ஆகா, உடனே பணம் கிடைக்கிறதே என லோன் ஆப் மூலமாக கடன் வாங்கியவர்கள் இன்று நிம்மதியைத் தொலைத்து கதறுகிறாங்க பைத்தியம் புடிச்ச மாதிரி! இன்னும் சில பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்! கண்ணுக்கு தெரியாதவர்களிடம் இருந்து பெறும் கடன்கள் நம்மையே காவு கேட்கும்!
கடந்த ஒரு மாதத்தில் என் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு நேர்ந்த சம்பவங்கள் யாரையும் உலுக்கி எடுத்துவிடும்! இரண்டு சம்பவங்களையும் நேரிடையாக சந்திக்கும் சூழல் எனக்கு உருவானது.
கடன் வாங்குவது பொதுவாக எளிதான காரியம் இல்லை. வங்கி, நிதி நிறுவனங்களில் பல கட்ட விசாரணை, ஆவணங்கள் கொடுத்து தான் கடனை பெற முடியும்! இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளாமல், விசாரிக்காமல், உங்களைப் பார்க்காமல் கேட்ட உடனே கடன் வழங்கும் முறையில் தான் லோன் ஆப் செயல்படுகிறது.
லோன் ஆப் எப்படி செயல்படுகிறது என பார்ப்போம்; நமது Play storeல் நூற்றுக்கணக்கான லோன் ஆப் உள்ளன!. இதில் 99 சதவிகிதம் ஆப்கள் போலியானவை.. ஏதாவது ஒரு லோன் ஆப் டவுன்லோட் செய்து, அதில் உங்களுடைய ஆதார் எண், Pan எண், வங்கிக் கணக்கு விவரங்கள் கொடுத்தால் போதும். அடுத்த ஒரே மணி நேரத்தில் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும்.
நமக்கு ஆச்சரியமாக இருக்கும். நாம் யார் என்று தெரியாமல் கேட்ட உடனே பணம் கொடுத்துவிட்டார்களே என்று மகிழ்ச்சி அடைவோம். முகத்தைப் பார்க்காமல் கொடுக்கிறார்களே ஒரு வேலை நாம் கட்டவில்லையென்றால் எப்படி வசூலிப்பார்கள்? இவர்கள் எங்கிருந்து நமக்குக் கடன் கொடுக்கிறார்கள்? இவர்களுடைய அலுவலகம் எங்கு உள்ளது? இவர்கள் எல்லாம் யார்? என்று ஒரு போதும் நாம் யோசிப்பதில்லை.
எளிமையாக ஒரு பொருள் கிடைத்தால் ஆபத்து அதிகமாக இருக்கும் என்பது லோன் ஆப்பில் கடன் வாங்கிய சில நாட்களில் நமக்குத் தெரியவரும். Play storeல் லோன் ஆப் டவுன்லோட் செய்த உடனேயே உங்களுடைய மொபைலில் உள்ள படங்கள், வீடியோ, சேமித்து வைத்துள்ள நண்பர்கள் தொலைப்பேசி எண்கள், உங்கள் லொகேஷன் அனைத்தையும் எடுத்துவிடுவார்கள்.
இப்பொழுது உங்கள் அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் இருக்கும். லோன் வாங்கி அதைக் கட்டவில்லையென்றால் உங்களுக்கு whatsapp கால் வழியாக வந்து கடன் கட்டுங்கள் என்று பேசுவார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மிரட்டுவார்கள்.
அதற்கு முன்பு இவர்கள் கொடுக்கும் கடன் தொகை எவ்வளவு? வட்டி எவ்வளவு? திருப்பி செலுத்தும் கால அவகாசம் எவ்வளவு மாதம் என்று பார்த்து விடுவோம்.
இருபதாயிரம், ஐம்பதாயிரம் கடன், திருப்பி செலுத்த 3 மாதம் அவகாசம் என்பது போல் விளம்பரம் இருக்கும். அதை நம்பி லோன் ஆப் டவுன்லோட் செய்து நம் விவரங்களைக் கொடுத்த பிறகு முதலில் 1 ரூபாய் நம் கணக்கில் வரவு வைத்து வங்கிக் கணக்கைச் சரி பார்ப்பார்கள். பிறகு 3500 ரூபாயை கணக்கில் செலுத்துவார்கள். கடன் தொகை மூவாயிரத்து ஐந்நூறு மட்டுமே ஆகும். 25 ஆயிரம், ஐம்பதாயிரம் கடன் எதிர்பார்த்தாலும் கடைசியில் மூவாயிரத்து ஐந்நூறு மட்டும் நம் கணக்கில் வந்து இருக்கும்.
