லாபம் தரும் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டமிடும் பாஜக அரசு! தனியார்மயம் என்பது சாதாரண மக்களுக்கு இனி ரயில் பயணத்தை எட்டாக்கனியாக்கிவிடும்! பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்! தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன் நேர்காணல்:
இரயில்வேயை தனியாருக்கு கொடுத்தால் மக்களுக்கு என்ன இழப்பு? நட்டத்தில் இயங்கி வருகிறது என்பதால் தனியாருக்கு தருகிறார்களா?
தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை செல்ல பத்து ரூபாய்தான். இதிலும் மாதாந்திர பயணச்சீட்டிற்கு 150 ரூபாய்தான் . அதாவது 25% தான் மாதாந்திர பயணச்சீட்டிற்கான கட்டணமாக வசூலிக்கிறார்கள். பயணிகளில் 64% பேர் மாதாந்திர பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள். பயணிகளை அழைத்துச் செல்ல நூறு ரூபாய் செலவானால், அதில் 53 ரூபாய்தான் பயணிகளிடமிருந்து வசூலாகிறது. 47 ரூபாய் மானியம் தரப்படுகிறது. இதனால் 64,000 கோடி ரூபாய் பயணிகள் போக்குவரத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்கிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் பெண்கள், மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்கிறார்கள். இதற்காக போக்குவரத்து கழகங்களுக்கு, தமிழக அரசானது நிதி வழங்கி வருகிறது. அதேபோல, ஒன்றிய அரசானது ரயில்வே துறைக்கும் இழப்பை ஈடுகட்ட நிதி வழங்க வேண்டும். உலகம் முழுவதும் பயணிகள் போக்குவரத்தில் இலாபம் இல்லை. பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் என உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் ரயில்வேக்கு இழப்பை ஈடுகட்ட நிதி அளிக்கின்றன.
மாணவர்களுக்கு, விவசாயிகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, பத்திரிகையாளர்களுக்கு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, நோயாளிகளுக்கு, விதவைகளுக்கு என 53 வகையான சலுகைகளை ரயில்வே வழங்குகிறது. இவை எல்லாம் தனியார் மயமானால் கிடைக்காது.
இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தினால் ஏற்படும் செலவை, சரக்கு போக்குவரத்தின் மூலமாக பெறப்படும் லாபத்தை வைத்து ஈடு (cross subsidy) கட்டுகிறார்கள். இந்தியாவில் 65% ரயில்கள் பயணிகள் போக்குவரத்துக்காகவும், 35% ரயில்கள் சரக்கு போக்குவரத்துக்காகவும் பயன்படுகின்றன. ஆனால் வருமானத்தில் பயணிகள் போக்குவரத்தில் 35% சரக்கு போக்குவரத்தில் 65% வருமானம் வருகிறது. விவேக் தேவராய் குழு, ராகேஷ் மோகன் குழு போன்றவை பயணிகளுக்கு இலவசம் தந்தால், அதனை அரசு ஈடுகட்ட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ரயில்வேயை தனியாருக்கு கொடுப்பதில் என்ன ஆபத்து? நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் ?
தேசிய ரயில் திட்டம் என்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி 2031 க்குள் அனைத்து சரக்கு போக்குவரத்தையும், இலாபம் தரும் பயணிகள் போக்குவரத்தையும் தனியாருக்கு கொடுப்பது என்று கூறியிருக்கிறது. ஏனென்றால், சரக்கு போக்குவரத்தில் தான் லாபம் கிடைக்கும். அதே போல உட்கார்ந்து பயணம் செய்யும் – குளிர்சாதன வசதி கொண்ட, பயணிகள் ரயிலில் லாபம் கிடைக்கும். ‘வந்தே பாரத்’ என்று பெயர் சொல்லி நானூறு ரயில்களை தனியாருக்கு கொடுக்க இருக்கிறார்கள். இந்த ரயில்களில் பயண கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் தனியார் நிர்ணயித்துக் கொள்ளலாம். தனியார் பெறக்கூடிய வருவாயில் ரயில்வேதுறைக்கு பங்கு (Revenue sharing) தர வேண்டியது இல்லை என்று மோடி சொல்லிவிட்டார். ஆக, அரசுக்கே இது வருவாய் இழப்பு தானே!
