இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிபால் பல்கலைக் கழகம் சித்த மருத்துவ பாட திட்டத்தை அங்கீகரித்துள்ளதை போல, அமெரிக்காவிலும் ஒரு புகழ் பெற்ற மருத்துவ கல்லூரி அங்கீகரித்து நடைமுறைக்கும் வந்துள்ளது என்றால், தமிழரின் மருத்துவம் தரணியெல்லாம் பரவுகிறது தானே!
ஒரு முக்கியமான முன்னெடுப்பு சத்தம் இல்லாமல் தொடங்கி உள்ளது. நவீன ஆங்கில மருத்துவம் வேறு எந்த மாற்று மருத்துவமும் தேவையில்லை என்ற நிலைப்பாடு உடையதாகும். நாட்டு மருந்து உட்கொண்டதாக அறிந்தாலே போதும் ஆங்கில மருத்துவர்கள் நோயாளிகளை திட்டி தீர்த்துவிடுவார்கள்!
இப்படிப்பட்ட இந்த அலோபதி டாக்டர்களை சித்த மருத்துவமும் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நோயாளிகளுக்கு தேவையான பொழுதில் சித்த மருத்துவமும் செய்யுங்கள் என்று சொன்னால் என்ன செய்வார்கள்?
ஆனால், உண்மையில் இது நடைமுறை சாத்தியமாகியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அலோபதி மருத்துவத்திற்குக் கூடவே சித்த மருத்துவம் படிப்பது தமிழக மருத்துவர்களோ, இந்தியா மருத்துவர்களோ இல்லை. அமெரிக்க மருத்துவ மாணவர்களாகும். அதற்கான ஆரம்பப் புள்ளி சென்னையில் வைக்கப்பட்டுள்ளது.
எப்படி? யார் காரணம் ? என்று பார்ப்போம்.
சென்னையில் இயங்கும் ஒருங்கிணைந்த சித்த மருத்துவத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த மருத்துவ மாமேதை செ.நெ.தெய்வ நாயகம் அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய நல வாழ்வு நல்லறம் (Health India Foundation) நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் செல்வ சண்முகம் மற்றும் மருத்துவர் அருள் அமுதன் முயற்சியில் ஆகியோர்களின் முன்னெடுப்பில் கர்நாடாகாவில் உள்ள மணிபால் பல்கலைக் கழகத்தில் சித்த மருத்துவம் பயிற்றுவிக்கபடுவது போல, அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள புகழ்பெற்ற Morehouse School of Medicine மருத்துவ கல்வி நிறுவனம் சித்த பாடத் திட்டத்தை அங்கீகரித்து உள்ளது. அந்த கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் ஸ்ரீதர் இதற்கு முழு பின்புலமாக உள்ளார்.
தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்தை ஆய்வு பூர்வமாக அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய மருத்துவ முறையாக பாவித்து பயில அமெரிக்க மருத்துவ கல்லூரி விளங்குவதன் பின்னணியில் அங்குள்ள தமிழர்களின் பங்களிப்பு இருப்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது குறித்து மருத்துவர் செல்வ சண்முகம், மற்றும் ராஜகோபாலன் ஸ்ரீதர் ஆகியோரிடம் பேசியதன் சாராம்சத்தை கீழே தருகிறோம்.
அமெரிக்கா மருத்துவ கல்வியில் உள்ள சித்த மருத்துவ பாடத்திற்குப் பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீதர் தான் டைரக்டர் ஆவார். இவருடைய மேற்பார்வையில் தான் இந்தியா வருகிறார்கள் அமெரிக்க மருத்துவ மாணவர்கள்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள புகழ் பெற்ற மோர்கவுஸ் மருத்துவ கல்லூரி இந்திய நல வாழ்வு நல்லறம் அமைப்பு, கர்நாடகத்தில் இயங்கும் மணிபால் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சித்த மருத்துவ பாடத்திட்டத்தை அமெரிக்க மாணவர்களுக்கு கற்பிக்க முன் வந்துள்ளது.
அமெரிக்காவில் மருத்துவ படிப்பு சேர்வதற்குப் பள்ளிப் படிப்பு முடித்து நேரடியாக சேர முடியாது. இளங்கலை பட்டய படிப்பை 4 வருடம் படிக்க வேண்டும். அதன் பிறகு மருத்துவ படிப்பில் சேர வேண்டும். இதுதான் நடைமுறை. இந்தியாவில் MBBS படிப்பு அமெரிக்காவில் அதற்குப் பெயர் MD படிப்பு ஆகும்.
MD படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 4 வருடம் படிப்பு காலம் ஆகும். முதல் 3 வருடம் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம். கடைசி ஒரு வருடத்தில் மட்டும் மாணவர்களுக்கு 7 விருப்பு பாடங்கள் உண்டு. அதில் எது வேண்டுமென்றாலும் தேர்ந்து எடுத்துப் படிக்கலாம். அந்த 7 விருப்ப பாடத்தில் தான் ஒரு பாடமாகச் சித்த மருத்துவம் இணைந்து உள்ளது.
2019ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ கல்வி நிறுவனம் சித்த மருத்துவத்தை ஏற்றுக் கொண்டாலும் கொரோனா காரணங்களால் நடை முறைப்படுத்தத் தாமதமானது. இந்த வருடம் முதல் அமெரிக்க மருத்துவ மாணவர்கள் இந்தியா வரத் தொடங்கி உள்ளனர், சித்த மருத்துவம் படிக்க.
இந்தியாவில் மொத்தம் 4 வாரங்கள் சித்த மருத்துவத்தைப் பற்றி கற்றுக் கொள்கிறார்கள். இந்தியா வரும் மருத்துவ மாணவர்கள் சென்னையில் உள்ள இந்திய நல வாழ்வு நல்லறம் அமைப்பில் 3 வாரமும், மணிபால் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் அருள் அமுதன் அவர்களிடம் 1 வாரமும் சித்த மருத்துவம் கற்றுக் கொள்கிறார்கள்.
அமெரிக்க மருத்துவ மாணவர்களுக்குச் சித்த மருந்து தொடர்பான பாடங்கள் கற்றுக் கொடுப்பதில்லை.. மருந்து இல்லாத மருத்துவமான நோய் அறியும் நாடிப் பயிற்சி, யோக பயிற்சி, வர்மக் கலை, முத்திரை பயிற்சி, வாழ்வியல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.
காலை எழுந்தவுடன் எதை வைத்து பல் தேய்க்க வேண்டும், எண்ணெய்க் குளியல், நான்கு வாரங்கள் ஒரு முறை வயிற்றைச் சுத்தம் செய்தல், நாடி பார்த்தல், பாரம்பரிய வழிமுறையில் சிறுநீர் பரிசோதனை போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகிறது.
அட்லாண்டா நகரின் Morehouse School of Medicine மருத்துவ கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் மட்டும் இல்லாமல் மற்ற வட அமெரிக்க மருத்துவ கல்வியில் படிக்கும் மாணவர்கள், கனடாவில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் கூட Morehouse School வழியாகச் சித்த மருத்துவ பாடத்திட்டத்தை ஒரு விருப்ப பாடமாக எடுத்துப் படிக்கலாம்.
தொடக்கத்தில் மருந்து இல்லாத மருத்துவத்தை அறிமுகப்படுத்துகிறோம். எந்த புதிய மருந்தையும் அறிமுகம் செய்ய அமெரிக்காவில் உள்ள FDA (Food and Drug Administration) அனுமதி வேண்டும். அதற்குப் பல கட்ட முயற்சிகள் தேவை அதனால், முதல் கட்டமாக மருந்து இல்லாத மருத்துவத்தை அறிமுகம் செய்து உள்ளோம். பிறகு FDA அனுமதி பெற்று சித்த மருந்துகள் பாடம் அறிமுகம் செய்ய முடிவு செய்து உள்ளோம்.
Also read
சித்தா கற்றுக் கொள்ளும் மாணவர்கள் நவீன மருத்துவத்தோடு சித்தா மருத்துவத்தையும் சேர்ந்து கொடுக்கும் பொழுது நோயாளிகளுக்குப் பணம் செலவு குறையும், உடலும் ஆரோக்கியமாக மாறும்.
ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள சித்த மருத்துவம் கடல் கடந்து அமெரிக்கா சென்று உள்ளதை மிக முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த முன்னெடுப்புக்கு முக்கிய காரணமாக பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீதர் உள்ளார். இவர்களுடன் மருத்துவர் செல்வ சண்முகன், மருத்துவர் அருள் அமுதன் இணைந்து மிகச் சிறப்பான பணியைத் தொடங்கி உள்ளனர்.
கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்
My long time dream to siddha education in North America! Great initiative. All the best!
Thanks,
Why not in India…? At least in Tamil Nadu or in some private colleges
அமெரிக்காவில் அலோபதியோடு சித்த மருத்துவம்!
-செழியன் ஜானகிராமன் – அறம் – ஆசிரியர்: திரு சாவித்திரி கண்ணன்