குற்றவாளிகளின் புகலிடமா நீதிமன்றங்கள்!

- சாவித்திரி கண்ணன்

கபாலீஸ்வரர் கோவிலிலும், ஸ்ரீரங்கம் கோவிலும் சிலைகள் களவாடிய குற்றச்சாட்டுக்கு உள்ளான டிவிஎஸ்.வேணு சீனிவாசன் குறித்து யாரும் பேசக் கூடாதாம்! கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திலும் எல்லோரும் ‘கப்சிப்’பாக இருக்கணுமாம்! யாரைக் காப்பாற்ற நீதிமன்றங்கள் கச்சை கட்டி களம் இறங்குகின்றன!

‘கோவில் திருப்பணி செய்கிறேன்’ என்ற பெயரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவன நாதர் சன்னதியில் மயிலொன்று மலரெடுத்து சிவனுக்கு பூஜை செய்யும் சிலையை 2004 ல் வேணு சீனிவாசன் களவாண்டுவிட்டார் என ரங்கராஜன் நரசிம்மன் பல ஆண்டுகளாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் நீதிமன்றம் சென்றெல்லாம் போராடி வந்தார்! ஆனால், தற்போது இந்த வழக்கு பொசுக்கென்று சென்னை உயர்நீதிமன்றத்தால் கட்டப் பஞ்சாயத்து பாணியில் முடித்து வைக்கப்பட்டு உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

”டி.வி.எஸ். குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசன்  பாராம்பரியமான கோவில்களை புதுப்பித்து, சீரமைப்பதாகக் கூறிக்கொண்டு பல்வேறு புராதனக் கோயில்களை கையிலெடுத்துக் கொண்டு, அங்குள்ள விலை மதிக்கமுடியாத பாரம்பரிய சிலைகளை, தூண்களை, சிற்பங்களை ,கற்களை எடுத்துக் கொள்கிறார்” என பரவலான புகார்கள் பல வருடங்களாக பலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது!

”மயிலை கபாலீஸ்வரர் கோவில் மட்டுமின்றி, ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோயில் மூலவர் விக்ரகத்தையும் வேணுசீனிவாசன் களவாடிவிட்டார்” எனக் கூறி, மயிலாப்பூரிலிலும், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மேற்படி கோவில் தொடர்பாக வேணுசீனிவாசன் மீது எப்.ஐ.ஆர் எனப்படும் ‘முதல் தகவல் அறிக்கை’ பதியப்பட வேண்டும் என 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் சென்று போராடினார் ரங்கராஜன். இதனால், அப்போது சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த பொன் மாணிக்கவேல் இந்தப் புகாரை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

தன் செயல்கள் மீது நம்பிக்கையும், நியாயமும் உள்ள ஒருவர் விசாரணையை நேர்மையாக எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், கதிகலங்கிப் போன வேணுசீனிவாசன் கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கினார். மேலும் தன் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் வரை சென்று, ‘லாபி’ செய்தார். இவருக்காக ‘துக்ளக்’ குருமூர்த்தி, ‘வேணுசீனிவாசன் மீது எப்.ஐ.ஆர் போட்டது விஷமத்தனம்’ என தலையங்கமே எழுதினார்! இந்தப் பிரச்சினை குறித்து அப்போதே அறம் இணைய இதழில் கட்டுரை வெளியானது.

குற்றவாளிகளுக்கு துணை போன குருமூர்த்தி – ஆன்மீகவாதி தாக்கு!

ஆனால், எந்த தனிப்பட்ட செல்வாக்குமில்லாமல் தீவிர பெருமாள் பக்தராக அறியப்பட்ட எளிய பிராமணரான ரங்கராஜன் நரசிம்மன் எதற்கும் அஞ்சாமல் வேணுசீனிவாசனுக்கு எதிராக எழுதியும்,பேசியும் வந்தார்! அவர் வேணு சீனுவாசனை சுருக்கமாக, ‘வே.சி’ என்றே இனிஷியலை மட்டுமே கொண்டு குறிப்பிடுவார்! ”இதன் பொருள் மிக அசிங்கமாக உள்ளதே” என ஒரு ஊடகம் அவரிடம் கேட்ட போது, அர்த்தமுள்ள சிரிப்பை உதிர்த்து, ”நான் இனிஷியலை தான் சொல்லி இருக்கிறேன். தவறாகச் சொல்லவில்லையே” என்றார். பொன்.மாணிக்கவேல் விசாரணையில் அனைத்து தகவல்களையும் சொன்னார்.

இது போல நியாயம் கேட்டு சமரசமற்று போராடி வந்தார் ரங்கராஜன். ஆனால் வேணு சீனிவாசன் அதிகார மையங்களோடு தனக்கிருக்கும் செல்வாக்குகளைக் கொண்டும்,ஸ்ரீரங்கம் அர்ச்சகர்களைக் கொண்டும் வழக்கு தொடுத்த எளிய பிராமணரான ரங்கராஜனையே அவதூறு செய்வதாகக் கூறி கைது செய்ய வைத்தார்! ஆனாலும், அசராமல் போராடி வந்தார்.

ரங்கராஜன் நரசிம்மன் இந்து கோவில்களில் நடந்த திருட்டுகளுக்காகத் தான் குரல் கொடுத்து வந்தார். ஆனால், இந்துக்களுக்காக அரசியல் செய்வதாகச் சொல்லும் பாஜக கட்சியோ, அதன் அரசோ ரங்கராஜன் கூறிய புகார்களின் மீது நியாயமான விசாரணை நடக்க உதவாமல் அவருக்கு பல விதங்களிலும் நெருக்குதல் தந்து வந்தது.

