தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை உரிமையற்றவர்களாக்குகிறது. தொழிற்சங்கங்களை முடமாக்குகிறது.தொழிலாளர்களை முற்றிலும் பாதுகப்பற்றவர்களாக ஆக்கியுள்ளது. இது போன்ற மோசமான சட்டங்களை நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசே கூட நினைத்துப் பார்த்திருக்காது! இந்தச் சட்டங்கள் உணர்ச்சியுள்ள எந்த தொழிலாளியையும் எரிமலையாக்கும் என்பது நிச்சயம்…..!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், மூன்று முக்கியமான தொழிலாளர் சட்டங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.. அதுவும் வேளாண் சட்டங்களை அரசு நிறைவேற்றிய முறையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கூண்டோடு அவை புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த போது சந்தடி சாக்கில் விவாதங்களேயின்றி இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த சட்டங்கள் இது வரையிலான தொழிலாளர் நலச் சட்டங்களை தலைகீழாக மாற்றியுள்ளன என்பது கவனத்திற்குரியதாகும்!
411 கூறுகள்(Clause), 13 இணைப்புப் பட்டியல்கள் (Schedule) கொண்ட 350 பக்கங்களிலான மூன்று தொழிலாளர் சட்டங்களைக் குறைந்தது மூன்று நாட்களாவது விவாதிருக்க வேண்டும். ஆனால்,மூன்று நிமிஷத்தில் அவசர,அவசரமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
ஒரே மூச்சில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதுடன், தொழில்துறை நீதி வழங்குதலில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
29 தொழிலாளர் சட்டங்களைச் சுருக்கி, 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக (Labour code) கொண்டுவரப்படும் என கடந்த ஆண்டு 2019 ல் நடுவன் அரசு அறிவித்தது. அவை,
1, தொழிற்சாலை உறவுகள் சட்டத்தொகுப்பு – 2020 (The Industrial Relations Code)
2, தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான சட்டத் தொகுப்பு – 2020 (The Occupational Safety, Health & Working Conditions Code)
3, சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு – 2020 (The Social Security Code)
4, ஊதியங்கள் சட்டத்தொகுப்பு – 2019 (The Wages Code) இவற்றில் ஊதியங்கள் சட்டத்தொகுப்பு – 2019 கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அரசு இதழிலும் வெளியாகி உள்ளது. மற்ற மூன்று சட்ட தொகுப்புகளும் அண்மையில் முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குச் சென்றுள்ளன.
Also read
ஆங்கிலேயர்களிடம் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தபோதே தொழிலாளர்கள் போராடி பல உரிமைகளை வென்றெடுத்தனர். 1881 ஆம் ஆண்டில் வெளியான இந்தியாவின் முதல் தொழிலாளர் சட்டம், பதினெட்டு மணி நேரத்துக்கு மேல் தொழிலாளர்களை வேலை வாங்கக் கூடாது என வரையறுத்தது.
1923ல் வேலையாள் இழப்பீட்டுச் சட்டம்,
1926 ல் தொழிற்சங்கச் சட்டம்,
1936ல் சம்பளம் வழங்குதல் சட்டம், தொழிற்சாலை சட்டம், தொழில் தகராறு சட்டம் போன்றவை இந்தியா அடிமைப்பட்டு இருந்த காலத்திலேயே பெறப்பட்ட சட்டங்கள் ஆகும். இவற்றின் மூலம் தொழிலாளர்கள் வென்றெடுத்த உரிமைகள் இன்றைக்கு கானல்நீராகி விட்டன.
இந்திய தொழிலாளர் சட்டங்களுக்கு ‘தாய்’ போன்றும், மூலமாகவும் இருப்பது தொழில் தகராறு சட்டம் – 1947, தொழிற்சங்கச் சட்டம் – 1926, தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் (நிலை ஆணைகள்) சட்டம் – 1946 ஆகிய சட்டங்களாகும். இவற்றுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்டிருப்பது தான், தொழிற்சாலை உறவுகள் சட்டத்தொகுப்பு (Industrial relations code). இது தொழிலாளர்களின் உரிமைகளை அடியோடு பறிப்பதுடன், தொழில்துறை நீதி வழங்குதலின் அடிப்படையையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றி அமைத்துவிடுகிறது.
