‘ஹிஜாப்பை கட்டாயப்படுத்தாதே’ எனக் கூறி, ஈரான் பற்றி எரிகிறது! எல்லா மதவாத அரசுகளும் ஒரே மாதிரி தான் சிந்திக்கின்றன! அது இந்துத்துவ பாஜக அரசானாலும் சரி, இஸ்லாமிய ஈரான் அரசானாலும் சரி! தங்களுக்கான உடையை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு கிடையாதாம்! ஹிஜாப்’ அணிவது குறித்து முஸ்லிம் பெண்கள் என்ன சொல்கிறார்கள்?
ஈரானில் மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் ஹிஜாப்பை சரியான முறையில் அணிந்திருக்கவில்லை என அந்த நாட்டு காவல்துறை அடித்தே கொன்றுவிட்டது. இந்த சம்பவம் இது வரை பூனை போல அமைதி காத்து வந்த இஸ்லாமியப் பெண்களை புலியாக மாற்றிவிட்டது! களத்தில் குதித்து விட்டனர்! ஈரானில் சுமார் 80 நகரங்களில் 11 நாட்களாக போராட்டம் எழுச்சியுடன் நடக்கிறது. ”ஈரான் அதிபர் அயதொல்லா அலி காமினியே, இதோ நாங்கள் அனைவருமே ஹிஜாப்பை கழற்றி எறிகிறோம்! உன் கட்டாய அறிவிப்பு எங்கள் மயிருக்கு சமானம், அதையும் வெட்டி எறிகிறோம், சர்வாதிகாரியே செத்துப் போ” என ஆக்ரோஷமாக களமாடினர். அதிர்ந்து போன அதிபர் துப்பாக்கி சூட்டிற்கு ஆணையிட்டு, தற்போது 50 பேர் வரை ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் உயிர் துறந்துள்ளனர்!
இதனால் உலக நாடுகள் ஈரான் அதிபரை உலுக்கி எடுத்துவிட்டன. ஐ. நா.சபை, ”பெண்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்தக் கூடாது” என ஈரான் அரசை எச்சரித்துள்ளது! ‘இஸ்லாமியப் பெண்கள் என்றால், இஷ்டப்படி மதத்தை காட்டி அடிமைப்படுத்தலாம் என நினைத்துவிடாதே..’என அதிபரையே அலற வைத்துவிட்டனர் ஈரான் பெண்கள்! ஈரான் பெண்களுக்கு ஆதரவாக பல நாடுகளில் பெண்கள் ஈரான் தூதகரகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். !
கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிலையங்களுக்குள் வரக்கூடாது என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. இதனை எதிர்த்து கல்லூரி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் ஹிஜாப் தடை மீதான வழக்கின் தீர்ப்பு கடந்த 13 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த அமர்வின் நீதிபதி ஹேமந்த் குப்தா, நீதிபதி சுதான்ஷு துலியா ஆகியோர் இருவேறு வகையான கருத்துக்களுடன் தீர்ப்பை அளித்திருந்தனர். இதன் காரணமாக ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.
இதே போல கர்நாடகாவின் முஸ்லிம் வஃக்பு வாரியம் தொடுத்திருந்த ஒரு வழக்கில் கடந்த ஆகஸ்டில், பெங்களூரூவின் சம்ராஜ்பேட்டிலுள்ள முஸ்லிம்களின் ஈத்கா மைதானத்தில் இந்துக்களுக்கு விநாயக சதூர்த்தி விழா கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நீதிபதி குப்தா, ‘சரி’ என ஏற்றிருந்தார். அதே சமயம் மற்றொரு நீதிபதியான துலியா, அந்த உத்தரவை ரத்து செய்தார். பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
”இம்சை மூலம் இஸ்லாமியப் பெண்களை ஹிஜாப் அணியும்படி நிபந்திக்கக் கூடாது” என, About Elly, A Separation போன்ற படங்களின் ஈரானிய இயக்குநரான அஸ்கார் பர்ஹாடி போராடி வரும் பெண்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.
ஹிஜாப் அணிவது குறித்து என்ன நினைக்கிறார்கள் என இஸ்லாமிய பெண்கள் ஒரு சிலரிடம் கருத்து கேட்டோம். சென்னை கிரசென்ட் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கும் எஸ். சபா பேசுகையில் ” என்ன உடை அணிய வேண்டும் என்பதை அந்தந்த பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இது அவர்களின் தேர்வு. இதில் கருத்துக் கூற மற்றவர்களுக்கு உரிமை இல்லை. ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்ற சட்டம் இருந்தது. இதை எதிர்த்து ‘தோள் சீலை’ போராட்டம் நடக்கவில்லையா? இப்போராட்டத்தினால் அந்த சமூகப் பெண்கள் நிலை மாறவில்லையா ?
