ஊழலில் ஊறித் திளைக்கும் உயர்கல்வித் துறை!

-சாவித்திரி கண்ணன்

காசு, பணம், துட்டு, மணி, மணி …என கல்வித் துறையை களவாணித் துறையாக்கிவிட்டார்கள் ஆட்சியாளர்கள்! துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என்பது ஒட்டுமொத்த கல்வித் துறையையும் உலுக்கி எடுக்கிறது! உயர் கல்வித் துறையை ஊழல் கல்வித் துறையாக்கிடும் ‘பெரிய மனிதர்கள்’!

தமிழக பல்கலைக் கழகங்களில் கடந்த இருபதாண்டுகளாக ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது.பல்கலைக் கழகத்தின் சகல மட்டங்களில் மட்டுமின்றி, அனைத்து கல்லூரிகளிலும் கிளைபரப்பி ஊழலை வளர்க்கிறது. பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமனத்திற்கு என்று பல்கலைக் கழக மானியக் குழு சில வரையறைகளை நிர்ணயித்து உள்ளது. அதன்படி துணைவேந்தராக ஒரு பல்கலைக் கழகத்திற்கு நியமிக்க படுபவர் பேராசிரியராக குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவிலான ஆய்வு கட்டுரைகள் எழுதி இருக்க வேண்டும்…உள்ளிட்ட கல்வித் தகுதிகளுடன் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இருக்கக் கூடாது!

ஆனால், 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது சசிகலா உறவினர் என்ற தகுதியில் மட்டுமே சாதாரண துணை பேராசிரியராக உள்ளவர் கூட துணைவேந்தரானார்கள்! அப்போது தொடங்கிய ஊழல் அதன் பிறகான திமுக ஆட்சியில் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டது. இறுதியாக அதிமுக ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் இந்த அசிங்கங்கள் விஸ்வரூபமெடுத்து விரும்பத்தாகாத சம்பவங்கள் பலவற்றுக்கு வழிகோலின!

அதிமுக ஆட்சியின் கல்வி அமைச்சர்கள் பழனியப்பன், கே.பி.அன்பழகன்

இத்தனைக்கும் துணைவேந்தர்கள் நியமனத்திற்கு என்று பல விதிமுறைகள் உள்ளன. பலரிடம் இருந்தும் வெளிப்படையாக விண்ணப்பங்களை கேட்டு பெற வேண்டும். அதை பரிசீலித்து அதில் இருந்து பத்து பேரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் இருந்து மூவரைத் தேர்ந்தெடுத்து ஆளுனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கென்று ஒரு தேர்வு குழுவும் உள்ளது. அந்த மூவரில் இருந்து ஒருவரை ஆளுனர் தேர்வு செய்வார்! அட, இவ்வளவு புரசிஜர் உள்ளதே? பிறகு எப்படி பணம் தந்து பதவி பெற முடியும் என ஆச்சரியமாக இருக்கலாம்!

இதில் துணைவேந்தர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்வு செய்வதற்கான குழுவிலேயே ஊழல் பேர்வழிகளை புகுத்திவிடுவார்கள் ஆட்சியாளர்கள்! அவர்கள் தகுதியான விண்ணப்பங்களை எல்லாம் சிரத்தையாக நிராகரித்து விடுவார்கள்! தகுதியற்ற குறிப்பிட்ட ஒரு நபரை தேர்வு செய்யும் விதமாக சட்டவிதிகளையே தளர்த்தி விடுவார்கள்! இறுதியாக மூன்று நபர்கள் கொண்ட பட்டியல் ஆளுனருக்கு தரப்படும் போது, அதில் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கான குறிப்பிட்ட ஒரு நபரை தேர்வு செய்யச் சொல்லி வேண்டுவார்கள்! தங்களுக்கு எதுக்கு வீண்வம்பு? என ஆளுனர்களில் பெரும்பாலானவர்கள் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்கள்!