ஒரு வாரம் மட்டுமே அவகாசம். வாங்கிய கடன் 3,500, அதற்கான வட்டி 3,500 மொத்தம் 7,000 ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும். அதாவது 100 சதவிகிதம் வட்டியாகும். கந்து வட்டி, மீட்டர் வட்டி, எக்ஸ்பிரஸ் வட்டி இவற்றையெல்லாம் விட மோசமான வட்டி லோன் ஆப் வட்டி ஆகும்.
3,500 ரூபாய்க் கடன் தொகை என்பது சிறிய தொகை. இதை எதிர்பார்த்து யாரும் லோன் ஆப்பில் கடன் வாங்கச் செல்ல மாட்டார்கள். குறைந்தபட்சம் 25,000 அல்லது 50,000 ரூபாய் கிடைக்கும் என்று நினைத்து, கடைசியில் 3500 மட்டுமே கொடுப்பதால் வாங்கிய அனைவரும் ஏமாற்றம் அடைவது உறுதி. இது முதல் ஏமாற்றம்.
ஒரு வாரம் மட்டும் திருப்பி செலுத்த அவகாசம் என்பது அடுத்த ஏமாற்றம். வாங்கிய கடன் அளவுக்கு வட்டி என்பது மூன்றாவது ஏமாற்றம். இந்த மூன்று ஏமாற்றம் கூட பரவாயில்லை என்பது போல் இருக்கும் இதற்கு மேல் நடக்கப்போகிற கொடுமையை எதிர் கொள்ளும்பொழுது.
வாங்கிய கடன் தொகையைத் திருப்பி செலுத்த தாமதம் ஆனால், அல்லது மொபைல் அனைத்து வைத்து இருந்தால் உங்களுடைய படத்தை நிர்வாணமாக மாற்றி மற்ற பெண்களுடன் இருப்பது போல், பெண் என்றால் ஆண்களுடன் இருப்பது போல் மாற்றி உங்கள் உறவினர்கள், மனைவி உறவினர், நண்பர்கள், பெற்றோர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுவார்கள்.
உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எப்படிப் புரிய வைப்பீர்கள்? 3500 கடன் வாங்கி இப்படி ஆனது என்று சொன்னால் இவ்வளவு சிறிய தொகையை ஏன் கடன் வாங்கினாய்? எங்களிடம் கேட்டால் கொடுக்க மாட்டோமா என்று அறிவுரை சொல்வது இன்னும் அவமானமாக நினைப்போம். நம் வீட்டின் பொருளாதார நிலையும் அவர்களுக்குத் தெரியவரும். இவ்வளவும் யாருன்னே தெரியாத, முகம் பார்க்காத, அலுவலகம் இல்லாத ஒருவரிடம் நம் வங்கிக் கணக்கு, ஆதார் விவரங்களை கொடுத்து வாங்கியதன் விளைவே ஆகும்.
இப்பொழுது நேரடியாக நடந்த இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.
நண்பர் ஒருவர் ஒரு ஞாயிறு மாலை தொடர்பு கொண்டார். அவர் லோன் ஆப் வழியாக ஒரு வாரம் முன்பு கடன் வாங்கி உள்ளார். Ram Loan app வழியாகக் கடன் வாங்கினார். 3,500 ரூபாய் மட்டுமே இவருக்கும் கொடுக்கப்பட்டது. அதைத் திருப்பி கட்ட ஞாயிறு காலையிலிருந்து பேசி உள்ளனர். அதற்கு நண்பர் நாளை அதாவது திங்கள் கிழமை பணம் கட்ட கடைசி நாள் அதனால் நாளை செலுத்தி விடுகிறேன் என்று சொல்லியுள்ளார். இவர் கடன் வாங்கியது கடந்த திங்கட்கிழமை.
7 நாட்களில் திருப்பி செலுத்த வேண்டும் என்று இருந்தாலும் 5 நாட்களிலிருந்தே கேட்ட தொடங்கிவிட்டார்கள். 6வது நாள் காலையிலிருந்து கேட்பது வேகம் எடுத்தது. மதியம் மேல் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கெட்ட வார்த்தைகள் உபயோகப்படுத்தத் தொடங்கினர். உங்களுடைய புகைப்படம் நிர்வாணமாக அனைவருக்கும் செல்லும் என்று மிரட்டினார்கள். சொல்லியது மட்டும் இல்லாமல் மாதிரிக்கு ஒரு புகைப்படம் நண்பருக்கு அனுப்பியுள்ளனர்..
நாளை இந்த லோன் ஆப் playstore ல் இருக்காது என்று சொல்லி உள்ளனர். சொன்னது போலவே அடுத்து இரண்டு நாளில் அந்த ஆப் play storeல் இல்லை. புதிய பெயரில் லோன் ஆப் வெளியிடத் தொடங்கினர்.