தொழிலாளர் சட்டங்களின் அடிப்படைக் கருத்தோட்டம் ‘சமமற்ற பேரம்’ என்ற யதார்த்ததை அங்கீகரிப்பதுதான். அதாவது, நிறுவனத்தின் முதலாளியும், வேலை தேடிச் செல்லும் தொழிலாளியும் சமமான நிலையில் வேலைக்கான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள இயலாது என்பதை ஏற்பதாகும். ஏற்றத்தாழ்வான இந்த நிலை சமூக யதார்த்தமாகும். எனவே மற்ற ஒப்பந்தங்களைப் போல் வேலைக்கான ஒப்பந்தங்களை அணுக முடியாது. இது முற்றிலும் மாறுபட்டதும் கூட. இதனை நீதிமன்றங்களின் பல்வேறு தீர்ப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
வேலைக்கான ஒப்பந்தங்களில் நியாயமற்ற, ஒத்துப்போகாத அம்சங்கள் இடம்பெற்ற போதெல்லாம் நீதிமன்றங்கள் கடுமையாக கண்டித்து அவற்றை மாற்றி அமைத்திருக்கின்றன. தொழிலாளர் சட்டங்களுடன் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முரண்படும் போதெல்லாம், தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் (நிலை ஆணைகள்) சட்டம் – 1946 உட்பட தொழிலாளர் சட்டங்களின் விதிகளே மேலோங்கி இருக்கின்றன. இந்த நிலைமையை தலைகீழாக மாற்றி அமைத்திருக்கிறது தொழிற்சாலை உறவுகள் சட்டத்தொகுப்பு.
இந்த சட்டத் தொகுப்பு, வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தம் (Fixed term contract) என்பதை விதியாகக் கொண்டு வருகிறது. வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தம் என்பது தனிப்பட்ட ஒவ்வொரு பணியாளருடனும் குறிப்பிட்ட காலத்திற்கு நிர்வாகம் செய்துகொள்ளும் வேலைவாய்ப்பு ஒப்பந்தமாகும்.
இங்கு வரையறுக்கப்பட்ட காலம் என்பது தொழிலாளர்கள் பணியாற்றும் கால அளவைக் குறிப்பதல்ல. பணி நீக்கம் செய்யப்பட்டால் தொழில் தகராறு சட்டம் – 1947 ன் கீழ் இழப்பீடுகளைப் (செட்டில்மென்ட்) பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை குறிப்பதாகும்.
மேலோட்டமாகப் பார்த்தாலே, வேலையின்மை அச்சுறுத்தலால் தொழிலாளர்கள் ‘வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தத்தை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவதை புரிந்துகொள்ள முடியும். 1977 ஆம் ஆண்டில் 240 நாட்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்வதற்கான நடைமுறைகள் மகாராஷ்டிராவில் கொண்டு வரப்பட்டன.
தற்போது, ‘வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தம்’ (Fixed term contract) சட்ட ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதன் மூலம் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு கானல்நீராகி விட்டது.
தொழில் தகராறு சட்டம் – 1947ன் கீழ் 100 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் எந்த நிறுவனமும் எந்த ஒரு பணி நீக்கத்திற்கும் முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த வரம்பு தற்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, 300 தொழிலாளர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்கள், அரசின் அனுமதி இல்லாமல் இனிமேல் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்து கொள்ளலாம். இந்த வரம்பை மேலும் அதிகரித்துக்கொள்ளவும் நடுவண் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வேலை நேரம், சம்பள வரம்பு, பணிக்கொடை விகிதம் போன்றவற்றை மாற்றியமைக்க இனிமேல் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. அவற்றை அவ்வப்போது அரசாணைகள் வெளியிடுவதன் மூலம் மாற்றியமைக்கும் வகையில் இந்த சட்டத் தொகுப்பில் விதிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள நடுவண் அரசு, தொழிலாளர்களை நினைத்த மாத்திரத்தில் பணிநீக்கம் செய்ய முடியாமல் இருப்பதால்தான், உற்பத்தியின் தேவைகளுக்கு ஏற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை மாற்றி அமைக்க முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளது. இதனால்தான் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறதாம்!
தொழிலாளர்களுக்கு வேலைக்கும் பாதுகாப்பில்லை, உழைப்பிற்கான ஊதிய உத்தரவாதமும் இல்லை என்பது சட்டமாகவே உத்திரவாதமாகியுள்ளது . பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் இந்தச் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, சமூக நலனுக்கே எதிரானதாகும்.
கட்டுரையாளர்; சிவ.மணிமாறன், மூத்தபத்திரிக்கையாளர்.
Madras Union of Journalist என்ற பாரம்பரிய மிக்க பத்திரிக்கையாளர் அமைப்பின் மாநிலப் பொருளாளர்.
Leave a Reply