புத்தக விமர்சனங்கள்

நா.ரதிசித்ரா, பீட்டர் துரைராஜ்

தென்னாப்பிரிக்காவில் காந்தி என்ற நூல் புதியதாக காந்திப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்ற முனைப்போடும் இதுவரை பலரின் கவனத்தில் இருந்து தப்பிய அரிய தகவல்களை ஆதாரபூர்வமாக கொண்டும்  எழுதபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பிரபல வரலாற்றாய்வாளர் ராமச் சந்திர குஹா எழுதிய Gandhi before india என்ற நூலை மிகச் சிறப்பாக தமிழுக்கு தந்துள்ளார் சிவசக்தி சரவணன்.

காந்தி ஒரு மக்கள் தலைவராக உருப்பெற்றது தென்னாப்பிரிக்காவில். அதன் பிறகு இந்தியாவில் வெற்றிகரமாக அவர் 30 ஆண்டுகள் நடத்திய போராட்டங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக அமைந்தது தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்கள் தாம்! காந்தியின் பொது வாழ்க்கை அணுகுமுறைகள், பல்வேறு இனங்களுக்கிடையே ஒரு பொதுக் கருத்தை வலுப்படுத்தும் ஆற்றல்  ஆகியவற்றை அவர் தென்னாப்பிரிக்காவிலேயே சோதித்துப் பார்த்து வெற்றி கண்டுவிட்டார்!

பிரபல வரலாற்றாய்வாளர் ராமச் சந்திர குஹா அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழத்தில் “காந்தியுடன் விவாதங்கள்” என்னும் தலைப்பில் வகுப்புகள் துவங்கிய போது உலெகெங்கிலும் இருந்து மாணவர்கள் வந்திருக்கிறார்கள். இந்திய வம்சாவளியினர் வெறும் நான்கு பேர் மட்டுமே. அதில் காந்தியை முன்னுதாரனமாக கொண்ட பிற நாட்டவர் பலர் இருந்தனர். நவீன உலக அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள் மத்தியில் காந்தி மட்டுமே நிஜமான உலக ஆளுமை என்கிறார் குஹா.

ஜனநாயகத்துக்கு மாறிய 60 நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டதாம். அதில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்களில் சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ந்ததற்கு ஆயுதம் தாங்கிய எதிர்ப்புகள் காரணம் அல்ல, காந்தியடிகள் கண்டுப்பிடித்த புறக்கணிப்பு, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், இன்னபிற போராட்ட முறைகளே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தி மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவரது வாழ்வும், அவர் அளித்த கொடைகளும் அவரே அதிகம் கேள்விப்பட்டிராத நாடுகளிலும் கூட விவாதிக்கப்படுகின்றன என்று குஹா குறிப்பிட்டிருக்கிறார்.

“Collected Works of Mahatma Gandhi’ யில் தொகுக்கபட்ட புத்தகங்கள் மட்டுமே, பெரும்பாலும் பலராலும் சுரங்கம் போன்று தோண்டப்படும் ஆனால், அதை தாண்டி இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் பாதுகாக்கப்படும் கடிதங்கள், பதில்கள், அறிக்கைகள், அச்சிட்ட மற்றும் அச்சிட படாத பல எழுத்துகள், ஆங்கிலேய உளவாளிகளின் தகவல்கள், சாமானியர்களின் பார்வையில் காந்தியடிகள் பற்றி செய்தி தாள்களில் வந்த குறிப்புகள், வெளிநாட்டு ஊடகங்களில் இவரைப் பற்றி வந்த பாராட்டு செய்திகள் மற்றும் கடுமையான விமர்சனங்கள், தந்திகள், ஆவணகாப்பகங்களில் இருக்கும் கோப்புகள் என்று பலவாறு தகவல்கள் திரட்டி ஒரு மாபெரும் படைப்பாக இந்த புத்தகத்தை நமக்கு தந்திருக்கிறார்.  இரண்டு பகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்த புத்தகங்களில் முதல் பகுதி காந்தியின் தாத்தா காலத்திலிருந்து துவங்கி அவர் பிறப்பு, லண்டன் பயணம், பிறகு தென்னாப்பிரிக்காவில் அவரின் 20 ஆண்டுகள் வரையிலான வாழ்க்கையை அலசுகிறது.

