வெடித்த கார்; துடிக்கும் பாஜக! கோவையில் நடப்பது என்ன?

-கா.சு.வேலாயுதன்

கோவை இன்னமும் குண்டு கலாச்சாரத்தோடுதான் இருக்கிறதா? அது பயங்கரவாதிகளின் கூடாரமாகி விட்டதா? பாஜகவினர், ஊடகங்கள் எல்லாம் சொல்வது உண்மையா? போலீசால் பயங்கராவாதிகளை ஒடுக்க முடியாதா? என்றெல்லாம் பலருக்கு சந்தேகம் தோன்றலாம். உண்மையில் கோவையில் என்ன நடக்கிறது.?

‘‘எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய கார்’ என்று தலைப்பு செய்திகள் வாசிக்கிறார்களே தவிர, குண்டு வெடித்து சிதறிய கார் என்று யாரும் போடுவதில்லை. ஆனால் செய்திகள் எல்லாம் வெடிமருந்துகள், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகப் பவுடர், ஆணி, கோலிக்குண்டுகள், வெடிகுண்டு, தீவிரவாதிகள், என்ஐஏ விசாரணை என்றே வருகின்றதே. இது என்ன முரண்?’’

அநேகமாக கோவையில் கோட்டை ஈசுவரன் கோயில் எதிரே வெடித்துச் சிதறிய கார் சம்பவத்தை ஒட்டி இப்படிப்பட்ட கேள்விகள் தான் எளிய மனிதர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது. உண்மையில் சிலிண்டர் தான் வெடித்ததா? குண்டு வெடித்ததா? என்று கேட்காதவர்கள் இல்லை எனலாம். இதற்கு நாம் தரும் ஒரே விளக்கம் இதுதான்.

கார் வெடித்துச் சிதறியதற்கு காரணம் எரிவாயு சிலிண்டர்தான். அதில் கிடைத்த வெப்பத்தின் தூண்டுதலில் தான் காரிலிருந்து வெடிபொருட்கள் எரிந்து சிதறியுள்ளது. ஆக வெடித்தது சிலிண்டரே. அதனுடன் சேர்ந்து எரிந்தது வெடி மருந்துகளேயன்றி வெடிகுண்டு அல்ல!’’

வியாக்கியானம் சரிதான். உண்மையில் கோவையில் என்னதான் நடக்கிறது. 1998- தொடர் குண்டு வெடிப்பு சூழல் திரும்ப வந்து விட்டது. திரும்பவும் கோவை தீவிரவாதிகள் கூடாரம் ஆகி விட்டது. பாஜகவைத் தவிர கோவையைக் காப்பாற்ற கட்சிகளே இல்லை’ என்றெல்லாம் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறதே. அது உண்மைதானா?

இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை சுருக்கமாகப் பார்ப்பது நல்லது. அப்போதுதான் இதில் எப்படியான அரசியல் கட்டமைக்கப்படுகிறது என்பதைத் தெளிவாக விளங்கி கொள்ள முடியும்.

கோவையில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி கோட்டை மேடு. இதன் முகப்பில் அமைந்துள்ளது தான் கோட்டை ஈசுவரன் கோயில், கோவையின் முக்கிய வணிகப்பகுதியான டவுன்ஹால், உக்கடம் பகுதிகள் இங்கே இருந்து அரைகிலோமீட்டர் தூரம் மட்டுமே. சுருக்கமாக சொல்லப் போனால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட  பண்டிகை தினங்களில் மட்டுமல்ல, சாதாரண விடுமுறை தினங்களில் கூட, இந்தக் கோட்டை ஈசுவரன் கோயிலிலிருந்து தொடங்கி டவுன்ஹால் சாலை வரை இங்கே நூற்றுக்கணக்கான தெருவோர ஜவுளிக்கடைகள் நிறைந்திருக்கும்.

அதேபோல் கோட்டையில் புகழ்பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. கோட்டை மேட்டில் ஈசுவரன், கரிவரதராஜன் கோயில்கள் மட்டுமல்ல, கிறித்துவ தேவலாயமும் கோட்டைமேட்டிற்கு எதிரிலேயே இருக்கிறது. அதுசார்ந்த மைக்கேல் ஸ்கூலும் உள்ளது. கோட்டைக்கு காவல் தெய்வமாக கோணியம்மன் கோயிலும் உள்ளது. கோட்டையில் பெரும்பான்மையாய் இஸ்லாமியர் வசித்து வந்தாலும் 20 சதவீதம் பேர் கிறித்துவர்களும், கணிசமான அளவில் இந்துக்களும் வசித்து வருகின்றனர்.

