தீமைகளை உருவாக்கி கொள்வதற்கா தீபாவளி?

-ம.வி.ராஜதுரை

சந்தோஷம் கொள்ள வேண்டிய பண்டிகையை சங்கடப்படுவதாக நமக்கு  நாமே மாற்றிக் கொள்கிறோம். எத்தனையெத்தனை தீ விபத்துகள், காயங்கள், காற்று மாசுபடல்கள்! நச்சுக் காற்று மண்டலத்தில் நகரங்கள் நரகங்களாகின! சிலர் சக்கரை வியாதிக்கு வரவேற்பு தரும் விழாவாகவும் இதை மாற்றிவிடுகின்றனரே!

தீபாவளி திருநாள்  நச்சுப் புகை மண்டலம் தமிழகத்தை மாத்திரம் அல்ல, இந்தியாவில் தில்லி தவிர்த்த அனைத்து மாநிலங்களையும் நச்சு புகை மண்டலத்தில் ஆழ்த்திவிட்டது!

பட்டாசு வெடிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 180 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளன . தமிழ்நாடு முழுக்க பார்த்தால் 280 தீ விபத்துக்களாம்!. பெரும்பாலான வீபத்துக்கள் ராக்கெட் வெடிகளால் தான் நிகழ்ந்துள்ளன! தெருவில் பொறுப்பின்றிவிடும் ராக்கெட்டுகள் பலரின் வீட்டு ஜன்னல்களில் பாய்ந்துள்ளன! இதனால் பல இடங்களில் சண்டை சச்சரவுகள் எழுந்தன! ஆயிரம் வலா, இரண்டாயிரம் வாலா போன்ற சரவெடிகளுக்கு தடைவிதிக்கப்பட்டும் அவை சரளமாக பயன்படுத்தப்பட்டன!

சென்னையில் தெருக்களுக்கு குறைந்தது 5 நாட்டு நாய்களாவது வசிக்கும். தீபாவளி அன்று பாதுகாப்பு தேடி இந்த ஜீவன்கள் அலைந்ததை எழுதுவதற்கு வார்த்தைகள் கிடையாது. வீட்டில் வளர்க்கும் அத்தனை ஜீவன்களுக்கும் இது தான் கதி. பறவைகள் என்ன பாடுபட்டிருக்குமோ..? ஆண்டு தோறும் தொடரும் அவலங்களில் இவையும் அடங்கும்.

பட்டாசு தொடர்பான அரசு அறிவிப்பு வழக்கம்போல வெளியாகி, காற்றில் கரைந்தது!. தீபாவளி அன்று காலை 6:00 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8.00 மணி வரை பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என்பதை யாருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. காலையில் தொடங்கிய வெடிச் சத்தம் நள்ளிரவு வரை நீடித்தது.

நேரக் கட்டுப்பாட்டை மீறி எதிர் விளைவுகளை அறியாமல் சென்னை மாநகரில் பல்லாயிரம் பேர் பட்டாசுகள் வெடித்தனர். போலீசார் தங்களால் முடிந்த அளவுக்கு 163  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தீபம் – விளக்கு ; ஆவளி – வரிசை. தீபம்+ஆவளி = தீபாவளி. இது தான் நம் முன்னோர்கள் தந்த விளக்கம்! நூறாண்டுகளுக்கு முன்வு வரை பட்டாசு இல்லாமல் தீபங்களை மட்டுமே ஏற்றித் தானே நாம் தீபாவளியைக் கொண்டாடினோம். இடைப்பட்ட காலத்தில் சிவகாசியைச் சேர்ந்த ஒரு சிலர் சீனாவிற்கு சென்று இந்தப் பட்டாசு வெடிகளை பயின்று வந்து, அவற்றை இங்கே செய்து தந்து நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.

மேலும் தீபாவளி பண்டிகையை மிதமிஞ்சிய நுகர்வு கலாச்சாரத்திற்கான பண்டிகையாக ஆக்கிவிட்டனர் வியாபாரிகள்! கடன்பட்டேனும் பட்டாசுகள் துணிமணிகள், இனிப்புகள் வாங்கி குடும்பத்தை சந்தோஷப்படுத்தும் நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இன்னும் பலர் அளவுக்கதிகமாக இனிப்புகளை உட்கொண்டு சக்கரை வியாதியை சலாம் போட்டு அழைக்கின்றனர்!

நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசிப்பவன் என்ற முறையில், தீபாவளிக்கு மறுநாள் குப்பைகளின் நகரம் போல் சென்னை மாநகரம் காட்சி அளிப்பதை பார்க்கிறேன். தமிழகம் முழுக்க பல்லாயிரம் டன் குப்பைகள் சேர்கின்றன!

சுமார் ஒரு கோடி மக்களுக்கு மேல் வாழும் சென்னை நகரின் பெரும்பாலான தெருக்களில் அரை அடிக்கு மேல் பட்டாசு குப்பைகள் கிடந்தன! இவை சல்பர், பொட்டாசியம் பெர்குளோரைடு, வெடி உப்பு, மெக்னீசியம் மற்றும் வெடிபொருள் செய்வதற்காக பயன்படுத்தும் பல்வேறு நச்சு ரசாயனங்கள் அடங்கிய குப்பைகள்.