தனியார்கள் புதிதாக இதற்காக ரயில் பெட்டிகளை வாங்க வேண்டியதில்லை. ஏற்கனவே இருக்கும் தண்டவாளம், ரயில் நிலையம் சமிக்ஞை வசதி போன்றவை ரயில்வே துறைக்கு சொந்தமானது. இதை வைத்து தனியார் கொள்ளையடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இரயில் தனியார்மயத்தினால் அதானி, அம்பானி, ஜி.எம்.ஆர். போன்ற கம்பெனிகள்தான் கொள்ளை அடிப்பார்கள். கோயம்புத்தூர்- ஷ்ரிடி, மதுரை- வாரணாசி போன்ற அதிக பயணிகள் செல்லும் வழித்தடங்களில் ‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் தனியாருக்கு ரயில் ஒட்டிக்கொள்ள அனுமதித்தார்கள். நாடு முழுவதும் பல ரயில்கள் இப்படி ஓட்டிக்கொள்ள தனியாருக்கு அனுமதித்துள்ளார்கள். இதனால் ரயில் கட்டணம் உயரும். ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சலுகைகள் ரத்தாகும். விபத்து அதிகரிக்கும்.
ஏனென்றால், அவர்கள் பராமரிப்பு எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். நிரந்தர வேலைவாய்ப்பு ரத்தாகும். சமூக நீதி பாதிக்கப்படும். ஏற்கனவே கண்டெயினர்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இரயில்வேயின் பொதுத் துறையில் இருக்கிறது. இது கண்டெயினர்களை எடுத்துச் செல்லுபவை. இதனை தனியாருக்கு விற்க முயற்சிக்கிறார்கள். அதேபோல ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தினை தனியாருக்கு தர முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே சரக்கு பெட்டிகளை உற்பத்தி செய்யும் வேலையை அரசு தனியார்மயமாக்கி விட்டது. ரெயில் பெட்டி மற்றும் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க முடிவு எடுத்துள்ளார்கள்.
தனியார்மயத்தின் விளைவுகளை பொது மக்களுக்கு விளக்க வேண்டியது அவசியம். ரயில்வே துறையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. எச். எம். எஸ், ஐ.என்.டி.யு.சி ஐச் சார்ந்த இரண்டு அங்கீகரிக்கப்பட்ட AIRF, NFIR சம்மேளனங்கள் முக்கியமானவை. இவைகள் தனியார்மயத்தை எதிர்த்த பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தனியார்மயத்தினால் பயணிகளுக்கும் பலனில்லை, நிறுவனத்திற்கும் பலனில்லை. தொழிலாளர்களுக்கும் பலனில்லை.
ரயில்வே தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து ஏதும் சொல்லுகிறீர்களா ?
ரயில்வேயில் 12 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். தெற்கு ரயில்வேயில் 73,000 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்திய ரயில்வேயில் ஏழரை லட்சம் தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள். இவர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை. இப்போது மத்திய அரசு இயற்றியிருக்கிற புதிய தொழிலாளர் சட்டத்திலும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய எந்த ஏற்பாடும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒப்பந்த முறையில் ஆட்களை வைத்துக் கொள்வதை புதிய சட்டம் தீவிரமாக்கியுள்ளது. ஓய்வூதியர்களுக்கு இப்போது ரயில்வே ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இரயில்வே தனியார்மயமானால் ஓய்வூதியம் கிடைப்பது நிச்சயமற்றதாகும். எனவேதான் அரசாங்கமே, தொலைபேசி ஊழியர்களுக்கு தருவது போல ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் ரயில்வே துறையை மேம்படுத்த நீங்கள் கொடுக்கும் ஆலோசனை என்ன ?
நான் புதிதாக எதுவும் ஆலோசனை தர வேண்டியது இல்லை. ஏற்கனவே ஆய்வு நடத்தி, அரசாங்கம் ஒப்புக் கொண்ட திட்டங்களை நிறைவேற்றினாலே போதுமானது.
கடற்கரை- -மகாபலிபுரம்- கடலூர் பாதை,
ஈரோடு – பழனி பாதை, மொரப்பூர்- தருமபுரி பாதை, கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை பாதை, அருப்புக்கோட்டை – மதுரை பாதை, அத்திப்பட்டு- புத்தூர்; திண்டிவனம் -செஞ்சி- திருவண்ணாமலை போன்ற ஏற்கனவே ஒப்புக் கொண்ட பத்து திட்டங்களுக்கு அரசாங்கம், வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதிக்கீடு செய்துள்ளது. ஆம்,வெறும் ஆயிரம் ரூபாய்!
இரட்டைப்பாதை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இப்போது சென்னை முதல் – மதுரை வரை மின்வசதியோடு இரட்டைப்பாதை உள்ளது. இதனை கன்னியாகுமரி வரை விரிவுபடுத்த வேண்டும். மதுரை- தூத்துக்குடி, கன்னியாகுமரி- திருவனந்தபுரம் பாதையில் மின்வசதியோடு கூடிய இரட்டைப்பாதை உருவானால் விரைவாகச் செல்ல முடியும். நெரிசல் குறையும். தென்தமிழக மக்கள் பலன் அடைவார்கள்.