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இரயிலில் இருந்து வலுகட்டாயமாக இறக்கி விடப்பட்ட சம்பவம் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதை காட்டிலும் பெரிய அவமானங்களையும், எதிர்ப்புகளையும், வன்முறைகளையும் சந்தித்திருக்கிறார் என்பதை இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். நேட்டாலில் பல புரட்சிகள் செய்து, சட்டங்களை எதிர்த்து துண்டு பிரசுரங்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி,  தம்முடைய 25 வயதில் நேட்டாலில் உள்ள இந்தியர்களுக்கு தலைவரானார்.

அப்படிப்பட்டவர் குஜராத் சென்று திரும்பி கப்பலில் வந்த போது அவரை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை ஐரோப்பியர்கள் நிகழ்த்துகிறார்கள். காந்தியையும் அவருடன் கப்பலில் வந்த அனைத்து இந்தியர்களையும் திரும்ப அனுப்பக் கோரி தான் இந்த போராட்டம். இரண்டு கப்பல்களில் 600 இந்தியர்கள் கடலிலேயே காக்க வைக்கப்பட்டனர். கப்பல் நங்கூரம் அடித்து நிறுத்தப்பட்டு விட்டது. காந்தி மீண்டும் தென்னாப்பிரிக்கா வருவது  தங்கள் இனத்தின் ஆளுமைக்கு பெரிய ஆபத்து என்று நினைத்தனர்.

தென்னாப்பிரிக்காவில் கரும்பு பயிரிடலுக்கு அடுத்தபடியாக தங்க சுரங்கங்களில் வேலை செய்ய பிணை கைதிகளாக கொண்டுவரப்பட்டவர்களே இந்தியர்கள். கூலி தொழிலாளர்களாக வந்தவர்கள் கடுமையாக உழைத்தனர். 1850ல் 500 டன் இருந்த சக்கரை உற்பத்தி இந்தியக் கூலிகளின் உழைப்பால் 1870 ல் 10,000டன்னாக உயர்ந்தது. கூலி தொழிலாளிகள் மட்டுமே அங்கு குடியேறியது போக, வியாபாரிகளும் பிற வர்க்கத்தினரும் வந்தனர். 1870 இல் இந்தியர்களின் கடை 2 மட்டுமே இருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் பன் மடங்கு உயர்ந்தது. அவர்கள் நிலம் வாங்குவதும், கட்டிடம் கட்டுவதும் என்று பலவாறு முன்னேறினார்கள். ஐரோப்பியர்களின் மக்கள் தொகை 46,748, இந்தியர்கள் 35,763. இப்படி இந்தியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனால் தங்களுக்கு பாதிப்பாகும் என்பதாலே இந்தியர்களுக்கு எதிராக பல கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அதன் ஒரு பிரதிபலிப்பாக தான் காந்தியடிகளை கப்பலில் இருந்து இறங்க விடாமல் நேட்டால் முழுவதும் போராட்டம் நடந்தது. ஒரு வழியாக இங்கிலாந்து அதிகாரிகளின் குறுக்கீடாலும், இங்கிலாந்தின் விக்டோரியா மகாரணியின் ஆட்சியில் அறுபதாவது ஆண்டு என்பதாலும் பிரச்சனைகளை தவிர்க்க கப்பலை அனுமதித்தனர். காந்தியும், டர்பனின் சொலிசிட்டர் லாஃப்டனும் கப்பலில் இருந்து இறங்கி நடந்து வந்த போது அவர்களை ஒரு கூட்டமே துரத்தியது. அவர்கள் ஏறிய ரிக்ஷாவின் சக்கரங்களை கழட்டி விடுகிறார்கள். இதனால், வேறு யாரும் அவரை ஏற்றிக்கொள்ள தயாராக இல்லை. ஆகையால் அவர்கள் நடந்தே தங்கள் இருப்பிடம் நோக்கி போக ஆரம்பித்தார்கள். அப்போது அங்கிருந்த கூட்டத்தினர் அவர் மீது சேறும், அழுகிய மீனும் வீசுகின்றனர். பின் குதிரையை ஓட்டும் சவுக்கால் அவரை தாக்குகின்றனர். கழுத்தில் இருந்து இரத்தம் கொட்டுகிறது. அப்பொழுது அவரை காப்பாற்றியது போலீஸ் சூப்பரிண்டண்ட் RC Alexandar ரின் மனைவி. அவரை அங்கிருந்து காப்பாற்றி பார்சி ஒருவரின் கடைக்குள் இருக்க வைத்து விட்டு, திரு அலெக்சாண்டர் அவர்கள் எதிர்த்து நிற்கும் கூட்டத்தினரோடு சமரசம் பேசுகையில் காந்தியை எங்களிடம் அனுப்புங்கள் கரும்பு பாகினை வைத்திருக்கிறோம் அவர் மீது கொட்டி அனுப்புகிறோம் என்று கூறியுள்ளனர். அவரை இங்கிருக்கும் ஆப்பிள் மரத்தில் தூக்கிலிட போகிறோம் என்று வெறுப்பை உமிழ்ந்தவர்களும் பலர். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் காந்தி அடி பணியவில்லை என்று ஒரு நிருபர் எழுதியது பதிவாகியுள்ளது.

