால் பார்த்து பார்த்துச் செதுக்கப்பட்டுச் சிற்பமாக உயர்ந்து நிற்கிறது. இந்த வேளையில் விமர்சனம் என்கிற பெயரில் வெட்டரிவாளோடு சிலர் வெளியே வந்திருப்பது வருத்தமளிக்கிறது. நிச்சயம் விமர்சனம் தேவைதான். அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறேன் என்று கொலைக் கருவியைக் கையிலே எடுக்கக் கூடாது. இதைத்தான் நமது நண்பர்களில் சிலர் செய்து கொண்டிருக்கின்றனர்!

“படத்தில் நடிக்கும் ஒரு நடிகை கூட தமிழச்சி போலத் தோன்றவில்லை…” என்று ஒரு குற்றச்சாட்டு. தமிழச்சிகள் போலத் தோற்றம் அளிக்க வேண்டும் என்றால், அந்தப் பெண்கள் கன்னங்கரேல் என்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. செக்கச்சவேல் என்று இருந்து விட்டால் அவர்கள் எல்லாம்  மேலை தேசத்துப் பெண்கள்  என்று இவர்கள் நினைத்துக் கொண்டு எழுதுகின்றனர். நந்தினியின் அழகைப் பற்றியும், குந்தவையின் பேரழகு பற்றியும் கல்கி பக்கம் பக்கமாக எழுதுகிறார். அவரது எழுத்துக்கு முன்னால் நடிகைகள் ஒன்றும் அத்தனை பெரிய அழகிகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றார்போல நடிகைகளைத் தேர்ந்தெடுத்துப் போட்டுப் கதாபாத்திரங்களை வாழ வைத்திருக்கிறார் மணிரத்தினம்.

ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்போது மனம் பூரிக்கிறது. படுக்கையில் நோயுற்றுப் படுத்துக் கிடக்கும் சுந்தர சோழனாகப் பிரகாஷ்ராஜ் விடும் பெருமூச்சும், கண்கள் சோர்ந்து பார்க்கும் பார்வையும் அற்புதமானவை. அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியைச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். வந்தியத் தேவனாக இளைய தலைமுறையின் மிகச்சிறந்த கலைஞன் கார்த்தி இமயத்தின் உச்சியில் ஏறி நிற்கிறார்.

பெரிய பழுவேட்டரயராக வாழ்ந்து காட்டி இருக்கிறார் சரத்குமார்.அவர் காட்டும் கம்பீரமும் சுடர்விடும் கண்களும் ராஜதந்திர முத்திரைகளும் மிக மிக நேர்த்தியானவை. அண்ணனுக்குக் கொஞ்சமும் குறைந்தவன் இல்லை என்கிற மாதிரி சின்ன பழுவேட்டரயராக பார்த்திபன் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

ஆழ்வார்க் கடியான் நம்பி பாத்திரத்தை ஒரு கேலிக்குரியதாக்கிவிட்டார் இயக்குநர் என்று ஒரு குற்றச்சாட்டு.அந்தப் பாத்திரம் நாவலில் பேசப்படுகிற விதம்- உடல் மொழி- கேலி- கிண்டல்-அனைத்தும் ஒன்றாகக் குடி கொண்ட ஒரு படைப்பு. அதனைக் கொஞ்சமும் பழுதுபடாமல் மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார் ஜெயராம்.

நந்தினியின் பேரழகை ஐஸ்வர்யா ராய் தவிர இன்னொருவர் நிலைநிறுத்த முடியுமா என்பது நமக்கே சந்தேகமாய் இருக்கிறது.(அவள் தமிழச்சி இல்லை; வடக்கத்திக்காரி என்று ஆரம்பித்து விடாதீர்கள்.) இளையபிராட்டி குந்தவையின் பாத்திரத்தை மிக நுட்பமாகச் செய்திருக்கிறார் திரிஷா.