கோட்டை ஈசுவரன், கரிவரதராஜன், கோனியம்மன் என எந்தக் கோயில் திருவிழாவானாலும் இங்குள்ள இஸ்லாமிய மக்களின் பங்களிப்பும் மிகுதியாக இருக்கும். கிறித்துவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் ஊறிப் போன இடம்தான் கோட்டை என்பதற்காகத் தான். இதில்தான் 1980 பாஜக வருகைக்குப் பின்பு மெல்ல, மெல்ல மதமோதல்கள் தலைதூக்கத் தொடங்கின.

குறிப்பாக பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்பு இஸ்லாமிய அடிப்படை வாதிகளும், இந்துத்வா  ஆட்களும் புறப்பட்டனர். அவர்களும் கூட இங்குள்ள ஜனத்தொகையை ஒப்பிடும் போது மிகக் குறைவுதான். அதாவது, இஸ்லாமிய அடிப்படை வாதிகள் 2 அல்லது 3 சதவீதம் என்றால், இந்துத்துவா ஆட்களும் அதே அளவில் தான் இருப்பர்.

மற்றபடி இந்துவானாலும், முஸ்லீம் ஆனாலும் அத்தனை பேரும் அமைதியையே விரும்புகிறவர்கள். ஆனால், எந்த இடத்திலும் அச்சுறுத்தல் தானே வெல்லும். அதிலும் அரசியல் அச்சுறுத்தல், அதிகார அச்சுறுத்தல்,தாதாயிச அச்சுறுத்தல் எல்லாம் உருவாகின!  மத அடிப்படைவாதிகள் தாதாயிசத்தை கையில் எடுத்தனர். இதில் இரண்டு மதமும் கலந்தே இருந்தன.

அதுதான் இந்தப் பகுதியை சென்சிடிவ் ஆக்கின. கட்டப் பஞ்சாயத்து, மாமூல் வசூல், மிரட்டல் என பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டன. இந்த மாமூல் வசூலிப்பதில் போலீஸிற்கும், இந்த அமைப்புகளுக்கும் இடையே மோதலும் இருந்து வந்தது. அதையொட்டித்தான் இந்த ஏரியாவில் 1997 நவம்பரில் போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலை நிகழ்ந்தது. தொடர்ந்து அதுவே 1997- டிசம்பர் கலவரத்திற்கும் வித்திட்டது. அதில் போலீஸ் நடவடிக்கையில் திருப்தியில்லாத இஸ்லாம் அடிப்படைவாதிகள் 1998 பிப்ரவரி 14 ல் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர். கோவை தொடர் குண்டுவெடிப்பில் மிகுதியாக கைதானவர்கள் வசித்த இடம் இந்தக் கோட்டைமேடு தான்.

இந்த நிகழ்வுகள் எல்லாம்தான் இந்த ஏரியாவையே குட்டி பாகிஸ்தான் என்றும் சொல்ல வைத்தன. ஒரு பக்கம் போலீஸின் நெருக்கடி., இன்னொரு பக்கம் மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் என இங்கே 95 சதவீதம் பேர் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்கின்றனர் எளிய இஸ்லாமிய மக்கள்!

இத்தனைக்கும் இங்கே மக்கள் வசிக்க அடிப்படை வசதிகள் இல்லை. போதிய சுகாதாரம் இல்லை. ஜனநெருக்கடி. ஒற்றை சென்டில் ஒற்றை ஜாகையில் 14 பேர் கொண்ட மூன்று குடும்பம் வசித்த நிலையெல்லாம் இருந்தது. தொழில் என்று பார்த்தால் சிறுவியாபாரம். தள்ளுவண்டிக்காரர்கள், காய்கறி வியாபாரிகள், பழைய துணி தைப்பவர்கள், பானிபூரிக் கடை வைப்பவர்கள், பழைய புத்தகக்கடைக்காரர்கள்.

1998 தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு தான் இவர்களின் வறுமை கொடுமையைக் கண்டு விழித்துக் கொண்ட தமிழக அரசு மாற்ரு இடங்களில் நல்ல குடியிருப்பு உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியது. ஆயினும் இந்தப் பகுதி இன்னமும் மதமோதல் சென்சிடிவ் உள்ள பகுதியாகவே தான் உள்ளது.

