ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன?

- சாவித்திரி கண்ணன்

என்ன முட்டாள்தனம்? இங்கிலாந்தின் முதல் இந்தியா வம்சாவளிப் பிரதமராம்! இந்தியாவின் மருமகனாம்! இந்திய பாராம்பரியத்தில் வந்தவர்  இங்கிலந்து பிரதமராகிவிட்டாராம்! இங்கிலாந்தில் சிறுபான்மையின இந்து ஒருவரை பிரதமராக்கி விட்டார்களாம்! எப்படியெப்படி எல்லாம் தப்பிதமான புரிதல்கள்!

இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார்! அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது தேர்வு குறித்து தங்கள் பார்வைகளை, விமர்சனங்களை வைக்கின்றனர். ‘இந்தியாவின் மருகன் பிரிட்டன் பிரதமரானார்’, ‘பிரிட்டனின் முதல் இந்து பிரதமர்’, ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் பிரிட்டன் பிரதமர்’, ‘சிறுபான்மையினர் ஒருவரை இங்கிலாந்து பிரதமராக அங்கீகரித்துள்ளது..’என பல வகைப்பட்ட விமர்சனங்கள்! இவை யாவுமே ரிஷி சுனக் குறித்த தவறான பிம்பங்களைத் தான் கட்டமைக்கின்றன! இந்த அரைகுறை புரிதல்கள் மிக ஆபத்தானவை! யதார்த்தங்களை புறந்தள்ளியோ அல்லது சரியான புரிதல் இல்லாமலோ சொல்லப்படுபவை!

முதலாவதாக ரிஷி சுனக்கை தேர்தல் மூலமாக மக்கள் வாக்களித்து அங்கு பிரதமராக்கவில்லை.! தற்போது தேர்தல் நடந்திருந்தால் அவர் சார்ந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி மண்ணை கவ்வி இருக்கும்! அந்த அளவுக்கு அந்தக் கட்சியின் கடந்த இரண்டு பிரதமர்களான போரீஸ் ஜான்சனும், லிஸ்டிரஸும் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகிவிட்டனர்! ”நியாயப்படி பொது தேர்தலை சந்திப்போம்” என்ற தொழிலாளர் கட்சி விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து விட்டு, கன்சர்வேட்டிவ் கட்சி தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சித்தது!

ஆனால், மூன்று பேர் போட்டியிட முன்வந்தனர். அதில் 350 பேர் கொண்ட கட்சி எம்.பிக்களில் 140 எம்.பிக்களின் ஆதரவு பெற்ற வகையில் ரிஷி சுனக் பிரதமராகியுள்ளார். நன்றாக கவனித்தால், அவர் சார்ந்த கட்சிக்குள்ளேயே அவர் முழுமையான ஆதரவை பெறவில்லை! இருப்பதில் சற்று அதிகமான எம்பிக்கள் ரிஷி சுனக்கை ஆதரித்துள்ளனர். இந்த வகையில் சூழ்நிலைகள் எட்டாண்டுகள் மட்டுமே அரசியல் அனுபவம் கொண்ட ரிஷி சுனக்கிற்கு சாதகமாகிவிட்டபடியால் அவர் பிரதமராகிவிட்டார் – ஒரு விபத்தைப் போல! ஆகவே, ரிஷி சுனக் ‘தேர்தல் வழி இங்கிலாந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல’ என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, ‘அவர் இந்தியாவின் மருமகன்’ என்பது படுமுட்டாள்தனமான பார்வையாகும்! அவரது வம்சா வழிப்படி அவரின் தந்தை வழி தாத்தா அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்! அந்த குறிப்பிட்ட ஊர் தற்போது பாகிஸ்தானில் உள்ளது என்ற வகையில் பாகிஸ்தானுமே கூட ரிஷி சுனக்கை மரபு வழி உரிமை கொண்டாட வாய்ப்பாகிறதே!  அவர் இந்து என நாம் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது? ‘இங்கிலாந்தில் மதமாச்சரியங்களற்ற உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்குகிறது’ என்றல்லவா நம் புரிதல் இருக்க வேண்டும்.