நண்பருக்குத் தொடர்ந்து 20 முறைக்கு மேல் what’s ஆப் வழியாகத்தான் பேசினார்கள். நாளை தான் கடைசி நாள் அதனால் நாளை செலுத்துவோம் என்று ஒரு கட்டத்தில் போனை ஆப் செய்துவிட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இவருடைய புகைப்படம் நிர்வாணமாக்கப்பட்டு அவர்கள் மனைவியின் சொந்தங்கள், உறவினர்கள் whats ஆப் எண்ணிற்கு அனுப்பி விட்டார்கள். அனைவரும் இவர் மனைவியைத் தொடர்பு கொண்டு பேசிய பிறகு பதட்டமாகி என்னிடம் தகவல் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்டார்.
என்னிடம் சொல்வதற்கு முன்பே 7000 ரூபாய் அந்த மோசடி கும்பலுக்கு செலுத்திவிட்டார்.
இது சாதாரணமாக நடைபெறக் கூடியவைதான். எப்பொழுது உங்களுடைய மொபைலில் ஒரு ஆப் டவுன்லோட் செய்கிறீர்களோ அப்பொழுதே அவர்கள் நம்முடைய மெசேஜ், புகைப்படம், வீடியோ, தொடர்பு எண்கள் எடுக்கும் உரிமை கொடுத்துவிடுகிறோம். இது யாருக்கு பெரும்பாலும் தெரிவதில்லை..
இத்தகையை மோசடி நபர்களை பொது மக்களால் ஒன்றும் செய்ய முடியாது. எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்றே நமக்குத் தெரியாது, கண்டுபிடிக்கவும் முடியாது நீங்கள் கடன் பணம் கட்டிவிட்டதால் அந்த கும்பல் மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள் ஆனால் புகைப்படம் சென்று உள்ள உறவினர்களுக்குப் புரியவைக்க ஒன்று செய்யுங்கள் என்று சொன்னேன்.
முகநூல், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இரண்டிலும் மோசடி நபர்கள் மொபைல் என்னுடன் இந்த எண்ணிலிருந்து என்னுடைய புகைப்படத்தை morphing செய்து சிலருக்கு அனுப்புகிறார்கள். அப்படி யாராவது உங்களைத் தொடர்பு கொண்டு என் சார்பாகப் பணம் கேட்டால் தர வேண்டாம் என்று பதிவு செய்துவிடுங்கள். என்று சொல்லிப் பதிவையும் எழுதி அனுப்பினேன்.
பதிவைப் பார்த்து அடுத்து இரண்டு மணி நேரத்தில் 30 அவருடைய நண்பர்கள் தொடர்பு கொண்டு அவருடன் பேசி உள்ளார்கள். பேசிய அத்தனை நபர்களும் இதே போல் லோன் ஆப்பில் கடன் வாங்கி மாட்டியவர்கள். வெளியே சொன்னால் அசிங்கம் என்று இருந்து உள்ளனர். மறுநாள் நண்பர் என்னிடம் இந்த செய்தியைக் கூறினார்.
அடுத்த ஒரு வாரம் சந்திக்கும் நண்பர்கள் அனைவரிடமும் இதைக் குறித்துச் சொல்லி எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லி வந்தேன். சரியாக ஒரு வாரம் கழித்து வேறு ஒரு நண்பர் தொடர்பு கொண்டார். இந்த இரண்டாவது சம்பவம் இன்னும் மோசமான அனுபவம்.
நண்பரின் உறவினர் பெண் இதே போல் லோன் ஆப் வழியாக 3500ரூபாய்க் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய பிறகு பயம் வந்துவிட்டது. வாங்கியது வீட்டில் யாருக்கும் தெரியாது. அதனால் வாங்கிய இரண்டாவது நாளில் அசல் தொகையான முழுப்பணத்தையும் திருப்பி செலுத்தி விட்டார். பிரச்சனை இல்லை என்று சாதாரணமாக இருந்து உள்ளார்.
சில நாட்கள் கழித்து வட்டி கட்டச் சொல்லி உள்ளனர். பயந்து வாங்கிய பணம் திருப்பி செலுத்தி விட்டோமே என்று போனை ஆப் செய்துவிட்டார். போன் ஆன் செய்தவுடன் இவரை கடன் நபர்கள் தொடர்பு கொண்டு உள்ளனர். இப்படியே நாட்கள் சென்று ஏறக்குறைய கடன் வாங்கி 14 நாட்கள் ஆகி உள்ளது.
