ஒபிஎஸ்சை திமுக ஆதரிப்பது, சுய அழிவிற்கே வழிவகுக்கும்!

-சாவித்திரி கண்ணன்

சட்டமன்றத்தில் ஒ.பி.எஸை அதிமுகவின் துணைத் தலைவராக திமுக அங்கீகரித்து உள்ளது! இது தான் பாஜகவின் விருப்பம். 95 சதவிகித பொதுக்குழு உறுப்பினர் பலமும், 66 எம்.எல்.ஏக்களில் 62 பேரின் ஆதரவும் உள்ள அதிமுகவை பலவீனப்படுத்துவதும், அழிக்கத் துணை போவதும் பாஜக தமிழகத்தில் வலுப்பெறவே உதவும்!

எது உண்மையான அதிமுக என்பதில் என்ன குழப்பம் வேண்டிக் கிடக்கிறது?

இரண்டு முறை பொதுக்குழுவைக் கூட்டி 95 சதவிகித உறுப்பினர்களை ஒருங்கிணைத்து நிருபித்து காட்டியது இ.பி.எஸ் அணி!

பல முறை இழுத்தடிக்கப்பட்டு ஒரு வழியாக உயர்நீதிமன்றம் இயற்கை நியதிப்படி ஒரு கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுத்த முடிவை அங்கீகரித்துவிட்டது.

கட்சி அலுவலகத்தில் பிரச்சினை செய்து கட்டிடத்திற்கு சீல் வைக்கச் செய்து முடக்கினார் ஒ.பி.எஸ்! அதையும் நீதிமன்றம் சென்று போராடி மீட்டது இ.பி.எஸ் அணி!

அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்கிப் பார்த்தார் ஒ.பி.எஸ். வங்கித் தலைமையானது இ.பிஎஸ் அணியின் பொதுக் குழு முடிவை கணக்கில் எடுத்து இ.பி.எஸ் அணியை அங்கீகரித்தது.

அதே சமயம் அதிமுகவில் இருந்து ஒ.பி.எஸ் விலக்கப்பட்டதை இன்று வரை பாஜக அங்கீகரிக்கவில்லை. காரணம், தன் கைக்கு அடக்கமான ஒரு கருங்காலி அந்தக் கட்சித் தலைமையில் இருந்தால் தான், முழுமையாக அந்தக் கட்சியை பணிய வைக்க முடியும் என பாஜக விரும்புகிறது.

இந்த வகையில் தேர்தல் ஆணையத்தையும் ஒரு தெளிவான முடிவு எடுக்கவிடாமல் தடுக்கிறது! உச்ச நீதிமன்றமோ இந்த விவகாரத்தை தள்ளிப்போட்டு தீர்ப்பு தராமல் இழுத்தடிக்கிறது. இதே போலத் தான் அப்பாவு தான் அவர் தொகுதியில் 2016 தேர்தலில் அதிக வாக்கு பெற்றார் என்பதை உயர்நீதிமன்றம் உறுதிபடுத்திய பிறகும், அடுத்த தேர்தல் வரும் வரையிலும் கூட முடிவு எடுக்காமல் ஆறப்போட்டது உச்ச நீதிமன்றம்! காலதாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதி தானே!

சட்டமன்றம் இன்று கூடியது! இதற்கு முன்பாக இ.பி.எஸ் சபாநாயகருக்கு ஆறு கடிதங்களை அனுப்பினார்! ஆனால், அதற்கு உரிய பதிலை அப்பாவு தராமல் இழுத்தடித்தார்! ஒ.பி.எஸ் இரு கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துவிட்டு சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என ‘ஹாயாக’ இருந்தார்! அந்தப்படிக்கே சபாநாயகர் இ.பி.எஸ் கடிதங்களை பொருட்படுத்தாமல், ‘ஒ.பி.எஸ் தான் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர்’ என உறுதிபடுத்திவிட்டார்.

இன்றைய தினம் சட்டமன்றத்திற்கு ஒ.பி.எஸ் இயல்பாக வரவில்லை. தாரை, தப்பட்டை வாத்தியங்கள் முழங்க, தொண்டர்கள் படை, தமிழக போலீஸ் துணை எல்லாம் போதாது என்று நான்கு பவுன்சர்களோடு வந்திருந்தார்! பலம் பொருந்திய அதிமுகவோ, சபாநாயகரின் ஒ.பி.எஸ் சார்பு நிலையால் வருத்தமுற்று சட்டமன்றம் போவதையே தவிர்த்துவிட்டது.