தமிழகத்தின் ஒன்பது உளவுப்பிரிவு போலீஸாரின் கண்காணிப்பும், மத்திய ரகசியப் போலீஸாரின் கவனிப்பும் 24 மணி நேரமும் உள்ள பகுதியாகவும் இது விளங்குகிறது. மதப்பதற்றம் எழும்போதெல்லாம் இங்கே திக்குக்கு திக்கு  பிக்கட்டிகள் எனப்படும் போலீஸ் சோதனைச் சாவடிகள் உயிர்ப் பெற்று விடும்.

இப்படிப்பட்ட கோட்டை மேட்டில்தான் கோட்டை ஈசுவரன் கோயில் எதிரே கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு அந்தக் கார் வெடித்து சிதறியிருக்கிறது. இந்தக் காரில் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததாகவும், சாலையில் வேகத்தடையில் ஏறும்போது கேஸ் கசிந்து சிலிண்டர்கள் வெடித்ததாகவும் முதலில் கூறப்பட்டது.

இந்தக் காரை ஓட்டி வந்த உக்கடம் ஜிஎம் நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் உடல் கருகின நிலையில் இறந்து போனர். கூடவே, வெடித்துச் சிதறிய காரைச்சுற்றிலும் பல மீட்டர் தூரத்திற்கு சிதறிய கோலிக்குண்டுகளும், ஆணிகளும், பால்ட்ரஸ் குண்டுகளும் கிடந்தது சந்தேகத்திற்கிடமானது.

உடனடியாக டெல்லியிலிருந்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தமிழக ஏடிஜிபி தாமரைக்கண்ணன், டிஜிபி சைலேந்திரபாபு அடுத்தடுத்து சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை வந்தனர். சம்பவ இடத்தை நேரில் ஆராய்ந்த அவர்கள் இது வெறுமனே சிலிண்டர் மட்டும் வெடித்ததல்ல, கூடவே வெடிமருந்துகளும், வெடி குண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களும் வெடித்திருக்கின்றன என்ற தகவலை இலைமறைவு காய்மறைவாகவே வெளியிட்டனர்.

தொடர்ந்து முபின் வீட்டை சோதனை செய்ததில் அங்கே வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகப்பவுடர், கோலிக்குண்டுகள், ஆணி என சுமார் 75 கிலோ அளவில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. முபினைப் பற்றி விசாரித்ததில் அவர் பொறியியல் பட்டதாரி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பழைய புத்தக அங்காடியில் முன்பு பணியாற்றியிருக்கிறார். பிறகு சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பதெல்லாம் தெரிய வந்திருக்கிறது.

கூடவே 2019 ஆம் ஆண்டில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு மையத்தின் விசாரணைக்கு ஆளானவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் முந்தினநாள் இரவு மூவர் துணையுடன் ஒரு சாக்கு மூட்டையை காரில் ஏற்றுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதில் காணப்பட்டவர்களை பிடித்து விசாரித்தபோது இவர்கள் 2019-ல் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று பல்வேறு இடங்களில் குண்டுவெடித்து 200-க்கும் மேற்பட்டோர் மரணத்திற்கு காரணமான சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அசாருதீனை கேரள சிறையில் சந்தித்தது தெரிய வந்துள்ளது.

இதில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் ( 23), ஜி.எம். நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபைரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளனர். அவர்களின் வீடுகளிலும் போலீஸ் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களில் முகம்மது தல்கா என்பவர் 1998-ல் நடந்த கோவை குண்டுவெடிப்பில் பிரதான குற்றவாளியாக சிறையில் இருக்கும் அல் உமா தலைவர் பாஷாவின் தம்பி மகன் என்று மீடியாக்களுக்கு தெரிய வந்ததும் இந்த விவகாரம் இன்னும் சூடு பிடித்தது. வெடித்த கார் 9 பேர் கைமாறியே முபினிடம் வந்துள்ளதும், அதை கடைசியாக முபினுக்கு வாங்கித் தந்தவர் இந்த முகம்மது தல்கா என்பதும் ஊர்ஜிதமானது.