தீபாவளி , வடகிழக்கு பருவமழை  காலகட்டத்தில் வரக்கூடிய பண்டிகை ஆகும். இந்தக் காலங்களில் பெரும்பாலும் மழைப் பொழிவு இருக்கும்.  இந்த ரசாயன கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய் முதலிய சென்னையில் ஓடும் பத்துக்கு மேற்பட்ட கால்வாய்களிலும் மற்றும் அடையாறு கூவம் ஆறுகளிலும் சேர்ந்து மழை நீரோடு கடலுக்கு செல்லும். அந்தக் கடலில் வாழும் மீன்கள் வழியாகவும்,  நச்சுப் புகையாக மேலே சென்ற மேகத்தின் வழி மழையாகவும் மீண்டும் மனிதர்களிடம் வரும்.

தீபாவளி பட்டாசு, வெடிகள் எழுப்பிய நச்சுப் புகையால் கொடும் நச்சுகளை ஆகாயம் தன் வயிற்றில் கட்டி வைத்திருக்கிறது. எத்தனை மனிதர்களுக்கு இது நச்சுக்கட்டியாக உருவெடுக்க போகிறதோ தெரியவில்லை.

நாம் சுவாசிக்கும் காற்றில் ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரான் என்பது அனுமதிக்கப்பட்ட மாசு ஆகும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அதிகாலை எடுத்த கணக்கெடுப்புப்படி சென்னை மாநகரின் சராசரி மாசு அளவு 200 மைக்ரானை தாண்டி இருக்கிறது.

அதிகபட்சமாக வட சென்னையில் உள்ள மணலியில் 250 மைக்ரான்  பதிவு ஆகி உள்ளது. தென் சென்னையில் உள்ள ஆலந்தூரில் 218 மைக்ரான் பதிவாகி இருக்கிறது. சென்னை மாநகரம் போல தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் அனைத்திலும் பட்டாசு நச்சுப்புகை சூழ்ந்து கொண்டிருந்துள்ளது.

எந்த ஒரு விளைவுக்கும் அதற்கு சமமான எதிர்விளைவு இருக்கும் என்பது அறிவியல் விதி.

24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கு மோசமான அளவுள்ள மாசுக்காட்டில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளும், முதியவர்களும், நோயாளிகளும் இருந்துள்ளார்கள். அவர்களுடைய சுவாச மண்டலமும் முக்கிய உறுப்புகளும் என்ன பாடுபட்டிருக்கும்.? தீபாவளி என்பது சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மேலும் சுகவீனங்களை ஏற்படுத்துகிறது! நுரையீரல் பழுதுள்ளவர்களை மேலும் நோகடிக்கிறது.

தன் மக்களுக்கு அடிப்படை வசதிகளையே நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல், பொருளாதார நெருக்கடியில் திணறி கொண்டிருக்கும் ஒரு அரசிடம் இதற்கான ஆய்வையும், தீர்வையும் எதிர்பார்க்க முடியாது. மக்கள்தான் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்.

சென்னையில்  நேற்று குவிந்த பட்டாசு குப்பைகளை 20,000 துப்புரவு பணியாளர்கள்  பெருக்கி அள்ளினர். இவை  லாரிகள் மூலம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிடங்குக்கு கொண்டு போகப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மதுரையில் ஆயிரம் டன் குப்பைகள் சேர்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன! புதுக்கோட்டையில் மட்டும் 160 டன் பட்டாசு குப்பைகள் அள்ளப்பட்டதாக இன்று காலை  தகவல் வெளியானது. இதை அடிப்படையாக வைத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.

சாதாரண குப்பைகளே இப்படி விஷமாகும் பட்சத்தில், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சேரும் பல்லாயிரக்கணக்கான டன் நச்சு பட்டாசு குப்பைகளை எங்கு கொண்டு போய் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை.

சென்னை மாநகரத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பாதி ஏற்கனவே குப்பை மேடு ஆகிவிட்டது.!

இது போன்ற பிரச்சனைகளுக்கு மக்கள் விழிப்புணர்வு மட்டுமே, இறுதித் தீர்வை கொடுக்கும். அதுதான் அரசாங்கத்தை மக்கள் நலன் நோக்கி நகர்த்த வைக்கும்.

என்னுடன் பிறந்த சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே என் அண்ணன் மகள் இந்த நோய்க்கு பலியாகிவிட்டார். இந்த புற்று நோய் நோய் நம் சமூகத்தில் மலிந்து காணப்படுவதற்கு இவையும் சான்று.

மத்திய அரசின் ஆயுள் காப்பிட்டு நிறுவனமான LIC   “கேன்சர் கேர்” என்று புற்று நோய்க்காக மட்டுமே ஒரு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த நோய் பெருகுவதால் இதை வைத்து மருத்துவ உலகில் பணம் பண்ணுவதும் நடைபெறுகிறது. ஒரு கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் இந்த நோய்க்காக சிகிச்சை பெறுவதற்கு குறைந்தது குறைந்தது 10 லட்சம் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டாசு தொழிலில் பல்லாயிரம் பேர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு இது வாழ்வாதாரமாக இருக்கிறது. இதை நம்பி பலர் தொழில் செய்கின்றனர். இது மிக முக்கியமான பிரச்சனை. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்தில் இவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்திற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

நான் ஒரு இந்து என்ற அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகிறேன். என் குடும்பம் சந்தித்த இழப்பு தான் இந்த கட்டுரை எழுத வைத்தது. நீங்கள் எந்த மதத்தவராக வேண்டுமானாலும் இருங்கள், ஆனால், நீங்கள் கொண்டாடும் பண்டிகைகள் இந்த மண்ணையும், காற்றையும், நீரையும் ஆகாயத்தையும் சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.!

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்”(குறள் 435)

பொருள்: குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவர்களுடைய வாழ்க்கை நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்து விடும்.

கட்டுரையாளர்; ம.வி.ராஜதுரை

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time