அரசியல் என்பது இங்கு அடிமைகளின் கூடாரமா?

Prime Minister Narendra Modi and Amit Shah during the Diwali Mangal Milan at party headquarters in New Delhi on Saturday. Picture by Rajesh Kumar.28/November/2015

சரணாகதி அரசியலைத் தான் இன்று சகல கட்சித் தலைவர்களும் சாதுர்யமாகச் செய்து கொண்டுள்ளனர். அடிமை அரசியல் தான் அனைத்து இடங்களிலும் நிலை கொண்டுள்ளது! அடிமை அரசியல் குற்றவாளிகளையே கூட்டாளியாக்கிக் கொள்கிறது! தண்டிக்கப்பட வேண்டியவர்களை தலைவர்களாக்குகிறது!

மாபெரும் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறையில் இருந்து தப்பித்து வெளிநாட்டிற்குச் சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்குவதற்கு முன்பு, கடைசியாக வங்க ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்த போது சிலிர்த்துப் போனேன்.

”மனிதனுக்கான மிகப் பெரிய சாபம் என்பதே அவன் அடிமையாக நீடித்து இருப்பதே! அநீதிகளுடனும், தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதே மிகப் பெரிய குற்றம்! என்றும் மாறாத விதி என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் உங்களுக்கான சுதந்திரமான வாழ்வை பெற தியாகங்கள் செய்தே ஆக வேண்டும்.”

இந்த வைர வரிகளை இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கிறேன். இன்றைய அரசியல் என்பதே ஆண்டான் – அடிமை அரசியலின் ஜனநாயக வடிவமாக மாறி நிற்கிறது! ஆதாயப் பதவிகளை அடைய பெரும்பாலானவர்கள் தங்களை கட்சித் தலைமையின் அடிமையாக்கிக் கொள்ள கூச்சப்படுவதே இல்லை. கட்சித் தலைவர் என்பவர்கள் எந்த கட்டுப்பாடுகளுக்கும் விதிவிலக்கானவர்களாக, எல்லா வரையரைகளுக்கும் மேலானவர்களாக தங்களை எப்படி நிலை நிறுத்திக் கொள்ள முடிகிறது என்பது  மிகுந்த ஆச்சரியமளிக்கிறது.

தமிழகத்தில் தற்போது அடிமை அரசியல் என்றவுடன் நம்முடைய முதல் கவனத்திற்கு வருபவர் ஒ.பன்னீர் செல்வம் தான்! பணிவின் சிகரமாக தன்னை காட்டிக் கொண்டதனால் அவரைத் தேடி வந்த பதவி தான் முதலமைச்சர் பதவி! அந்த அடிமை அரசியலுக்கு மிகச் சரியாகத் தன்னை பொருத்திக் கொண்டு கணக்கு, வழக்கற்ற சொத்து சுகங்களை சுருட்டும் வல்லமை கொண்டவராக திகழ்கிறார்! தலைவி நோயில் வீழ்ந்த நிமிடத்தில் இருந்து, தன் விசுவாசத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்! அதனால், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போதே பொறுப்பு முதல்வராக திகழ்ந்ததோடு, தலைவியின் மரணத்திற்காக தவமிருந்து, சசிகலா எதிர்ப்பையும் மீறி – பாஜக தலைமை ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார். இதைத் தான் நீதிபதி ஆறுமுகசாமி தன் ஆய்வறிக்கையில் ”ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக பதவியேற்றது தற்செயல் நிகழ்வல்ல….” என சூசகமாகச் சொல்லிச் சென்றார்.

அடுத்ததாக ஜெயலலிதாவின் அடிமை என்ற நிலைமையில் இருந்து சசிகலாவின் அடிமையாக மாற ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் தங்களை தகவமைத்துக் கொள்ளும் காலகட்டமாக அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலம் இருந்துள்ளது. இதில் தன்னை முதன்மையானவராக பொருத்திக் கொண்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி! தங்களின் இதய தெய்வமாக இவர்கள் கூறி வந்த ஜெயலலிதாவிற்கு சரியான சிகிச்சை தரப்படுகிறதா என்ற சந்தேகத்தை உறுதிபடுத்திக் கொள்ளும் வல்லமை எந்த ஒரு அதிமுக நிர்வாகிக்குமே இல்லாமல் இருந்ததுவா? இவர்கள் இதயம் இது குறித்து துடிதுடிக்கவே இல்லையா? அத்தனை பேரும் எப்படி ஒட்டுமொத்தமாக அமைதி காத்தனர்.

அப்பல்லோ மருத்துவமனையின் பத்து அறைகளை சசிகலா குடும்பம் 75 நாட்களாக ஆக்கிரமித்திருந்த சாதாரணத் தகவலைக் கூட இந்த அடிமைகள் வெளிப்படுத்தவில்லையே! ‘அடிமையாகத் தன்னை ஒப்புவித்துக் கொண்ட மனிதன் விஸ்வாசமாக ஒரு போதும் இருப்பதில்லை. விஸ்வாசமாக அவர்களால் நடிக்கவே முடியும்’ என்பதற்கு ஜெயலலிதா சிறுகச் சிறுக கொல்லப்படுவதை கண்டும், காணாமல் இருந்த இந்த அடிமைக் கூட்டமே உதாரணமாகும்.