தாய், தந்தை, மாமனார், மாமியார், மனைவி, குழந்தைகளுடன் ரிஷி சுனக்.

அவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது உண்மை தான்! ஆனால், அவர் மகளான அக்‌ஷிதா இங்கிலாந்தின் குடிமகளே அன்றி, இந்தியாவின் குடிமகள் அல்ல! கணவன், மனைவி இருவருமே இங்கிலாந்தின் குடிஉரிமை பெற்றவர்கள்! ஆகவே, ரிஷிசுனக்கை தேவையில்லாமல் நாம் உரிமை கொண்டாடுவது அவர் மீது பிரிட்டிஷ் மக்களுக்கு சந்தேகப் பார்வையை தோற்றுவித்து அவருக்கு சிக்கலைக் கூட ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால், அதை தவிர்த்து அவர் பிரதமராக தேர்வானதை அரசியல் பூர்வமாக அணுக வேண்டும். ஏனெனில், எப்படி அமெரிக்காவில் துணை குடிஅரசுத் தலைவராக கமலா ஹாரீஸ் தேர்வானதால் இந்தியாவிற்கோ, தமிழ் நாட்டிற்கோ கடுகளவும் நன்மை இல்லையோ, அதே தான் ரிஷி சுனக் விஷயத்திலும் என்பதே உண்மை! மற்றபடி சும்மா அவரவர் ஆசைக்கு ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டியது தான்!

ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவருமே ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்! ஆப்ரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள்! அந்த வகையில் இந்தியர்களைக் காட்டிலும், ஆப்ரிக்காவும் அவரை உரிமை கொண்டாடலாமே! ஆக அவர் இந்தியரா? பாகிஸ்தானியரா? ஆப்ரிக்கரா? அல்லது இங்கிலாந்துக்காரா? என்றால், இன்றைய குளோபல் உலகத்தில் அவர் உலகளாவிய ஒரு கலப்பு மனிதன்! அவரது பெற்றோர்கள் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது 1960 ஆம் ஆண்டில்! 1980ஆம் ஆண்டு பிரிட்டனின் செளத்தாம்டனில் ரிஷி சூனக் பிறந்தார். ஆக, பிறந்து வளர்ந்து, செல்வாக்கு பெற்று உயர்ந்த இடம் தான் அவரது தாய்நாடு! இங்கிலாந்தின் குடிமகனாகிவிட்ட ஒருவரை இங்கிலாந்து நாட்டுக்காரராக பார்ப்பதும், புரிந்து கொள்வதுமே ஆரோக்கியமானது.

இளவரசர் மூன்றாம் சார்லஸுடன் ரிஷிசுனக்

மற்றொரு உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அவர் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் வேட்பாளராக வரும் அளவுக்கு விரும்பப்படுவதற்கான காரணம், அவர் சிந்தனையில் ஒரு முழுமையான ஆங்கிலேயராக உருவாகிவிட்டார். அவரது இயல்பை உற்று நோக்கினால், அவர் இங்கிலாந்திற்கு அகதிகள் வருவதற்கு கடும் எதிர்ப்பு காட்டுகிறார்! – அவர் தாய்,தந்தையே அங்கு அகதிகளாக வந்தவர்கள் தான் என்பதை மறந்தவராக! பொருளாதாரத்தில் தாராளமயத்தை ஆதரிக்கிறார்! ”பிரிட்டன் அரசு இது வரை தன் குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதை வாபஸ் பெற்று, தனியாரிடம் மருத்துவத்தை முழுமையாகத் தர வேண்டும்” என்கிறார்! ‘தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க வேண்டும்’ என்கிறார். ‘தொழிற்சங்க உரிமைகளை முடக்க வேண்டும்’ என்கிறார்! கடுமையான கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருக்கிறார்!