இப்படியான தொடர் சங்கிலி விசாரணையில் அடுத்தடுத்த கட்டங்கள் முன்னேறிக் கொண்டிருக்க, இதை வைத்து வழக்கமான அரசியலுக்கும் மேலான அரசியலை பாஜகவினர் செய்ய ஆரம்பித்து விட்டனர். கோட்டைமேடு என்பது கோவை தெற்குத் தொகுதியில் வருவது. அதன் எம்எல்ஏவான பாஜகவின் சேர்ந்த வானதி சீனிவாசன் பதற்றத்தை தோற்றுவிக்கும் வண்ணம் கருத்துக்களை தெரிவித்தார்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, ”முபின் சாதாரண ஆளில்லை. பாகிஸ்தானின்   ஐஎஸ்ஐயுடன் தொடர்பு உள்ளவர். ‘என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிராத்தனை செய்யுங்கள்’ என கூறி தன் செல்ஃபோன் ஸ்டேட்டஸ் வைத்திருந்துள்ளார். இது ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் நபர்கள் அனைவரும் கூறும் வாசகங்கள்” என்பதே அண்ணாமலையின் கூற்று.

இந்த வாதத்தை முன் வைத்து, ”தமிழக உளவுத்துறை புலனாய்வில் தோற்று விட்டது. இந்த வழக்கு விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றும் கோரினார்.

தொடர்ந்து கோவை முன்னாள் எம்பியும், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கேரள பாஜக பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ வானதியை உடன் வைத்துக் கொண்டு, இந்த சம்பவத்தை ஒட்டி 31ம்தேதி கோவையில் பந்த் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், ”கோவையே தீவிரவாதிகளின் கூடாரமாகி விட்டது. கோவை மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தவறி விட்டது!’’ என்று மீடியாக்களிடம் பேசினர்.

இதையெல்லாம் பார்த்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டம் நடத்தி, ‘போலீஸ் செயல்பாடு பாராட்டத்தக்கது. குற்றம் நடத்தப்பட்ட விதம் கண்டறியப்படுவதற்கும், குற்றவாளிகள் தண்டிக்கபடுவதற்கும் எல்லா வகையிலும் ஆதரவு தருகிறோம். ஆனால் அதே, நேரத்தில் குற்றத்தோடு அவர்கள் சார்ந்த மதம் இணைக்கப்படுவதை இக்கூட்டம் முழுமையாக நிராகரிக்கிறது!’ என்று தீர்மான அறிக்கை கொடுத்துள்ளனர்.

அதுவரை அமைதி காத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகள் கூட்டத்தைக்கூட்டி இந்த குற்றசம்பவத்தில் மாநிலம் தாண்டிய, சர்வதேச அளவில் தொடர்புகள் இருப்பதால் என்ஐஏ இந்த வழக்கை நடத்தி புலனாய்வு செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

இதற்கிடையே பாஜக பந்த் அறிவித்ததை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட, அதற்காக நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, ‘பந்த் அறிவிப்புக்கும் பாஜகவிற்கும் சம்பந்தமில்லை. அது சிபிராதாகிருஷ்ணன் என்ற தனிமனிதர் செய்த அறிவிப்பு’ என பதில் தந்துள்ளார்.

இங்கே குண்டுகள் வெடித்தாலோ, சாதாரண நாட்டு வெடிகளுக்கான திரிகள், வெடிமருந்துகள் கிடைத்தாலோ, அதை போலீஸ் வெளிக்காட்டினாலோ அதில் எகிறிக் குதித்து அரசியல் செய்வது பாஜகதான். அதற்குக் காரணம் அவர்களின் மதச்சார்பு அரசியல்தான் என்பதைத் தனியாக விளக்கத் தேவையில்லை. இங்கே பொறுத்தவரை அதில் ருசி கண்ட பூனையாகும் பாஜக.

அதனால்தான் 1998 தொடர் குண்டுவெடிப்புகளைச் சுட்டிக்காட்டியே இங்கே அரசியல் செய்கிறார்கள் அதன் அரும்பெரும் தலைவர்கள். உண்மையில் 1998-ல் நடந்த சம்பவங்களும்- அரசியலும், இப்போது 2022- இல் நடந்திருக்கும் சம்பவமும்- அரசியலும் ஒன்றல்ல. முற்றிலும் வேறு, வேறு. அதை கோவைவாசிகளைத் தவிர யாரும் உணர்ந்த மாதிரியே தெரியவில்லை.

சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன்

குறிப்பாக கோவை பாஜகவின் உள்ளூர் தலைவர்கள். வானதி சீனிவாசன் கோவை தொண்டாமுத்தூரில் உள்ள குக்கிராமப்பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் சென்னைவாசியாகி வெகு காலமாகி விட்டது. இப்போது கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில்தான் அரசியல்வாள் வீசுகிறார். முன்னாள் எம்பி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை எம்பியாக இரண்டு முறை இருந்தவர்தான் என்றாலும், அவர் அசலாக திருப்பூர்க்காரர். அங்கே சாயப்பட்டறை, பனியன் கம்பெனி என கொழிப்பவர். எப்பவும் டெல்லி அரசியல் லாபியே செய்து கொண்டிருப்பவர். இப்படி ஏதாவது சென்சிடிவ் விவகாரம் வந்து விட்டால் மட்டும் கோவையில் ஆஜராகி பேட்டிகள் கொடுப்பவர். அண்ணாமலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் எங்கே இருந்து இங்கே புறப்பட்டு வந்து அரசியல் செய்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே!

1997-98 கலவரம் மற்றும் குண்டுவெடிப்புகளின் போது கோவை மாவட்டத்தில் திருப்பூர் பிரிக்கப்படாமல் 14 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்தது. அதில் திமுக, தமாக எம்.எல்.ஏக்களே நிறைந்திருந்தனர். குறிப்பாக கோட்டைமேடு பகுதியை உள்ளடக்கிய கோவை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏவாக திமுகவைச் சேர்ந்த சி.டி.தண்டபாணியும், கோவை மக்களவை உறுப்பினராக மு.ராமநாதன் இருந்தனர்.

அவர்கள் சிறுபான்மை ஆதரவு என்று இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகளை ஆதரித்ததால்தான் கோவையில் போலீஸ்காரர் கொலை, போலீஸ் வேலை நிறுத்தம் மறியல், போலீஸ் என்கெளண்டர், கலவரம், குண்டுவெடிப்புகள் நடந்தன என்று குற்றம் சாட்டினர் இந்துத்துவா அமைப்பினர். அதையொட்டி எம்.எல்.ஏ.. சி.டி. தண்டபாணியின் கார் தீக்கிரையாக்கப்பட்டது.

அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்ட பாஜக 1998 குண்டு வெடிப்பு நடந்ததன் காரணமாக பெருவெற்றி பெற்றது. சுமார் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் தன்னை எதிர்த்த க.ரா.சுப்பையனை (திமுக) வென்றார்.

இந்தக் கசப்பான அனுபவம் கலைஞரை சிறுபான்மையினர் ஆதரவு என்பது வேறு, இஸ்லாம் அடிப்படைவாதிகள் என்பது முற்றிலும் வேறு என்று சிந்திக்கத் தூண்டியது. ஆகவே, போலீஸிற்கு அதிகாரம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்தார். அதன் தொடர்ச்சியாக 13 மாதத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தபோது அதிமுக அவர்களை கைவிட்ட நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.

அதற்குப் பிறகு திமுக 2006-ல்தான் ஆட்சிக்கு வந்தது. அதுவும், மைனாரிட்டி அரசாக இருந்தது. அதற்குப் பிறகு இப்போது 2021-இல்தான் ஆட்சிக்கு வந்துள்ளது திமுக. இது ஸ்டாலின் அரசாங்கம். இந்த 25 ஆண்டுகால இடைவெளியில் 11 வருடங்கள் மட்டுமே திமுக ஆட்சியில் இருந்துள்ளது. மீதி 14 ஆண்டுகள் அதிமுகவே ஆட்சியில் இருந்துள்ளது.

இப்போது ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்றாலும் கூட, கோவை மண்டலத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும் அதிமுக வசம் உள்ளது. அதில் ஒரு தொகுதியான கோவை தெற்கு அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவின் வானதிசீனிவாசன் வசமுள்ளது. இவரது தொகுதியில் தான் கோட்டைமேடு வருகிறது. இப்போது கோட்டை ஈசுவரன் கோயில் அருகே கார் வெடித்த சம்பவத்தில் தமிழக போலீசார் சரியாகவே செயல்பட்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்தில் அதிலும் தீபாவளி நாளில் தமிழக டிஜிபி, ஏடிஜிபி போன்றோர் அதிகாலை 4.45-க்கு மாநிலத்தின் மேற்குக் கோடிக்கு ஓடோடி வந்து நேரடியாக புலனாய்வு செய்கிறார்கள் என்றால், மக்களின் தீபாவளி கொண்டாட்டங்களில் பழுதேற்படாமல், சுமுக வாழ்க்கை வாழ செயல்பட்டிருக்கிறார் என்றால், அதை கட்சி மாச்சர்யங்கள் கடந்து பாராட்டியே தீர வேண்டும். அதை விட்டு விட்டு இதில் அரசியல் குளிர்காய்வது நாகரீகமற்றது.