சட்டமன்றத்தில் இன்று அஞ்சலித் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதை ஒ.பி.எஸ் தவிர்த்துவிட்டு புறப்பட்டார். ”திமுக அரசு அலுவல் ஆய்வு கூட்டத்தில் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம்” என கூறிவிட்டதாகத் தெரிவித்தார்! இதன் மூலம் பாஜகவைப் போலவே, திமுகவுக்கு மிக இணக்கமானவராக ஒ.பி.எஸ் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. சட்டமன்றத்திற்குள் நுழையும் போது. ‘ஜனநாயகக் கடமை ஆற்ற வந்ததாகத்’ தெரிவித்த ஒ.பி.எஸ்,  அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று தன் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்குவதைத் தவிர்த்து,  ”எடுக்கப்படும் எந்த முடிவானாலும் ஆதரிப்பேன்” எனப் புறப்படும் போது  சொல்லிய வகையில், இனி சட்டமன்றத்தில் திமுகவை முழு மூச்சாக ஆதரித்து நிற்பார் என புரிந்து கொள்ளலாம்!

இன்றைய தினம் இவ்வளவு கொண்டாட்டங்களோடு சட்டமன்றத்திற்குள் ஒ.பி.எஸ் நுழைந்தது என்பதை வைத்து பார்க்கும் போது, சபாநாயகரின் முடிவை முன்கூட்டியே ஒ.பி.எஸ் அறிந்து வைத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது! நியாயப்படி ஒருவித பதற்றத்துடன் அல்லவா அவர் சட்டமன்றத்திற்கு வருகை தந்திருக்க வேண்டும்.

இதைப் பார்க்கும் போது, அதிமுகவில் ஏற்பட்டுள்ள சண்டையில் தனக்கு ஆதரவாக ஒரு அணியை திமுக பயன்படுத்திக் கொள்வது அரசியல் நோக்கில் ஒரு எதிர்கட்சியை பலவீனப்படுத்த கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் சாமார்த்தியமான நகர்வு தானே! இதில் குற்றம் கண்டுபிடிக்க என்ன உள்ளது என்று கூடத் தோன்றும்.

ஆனால், நாம் இங்கு கவனிக்க வேண்டியது தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றை பலவீனப்படுத்தி, அந்த இடத்தில், தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் துடிக்கும் பாஜகவின் அஜந்தாவிற்கு திமுக மறைமுகமாகத் துணை போகிறது என்பது தான்! தமிழகத்தில் மதவாத கட்சியான பாஜக வளர்வதை தடுக்க தேவையானால் அதிமுகவையும், திமுக பயன்படுத்திக் கொள்வதே சாலச் சிறந்ததாக இருக்கும். அதிமுகவை அணுவணுவாக அழிக்கவே பன்னீர் செல்வத்தை பாஜக ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. அதையே திமுகவும் செய்தால் அதன் பலாபலன்களை பாஜகவே அறுவடை செய்யும்!

சபாநாயகர் மிக இயல்பாகவும் ,எளிதாகவும் 95 சதவிகித பலம் வாய்ந்த எடப்பாடி அணியை அங்கீகரிக்காமல் தவிர்த்தற்கு தேர்தல் கமிஷனின் முடிவு தெரியாததைக் காரணம் சொல்ல முடியும்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பதைச் சொல்ல முடியும். ஆனால், இதெல்லாம்  சாக்கு போக்காக சொல்லப்படும் காரணங்கள் என்பதை யாவருமே உணர முடியும்! சபாநாயகர் சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட அணியை அங்கீகரிப்பதை தேர்தல் ஆணையமோ, உச்ச நீதிமன்றமோ கேள்விக்கு உட்படுத்த முடியாது.  இந்த வகையில் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கான அதிகார வரம்பை உச்சநீதிமன்றமே பல வழக்குகளில் அங்கீகரித்து உள்ளது.

இப்போதும் தெளிவாக சொல்கிறேன். இது இ.பி.எஸ் –  ஒ.பி.எஸ் என்ற இரு நபர்களுக்கான ஏதோ தனிப்பட்ட பிரச்சினையாக நான் பார்க்கவில்லை. தனிப்பட்ட வகையில் இவர்கள் இருவரின் அரசியல் வழிமுறைகளிலும் நமக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளன! இன்னும் எத்தனை நெருக்கடிகள், அவமானங்கள், அநீதிகளை அனுபவித்த பிறகு, பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் அதிமுகவிற்கு வருமோ தெரியவில்லை! அது வராமலே கூடப் போகலாம்! அதற்கு காலம் தான் பதில் சொல்லும்!

ஆனால், அதிமுகவின் அழிவு திமுகவிற்கும் நல்லதில்லை, தமிழகத்திற்கும் நல்லதில்லை. ஏனெனில், அந்த வெற்றிடத்தை பாஜக நிரப்பிவிடும் என்பது திண்ணம்! அதிமுகவை அழித்துவிட்டால், திமுகவை அழிக்கும் வேலை எளிதாகிவிடும் பாஜகவிற்கு! ஆக, ஒ.பி.எஸ்சை ஆதரிப்பது என்பது தன் தலைக்கு தானே திமுக வைத்துக் கொள்ளும் கொள்ளியாகிவிடும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time