இந்த வழிமுறையை எதிர்த்தவர் பன்வாரிலால் புரோகித் தான்! இது குறித்து நான்காண்டுகளுக்கு முன்பே அவர் பேசியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில்அக்டோபர் -6,2018ல்  நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அன்றைய ஆளுனர் பன்வாரிலால் புரோகித்,‘‘தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை ஆளுனராக பதவியேற்ற பின்னர் நான் அறிந்து கொண்டேன். பல கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு தான் துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை. பின்னர் அது உறுதியானவுடன் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அதன்பிறகு விழிப்புணர்வு பெற்று 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பேச்சு அப்போதே சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாகத் தான் அவர் அண்ணா பல்கலைக்கு சூரப்பாவை துணைவேந்தராக அதிரடியாக நியமித்தார்! ஏனென்றால், அதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கு விஸ்வநாதன், ராஜாராம் போன்ற படுமோசமான ஊழல்பேர் வழிகள் துணைவேந்தர் பொறுப்பேற்று கல்லா கட்டினர்! அதே போல சென்னை பல்கலையிலும் திருவாசகம், கெளரி, தாண்டவன் ஆகியோர் பல்கலைக் கழகத்தின் மாண்பையே படுகுழிக்கு தள்ளினர்.

இதனால் தான் 2016 ஆம் ஆண்டு கண்ணியத்திற்குரிய கல்வியாளர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் துணைவேந்தர்கள் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்படுவதையும்,ஊழ்ல் தலைவிரித்தாடுவதையும் எதிர்த்து, உயர்நீதிமன்றம் சென்றார் என்பது நினைவிருக்கலாம்!

தமிழகத்தில் 21 அரசு பல்கலைக் கழகங்கள் உள்ளன! இவற்றில் கடந்த சில ஆண்டுகளாகவே துணைவேந்தர் பதவிகள் பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி பதவி வாங்கி வந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பல லட்சங்கள் லஞ்சம் வாங்க தலைப்பட்டனர். இது இப்போதும் நடைபெற்று வருகிறது.

முறைகேடான பணி நியமனங்களில் பண வசூல்,

பல்கலை மானியக்குழு (யுஜிசி) விதிகளுக்கு புறம்பாக கல்லூரிகள் செயல்படவும், காசு பண்ணுவதற்காகவே பாடப்பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்குவது,

தேர்வு முடிவுகள் வெளியிட தேவையில்லாமல் தனியார் நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டு பணம் பார்ப்பது…,

என பல்கலைக் கழகத்தையே கொள்ளைக் கூடாரமாக்கிவிட்டார்கள் ஊழல் துணைவேந்தர்கள்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து தகுதியற்ற பலர் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்ததும், நூலகர், ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கும் கூட தகுதியற்ற நபர்கள் நியமிக்கப்பட்டதும் செய்திகளில் அடிபட்டன!

காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை ஆடாத ஆட்டங்கள் ஆடியதின் விளைவாய்   சென்னை உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை பணம் தந்து பெற்ற ஈவு இரக்கமற்ற ஊழல் பேர்வழி கணபதி கணக்கற்ற வகையில் சகல விதங்களிலும் கையூட்டு வாங்கியதாக கைது செய்யப்பட்டு  பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடைசியாக தன் பதவியைத் தக்க வைக்க அன்றைய ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தைப் பார்த்து கூழைக் கும்பிடு கெஞ்சிப் பார்த்தார். ஒன்றும் பலனில்லை, கைதானார்.

பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன் கூச்ச நாச்சமின்றி ஊழலில் புழுபோல திளைத்து நெளிந்தார்! இவருக்கு ஒத்தாசை செய்த அங்கமுத்து என்ற பதிவாளர் தற்கொலை செய்து சாகக் காரணமானார். கடைசியில் கைதாகி சிறைச்சாலை சென்றார்! தஞ்சை தமிழ் பல்கலையில் சசிகலா சிபாரிசில் க.பாஸ்கரன் நியமிக்கப்பட்டார். அவரும் மிகுந்த கெட்ட பெயர் வாங்கி கைதானார்.