அப்பல்லோ அத்தியாயம் முடிந்தவுடன், இருபதே நாட்களில் தன்னை சீவி சிங்காரித்து ஜெயலலிதா போல சிகை அலங்காரம் செய்து தலைமை கழகத்திற்கு வந்து அமர்ந்த வேகமும், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்ட சாகசமும், அடுத்ததாக பன்னீரிடம் இருந்து முதல்வர் பதவியை பறிப்பதில் காட்டிய அவசரமும் சசிகலாவை அம்பலப் படுத்திவிட்டது! அதனால் அவர் சிறைச் சாலைக்குள் தள்ளப்பட்டதை அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் கேள்வி கேட்கவில்லை.

ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில், ‘சசிகலாவை இழவு விசாரிக்கிறோம்’ என்ற சாக்கில், ‘இந்து’ ராம் ‘தினத்தந்தி’ பாலசுப்பிரமணிய ஆதித்தன் தொடங்கி பல்கலைக் கழக துணைவேந்தர்கள் வரை வரிசை கட்டிச் சென்று வணங்கினர் என்பது நமது அடிமைச் சமூகத்தின் நீட்சி பத்திரிக்கையாளர்கள், படித்தவர்கள் என சகலரையும் பீடித்து விட்டதின் அறிகுறியாக – அடையாளமாக – கருததக்கதாகும். எந்த பாஜகவால் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் தண்டிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்களோ..,  அந்த பாஜகவின் தயவைக் கொண்டே இன்று அவர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க காத்திருக்கிறார்கள்!

இந்தச் சூழல்களுக்கு இடையில் தான் தேர்தல் நெருங்கியது. அடிமை அதிமுகவின் மீது சுரணை கொண்ட சமூகத்திற்கு ஏற்பட்ட கோபம் திமுக அரியணை ஏற வழி வகுத்தது! அப்போது ஸ்டாலினும் மேடைக்கு மேடை ”இந்த ஊழல்வாதிகளை தண்டிக்க திமுகவிற்கு ஒரு வாய்ப்பு வேண்டும்” எனக் கேட்டார்.

ஆட்சிக்கு வந்தது தொடங்கி, இன்னும் ஒரு ஊழல் அமைச்சரையோ, உயர்நிலை அதிகாரியையோ கூட ஏன் ஸ்டாலினால் தண்டிக்க முடியவில்லை?

பத்மஷேசாத்திரியில் பதின்ம வயது குழந்தைகளிடம் பாலியல் லீலைகளைச் செய்த ஆசிரியரை தண்டிக்க கூட முடியவில்லை! நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தும்,  தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க முடியவில்லை. கடவுள் பேரைச் சொல்லி கல்லா கட்டிய பாஜக பிரமுகர் கார்திக் கோபிநாத்தை தண்டிக்க முடியவில்லை. மாணவி ஸ்ரீமதியின் அநியாய மரணத்திற்கு நீதி வழங்க முடியவில்லை! குழந்தையை பறிகொடுத்த தாயின் கேரக்டரை சிதைக்கும் கார்த்திக் பிள்ளை எனும் களவாணிப் பயலை, அந்த தாய் புகார் தந்தும் தண்டிக்க முடியவில்லை! இவை எல்லாவற்றிலுமே குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ், பாஜக சம்பந்தப்பட்டவர்கள் என்பது தான் கவனத்திற்கு உரியது!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நேர்மையாக விசாரணை நடத்தி, அன்றைய முதல்வர் எடப்பாடியையும், மாவட்ட கலெக்டரையும் தோலுரித்து காட்டியுள்ளார் நீதிபதி அருணா ஜெகதீஸன்! இவர்களை இந்த நேரம் விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டாமா திமுக அரசு? ? 13 உயிர்களை கொன்ற குற்றத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சில காலமாவது சிறை கொட்டடிக்குள் இருக்க வேண்டாமா? கொடநாடு கொள்ளை, கொலை, குற்றத்திற்காவது தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டாமா?

ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கைப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடக்குமா? சசிகலாவோ, அன்றைய பொறுப்பு முதல்வர் பன்னீரோ தண்டிக்கபடுவார்கள் என  நம்புவதற்கு தான் வாய்ப்பு இருக்கிறதா? ஏனெனில், மேற்படி இருவரும் பாஜகவின் முழு அரவணைப்பில் அல்லவா உள்ளனர்.

அதிமுக கட்சி இன்று நான்கு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது! இந்த பிரிவுக்கு காரணமே பாஜக தான்! ஆன போதிலும், இந்த நான்கு பிரிவுமே பம்மி பதுங்கி பாஜகவினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சொல்லத் தயங்கி திமுக மீது குற்றம் சொல்கின்றனர். ஆனால், பாவம் திமுகவும் பாஜக கட்டளைப்படி தான் பலவீனமான பன்னீரைத் தூக்கி சுமக்கிறது என்ற உண்மை தெரிந்து இருந்தும் வெளிப்படுத்த அஞ்சுகின்றனர்.

ஆக, எல்லோருமே அடிமை விலங்கில் கட்டுண்டவர்களாக உள்ளனர்! பதவி, பணம், அதிகாரம் ஆகிய ஆசைகளால் அடிமைத் தளையில் சிக்குண்டு சிறுமையில் உழல்கின்றனர். அன்று பிரிட்டிஷ் அடிமைத் தளையை உடைத்தெறிய ஒரு விடுதலை போராட்டம் இருந்தது! ஆனால், இன்றைய பிஜேபி அடிமைத் தளையை உடைத்தெறிய உறுதிப்பாடும், உண்மையும் உள்ள தலைமை இந்த நாட்டிற்கு எப்போது வாய்க்குமோ தெரியவில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time