மற்றொருபுறம் செல்வாக்குமிக்க டி.வி.எஸ் ஐய்யங்காரின் செல்லப் பேரனான வேணு சீனிவாசனுக்கு ‘பத்மபூஷன் விருது’ கொடுத்து கவுரவித்துள்ளதோடு, ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு இயக்குனராகவும் நியமித்துள்ளது பாஜக ஒன்றிய அரசு! ஆகையால், வேணுசீனிவாசன் மீதான சிலை கடத்தல் பிரிவின் விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இதனால் கொதித்து எழுந்த ரங்கராஜன் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் புன்னைவனநாதர் சன்னதியின் மலர்களுடன் கூடிய மயில் சிலையை மாற்றிவிட்டு, பாம்புடன் உள்ள மயில் சிலையை வைத்தது ஆகம விதிக்கு முரணானது. எனவே, மலர்களுடன் கூடிய மயில் சிலையை பிரதிஷ்டை செய்து பாலாலயம் செய்ய வேண்டும். சிலை மாயமானது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை விரைவாக விசாரித்து, சம்பந்தப்பட்ட வேணுசீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டார்.

இந்த வழக்கில் கடந்த செப்.2-ம் தேதி தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘‘மயிலாப்பூர் கோயில் மயில் சிலையில் இருந்தது மலரா, பாம்பா என்று கோயில் ஆகமக் குழு விரைவில் முடிவு செய்யும். ஒரு வேளை அது மலர் என்பது தெரிய வந்தால், தற்போது பாம்புடன் கூடிய சிலையை மாற்றியமைக்க வேண்டும். இதில் இரு தரப்பும் தங்கள் நற்பெயர், சமூக மதிப்பு, மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் வலைதளங்களில் விரும்பத்தகாத பதிவுகளை பதிவு செய்யக் கூடாது. பொது வெளியில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டக் கூடாது’’ என உத்தரவிட்டு, அந்த வழக்கை முடித்துவைத்தது.

2004ல் புன்னைவன நாதர் சன்னதியில் மயில் மலருடன் இருக்கும் சிலை காணாமல் போனதும், அதற்கு மாற்றாக பொய்யான வேறு சிலை வைக்கப்பட்டதும் லட்சோப லட்சம் சிவபக்தர்கள் அறிந்த ஒரு உண்மை! கபாலீஸ்வரரின் பக்தர்களுக்கு கடுகளவும் இதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த உண்மையையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் நீதிமன்றம் மேற்படியாகப் பேசி, வேணு சீனிவாசனுக்கு முட்டு கொடுத்துள்ளது தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில் மனம் நொந்த ரங்கராஜன் வேணுசீனிவாசன் குறித்து கடுமையாக டிவிட்டரில் ஏதோ எழுத, கடுப்பான வேணு சீனிவாசன் தனது வழக்கறிஞர் மூலமாக ரங்கராஜன் நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டதாக வழக்கு தொடுத்தார்.

ரங்கராஜன் நரசிம்மன்

நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.மாலா அமர்வில்இந்த வழக்கு கடந்த அக்.12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வேணு சீனிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘ வேணுசீனிவாசன் தொடர்பாக எந்தவொரு பதிவுகளையும் போடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், ரங்கராஜன் நரசிம்மன் வேண்டுமென்றே ட்விட்டரில் வேணு சீனிவாசன் குறித்து மோசமான வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

இதை கருத்தில் கொண்ட  நீதிபதிகள், இது தொடர்பாக மன்னிப்பு கோரி ரங்கராஜன் நரசிம்மன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அந்த வகையில்  இந்த வழக்கு சமீபமாக அக்.18-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ரங்கராஜன் நரசிம்மன் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘வேணு சீனிவாசனின் நற்பெயருக்கோ, அவரதுமதிப்பு, மரியாதைக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் இனி சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ய மாட்டேன். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். ஏற்கெனவே ட்விட்டரில் பதிவிட்டதையும் நீக்கிவிடுகிறேன்’’ என்று உத்தரவாதம் அளித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வேணு சீனிவாசன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

ஆக, ‘கபாலீஸ்வரருக்கும் நியாயம் கிடைக்கவில்லை. ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை..’என மனம் நொந்த ரங்கராஜன் தனது டிவிட்டரில் பாரதியாரின் புகழ்மிகு கவிதையான

தேடிச் சோறு நிதம் தின்று

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று- பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி- கொடும்

கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் பல

வேடிக்கை மனிதரை போல – நான்

வீழ்வேன் என நினைத்தாயோ..!

எனப் போட்டு, ‘தெய்வம் நின்று கொல்லும்’ எனக் குறிப்பிட்டுள்ளதோடு, ‘இது வே.சிக்கான பதிவு’ எனக் கூறி உள்ளார்!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளிக் கூட வழக்கிலும் கைது செய்யப்பட்ட செல்வக்கான குற்றவாளிகளுக்கு விரைந்து ஜாமீன் கொடுத்ததுடன், ‘அது பற்றி ஊடகங்கள் புலன் விசாரணை செய்யக் கூடாது’ என நீதிமன்றம் உத்திரவிட்டது நினைவிருக்கலாம். இப்படியாக கடவுள் சிலையை களவாடியவர் தொடங்கி, கன்னிப் பெண்னை கற்பழித்து கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் வரை, செல்வாக்கான எந்தக் குற்றவாளிகளும் நீதிமன்றத்தை அணுகி, ‘தங்களைப் பற்றி யாரும் பேசக் கூடாது’ என தடை வாங்கிக் கொண்டிருந்தால், இந்திய அரசிய சட்டம் எளிய மனிதர்களுக்கு வழங்கியுள்ள பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்திற்கு என்ன மரியாதை? என்பதே தற்போது மக்கள் மனதில் எழும் கேள்வியாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time