வானதி- பூங்குழலி-போன்ற பாத்திரங்களும் மிக அழகாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இவ்வளவு அற்புதமான ஒரு திரைக்காவியம் செய்யப்பட்டி ருக்கிறது என்கிற பெருமித உணர்ச்சி நமக்கு வர வேண்டும். தேர்ந்து-தெளிந்த கலா ரசிகர்கள் இந்தப் படத்தின் நுட்பத்தை உணர்வார்கள். கட்டிய வீட்டிற்குக் குற்றம் சொல்ல ஆயிரம் பேர் வருவார்கள். வீட்டைக் கட்ட எத்தனை பேர் வருவார்கள்….?

நந்தினி என்கிற பாத்திரமே ஒரு கற்பனைப் படைப்பு. வரலாற்றில் அந்தப் பாத்திரத்திற்கான தடங்கள் ஏதும் இல்லை.ஆனால் கல்கி தனது கற்பனை வளத்தால் அந்தப் பாத்திரத்தை உருவாக்கி மிக உயரத்திற்குக் கொண்டு போய்விட்டார். கதை நெடுக அந்தப் பாத்திரம் உலவுவதைப் போன்று நிலை நிறுத்திவிட்டார். அந்தப் பாத்திரம் செய்கிற பிழைகள், தவறுகள் என்று நாம் நினைத்துக் கொண்டு பேசுவதெல்லாம் கல்கியையே சாரும். கல்கி உருவாக்கிய அந்தப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு தமிழ்ப் பெண் இன்னொரு குடும்பத்தில் போய் வாழப் போவாளா…? இது தமிழ் மானத்திற்கு இழுக்கில்லையா…? என்றெல்லாம் பேசுவது அதீதமான தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. அப்படி விமர்சிக்கும் நமது நண்பர்களை நான் மிகுந்த அனுதாபத்தோடு பார்க்கிறேன். அவர்களின் தமிழ் உணர்ச்சி நமக்கு நன்றாகப் புரிகிறது. அதை நான் மதிக்கிறேன். ஆனால், கல்கி எழுதிய எழுத்தை அப்படியே படமாக்குகிற போது ஒரு திரைக்கலைஞன் மீது அதற்கான பழியைச் சுமத்துவதென்பது  ‘பந்தை அடிப்பதற்குப் பதிலாகக் காலை அடிப்பது…” போன்றதாகும்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் படத்தின் இசை பின்னணிக்காக ஏ.ஆர். ரகுமான் அகில இந்திய அளவில் விருது வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தான் நேசித்த வீரபாண்டியன் தலையைக் கொய்து விடுகிறான் ஆதித்த கரிகாலன்.அவன் தலையை மீண்டும் கொய்து பழி வாங்க வேண்டும் என்னும் சங்கல்பம் செய்து கொண்ட நந்தினி எப்படியாவது அவர்கள் கோட்டைக்குள் நுழைந்து தனது திட்டத்தை நிறைவேற்ற எத்தனிக்கிறாள். எதிரிகளின் கோட்டைக்குள் நுழைந்தால் தான் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதற்காகப் பழி தீர்க்கும் படலத்தின் ஒரு பகுதியாகப் பழுவேட்டரையரைப் பிடித்துக் கொள்கிறாள். இது அரசியல் சூழ்ச்சியின் ஓர் அங்கம் தானே தவிர, இதில் மான உணர்ச்சி பற்றிய கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை.

சரித்திரத்தில் இப்படி எத்தனையோ சம்பவங்களை நாம் சான்றாகக் காட்ட முடியும். மனோகரா படத்தில் அரசனைக் கையில் போட்டுக் கொண்டு ஆட்டிப்படைக்கும் பாத்திரத்தை அற்புதமாய்ப் படைத்திருப்பார் கலைஞர். “வட்டமிடும் கழுகு… வாய் பிளந்து நிற்கும் கோட்டான்….” என்று வர்ணிக்கப்பட்ட அந்தப் பாத்திரப் படைப்பு நந்தினி பாத்திரங்களின் தொடர்ச்சியே! இதிலெல்லாம் அறிவுபூர்வமான கேள்விகள் என்று கேட்டுக் கொண்டு அங்கலாய்ப்பது தேவையற்றது.