நான் படிக்கும் போது ஹிஜாப், புர்கா அணிந்ததில்லை. இப்போது ஹிஜாப் அணிகிறேன். (அதாவது ஸகார்ப் போல தலையில் அணிந்து கொள்வது). புர்கா என்பது முழு உடலையும் போர்த்திக்கொள்ளும், தளர்வான உடை; இந்தியாவில் புர்காவை விட ஹிஜாபைதான் அதிக அளவில் அணிந்து வருகின்றனர். ஹிஜாபை முஸ்லிம் அல்லாத பெண்கள் கூட தம் பாதுகாப்பிற்காகவும் அணிகிறார்கள். ஹிஜாப் அணிய வேண்டும் என்று குரானில் எங்கும் சொல்லவில்லை. ஆனால் வழக்கமாக ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை இதை அணியக்கூடாது என்று சொல்வது அவர்களின் தனி உரிமையில் தலையிடுவதாகும். மற்றவர்கள் உரிமை பாதிக்காத வரையில், எதை அணிய வேண்டும் அல்லது அணியக் கூடாது என்று சட்டம் சொல்ல முடியாது. புடவை அணிவதா, ஜீன்ஸ் அணிவதா என்பதெல்லாம் சம்மந்தப்பட்ட பெண்கள் முடிவு செய்துகொள்ளட்டும். ஈரானாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் எப்படி உடை அணிய வேண்டும் என்ற கேள்வி எப்போதும் ஏன் பெண்களை நோக்கியே எழுப்பப்படுகிறது ?” என்று முத்தாய்ப்பாக கேட்ட எஸ்.சபா, உத்திரப் பிரதேசம் அலிகர் முஸ்லீம் பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவி
‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற நாவல் மூலம் இஸ்லாமிய பெண்களின் மனக்கிலேசங்களை வெளிக்கொண்டுவந்தவர் கவிஞர் சல்மா. சல்மா ஆரம்ப காலத்தில் எழுதுவதற்கு சந்தித்த தடைகளை விளக்கிச் சொல்லும் ‘She write’ என்ற ஆவணப்படமும் வெளியாகி உள்ளது. ” நான் சிறுவயதில் வெள்ளை நிற துணியை தலையில் போட்டிருப்பேன். இப்போது நான் அதை அணிவதில்லை. குரானில் முகத்தை மூடும்படியான உடை அணிய வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. கண்ணியமான உடை அணிய வேண்டும் என்றுதான் அது கூறுகிறது. ஆனால் இக்காலத்தில் பெண்கள் பாதுகாப்பு என்று நினைத்து ஹிஜாப் அணிந்து வருகிறார்கள். அது தங்களது தனித்துவம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு எப்படி நாம் தடைபோட முடியும். ஆனால் இதனை ஒரு பிரச்சினையாக மாற்றுவது ஆர்எஸ்எஸ்தான். தங்களுக்கு அரசியல் ரீதியாக இலாபம் கிடைக்கும் என்று நினைத்து பாஜக இதை பெரிதாக்குகிறது. வெறுப்பு அரசியலை ஊக்குவிக்கிறது. வாக்கு வங்கி அரசியலாக்கப் பார்க்கிறார்கள்! இஸ்லாமிய பெண்கள் புடவை அணியவேண்டுமா அல்லது ஜீன்ஸ் அணிய வேண்டுமா என்று எப்படி நாம் சொல்வதில்லையோ, அதே போல ஹிஜாப் பற்றியும் நாம் ஏதும் சொல்ல வேண்டியதில்லை. அது பற்றி சமூகத்திற்கு என்ன வந்தது? சிந்தனை ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு காலப்போக்கில் அவர்களாவே மாறுவார்கள் ” என்றார் சல்மா.
” எனக்கு வயது 32 ஆகிறது. என்னுடைய சிறுவயது முதல் நான் ஹிஜாப் அணிந்து வருகிறேன். எனது அம்மா, மாமியார் என அனைவரும் இதனை அணிந்து வந்தனர். என்னுடைய மகளும் இதை அணிந்து வருகிறார்” என்கிறார் எட்டாம் வகுப்பு வரை படித்த குடியாத்ததைச் சேர்ந்த ஷகீலா.
“இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் ஒரு முஸ்லிம் என்று அடையாளப்படுத்தி பொதுவெளியில் தனித்துக் காட்டும் உடை அணிவதில் எனக்கு விருப்பமில்லை. கோடைக் காலத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கும் ஹிஜாப் அணிவது மிகவும் இடையூறாக இருக்கும். குரானில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனாலும் ஹிஜாப் அணிவதை ஒரு வழக்கமாக வைத்திருப்பவர்கள் இருக்கின்றனர். ஹிஜாப் அணியவில்லை என்றால்தான் உங்களை பள்ளிக்குள் அனுமதிப்போம் என்பதெல்லாம் தவறு” என்றார் பெயர் சொல்ல விரும்பாத, சென்னையைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவர்.”இந்தியாவில் சீக்கியர்கள் டர்பனோடு இருக்கிறார்கள். அதை நாம் அனுமதி்க்கிறோம். உலகம் எங்கிலும் உள்ள நாடுகள் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களோடு இருப்பதை அனுமதிக்கும்போது, இங்கு மட்டும் அதை தடுப்பது ஏன் ? ” என்றார்.