எப்படி போலீஸ் ஸ்டேசன்களில் திருடர்கள் போட்டோ போட்டு எச்சரிக்கை தருவார்களோ, அதே போல கைதான இந்த ஊழல் துணைவேந்தர்களின் புகைப்படங்களை காலாகாலத்திற்கும் அந்த சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தில் மாட்டி எச்சரிக்கை தர வேண்டும். இது அடுத்து ஊழலில் ஈடுபடுவர்களுக்கும் இது தான் நிலைமை என புரிய வைக்க வேண்டும்.

ஊழல் துணைவேந்தர்கள் சுவாமிநாதன், பாஸ்கரன்

ஒரு பல்கலைக் கழக துணைவேந்தர் தனியாக தவறு செய்ய முடியாது. கூட இருக்கும் பதிவாளர், டீன், சூப்பரவசைர்கள், வினாத்தாள் திருத்துபவர்கள், கணக்கர்கள் என சகலரையும் அதில் இணைத்தே செய்ய முடியும்! அது மட்டுமின்றி, அந்த பல்கலைக் கழகத்தை சார்ந்து இயங்கும் அனைத்து கல்லூரிகளையும் இவர்கள் வேட்டைக்காடாக்கி விடுவார்கள். இவர்களுக்கு கப்பம் கட்ட அவர்களும் முறைகேடுகளை அதிகம் செய்யத் துணிவார்கள்! இதனால் பல லட்சம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்காது என்பது மட்டுமல்ல, பொருளாதார இழப்புகளும் நேர்கின்றன! இதனால் ஆராய்ச்சியின் இருப்பிடமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு ’பட்டம்’ அளித்து பணம் பார்க்கும் வியாபார ஸ்தளங்களாகிவிடுகின்றன!

ஒழுக்கத்தை கற்க வேண்டிய இடத்தில் மாணவர்கள் ஊழலை கற்று வெளியேறுகின்றனர்.  பெரும்பாலும் பல பல்கலைக்கழகங்களில் எந்த நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தொலைத்தூரக் கல்வி மற்றும் வினாத்தாள் திருத்துதல் ஆகியவையுமே கூட ஊழல் மையங்களாகிவிட்டன!. பி.எச்.டி பட்டங்களையும், டி.லிட் பட்டங்களையும்  சர்வசாதாரணமாக விற்பனை செய்தனர். பாலியல் சுரண்டல்களும் இங்கு நடந்தேறின!

முன்பு உயர்கல்வித் துறையில் ஊழலில் கொடிகட்டிப் பறந்த அதிமுக அமைச்சர்கள் பழனியப்பன், கே.பி.அன்பழகன் பல கேடுகளுக்கு வித்திட்டுவிட்டனர். அதற்கு முன்பு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தான் தற்போதும் உயர்கல்வித் துறை அமைச்சராகி உள்ளார். அவர், ”அதிமுக ஆட்சி ஊழல்களே பரவாயில்லை” என சொல்லத் தக்க வகையில் அவர்களைக் காட்டிலும் ஒருபடி ஏறி விஞ்சி நிற்கிறார்.

இப்படியாக கேள்வி கேட்பாரே இல்லாத வகையில் ஊழல் தலைவிரித்தாடிய சூழலை தான் தற்போதைய ஆளுனர் ஆர்.என்.ரவி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் மனோபாவத்திற்கான கல்வியாளர்களைக் கண்டெடுத்து பதவி வழங்கி வருகிறார். திமுக ஆட்சியில் கல்வியாளர்களை காவிமயபடுத்த ஆளுனருக்கு ஒரு அரிய வாய்ப்பு ஊழல் ஆட்சியாளர்களால் சாத்தியமாகியுள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time