மஞ்சள் காமாலைக்கு அதிஅற்புத மருந்து கீழாநெல்லி!

- எம்.மரிய பெல்சின்

எந்தவித செலவும் இல்லாமல், மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி சாப்பிட்டாலே போதும், மஞ்சள் காமாலை விலகிவிடும். மஞ்சள்காமாலை வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. பொதுவாக பித்தம் அதிகரிக்கும் போது  வரும் இந்த நோய்க்கு கீழாநெல்லி என்ற இந்த மூலிகையைச் சாப்பிட்டாலே போதுமானது!

கீழாநெல்லி மூலிகை பற்றி நம்மில் சிலருக்குத் தெரியும்; சிலருக்கு இது தான் என்று அடையாளம் காணத் தெரியாது. ஆனாலும், பலருக்கு அந்தப் பெயர் பரிச்சயமான ஒன்றே. அவ்வப்போது பெய்யும் சிறுமழையால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கீழாநெல்லி தாவரம் சாலையோரங்கள், வெட்ட வெளிகள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் செழித்து வளர்ந்திருப்பதைக் காணமுடியும்.  புளிய இலை, கருவேலம் இலை போன்ற தோற்றத்தில் காணப்படும் இந்தச் செடியில் இலைகளின் அடிப்பகுதியில் நெல்லிக்காய் போன்று சிறிய வடிவத்தில் வரிசையாக காய்த்திருக்கும். இதைக்கொண்டு கீழாநெல்லி தாவரத்தை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

 முக்கியமாக ஹெபடைட்டிஸ் பி, சி வகை பாதிப்பால் கல்லீரல் பாதித்திருந்தால் அதற்கு கீழாநெல்லி ரொம்ப நல்லது. ஆனால் மஞ்சள்காமாலையால் பாதித்தவர்கள் அதை எப்படி சாப்பிடுவது, எத்தனைநாள் சாப்பிடுவது என்று தெரியாததால் வேறு சில மருத்துவங்களை செய்து பார்த்தும் பலன் கிடைக்காமல் அவதிப்படுவதை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட சூழலில் கைகொடுக்கக்கூடியது கீழாநெல்லி மூலிகை.

கீழாநெல்லியை கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய் நெல்லி என்பதுபோன்ற பெயர்களிலும் சொல்வார்கள். மழைக்காலங்களில் மிகச்சாதாரணமாக ரோட்டோரங்களில் வளர்ந்து கிடக்கக்கூடியது இந்த கீழாநெல்லி. மற்ற நேரங்களில் வயல் பகுதிகளிலும் தோட்டங்கள், தோப்புகளிலும் இந்தச் செடி வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கசப்புத்தன்மை உள்ள இந்த மூலிகையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து மோர் அல்லது பாலில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மஞ்சள்காமாலை சரியாகும். அதிக பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சக்காமாலை நோயிலிருந்து முழுமையாக குணம் பெறலாம்.

கைப்பிடி அளவு கீழாநெல்லியுடன் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தாலும் காமாலை நோய்கள் அனைத்தும் சரியாகும். ஆனால், இந்த மூலிகையைச் சாப்பிடும்போது உணவில் புளி, உப்பு சேர்த்துக்கொள்ளாமல் இருந்தால் சீக்கிரமாக பலன் கிடைக்கும். கீழாநெல்லியுடன் சுக்கு, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், மஞ்சள் சமஅளவு எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதை நான்கு மணி நேரத்துக்கு ஒருதடவை வீதம் குடித்து வந்தாலும் மஞ்சள்காமாலையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள் காமலைக்காக மருந்து எடுக்கும் நேரங்களிலும் சரி, குணமான பிறகு ஒரு மாதம் வரையிலும் சரி கோழிக்கறி போன்ற அசைவ உணவை அறவே தவிர்க்க வேண்டும். காரமான உணவு, புளியோதரை, காரக்குழம்பு, புளி அதிகம் சேர்த்த சாம்பார், எண்ணெய் பலகாரங்கள் போன்ற பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை முழுமையாகத் தவிர்த்து சாதீக உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகள், இள நீர் போன்ற இயற்கை உணவுகள் மிக நன்மை தரும்!

கீழாநெல்லியை நாம் அனைவருமே சாப்பிடலாம். நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு மாதத்தில் ஒருநாள் சாப்பிட்டு வந்தால் காமாலை நோய்கள் எதுவும் எட்டிப்பார்க்காது. அதுமட்டுமல்லாமல் கல்லீரல் வீக்கம், பித்தப்பை கல் பிரச்சினைகள்கூட வராது. இதை 7 நாட்கள் காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். முக்கியமாக ரத்தத்தில் உள்ள கெட்ட நீர் வெளியேறுவதால் ரத்த ஓட்டம் சீராக நடக்கும். கீழாநெல்லியுடன் பால் சேர்த்து அரைத்து மூன்று நாள் காலையில் குடித்து வந்தால் குடல் வீக்கம், குடலில் தேங்கியிருக்கும் வாய்வு, மந்தம் அனைத்தும் விலகிவிடும்.

தலைசுற்றல், தலைபாரம், பித்த மயக்கம் வந்தால் சுக்கு, மிளகு, சீரகம் என அனைத்து பொருள்களிலும் தலா 5 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் 15 கிராம் தனியா சேர்த்து நன்றாக நசுக்கி 8 டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்றாக வற்றியதும் கீழாநெல்லி இலையில் ஒரு கைப்பிடி அளவு கசக்கிப்போட்டு அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்துக் குடிக்க வேண்டும். இதை முதல்நாள் தயார் செய்துவிட்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்  தலைசுற்றல், தலைபாரம், பித்த மயக்கம் போன்றவை சரியாகும்.

கைகால் அல்லது உடம்பில் எதாவது ஒரு பகுதியில் வெட்டுக்காயம் பட்டால் கீழாநெல்லி இலையை அரைத்து வெட்டுபட்ட இடத்தில் கனமாக பற்று போட்டால் சரியாகும். சொறி, சிரங்கு வந்தால் கைப்பிடி அளவு கீழாநெல்லி, சிறிது உப்பு சேர்த்து அரைத்துப் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் காலப்போக்கில் பிரச்சினைகள் விலகிவிடும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் கீழாநெல்லி இலையை காய வைத்து பொடியாக்கி அதை மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.இப்படி சாப்ப்பிட்டு வந்தால் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு வராமல் தடுத்து டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் வராமல் பார்த்துக்கொள்ளலாம். இதுமட்டுமல்ல இன்னும் பல நோய்களுக்கு கைகண்ட மருந்து இந்த கீழாநெல்லி.

கீழாநெல்லியின் வேர்கூட அதிஅற்புதமான மருந்தாகத் திகழ்கிறது. தலைமுடி உதிர்ந்து சொட்டை விழுந்திருப்பவர்கள் கீழாநெல்லி வேரை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் நாளடைவில் முடி வளரும். குறிப்பாக வழுக்கை விழுந்து வாழ்க்கையில் நிம்மதி இல்லாதவர்கள் இந்த மூலிகை எண்ணெயை தினமும் இரண்டு தடவை தேய்த்து பலன் பெறலாம். இதுபோன்ற எளிய மூலிகைகளில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கும்போது அவற்றை விட்டு விட்டு எது எதையோ தேடி நாடி பணத்தை விரயம் செய்வதை தவிர்க்கலாம். மூலிகைகளே நம் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவை. அதிலும் மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் இதுபோன்ற மூலிகைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

மூத்த ஊடகவியலாளர், இயற்கை வழி உடல் நல ஆலோசகர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time