வீராணம் ஏரிக் கரையில் வந்தியத்தேவன் குதிரையில் வருகிற அந்தத் தொடக்கப் பாடல் மிக கம்பீரமாக இருந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

“சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா‌…” என்ற பாடலைப் போலவும், “எங்கள் திராவிடப் பொன்னாடே…” என்கிற கம்பீரப் பாடலைப் போலவும் ஆங்கிலத்தில் (marching song) என்பார்கள்; அப்படிப்பட்ட வகையிலும் அந்தப் பாடல் அமைந்து, தமிழகத்தின் பெருமையைச் சொல்வதாக அமைந்திருக்கலாம் என்கிற கருத்து சரியானது தான். ஆனால், அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் கட்டளையிடுவது சரியல்ல; இவை யாவும் ஒரு படைப்புக் கலைஞனின் சுய தர்மம்,

படத்தின் இசைப் பின்னணியிலும் வாத்தியச் சேர்க்கையிலும் தமிழ்நாட்டு மரபு வாத்தியங்களை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சிலர் சொல்லுகின்றனர். இசையானது, ரசிகர்களின் காதில்  ஒலிக்கிற போது, அது அந்தக் காட்சிக்கான கம்பீரத்தைத் தருகிறதா என்பது மட்டுமே திரையில் பார்க்கப்படுகிறது. இசை நுட்பம் வாய்ந்த ஒரு சிலர் மேல்நாட்டு வாத்தியங்களையும் வாசித்திருக்கிறார்களே என்று கேட்கலாம். முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு உணர்ச்சியோடு, தமிழ் வரலாற்றைச் சொல்லுகிற பாங்கில் அமைத்திருக்க வேண்டும் என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தக் கருத்தையும் தாண்டி படத்தின் இசைப் பின்னணி மிக உயரத்திற்குச் சென்றுவிட்டது !

தலைசிறந்த திரைப்பட இயக்குநர் சத்தியஜித்ரே ஒரு முறை தனது பேட்டியில் சொல்லி இருந்தார்.”ஒரு நாவலைப் படம் பண்ணுவதற்காக வாங்கி, அதனைத் திரையில் படைக்கும் போது அந்த எழுத்தை அப்படியே படமாக்குவதென்பது சரி வராது. அதனைத் திரை மொழிக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டும். நாவலில் இப்படிச் சொல்லப்பட்டு இருந்ததே என்று கேட்பதெல்லாம் திரை மொழியை உணராதவர்கள் பேசுகிற பேச்சு.’’என்று விளக்கி இருந்தார்.

அந்தக் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது. புத்தகத்தில் எழுதப்பட்ட எழுத்தை அப்படியே படத்தில் கொண்டு வருவது என்பது சாத்தியமே இல்லை. ஒரு எலும்புக்கூட்டிற்கு மாலை போட்டு அதனை அலங்கரிக்க முடியுமா….? ரத்தமும், சதையும் உண்டாக்கி அதற்குப் பிறகுதான் அதற்கு அணிகலனும் ஆபரணங்களும் பூட்ட முடியும். இதனை உணர்ந்தவர்கள் இப்படிப்பட்ட எதிர்மறை விமர்சனங்களைச் செய்ய மாட்டார்கள்.

இந்தப் படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்டால், ஏராளமான குறைகளைச் சுட்டிக் காட்ட முடியும். நமக்குக் குறைகள் என்று தோன்றுவது ஒரு படைப்புக் கலைஞனுக்குத் தேவையற்றதாகப் போயிருக்கலாம். படத்தின் நீளம்- நேரமின்மை- செலவினத்தைத் தவிர்த்தல்- காட்சிப்படுத்தும் போது ஏற்படக்கூடிய பல்வேறு சங்கடங்கள்- இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஒரு திரைக்கலைஞன் தன் சிற்பத்தைச் செதுக்குகிறான்.

மூலக்கதையில் இருந்து அவன் விலகியிருக்கிறானா…. என்ற கேள்வியை மட்டுமே நாம் கேட்க வேண்டும். படைக்கப்பட்ட கல்கியின் எழுத்திலிருந்து எங்கும் அவர்கள் மாறுபடவில்லை என்பதை நாம் உணர வேண்டும். ஒரு சில காட்சிகளில் பாத்திரங்களின் நுட்பத்தை விளக்குவதற்காகத் திரைக்கலைஞன் சில பகுதிகளைச் சேர்க்கிறான் அல்லது ஒதுக்குகிறான்.

அது அந்தக் கலைஞனின் தனிப்பட்ட உரிமை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.(creative licence). கடற்கரையில் பூங்குழலியை அறிமுகப்படுத்துகிற இடத்தில் எந்த முன்னுரையும் இல்லாமல் மொட்டையாயப் பூங்குழலி பாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. முன்கூட்டியே சில வரிகள் பூங்குழலியைப் பற்றிச் சொல்லி இருக்கலாம் என்று நமக்கும் தோன்றுகிறது.

அதேபோன்று பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகளை ஒரு கட்டத்தில் அவர்களது பூர்வ கதையைச் சொல்லி அவர்களின் பின்னணி நோக்கம் என்ன என்பதையும் சொல்லி அந்தப் பாத்திரங்களை நமக்குக் காட்டியிருக்கலாம்; அவர்கள் ஆதித்த கரிகாலனைத் தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு வருகிறார்கள்.தங்கள் சதி வேலைகளைச் செய்கிறார்கள். ஏற்கெனவே பொன்னியின் செல்வன் கதையைப் படித்தவர்களுக்கு மட்டுமே இந்தப் பாத்திரங்களின் பின்னணி புரியும். புதிதாகப் படம் பார்க்க வருவோருக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவையெல்லாம் சின்னச் சின்னக் குறைகளே தவிர, படத்தின்  பிரம்மாண்டத்தில் அவை அடிபட்டுப் போய் விடுகின்றன! படத்தின் போக்கு பார்க்கிற ரசிகர்களை நாற்காலி நுனியை விட்டு எழுந்து விடாமல் உட்கார வைத்திருக்கிறது. அதுவே ஒரு கலைஞனுக்கு கிடைக்கிற மிகப்பெரிய வெற்றி;

அதை மறுத்து விட்டு, அந்த ஊரில் அப்படி வசூல் இல்லை… இந்த ஊரில் இப்படி வசூல் குறைந்துவிட்டது… என்று பேசிக்கொண்டி ருப்பது  படத்தைப் பற்றிய விமர்சனமாக ஆகாது. தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படம் வடநாட்டில் அந்த அளவுக்கு வசூலைக் காணவில்லை என்பதெல்லாம் அந்தந்த மண்ணின் கலாச்சாரம்- ரசிகர்களின் தர மேம்பாடு- இவற்றையெல்லாம் பொருத்தது.

கல்கி என்கிற மாபெரும் எழுத்தாளரின் எழுத்தோவியம், மணிரத்தினம் என்கிற ஒரு தலை சிறந்த இயக்குநரின் கைபட்டு மிகச்சிறந்த திரைச் சிற்பமாக வடிக்கப்பட்டி ருக்கிறது என்பதுதான் உண்மை. படத்தைப் படமாகப் பாருங்கள். பாத்திரங்களை- அதன் நுட்பத்தை உணருங்கள். நடிக்கின்ற கலைஞர்களின் முகபாவத்தையும் வெளிப்பாட்டையும் கண்டு அவர்களது தொழில் நேர்த்தியைப் பாராட்டுங்கள். இவையே நாம் செய்ய வேண்டியவை.

கட்டுரையாளர்; திரு.வீரபாண்டியன்

மூத்த ஊடகவியாளர், கவிஞர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time