இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள படம் லாஸ்ட் பிலிம் ஷோ என்ற குஜராத்தி திரைப்படம்! தற்போது இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளது. பதின் பருவச் சிறுவர்களை சினிமா எப்படியெல்லாம் ஆகர்ஷித்து, ஆட்டிப் படைக்கிறது என்பதை நுட்பமான கலை அம்சத்துடன் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யக்கூடிய தகுதியோடு படம் உருவாகி உள்ளது என்பதை மறுக்க முடியாது.
பான் நலின் எழுதி தயாரித்து, இயக்கியுள்ள இத்திரைப்படம் எதார்த்தமான சினிமாவாக உருவாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமான பவின் ராபரி முக்கிய பாத்திரமான சமய் என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பவேஷ் ஷ்ரிமல்லி சினிமா திரையிடுபவராக வருகிறார்.
படத்தின் கரு சினிமாவுக்கும், ஒரு சிறுவனுக்கும் உள்ள உறவை விவரிக்கிறது. திரையரங்கிற்கு சென்று முதன் முதலில் சினிமாவை பார்க்கும் சமய் சினிமா கலையின் மீது காதலும், போதையும் கொள்கிறான். சினிமா பார்ப்பதற்காக பள்ளிக்கூட வகுப்புகளை தவிர்ப்பது, திருடுவது வரைக்கும் செல்கிறான். சினிமாவுக்கு போவதை அவனால் தவிர்க்கவே முடியாத போது, ப்ரொஜக்ஷன் செய்யும் பசல் என்பவருடன் நட்பு கிடைக்கிறது. அதன் மூலம் சிக்கல் இல்லாமல் திரைப்படங்களை பார்க்கிறான். சினிமா திரையிடும் கருவியும், பிலிம் சுருள்களும் அவனுக்கு இனம் புரியாத கிளர்ச்சியையும், ஆனந்தத்தையும் தருகின்றன. அவனது ஆர்வத்தை கண்ட பசல் அவனுக்கு சினிமா திரையிடும் கலையை சொல்லித் தருகிறார். ஒளியை பதியவைக்க அவன் பரிசோதனைகளை செய்கிறான். இதற்காக அவன் பிலிம் சுருள்களை திருடவும் செய்கிறான். அதற்காக கைது செய்யப்படுகிறான். விடுதலையாகி வரும் சமய்க்கு அதிர்ச்சியான தகவல் காத்திருக்கிறது. இதுவே கதைக்கரு.
இந்த கதைக்கருவை சினிமா மொழியாக மாற்றம் செய்திருப்பதிலும் திரைக்கதையாக வார்த்தெடுத்திருப்பதிலும் பான் நலின் பார்வையாளர்களை கவருகிறார். கதையில் அதிரடியான திருப்பங்களோ, பூரிப்பு கொள்ளும் தருணங்களோ இல்லை. இயல்பான தெளிந்த நீரோடையாக கதை பின்னப்படுகிறது. படத்தின் இறுதிவரை திரைக்கதையின் ரிதம் இயல்பாக இருக்கிறது.
படத்தின் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் பவின் ரபரி கதைக்கும், திரைக்கதைக்கும் தேவையான இயல்பான நடிப்பைக் கொட்டி இருக்கிறார். திரையரங்க காட்சிகளில் ஒளியையும், காட்சிகளையும் கண்டு அதிசயிக்கும் போது அவனது கண்களில் தெரியும் பிரகாசமும், ஒளியை தன் கைகளில் தாங்கிப் பிடிக்கும் போதும், விந்தையாகட்டும் எல்லா காட்சிகளிலும் சிறுவன் பிரமாதப்படுத்தி இருக்கிறான். படத்தின் உரையாடல்களில் – அவன் காட்டும் டயலாக் டெலிவரியில் – நிதானமும் நேர்த்தியும் கைதேர்ந்த நடிகனாக பரிணமிக்கிறான். உடன் நடித்திருக்கும் நண்பர்களும் அவனுக்கு ஈடு கொடுத்து, படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சோகமான காட்சிகளில் கூட, அரற்றி அழாமல் கவிதையாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறான்.
படத்தில் வரும் எல்லா பாத்திரங்களும் செதுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. மிக முக்கியமான கதாபாத்திரம் பஸல்லாக வரும் பவேஷ் ஷ்ரிமல்லி. தினமும் விதவிதமான உணவுகளை சுவைத்துக் கொண்டே, சினிமாவையும், பார்வையாளர்களையும் எள்ளி நகையாடிக் கொண்டே தொழில் நுட்பத்தை அந்த சிறுவனுக்கு கற்றுக் கொடுக்கிறார். பிலிம் சுருள்களின் காலம் முடிந்து டிஜிட்டல் யுகம் தொடங்கும் காட்சியில் காதலுடன் செய்து வந்த வேலையை இழக்கும் காட்சியில் மனதில் நிறைகிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. சினிமாவைப் பற்றிய கதை என்பதால், பெரும்பாலான ஷாட்களில் ஒளி எதிர்ப்புறத்தில் இருக்கிறது. ஒளியைப் படம்பிடித்தது மட்டுமில்லாமல், ஓடும் ரயிலில், மர்ம வீட்டில், கடையில், நகர்வில் என்று எல்லா இடங்களிலும் முத்திரை பதிக்கிறது. நிலக்காட்சிகளுக்கு வைக்கப்பட்ட பிரேம்களும், கம்போசிஷன்களும் அருமை. படத்தொகுப்பில் வெளிப்படும் சீர்மை, படத்தின் எதார்த்தத் தன்மைக்கும் வலு சேர்க்கிறது. படத்தின் இயக்குனர் ஏற்கனவே நிறைய ஆவணப்படங்களை இயக்கியவர் என்பதால் ஒலிகள் குறித்தும், நேரடி ஒலிப்பதிவு குறித்தும் பரிச்சயம் இருக்கிறது. மிகக் குறைந்த அளவு இசையும், உரையாடல்களும் படத்தை மேம்படுத்துகின்றன.
Also read
சினிமா பாரடைசோ படத்தின் சாயல் ஆங்காங்கே தென்பட்டாலும், சினிமாவில் பிலிம் சுருளுக்கும், டிஜிட்டல் யுகத்திற்கும் இடையில் நிகழ்ந்த உருமாற்ற பின்னணியில் கதை சொல்லப்பட்டுள்ளதால் இந்தப் படம் தனித்த அடையாளத்தை பெறுகிறது. இந்தப் படத்தில் நாயகனின் நண்பனாக நடித்த ராகுல் கோலி என்ற சிறுவன் புற்று நோயின் காரணமாக காலமாகி விட்டான். அவனது நடிப்பும் அற்புதம்.
இந்தப் படம் ஆஸ்கார் விருதுபெற்றாலும், பெறாவிட்டாலும் இந்திய சூழலில் மிக முக்கியமான படமாக வரலாற்றில் நிற்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
விமர்சனம்; தயாளன்
சினிமா பாரடைசோ காப்பி