பெரிய நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தருவதை ஆதரிப்பவராக உள்ளார். சிறு தொழில்கள் மீது அக்கறை கொண்டவராகத் தெரியவில்லை! அதனால் தான் லிஸ்டிரஸ் 40 பில்லியன் டாலர்களை ( 3.25 லட்சம் கோடிகள்) பெரு நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தந்தது, ”நல்லெண்ண நடவடிக்கை தான்” எனச் சொன்னார். இந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவராக இருந்தும், ‘மாட்டிறைச்சி சாப்பிடுவது குற்றமல்ல’ என்ற லிபரல் சிந்தனை கொண்டவராக உள்ளார். இவையாவுமே ரிஷி சுனக் ஒரு அப்பட்டமான ஆதிக்க ஆங்கிலேய சிந்தனை கொண்டவர் மட்டுமல்ல, இந்திய வலதுசாரி சித்தாந்தத்திற்கு நெருக்கமானவராகவும் உள்ளார் என்பதை நாம் அறியலாம்! இது தான் உண்மையான முகம்! இங்கே பாஜக ஆதரவாளர்கள் ரிஷி சுனக்கை ஏன் கொண்டாடுகின்றனர் என்பதை நாம் இந்தப் பின்னணியில் இருந்து புரிந்து கொள்ளலாம்!

ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தது பெரிய விஷயமில்லை. இன்று இங்கிலாந்து இருக்கின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை இவர் எப்படி மீட்டெடுக்கப் போகிறார் என்பதில் தான் இருக்கிறது அவரது வெற்றியே! ஏனென்றால், இங்கிலாந்து மக்கள் இந்தியர்களைப் போல அல்ல! புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள்! அதே சமயம் பொறுப்புக்கு வந்த தலைவரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பார்கள்! தவறு செய்தால், அது யாராக இருந்தாலும் கடுமையான விமர்சனங்களையும், எதிர்விளைவுகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்.

பதவி இழந்த முன்னாள் பிரதமர்கள் போரீஸ் ஜான்சன், லிஸ்டிரஸ்

போரீஸ் ஜான்சனுக்கு என்ன நேர்ந்தது? பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாமல் சாதுரியமாக நைச்சியம் பேசிய போரீஸ் ஜான்சனின் முகத்திரையை கிழித்தார்கள்! ஜகத்தாளம் செய்து காண்பித்தும் மயங்காமல், பதவியில் இருந்து கீழே இறக்கினார்கள்! அடுத்து பிரதமராக வந்த லிஸ்டிரஸை 45 நாட்களில் நாடிப் பிடித்து பார்த்து, ”ம்கூம் நீ தேற மட்டாய்! வெளியேறி விடு” என்றார்கள்! அவர் பதவி விலகிய பிறகும் கூட, ”அவரது ராஜுனாமா ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட தகுதி பெறாது” என எழுதின பத்திரிகைகள்!

இங்கிலாந்தில் மக்களை விலை கொடுத்து வாங்க முடியாது! அங்குள்ள ஊடகங்களை ஊழல்மயப்படுத்த முடியாது, பாராளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேச முடியாது! பொய் பேசினாலே புறம் தள்ளிவிடுவார்கள் – அது எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும்! தவறு செய்தால் யாராயிருந்தாலும் தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள்! இந்தியாவில் 11 லட்சம் கோடிகள் கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு மோடி போல ஹாயாக எந்த பிரதமரும் பிரிட்டனில் நடமாடவே முடியாது! ரிஷு சுனக் முள் கிரீடத்தையே தற்போது அணிந்துள்ளார்! அதை மலர் கிரீடமாக மாற்றுவது அவர் செயல்பாட்டில் தான் உள்ளது! அதற்கு அவர் தகுதியானவர் தானா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும்!

சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time