பட்டினி தேசமாய் மாறிக் கொண்டிருக்கும் பாரத தேசம்!

-பீட்டர் துரைராஜ்

பசி, பட்டினி,வறுமை, வேலை இல்லாத திண்டாட்டம் என ஒரு புறமும், உலக பணக்காரர்களுக்கு போட்டி போடக் கூடிய அதானி, அம்பானி போன்ற வளமையான சிறு கூட்டம் மறு புறமுமாக இந்தியா பிளவுண்டு வருகிறது! பணக்காரர்களை மேலும் பணக்கார்களாக்கவும், வறியவர்களை மேலும் வலுவற்றவர்களாக்கவும் ஒர் ஆட்சி நடக்கிறது!

2030 க்குள் உலகத்தில் பட்டினியை ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, ஜெர்மனியைச் சார்ந்த ஒரு அரசு சாரா நிறுவனம், உலகப் பட்டினி குறியீட்டு எண் (Global Hunger Index) என்ற ஒரு அளவுகோளை வருடம்தோறும் வெளியிட்டு வருகிறது.

கடந்த வாரம் அது வெளியிட்ட பட்டியலில்  இந்தியா 107 வது இடத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளது.  121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி  உள்ளது.

பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளை விட இந்தியா  பின்தங்கி உள்ளது. 2021 ம் ஆண்டில் இருந்த தர வரிசையை விட (101) ல் ஆறு இடங்கள் பின்தங்கிவிட்டது என இந்த அறிக்கை கூறுகிறது.

வறுமை, பச்சிளம் குழந்தைகள் மரண விகிதம், குறைந்த பட்ச ஊதியம், உணவுப் பாதுகாப்பு  போன்றவைகளைக் குறித்து அக்கறை காட்டாத ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கை வெளிவந்த உடனேயே, பாஜக ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். “இந்தியாவில் உணவு தானியம் போதுமான அளவுக்கு உள்ளது. இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. இந்தியாவின் பெயரைக் கெடுக்கும் விதமாக பொறுப்பற்ற முறையில் தயாரித்து, அறிக்கையை வெளியிட்ட ஜெர்மனியைச் சார்ந்த அரசு சாரா நிறுவனத்தின் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் – ஐ ச் சார்ந்த ‘சுதேசி ஜாக்ரன் மன்ச்’ என கோபத்தை வெளிப்படுத்தியது.

அதே சமயம் இந்தியாவில் உலக பணக்காரர்கள் வரிசையில் இணைபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.இந்தியாவில் உணவுப் பொருட்கள் மிக பிரம்மாண்டமாக வீணடிக்கபடுவதையும் குளோபல் இண்டக்ஸ் சுட்டிக்காட்டுகிறது! உண்மையில் நாம் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பட்டினிக் குறியீடு என்பதை மதிப்பிடச் சில அளவு கோல்கள் கடைபிடிக்கபடுகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் நான்கு அம்சங்களுக்கான தகவல்கள், புள்ளிவிபரங்கள் சேமிக்கப்படுகின்றன. முதலாவதாக பசி,பட்டினியில் வாடும் மக்களின் சதவீதம். இரண்டாவது, ஐந்து வயதுக்குட்பட்ட  நலிந்த குழந்தைகள்,. மூன்றாவது, குழந்தைகள் தங்கள் வயதிற்கேற்ற உயரமின்றி குன்றிப் போயிருத்தல், நான்காவது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம். இவற்றை வைத்து ஒவ்வொரு நாட்டிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, “தன்னுடைய நடவடிக்கையினால் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து விட்டது என்று சொல்லி,  தவறுக்கு பொறுப்பேற்று இங்கிலாந்து பிரதம மந்திரி ராஜினாமா செய்துள்ளார். அதுபோல உண்மையை ஒத்துக்கொண்டு, நிலைமையை மேம்படுத்தும் ஆட்சியாளர்கள் இந்தியாவில்  இருக்கிறார்களா ?” என்று எதிர்க் கேள்வி கேட்டார், ஆய்வாளரான கீதா நாராயணன்.

” கொரோனாவினால் ஏற்பட்ட கடன் தொல்லையில் இருந்து சிறு, குறு தொழில்கள் இன்னமும் மீளவில்லை. நிரந்தர வேலை என்பது இப்போது இல்லை; ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரிக்கவில்லை. இதனை சரி செய்யும் வகையில் இந்திய அரசு கொண்டுவந்துள்ள  புதிய தொழிலாளர் சட்டத்தில் ஏதுமில்லை. விவசாயம் செய்வதில் இருந்து விவசாயிகள் வெளியேறுகிறார்கள். விலைவாசி அதிகரித்து உள்ளது.  உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த நிலையில் உணவு இறையாண்மையை (Food Soverignity)  இந்தியா எப்படி எட்ட  இயலும் ” என்றார் கீதா நாராயணன்.

இந்த அறிக்கையை வெளியிட்ட welth ungerhilfe  நிறுவனம் கடந்த அறுபது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம்  நிலவும் ஊட்டச்சத்து குறைவு (malnourishment), உயரத்துக்கு ஏற்ப எடை இல்லாமை,  வயதுக்கேற்ற எடை இல்லாமை,  மரணவிகிதம் ஆகிய காரணிகளை மையமாக வைத்து இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது.

இது குறித்து மருத்துவர்  ஜி.ஆர்.இரவீந்திரநாத்திடம் கேட்டதற்கு ” இந்தியாவில்  உணவு உற்பத்தியில் பெருநிறுவனங்கள் பலன் பெரும்வகையில் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. இது மக்கள் நலனுக்கு எதிரானது.

மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

விவசாயிகளுக்கான மானியத்தை  அதிகரிக்க வேண்டும். வளரும் நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு மானியம். தருகின்றன. உரம், பூச்சிக் கொல்லி மருந்து, விதை போன்ற இடுபொருட்களை குறைந்த விலையில் வழங்கிட வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார  விலையை  உறுதிசெய்ய வேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களை சேமிக்க கிட்டங்கிகளை அதிகரிக்க வேண்டும். குளிர்சாதன வசதி (Cold chain storage)  இருந்தால்தான்,  போக்குவரத்தில், சேமிப்பில், விநியோகத்தில் உணவுப் பொருட்கள்  வீணாவதை குறைக்க முடியும். நுகர்வோருக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் விவசாயிகளும் பலன்பெறுவர்; பொதுமக்களும் பலன்பெறுவர். இடைத்தரகர் தலையீடு குறையும்.

ஏழு பன்னாட்டு நிறுவனங்கள் உலக உணவு தானிய வர்த்தக்தில் 85 விழுக்காட்டை கட்டுப்படுத்துகின்றன. மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் உலக வாழைப்பழ வர்த்தகத்தில் 80 விழுக்காட்டை கட்டுப்படுத்துகின்றன. உணவுப் பொருட்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுவது இந்திய மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே பாதிக்கிறது. உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. எனவே, பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உணவுப் பொருள் வர்த்தகம் சென்றுவிட்டதை மீட்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம், பதுக்கல் போன்றவை தடுக்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்ற அறம் சிதைக்கப்படுகிறது.  அமெரிக்காவின் தனிநபர் ஆண்டு தானிய நுகர்வு ஏறத்தாழ 1100 கிலோ இந்தியா போன்ற நாடுகளில் அது வெறும் 100 கிலோவிற்கு கீழே உள்ளது. மேலை நாடுகளில் அதீத உணவுப் பயன்பாடு உள்ளது. ஆனால், ஏழை நாட்டு மக்களோ தானிய உணவு கூட கிட்டாமல் பட்டினியால் இறக்கின்றனர்.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில் கொள்கை முடிவுகளை  ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். கரும்பு, மக்காச் சோளம் போன்ற விவசாயப் பொருட்களில் இருந்து எத்தனால் என்ற எரிபொருள் தயாரிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு, விலைவாசியை கட்டுப்படுத்துதல், குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிசெய்ய வேண்டும்.

ஒன்றிய கார்ப்பரேட் அரசு, ஒருபுறம் கார்ப்ரேட்களின் நலன்களுக்கு உகந்த வேளாண்மை கொள்கைகளை, சட்டங்களை  உருவாக்கி செயல்படுத்த முயல்கிறது. மறுபுறம் மக்களை திசை திருப்ப  “இந்துத்துவா” என்ற மதவெறி அரசியலை மூர்க்கத்தனமாக  நடைமுறைப் படுத்துகிறது. மக்களை சாதி, மத, இன அடிப்படையில் பிளவுபடுத்தி, ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கிறது.

மாநில அரசுகள்   வசம்தான் நிலங்கள் உள்ளன. எனவே நிலங்களை அதிக அளவில் விவசாயப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும், விவசாய நிலங்களை இதர பயன்பாட்டிற்காக  மாற்றப்படுவதை தடுத்திட வேண்டும். பாசன வசதிகள் மேம்படுத்த வேண்டும்.  மீன், முட்டை, பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மக்களுடைய வாங்கும் சக்தி அதிகமானால்தான் நுகர்வு அதிகரிக்கும் ” என்றார் சமூக, சமுத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்.

“இந்த அறிக்கை தவறானது, ஆய்வு செய்த வழிமுறைகளில் பிழை உள்ளது” என இந்திய அரசின் மகளிர் & குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கீதா நாராயணன்

“தமிழ்நாட்டில் நகர்மயமாக்கல் அதிகம் நடந்துள்ளது. கிராமத்தில் இருந்தாலும், வேலைக்காக நகரத்திற்கு வந்து செல்பவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டம் நன்கு செயல்படுகிறது. இதனால் தமிழகம் சற்று நல்ல நிலையில் உள்ளது. அதே சமயம் வேறுசில நடவடிக்கைகளும் தேவை. உதாரணமாக, புறம்போக்கு நிலங்களை வறிய நிலையில் உள்ள பெண்கள் குழுவுக்கு விவசாயம் செய்வதற்கு   தமிழக அரசு கொடுக்க வேண்டும்” என்றார் கீதா நாராயணன்.

இந்தியாவை விட பாகிஸ்தான் (99வது இடம்), நேபாளம் (81 வதுஇடம்), வங்காள தேசம் (84 வது இடம்) பட்டினிக் குறியீட்டு எண்ணில் மேம்பட்டு இருக்கிறதே எப்படி ? ” இந்தியா இராணுவத்திற்கு அதிகமாக செலவழித்து வருகிறது. எனவே, உணவு உத்தரவாதம், மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்றவைகளுக்கு ஒதுக்கப்படும் தொகை குறைகிறது. இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தால் மக்கள் மேம்பாடு அதிகரிக்கும் ” என்றார் ஜி.ஆர். இரவீந்திரநாத்.

நம்  குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற எடை உள்ளதா  ? உயரத்திற்கேற்ற எடை உள்ளதா ? என்ற கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதில் தேடினால், பட்டினியைப் போக்க முடியும்.

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time