“Popularity comes without invitation goes without farewell” இது காந்தியடிகளின் வாசகம். ஒரு மனிதன் புகழுக்காக எதையுமே செய்யக்கூடாது, ஏனெனில், புகழ் நம் அழைப்பின்றி வரும், பின் சுவடின்றி சென்று விடும். அவர் கூறியது போலவே தான் அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

Indian Opinion என்ற இதழை அவர் நடத்தி வந்தார். காந்தியடிகள் அதில் எழுதிய தலையங்கங்களும், கட்டுரைகளும்  பெரும் படைப்புகளாக நம் முன்னே நிற்கின்றன. அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கும், தன் போராட்டத்தின் நோக்கங்களையும் தனது பத்திரிகையில் அயராது எழுதினார். 8 பக்கங்கள் மட்டுமே இருந்த அவரது பத்திரிகை 32 பக்கங்களானது.

தென் ஆப்ரிக்காவின் டிரான்ஸ்வாலில் கட்டாய பதிவு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆசியர்கள் அனைவரும் தங்களை பற்றிய அனைத்து தகவல்களளோடு தங்களுடைய 10 கைவிரல்களின் ரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாதவர்கள் எந்த வேலையும் அங்கு செய்ய முடியாது, வியாபாரத்திற்கான உரிமமும் ரத்து செய்யப்படும், சிறைக்கு அனுப்பபடுவார்கள் என்றனர். இதனை எதிர்க்கும் போராட்டங்களில் தான் பல்லாயிரம் இந்தியர்கள் காந்தியயின் பின் ஒன்றினைந்தனர். பதிவு செய்ய ஐரோப்பியர்கள் ஏற்படுத்திய பர்மிட் அலுவலகம் வெறிச்சோடிக் கிடந்தது என்று பத்திரிகைகள் பதிவு செய்கின்றன. பதிவு செய்ய தப்பி தவறி யாரேனும் வந்தாலும் அவர்களை அலுவலகத்துக்கு வெளியில் இருக்கும் இந்தியர்கள் பிரச்சனையை எடுத்துக்கூறி திருப்பி அனுப்பினர். 200 பேர் இருக்கும் பகுதி என்று வைத்துக்கொண்டால் அதில் 10க்கும் குறைவானவர்களே பதிவு செய்தனர். இந்தியர்கள் மத்தியில் இருந்த ஒற்றுமையை கண்டு மிரண்டு போயினர் ஐரோப்பியர்கள்.

இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிணக்கினை உருவாக்க முற்பட்டனர். காந்தியடிகளோடு இருந்த ஒரு இஸ்லாமிய தலைவர் லண்டனில் இருந்த நீதிபதிக்கு, “இந்த போராட்டம் இந்து மதத்தினரால் நடத்தப்படுவது தானே தவிர முஸ்லிம் வியாபாரிகளால் அல்ல” என்று எழுதியிருந்தார். ஆனால், இந்த பிரச்சனையை அழகாக கையாளும் விதமாக நடத்தப்பட்ட பெரும்பாலான போராட்டங்கள் மசூதியிலேயே நடத்தப்பட்டன. அங்கு எல்லா சாதி, மதங்களை சேர்ந்த இந்தியர்கள் மத்தியில் தீவிரமான ஆவல் இருந்தது என்று பத்திரிகையில் செய்தி வந்தது.  இந்தியாவில் அரசு இரண்டு பூனைகளை, இந்துக்கள் – இஸ்லாமியர்களை மோதவிட்டு ஆதாயம் தேடுகிறது. ஆனால், இங்கு அப்படி அல்ல. இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக உள்ளன என்று காந்தியடிகள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

“தனது படைகளை நன்றாகவே திரட்டியிருக்கிறார். இந்தியர்கள் அவரை எந்த எல்லைக்கும் பின்பற்றுவதற்குத் தயாராக இருப்பதையே பொது விதியாக கொண்டிருக்கிறார்கள்” என்று ஸ்டார் ஆஃப் ஜோஹனாஸ்பர்க் என்னும் பத்திரிகை காந்தியைப் பற்றி எழுதியது.

காந்தியடிகள் தானாகவே தமிழ் கற்க முயற்சி செய்தார் என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் தென்னாப்பிரிக்க போராட்டங்களில் தமிழர்கள் அவருக்கு எப்பொழுதுமே விசுவாசமாக இருந்தனர்! ஒரு முறை காந்தியடிகள் சிறைக்கு செல்லும் முன் இரண்டு கடிதங்களை வெளியிடுகிறார். போராட்டத்தை கைவிட்ட குஜராத்தி வியாபாரிகளுக்கு தன் அதிருப்தியை வெளிப்படுத்தி ஒரு கடிதமும், முழு மூச்சில் களத்தில் இறங்கிய தமிழர்களை பாராட்டி மற்றொரு கடிதமும் எழுதியிருந்தார். தமிழரான தம்பி நாயுடு காந்திக்கு வலக்கரம் போல இருந்திருக்கிறார். இந்தியர்களே காந்தியடிகளை தாக்கிய போது, குறுக்கே சென்று அவரை காப்பாற்றியது இந்த தம்பி நாயுடு தான். நடந்த போராட்டங்களில் பல முறை சிறை சென்றவர்.

“தென்னாப்பிரிக்காவில் நான் என் சொந்த நாட்டுகாரர்களின் கைகளில் மரணத்தை சந்திக்க கூடும். இது இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒன்றுபடுத்தும். நம் சமூகத்தின் எதிரிகள் அப்படி ஒரு ஒற்றுமை ஏற்பட்டு விடக்கூடாது என்று மிகுந்த முயற்சி எடுத்து வருகிறார்கள்” என்று தன் அண்ணன் மகன் மகன்லாலுக்கு கடிதம் எழுதுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டு உயிர் நீத்த காந்தியடிகள் எதிர்பாத்தபடியே தான் அவருடைய மரணம் நிகழ்ந்தது என்பது நம் இதயத்தை சுடுகின்றது.

“ நம் தேசம் தன் குடிமக்களில் ஒரு பகுதியினருக்கு நான் ஒப்புக்கொள்ளும் விதத்தில் நீதி வழங்காமல் இருக்கும் வரை, தண்டனையைத் தேடி கொண்டு தான் இருப்பேன்” என்று அவர் கூறி, அதை நிரூபித்தும் விட்டார்.

காந்தியடிகளை பற்றி ஆழ்ந்து படிக்காமல் அவரை விமர்சனம் செய்வோர் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

நூல் விமர்சனம்; நா.ரதிசித்ரா

வெளியீடு; கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை,சென்னை 14. 9445979797

யாத் வஷேம் : முன்னோரைத் தேடி அலையும் யூதப் பெண்மணியின் கதை!

நேமிசந்த்ரா எழுதிய  ‘யாத் வஷேம்’ , கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல். இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி,  பெங்களூரில் தஞ்சம் புகுந்து வளர்ந்த ஒரு யூதச் சிறுமி, பல பத்தாண்டுகள் கழிந்து தன் அம்மா, அக்கா, தம்பியைத் தேடி அலைவது கதை. இந்தியாவில் தொடங்கும் கதை  ஐரோப்பா, அமெரிக்கா பிறகு இஸ்ரேலில் நடக்கிறது. மனசாட்சியை உலுக்குகிறது. சென்ற நூற்றாண்டில் அடக்குமுறைக்கு ஆளான யூதர்கள், தற்போது  பாலஸ்தீன அரபு மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு உரிமை உண்டா?,  என்ற கேள்வியையும் இந்த நாவல் எழுப்புகிறது.

ஹிட்லர் அறுபது இலட்சம் யூதர்களை கொன்று குவித்தான். வதை முகாம்களில் அடைத்து வைத்தான். ஆரிய இனம்தான் சிறந்த இனம் என்ற கற்பிதத்தை உருவாக்கி, தனது இழிசெயல்களுக்கு மக்களின் ஆதரவைப் பெற்றான். இதுகுறித்த பதிவுகள் நிறைய உள்ளன. ஆனால், இந்தியாவிலும் நிறைய யூதர்கள் வாழ்ந்தனர் என்றும், ஹிட்லருக்கு பயந்து இங்கு வந்தவர்கள் உண்டு என்றும் இந்த நாவல் சொல்லுகிறது.

பெங்களூர் கோரிப்பாளையத்தில் யூதர்களின் கல்லறையை யதேச்சையாக நேமிசந்த்ரா பார்க்கிறார். அவருக்குள் இருந்த இலக்கியவாதி மெல்ல உயிர்   பெறுகிறார். நூல் குறித்த தரவுகளுக்கு, விபரங்களுக்கு எட்டு ஆண்டுகள் உழைக்கிறார். அமெரிக்கா, ஆம்ஸ்டர்டாம், பெர்லின், டெல் அவிவ் என பயணிக்கிறார். அதன்  விளைவாக, இரத்தமும், சதையுமாக நமக்கு ஓர் உணர்ச்சிக் காவியம் கிடைத்து இருக்கிறது. நாவலின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள ‘கதையைத் தேடி அலைந்த கதை’, ஒரு கலைஞனுக்குண்டான தேடலை, பொறுப்புணர்வை சொல்கிறது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விவேக்கின்  மனைவி அனிதா இஸ்ரேல் போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் அவனது மகன்  இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையில் கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் தயக்கத்துடன் அனுமதிக்கிறான். கதை மெல்ல, மெல்ல விரிவடைகிறது. பாத்திரங்கள் ஒவ்வொருவராக வருகின்றனர். ஓராயிரம் செய்திகளை உள்ளடக்கிய இக்கதை, கலை நயத்தோடு,  விறுவிறுப்பாக செல்கிறது.

மனைவி, மூத்த மகள், மகனை நாஜிப்படை  இழுத்துச் சென்றுவிட, 12 வயது மகளான ஹ்யானவுடன் தப்பி இந்தியா வருகிறார் மோசஸ். விஞ்ஞானியான அவருக்கு,  சர்.வி.ராமன் உதவியால் இந்திய அறிவியல் கழகத்தில் வேலை கிடைக்கிறது. யூதர்களின் பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை பேச்சுவாக்கில் சொல்லி வருகிறார் மோசஸ். வாழ்வின் நெருக்கடி அவளுக்கு படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்துகிறது.  உலகப்போர் முடிவதாக இல்லை. இரண்டு வருடத்தில் மோசஸ் மரித்துப்போக அனாதையாகிறார் ஹ்யானா. அவளை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு இடைநிலைச் சாதியைச் சார்ந்த குடும்பம் வளர்க்கிறது. பெற்றோரை இழந்த அந்தப் பெண்ணை, தன் மகளாகவே அவர்கள் வளர்க்கிறார்கள். அந்த அம்மாவின்  மத நம்பிக்கைகள் எந்த சூழ்நிலையிலும் மனிதநேயத்திற்கு எதிராக போவதில்லை. யூத சிறுமியை மனம் நோகச் செய்வதில்லை. இதுதான் இந்தியா என்று சொல்லாமல் சொல்கிறார்  ஆசிரியர். இத்தகைய  சூழல்களை அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

கதையை அனிதாவும், அவள் கணவன் விவேக்கும் மாறி, மாறி சொல்கிறார்கள்.கே.நல்லத்தம்பி சிறப்பாக இதனை மொழிபெயர்த்துள்ளார்.

‘டகாவ் வதை முகாமிற்கு’ விவேக்கும், அனிதாவும் செல்கின்றனர். அதில் அடைக்கப்பட்ட தன் அம்மா, அக்கா, தம்பி  இவர்களைப் பற்றி ஏதேனும் விபரம் கிடைக்குமா என்று அலைகிறாள். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள். அதில் இறந்தவர்கள் எத்தனை பேரோ ! உயிர் பிழைத்தவர்கள் எந்த நாடு சென்றனரோ !  உணர்ச்சிப்பூர்வமாக இந்தக் காட்சிகளைச் சித்தரித்திருக்கிறார் நேமிசந்த்ரா. தன் மனைவியின் அலைகழிப்பை, கவலையோடு உடனிருந்து பார்க்கிறான் விவேக். இதனூடோடே யூதர்கள் பட்டபாடு விவரிக்கப்படுகிறது. கணினியில் இருக்கும் ஆவணங்கள் வழியாக, அருங்காட்சியகத்தில் வைக்கப்படிருக்கும் பொருட்கள் வழியாக, தப்பி பிழைத்தவர்கள் வாயிலாக, அவர்கள் வாரிசுகள் வாயிலாக நமக்கு கதை விவரிக்கப்படுகிறது.

இத்தகைய இனப்படுகொலைக்கு ஹிட்லர் மட்டுமே காரணமாக இருக்க முடியுமா ?  தங்கள் பரிசோதனைக்கு ‘மனித பலியாடுகள்’ கிடைத்தது என்று மகிழ்ச்சியுற்ற படித்த ‘விஞ்ஞானிகள்’; பயன்படுத்திக் கொண்டு வீசிவிட தொழிலாளர்கள் கிடைத்தது என்று நினைத்த ஜெர்மன் ‘தொழிலதிபர்கள்’. யூதர்கள் விட்டுச் செல்லும் பொருட்களை மலிவான விலைக்கு பெற்றுக்கொள்ளும் சாமானிய  மனிதர்களின் ஆசையும் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தது  என்கிறார். அதே நேரத்தில் நேமிசந்த்ரா மனிதர்கள் மேல் உள்ள நம்பிக்கையை நாவல் முழுவதும் இழக்கவில்லை. அறத்தின் குரல் பலவீனமாக இருந்தாலும், அதனை அடையாளம் காட்டுகிறார். தன் உயிருக்கு ஆபத்து இருந்தாலும் ஒரு துண்டு ரொட்டி அதிகமாக கொடுக்கப்படுவதை கண்டும் காணாமல் இருக்கும் சிப்பாய்; நாஜி படைப் சோதனை குறித்து முன்கூட்டி துப்புக் கொடுத்து காப்பாற்றும் அரசுப் பணியாளன், விரக்திக்கு இடையிலும் நம்பிக்கை, காதல் என்று பல சம்பவங்கள் வருகின்றன.

யாத்வஷேம், ஜெருசலம்

ஆம்ஸ்டர்டாம் ‘யூதர்கள் அருங்காட்சியகம்’, வாஷிங்டன் ‘Holocaust Museum’ , லாஸ் ஏஞ்சலஸ் ‘ Museum of Tolerance’ என பல இடங்களைக் கடந்து இஸ்ரேலின் ஜெருசலேம் நகர் வருகிறார்கள். அங்கு நாஜி காலத்து ‘நூறு ஆயிரம் நினைவு களை’ படம் பிடித்துக் காட்டும் நினைவு இடமான ‘யாத் வஷேம்’ க்கு வருகிறார்கள். அங்கு தன் குடும்பத்து நபரைச் சந்திக்கிறார். அடக்குமுறைக்கு உள்ளான யூத இனம் இப்போது இஸ்ரேலில் என்ன செய்கிறது என்ற கேள்வி இவளுக்கு எழுகிறது.

யூதர்களின் ‘அழுசுவருக்குப்’ பின்னால் மசூதி இருக்கிறது. ஏசுவின் கல்லறை இருக்கிறது. இந்தியாவில் அனிதாவிற்கு கிடைத்த வாழ்க்கை முறை யூத மக்களிடம் காத்திரமான கேள்விகளை எழுப்புகிறது. கதை முடிவடைகிறது.

நூலாசிரியரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது. இந்தக் கதையை இந்தியாவுடனும் பொருத்திப் பார்க்க இயலும். இப்படி ஒரு படைப்பு வேறு எந்த இந்திய மொழிகளிலும் வந்திருக்குமா என்பது தெரியவில்லை.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

எதிர் வெளியீடு, பொள்ளாச்சி/ செ.9942511302  பக்கம் 358/ ரூ.399.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time