இந்தத் தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் வானதிக்கும், அவர் கட்சித் தலைவர் ஆன அண்ணாமலைக்கும், அதன் தேசிய செயற்குழு உறுப்பினரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. அதை விட்டு விட்டு மக்களை பீதியில் ஆழ்த்துவது. பொதுவெளியில் தமக்குக் கிடைத் தகவல்களை வைத்து பீதியைக் கிளப்புவது எல்லாம் டூ மச்.

இத்தனைக்கும் சம்பந்தப்பட்ட வெடிவிபத்தில் சிக்கியவர் ஏற்கனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்ஐஏவால் விசாரிக்கப்பட்டவர் எனும் போது அவர் மீதான கண்காணிப்பை செய்திருக்க வேண்டியது என்.ஐ.ஏவின் கடமையல்லவா?

கோவை பாஜகவை பொறுத்த வரை இங்கே வானதி சீனிவாசன்,சி.பி.ராதா கிருஷ்ணன், அண்ணாமலை மூவருக்குள்ளுமான போட்டி அரசியலில் ஒருவரை ஒருவர் விஞ்ச இந்த சம்வத்தை பயன்படுத்துவதாக அக் கட்சியிலேயே பேச்சு அடிபடுகிறது.

வானதியைப் பொறுத்தவரை, ‘நான் கமல்ஹாசனையே தோற்கடித்தவள்’ என்ற பெருமைதான். அந்த வகையில் என்னை அடுத்த எம்பி தேர்தலில் நிறுத்தினால் கோவையில் மற்றவர்களை எல்லாம் டெபாசிட் இல்லாமல் செய்து விடுவேன் என்று டெல்லி வட்டாரத்தில் தொடர்ந்து பேசி வருகிறாராம். 2024ல் கோவையில் சீட் கிடைத்து எம்பியாகி விட்டால் நாம்தான் மந்திரி, ஸ்ரூதிராணி, நிர்மலா சீதாராமன் ரேஞ்சுக்கு நாமும் சென்று விடலாம் என்று கனவு காண்கிறார். அப்படிப்பட்டவர் இப்போது நடந்த இந்த சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார். அது தான் அவரின் பேச்சாகப் பேட்டியாக வெளிப்படுகிறது.

கோட்டைமேடு அவர் தொகுதிக்குள்தான் இருக்கிறது என்பதையே மறந்து பேசுகிறார். அங்கே தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறதென்றால் மாநில அரசை அவரே எச்சரித்திருக்கலாம். டெல்லி போலீஸிற்கு தகவல் கொடுத்திருக்கலாம். சட்டமன்றத்தில் பேசி பதிவு செய்திருக்கலாம். அதெல்லாம் ஒரு எம்எல்ஏ என்ற முறையில் செய்யாமல் இப்போது பொதுவெளியில் இப்படி பேசுவது சரியானதா?’ என்று கோவை பாஜகவினரே கேட்கிறார்கள்!

‘‘இதேபோல் சிபிஆர் பந்த் அறிவிக்கும்போது அவருடன்தானே வானதியும் இருந்தார். மறுக்கவில்லையே!

பாஜக தலைவர் அண்ணாமலை பந்த் அறிவிப்புக்கும், கட்சியின் மா நிலத் தலைமைக்கும் சம்பந்தமில்லை, அது, சிபிஆர் என்கிற தனிமனித அறிவிப்பு என்று சொல்கிறார்! இந்தளவுக்கு இது சென்றிருக்கிறது என்றால் யாருக்கு அவமானம். எங்கள் கட்சிக்குத்தானே?’’ என்றும் கேட்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி பாஜகவினர் சிலர் பேசும்போது, ‘‘அண்ணாமலை இப்போது பாஜகவில் ஹீரோ ஆகி வருகிறார். அவரை முறியடித்து தான் குளிர்காய நினைத்திருக்கிறார்கள் வானதியும், சிபிஆரும். அதை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற விதமாய் கோர்ட்டில் அடித்து துவம்சம் ஆக்கி வந்து விட்டார் அண்ணாமலை!’’ என்றும் பேசுகிறார்கள்!