3500 ரூபாய்க் கடன் தொகைக்கு 14 நாட்களுக்கு வட்டி மட்டும் நாற்பத்து ஒன்பதாயிரம் ரூபாய்(49000) கட்ட சொல்லி மிரட்டி உள்ளனர். மேலும் பயந்து போனை எடுக்கவே இல்லை. வீட்டில் யாருக்கும் தெரியாது. மோசடி நபர்கள் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர் சொந்தங்கள் மொபைல் எண்களுக்கு வாட்ஸ்அப் வழியாக அனுப்பிவிட்டனர்.
ஆணுக்கு இப்படி நடந்தாலே மிகப் பெரிய அவமானமாக இருக்கும். பெண் படம் இப்படிச் சொல்லும் போது அந்த பெண்ணின் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு வரத் தொடங்கினர். இது நடந்து கொண்டிருக்கும் பொழுது தான் நண்பர் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்டார்.
இந்த விஷயத்தில் அசல் கட்டிவிட்டார். இரண்டே நாள் என்பதால் வட்டித் தொகை கட்டவில்லை. ஆனால் நிலைமை மிக மோசமாக இருப்பதைப் பார்த்த பெண் வீட்டார் தொகையைக் கட்டும் முடிவுக்கு வந்துவிட்டனர். நண்பரிடம் நான் வட்டி தொகை 49,000 ரூபாயை எந்த காரணம் கொண்டும் கட்ட வேண்டாம் எனக் கறாராகச் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் அவனால் எதுவும் செய்ய வாய்ப்பில்லை. நேரில் அவனால் ஒருபோதும் வர முடியாது! வந்தாலவன் செய்த காரியத்திற்கு உதை விழுமென அவனுக்கும் தெரியும்! அதனால் கட்டாதீர்கள். சைபர் கிரைமிலும் லோக்கல் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுங்கள் என்றேன்.
அவர்களும் சைபர் கிரைமில் புகார் கொடுத்து அந்தப் புகாருக்கான எண் வாங்கிக் கொண்டனர். பிறகு அருகில் உள்ள காவல் நிலையத்தில் நேரடியாக ஒரு புகார் கொடுக்க சென்ற போது. அங்கு இதே போல் நிறையப் புகார்கள் வருவதாகவும் இன்ஸ்பெக்டர் தம்பியே இப்படி மோசடி கும்பலில் மாட்டியுள்ளதாகவும் சொன்னார்கள்.
புகார் செய்தி அந்த மோசடி கும்பலுக்கு எப்படியும் தெரிந்து இருக்கும். அதன் பிறகு எந்த தொந்தரவும் இல்லை. ஒரே வாரத்தில் இரண்டு சம்பவங்கள் இப்படி நடைபெற்றது.
ஒருமுறை இளம் காவலர் ஒருவர் இது தொடர்பாகச் சந்தேகம் கேட்டார். எந்த காரணம் கொண்டும் இந்த ஆப் டவுன்லோட் செய்யாதீர்கள். விவரங்களைச் சொல்லாதீர்கள். காவலர் நீங்களே ஏமார்ந்தால் புகார் கொடுப்பது கூட அசிங்கமாக இருக்கும் என்று சொன்னேன்.
உண்மையில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான லோன் ஆப் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
சென்னை போலீசின் ஒரு பிரிவான Central Crime Branch உத்தரப்பிரதேசத்தில் இருந்து இயங்கும் மோசடி மென்பொருள் நிறுவனம் ஒன்று ஏராளமான லோன் ஆப் உருவாக்கி அதன் மூலம் கடன் கொடுத்து ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பாதிப்பதாகக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து தீபக் என்ற பணம் வசூலிக்கும் ஏஜெண்டை கைது செய்து அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் இன்னும் சிலரையும் கைது செய்தனர்.
ஆனால், அதை இயக்கும் முக்கிய குற்றவாளி உத்தரப்பிரதேசத்தில் இல்லை பீகாரில் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக ஆணையர் சங்கர் ஜிவால் குறிப்பிட்டார். மேலும் லோன் ஆப் மோசடி நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
Also read
இரண்டு மாதம் முன்பு காவல்துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு லோன் ஆப் குறித்து பேசினார். யாரும் மொபைல் வழியாகக் கடன் வாங்க வேண்டாம். தவறுதலாக உங்கள் மொபைலில் இந்த ஆப் டவுன்லோட் செய்து இருந்தால் உடனே அதை நீக்கிவிடுங்கள்’’ என்று எச்சரித்தார்.
நாம் சில விஷயங்களைப் பின்பற்றினால் கண்ணுக்குத் தெரியாத நபர்களிடம் இருந்து கடன் வாங்குவது, கண்ட,கண்ட ஆப்களை டவுன் லோட் செய்வது, யார் என்று தெரியாமலேயே நம்முடைய வங்கிக் கணக்கு எண், ஆதார் விவரங்களைக் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தாலே மோசடி கும்பல் நம்மிடம் நெருங்க முடியாது.
கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்
Leave a Reply