விபத்துகளை குறைப்பது பற்றி ஏதேனும் சொல்கிறீர்களா ?
சென்னை- மும்பை-தில்லி- கல்கத்தா -வை இணைக்கும் தங்க நாற்கர சாலையில் 20 % தண்டவாளங்கள் உள்ளன. இதில் 55% போக்குவரத்து நடைபெறுகிறது. 100 இரயில் போக வேண்டிய இடத்தில் 150 இரயில்கள் (150%) செல்கின்றன. கிழக்குப் பாதை, மேற்குப் பாதை என சரக்கு போக்குவரத்துக்காக தனியான தண்டவாளம் போடும் பணி நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அது விரைந்து முடிய வேண்டும். அதைப்போல பல திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய பணமயமாக்கல் திட்டத்தில் புதிய தண்டவாளம் போட அரசாங்கம் தயாராக இல்லை. தனியார் இதற்கு வரமாட்டார்கள், ஏனென்றால் இதனால் பலன் கிடைக்க நீண்ட காலமாகும்.
சரக்கு போக்குவரத்து ரயில்களின் சராசரி வேகம் சீனாவில் மணிக்கு 300 கி.மீ.; ஆனால் இந்தியாவில் 25 கி.மீ. அதே போல பயணி ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு சீனாவில் 400 கி.மீ. ஆனால், இந்தியாவில் 50 கி.மீ. மீட்டர்தான். நமக்கு பின்னால் விடுதலை அடைந்த சீனா, நம்மை விட 11 மடங்கு இரயில்வேக்கு முதலீடு செய்துள்ளது. ஒரு ரூபாய் முதலீடு செய்தால் அதனால் ஐந்து ரூபாய் பொருளாதார உற்பத்தி இருக்கும். ரயில் போக்குவரத்து அதிகமானால் சாலை போக்குவரத்து குறையும். ரயில் போக்குவரத்து கட்டணம், சாலைப் போக்குவரத்தை விட குறைவு. ஒரு லிட்டர் டீசல் ரயில் போக்குவரத்திற்கு செலவாகிறது என்றால், சாலை போக்குவரத்திற்கு ஐந்து லிட்டர் டீசல் செலவாகும்.
போக்குவரத்து குறைந்தால், டீசல் எரிவது குறையும்; எனவே சுற்றுச்சூழல் மாசடைவதும் குறையும். தேசிய நலன் கருதியாவது, ஒன்றிய அரசு இரயில்வே திட்டங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். விடுதலை அடைந்தபோது ஒட்டுமொத்த போக்குவரத்தில் இரயில்வேயின் பங்கு 84%. இப்போது 28% தான் உள்ளது. அப்போது 79 % பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தினர். ஆனால் இப்போது 12% பேர்தான் ரயிலைப் பயன்படுத்துகின்றனர். எனவே. சீனாவைப் போல மத்திய இந்திய அரசு ரயில்வேயில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும்
புல்லட் ரயில் போடுவதாக சொல்கிறார்களே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

மும்பைக்கும், அகமதாபாத்துக்கும் புல்லட் ரயில் விட ஒரு லட்சம் கோடி செலவாகும். இதற்கு கடன் தர ஜப்பான் தயாராக உள்ளது. அதற்கு நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து மகாராஷ்டிரா விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
Also read
ஒரு ஆண்டிற்கு சராசரியாக 4, 500 கி.மீ. நீளமுள்ள தண்டவாளங்கள் பழுதடைகின்றன. 200 இரயில் நிலையங்களில் உள்ள சமிக்ஞைகள் பழுதாகின்றன. இவைகளை புத்தாக்கம் செய்வதற்கு ரயில்வே தயங்குகிறது. 11 ஆயிரம் கி.மீ. தண்டவாளங்களை புதுப்பிக்க(arrears) வேண்டி இருக்கிறது. இதற்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. புல்லட் ரயிலுக்கு ஆகும் செலவை இதற்கு செலவழிக்கலாம். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
உங்கள் அனுபவத்தில் எந்த மாநிலத்தில் ரயில்வே நன்றாக இருக்கிறது ?
இந்தியாவின் தொழில் தலைநகரம் மும்பை. எனவே மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உள்ள சென்ட்ரல் ரயில்வே நன்றாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. திரிபுரா, அசாம், மணிப்பூர், போன்ற எல்லைப்புற மாநிலங்கள் கவனிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பாஜக அரசாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவழிப்பதில்லை; பாதுகாப்பிற்கும் செலவழிப்பதில்லை.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply