இத்தனை இயற்கை வழிகளில் கொசுக்களை விரட்டலாமா?

-எம்.மரிய பெல்சின்

எத்தனை வழி முறைகளில் கொசுவை விரட்ட அநாவசியச் செலவுகளை செய்கிறீர்கள்! கொசுவத்திச் சுருள், லிக்வைட் லைட், கொசுவிரட்டி ஸ்பிரை, இத்தனையும் நமக்கே கெடுதல் ஆகிவிடும். வாங்க மிக எளிய இயற்கை வழிமுறைகளில் சிம்மிள் செலவில் கொசுக்களை விரட்டலாம்!

`நாராயணா… இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா…’ –  கவுண்டமணியின் இந்த சினிமா டயலாக் தலைமுறை தாண்டியும் பலராலும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இந்த டயலாக்கைக் கேட்டு, பார்த்து நாம் சிரிக்கலாம். ஆனால், கொசுக்களால் மனிதர்கள் படும் பாடு சொல்லி மாளாது. இன்றைக்கு கொசுக்களை விரட்டுவதற்காக புதிது புதிதாக என்னென்னவோ தயாரிப்புகள் வந்துவிட்டன. கடைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தும் பலருக்கு நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றை விட்டு இயற்கை வழிமுறைகளில் தயாரிக்கப்பட்ட கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளலாம். அத்துடன் மிக எளிதான இயற்கை வழிமுறைகளால் செலவுகளும் குறைவு என்பதை கவனத்தில்கொண்டு செயல்படுவோம்.

மழைக்காலங்களில் நீர் தேங்குவதால் ஆங்காங்கே கொசுக்கள் முட்டையிட்டு பல்கிப்பெருகும். கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் கொசுக்களால் பலர் பல இரவுகள் தூங்க முடியாமல் அவதிப்படுவதுடன் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே, கொசுக்களை ஒழிக்க பலராலும் பின்பற்றப்படும் இயற்கை வழிமுறைகள் நிறைய உள்ளன. அவைபற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். கொஞ்சம் மெனக்கெட்டால் நிச்சயம் கொசுக்களை விரட்டலாம். அவற்றை அடியோடு ஒழிக்க முடியாது என்றாலும், நாம் வாழும் இடங்களில் அவற்றின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம். கூடவே அவை பல்கிப் பெருகுவதைத் தடுக்கலாம். வாருங்கள், கொசுக்களை விரட்டும் எளிய வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.

வேப்ப இலை, நொச்சி இலை

மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் வேம்பு, துளசி, நொச்சி, சிறியாநங்கை, ஆடாதொடை, தும்பை போன்ற மூலிகைகளின் இலைகளைச் சேகரித்து காயவைத்து ஒன்றிரண்டாக பொடியாக்கிக் கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் மஞ்சள், சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றைச் சேர்த்து  தணலில் சாம்பிராணியைப் போட்டுக் காட்டுவதுபோல மாலை நேரங்களில் வீடு முழுவதும் காட்டலாம். நறுமணமிக்க அந்த மூலிகைகளின் வாசனைக்கு கொசுக்கள் விலகி ஓடிவிடும். இந்த மூலிகைகளை எரியூட்டுவதன்மூலமும் கொசுக்களை விரட்டலாம். துளசியில் பலவகைச் செடிகள் இருந்தாலும் வீடுகளில் வளர்க்கப்படும் சாதாரண துளசியின் இலைகளே போதும்.

துளசிச் செடியை வீடுகளின் முற்றங்களில் வளர்ப்பார்கள். அதே போல் ஜன்னல், பால்கனி பகுதியில் வைத்து வளர்த்தால் வீட்டுக்குள் கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம். துளசியை அரைத்து நீரில் கரைத்து யூகலிப்டஸ் தைலத்துடன் சேர்த்து வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்தாலும் கொசுக்கள் விலகிச் சென்றுவிடும். துளசிச் சாற்றை உடலில் தேய்த்துக் கொண்டாலும் கொசுக்கள் நம்மை நெருங்காது.

திருநீற்றுப் பச்சிலையையும் கூட இதேபோல் செய்யலாம். லெமன் கிராஸ், சாமந்திப்பூ, ரோஸ்மேரி, புதினா போன்ற செடிகளை வீட்டைச் சுற்றி வளர்த்தால் அவற்றின் வாசனைக்கு கொசுக்கள் அங்கிருந்து பறந்து வேறு இடத்துக்கு சென்றுவிடும். தேங்காய் எண்ணெயை கை கால் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் தேய்த்தாலும் கொசுக்கள் நம்மைக் கடிக்காது. நொச்சி இலைகளை பச்சையாகவோ அல்லது காய வைத்தோ வீட்டின் வெளிப்புறம் தீ வைத்து எரித்து புகைமூட்டம் போட்டாலும் கொசுக்கள் விலகிச் சென்றுவிடும். பச்சை நொச்சி இலைகளை நாம்  தூங்கும் அறையில் ஆங்காங்கே போட்டு வைத்தாலும்கூட கொசுக்களின் பாதிப்பு குறையும்.

வேப்பிலையைப் பறித்து வைக்கோலுடன் சேர்த்து வீட்டுக்கு வெளியே புகைமூட்டம் போட்டால் வேப்பிலையின் கசப்பு வாசனைக்கு கொசுக்கள் அங்கிருந்து அகன்று சென்றுவிடும். இதேபோல் யூகலிப்டஸ் இலைகளைக் காயவைத்து தீ மூட்டினாலும் அதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் விலகிச் சென்றுவிடும்.

வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளவர்கள் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றால் தீபம் ஏற்றலாம். இவற்றை தனித்தனியாக அல்லது பல எண்ணெய்களைக் கலந்தோ தீபம் ஏற்றினால் அதன் வாசனைக்கு கொசுக்கள் விலகிச் சென்றுவிடும். வேப்பெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் பஞ்சு திரிக்குப் பதில் பெருந்தும்பை, பேய்மிரட்டி இலைகளை திரிகளாக்கி  தீபம் ஏற்றினாலும் கொசுக்கள் விலகிச் சென்றுவிடும்.

கற்பூரத்தைக் கொண்டு (சூடம்) ஆலயங்களில் தீப ஆராதனை காட்டுவார்கள். சிலர் வீடுகளில் இதைச் செய்வார்கள். தினம்தோறும் மாலைவேளைகளில் இப்படி கற்பூரத்தைக் கொளுத்தி அதன் புகையை வீடு முழுக்கக் காட்டினாலும் கொசுக்கள் விலகிச் செல்லும். கற்பூரத்தைத் தூளாக்கி வீட்டின் மூலைமுடுக்குகளில் வைத்தாலும் கொசுக்களின் ஆதிக்கம் குறையும். கற்பூரத்தை நொறுக்கி நல்லெண்ணெயுடன் சேர்த்து தீபம் ஏற்றலாம். அதே போல் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் கற்பூரத்தைப் பொடியாக்கி வைத்தாலும் கொசுக்கள் விலகிச் சென்று விடும். தும்பை இலையை எரிப்பது, தேங்காய் நாரை தீயிட்டுக் கொளுத்துவதன் மூலமும் கொசுக்கள் விலகி ஓடிவிடும். இவற்றின் புகையை வீடுகளின் உள்ளேயும் காட்டலாம். அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

சோற்றுக் கற்றாழைச் சாற்றுடன் கற்பூரவல்லி இலைச்சாறு, நீர் சேர்த்து பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் தெளிப்பதாலும், கொசுக்களின் பாதிப்பு இருக்காது. மாம்பூக்களை தணலில் போட்டு புகை மூட்டலாம். இதை வீடு முழுவதும் காட்டினால் மூலைமுடுக்குகளில் ஒளிந்திருக்கும் கொசுக்கள் விலகி ஓடிவிடும்.

வெள்ளைப் பூண்டு வாசனைக்கும் கொசுக்கள் விலகி ஓடும். இரவில் தூங்குவதற்கு முன் பூண்டுப் பற்களை நசுக்கி ஆங்காங்கே போட்டு வைப்பதால் கொசுக்கள் விலகுவதுடன் தூக்கமின்மை பிரச்சினை நீங்கும். பூண்டின் தோலை தணலில் போட்டு புகையூட்டுவதாலும் கொசுக்கள் விலகிச் செல்லும். இது போன்று கொசுக்களை விரட்ட நிறைய எளிமையான வழிமுறைகள் உள்ளன. இத்தனை வழிகள் இருக்கும் போது ரசாயன வில்லைகளையும், லிக்விட்களையும் பயன்படுத்தி நமக்கு நாமே சுவாசக்கோளாறுகளையும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொசு கடித்தால் சிலருக்கு உடலில் அலர்ஜி போன்று தடிப்பு தடிப்பாக ஏற்படும். இதையும் சிலர் காணாக்கடி என்பார்கள். இந்தப் பிரச்சினைக்கு அறுகன் தைலத்தை பூசுவதன் மூலம் பலன் கிடைக்கும். அறுகம்புல்லை அரைத்து சாறாக்கி தேய்ப்பதுடன் அந்தச் சாற்றை குடிப்பதன் மூலம் கொசு கடிப்பதால் ஏற்பட்ட பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தேங்காய் எண்ணெய் பூசுவதும் கூட பலனளிக்கும். சுத்தமான தேன் இருந்தால் அதைப் பூசலாம். ஐஸ் கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது, லாவெண்டர் ஆயில் தேய்ப்பதும்கூட கொசுக்கடி அலர்ஜியைப் போக்கும். இதுபோன்ற எளிய வழிமுறைகளைப் பின்பற்றி பலன் பெறலாம்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

மூத்த ஊடகவியலாளர், இயற்கை வழி உடல் நல ஆலோசகர்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time