தென்னாற்காடு மாவட்டத்தில் வளர்ந்த வகிதா ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்; தொழிற்சங்க தலைவர். அவர் பேசும்போது ” நான் எப்போதும் ஹிஜாப் அணிந்ததில்லை. என்னுடைய அம்மா புர்கா அணிந்திருந்தார். பிறகு அதை நிறுத்திவிட்டார்.எனக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் என் தங்கை மகள், ஹிஜாப் அணிந்ததில்லை. மென்பொருள் பொறியாளராகி ஜெர்மனி நாட்டிற்குச் சென்றபோது அங்கு நிகாப் ( கை வரை மூடும் முழு உடை) அணிந்தார். இப்போது இந்தியா திரும்பிய பிறகும் அதை அணிகிறார்; தன்னுடைய சகோதரிகளையும் அதை அணியச் சொல்லி வலியுறுத்துகிறார். உலகம் எங்கிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு (இஸ்லாமோபோபியா) உருவாக்கப்படும் நிலையில் இத்தகைய அடையாளங்கள் தேவை என் அவர்கள் நினைக்கிறார்கள்.
Also read
தற்போது நீதிமன்றங்கள் ஒரு சார்பான நிலையெடுத்து வருகின்றன. இது ஒரு நெருக்கடியான கால கட்டம் தான். ‘ஹிஜாப் அணிந்தால் கல்லூரிக்குள் வரமுடியாது’ என்று சட்டம் போட்டெல்லாம் பிரச்சினையை தீர்க்க முடியாது. இந்தியா போன்ற ஒரு பன்மைத்துவம் நிலவும் ஒரு நாட்டில் பல்வேறு நம்பிக்கைகள், விதவிதமான மனிதர்கள் இருக்கும் ஒரு துணைக் கண்டத்தி்ல் இதுபோன்ற விவாதங்கள் மக்களை ஒன்றுபடுத்தாது” என்றார்.
நாங்கள் ஹிஜாப் அணிந்தேயாக வேண்டும் என்றோ, அணியவே கூடாது என்றோ கட்டளையிடுவதற்கு மற்றவர்களுக்கு உரிமை இல்லை. உடை என்பது அவரவர் தனி மனித சுதந்திரம்! அது கண்ணியக் குறைவாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுவிதியாக இருக்க முடியும்! என்பதே பெண்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்
பொதுவாக பர்தா அணிந்த பெண்களுக்கும் ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு ஒப்பீடு செய்தால் அது என்னவோ ஹிஜாப் அணிந்த பெண்கள் மிகவும் அழகாகவும், படித்த மேல் தட்டு மக்களை போலவும் இருக்கிறார்கள். மேலும் பெரும்பாலும் படிக்க செல்லும் பெண்கள் ஹிஜாப் அணிவதையே விரும்புவது போல உள்ளது. இதை தான் இந்த வெறுப்பு அரசியலை உருவாக்கும் அரசியல் வாதிகளுக்கு பிடிப்பதில்லை. இஸ்லாமியா பெண்கள் படிக்க கூடாது. அது தான் இவர்களின் முக்கிய குறிக்கோள்.
ஹிஜாப் கண்டிப்பாக அணியத்தான் வேண்டும் என்பதுவும் சர்வாதிகாரம்.கண்டிப்பாக அணியக்கூடாது என்பதுவும் சர்வாதிகாரம்தான்.
விடுதலையை விரும்பும்.பெண் ஒருவர் ஹிஜாப் அணிவதை அடிமைத்தனமாகவும்,
பழமைவாத ஆணாதிக்க மதக்கோட்பாட்டின் கட்டுப்
பெட்டித்தனமென்றும் கருதினால் நிச்சயமாக ஹிஜாபைத் தூக்கியெறியும் உரிமை அப்பெண்ணுக்கு உண்டு.
ஹிஜாப் அணிவது அடிமைத்தனம்,பிற்போக்குத்தனம் என்று முற்போக்குவாதிகள் கூறுவதனை ஏற்கலாம்.
ஆனால் மத வெறுப்பிலும்,ஆதிக்க ஆணவத்திலும் ஓர் அதிகார அமைப்புக் கூறுவதனை ஏற்க இயலாது.
பெண்களே அடிமைத் தளையை இனம்,மதம் என எவ்விதப் பெயரிலும் ஏற்காதீர்க்ள் என்பது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள்.
Reading your article has greatly helped me, and I agree with you. But I still have some questions. Can you help me? I will pay attention to your answer. thank you.