எல்லாம் சரி. கோவை இன்னமும் குண்டு கலாச்சாரத்தோடுதான் இருக்கிறதா? அது பயங்கரவாதிகளின் கூடாரமாகி விட்டதா? பாஜகவினர், ஊடகங்கள் எல்லாம் சொல்வது உண்மையா? போலீஸ் பயங்கராவாதிகளை ஒடுக்க முடியாதா? என்றெல்லாம் பலருக்கும் சந்தேகம் தோன்றலாம்.

இப்படிக் கேட்பவர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல முடியும். கோவை எப்பவுமே அமைதியான நகரம்தான். இந்துக்கள் எல்லாம் இந்துத்வா கோஷம் போட்டு குளிர்காய்கிறவர்கள் அல்ல என்பது எந்த அளவு உண்மையோ, அதுபோலத்தான் இஸ்லாமியர்கள் எல்லாம் அடிப்படைவாதிகள் அல்லர். தானுண்டு அன்றாடப் பிழைப்பு உண்டு என்று வாழ்பவர்கள். அதில் ரொம்ப சொற்பமாக ஓரிரு சதவீதம் அடிப்படைவாத உணர்வுகளால் தூண்டப்பட்டவர்கள். அவர்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே குற்றம் சொல்வது தகாதது. இந்த சொற்ப எண்ணிக்கையில் உள்ள அடிப்படைவாதிகளை காவல்துறையால்கட்டுப்படுத்த முடியும். அதைத்தான் தொடர்ந்து செய்தும் வருகிறது. நம்ம ஊர் அமைதியான ஊர். அமைதியாக வாழ வேண்டும். அமைதியாக தொழில் செய்ய வேண்டும். அனைவரையும் சந்தோஷமாக வாழவிடுங்கள் என்று இருவேறுபட்ட தரப்பையும் அரசாங்கம் சார்பில் அழைத்துப் பேசுகிறார்கள். அவர்களுக்கான உணர்வுகளைக் கேட்கிறார்கள். அதற்கேற்ப செயல்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ள வைக்கிறார்கள். 1998-லிருந்து 2022 வரை இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது சிலிண்டர் வெடித்து உயிரிழந்த முபின் கூட அந்தக்காரை பெரிய சேதத்தை ஏற்படுத்தத்தான் ஓட்டிச் சென்றிருப்பார் என்று எப்படி சொல்ல முடியும்?

1998 போல குண்டுவெடிப்பு நிகழ்த்த வேண்டும். அதுவும் தீபாவளியன்று நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் இப்படி ஒரு கார் மட்டும் வெடிமருந்துகளோடு புறப்பட்டிருக்காது. பல கார்கள் (கவனிக்க கோவை தொடர் குண்டு வெடிப்பு பதினான்கு இடங்களில் நடந்தது. அதில் சில இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடிக்கவில்லை) புறப்பட்டிருக்கும். முபின் மட்டுமல்ல, நிறைய முபின்கள் புறப்பட்டிருப்பார்கள். ஓரிரு இடங்களில் இப்படி விபத்து போல் கார் வெடித்திருந்தாலும், சில இடங்களில் குறித்த குறி தப்பாமல் வெடிக்க வைத்திருப்பர். உயிர்ப்பலிகள் ஏராளமாக நடந்திருக்கும். அதற்கான தேவையோ, அவசியமோ இல்லையே!

கோவை தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னணி காரணம் 1997-ல் 19 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு உரிய நடவடிக்கையோ, நீதி விசாரணையோ இல்லாதது தான். அதே போல் இப்போது எதுவும் இல்லையே.

தற்போது பெரியதொரு நாசத்தை விளைவிக்க கூடிய காராணங்கள் எதுவும் அடிப்படை வாதிகளுக்கு கிடையாது. அப்படி அவர்கள் செய்வதற்கு வாய்ப்பும் இல்லை. அந்த வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்று நினைத்துத் தான் இந்துத்துவாவாதிகள் இந்த அளவு இதில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆளும் திமுக அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.

கட்டுரையாளர்; கா.சு.வேலாயுதன்

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.

‘யானைகளின் வருகை’, ‘நொய்யல் இன்று’ போன்ற நூல்களின் ஆசிரியர்.

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time