பளபளப்பாக பல்லை பாதுகாக்க பற்பல வழிமுறைகள்!

- எம். மரியபெல்சின்

பற்களை சரியாகப் பராமரிக்காவிட்டால் பல் சொத்தை, பல் கூச்சம், பல் வலி, பற்களில் காரை , ஈறு வீக்கம், ரத்தக்கசிவு என பிரச்சினைகள் அணிவகுக்கும். பல்லுக்கு ஹாஸ்பிட்டல் போனால் பர்ஸை பதம் பார்த்திடுவாங்க! பற்களை செலவில்லாமல் பாதுகாக்க எக்கசக்கமான எளிய வழி முறைகள் இருக்கிறது!

பல் போனால் சொல் போச்சு என்பார்கள். ஆகவே, பல் பராமரிப்பில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். தினமும் காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்குவது மட்டுமே பல் பாதுகாப்பு என்று நினைப்பது தவறு. பற்களின் இடுக்குகளில் உணவுத்துகள்கள் தேங்காமல் பார்த்துக்கொள்வது, இனிப்புகளைச் சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பது என சிறு சிறு செயல்களைச் செய்தாலே போதும். இவை மட்டுமல்ல, இங்கே நாம் சொல்லியிருக்கும் சில எளிய வழிமுறைகளை சரியாகப் பின்பற்றினால் மருத்துவர்களிடம் செல்வதைத் தவிர்க்கலாம்.

பற்களில் சொத்தை ஏற்பட்டால், வலி உண்டாகி மிகவும் தொல்லை தரும். இது போன்ற நேரங்களில் மூன்று அல்லது ஐந்து புதினா இலைகளுடன் ரெண்டு கிராம்பு சேர்த்து அரைத்து சொத்தை அல்லது வலி உள்ள இடத்தில் வைக்க வேண்டும். சுமார் 5 நிமிடம் வரை அப்படியே பல்லால் கடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு விரலால் லேசாக தேய்க்க வேண்டும்; பிறகு துப்பிவிட வேண்டும். அத்துடன் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இதைச் செய்தால் தீராத பல் வலி தீரும். அதே நேரத்தில் சொத்தைப்பல் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவேளை உணவு, சிற்றுண்டி மற்றும் பானங்களை அருந்தி முடித்ததும் வாய் கொப்பளிக்க வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்குமுன் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் சொத்தைப்பல்லால் எந்த சிரமமும் ஏற்படாது. இது எனது சொந்த அனுபவம் மட்டுமல்ல, பலருக்கும் பரிந்துரை செய்து பலன் கிடைத்திருக்கிறது.

வேப்ப மரத்தின் வேர்க்கசாயத்தை இளஞ்சூட்டில் நன்றாக வாய் கொப்பளித்தாலும் பல் நோய் தீரும். புங்கம்பட்டையை இடித்து தூளாக்கி நீர் விட்டு கொதிக்க வைத்து பாதியாக வற்றும்வரை காய்ச்ச வேண்டும். இதைத்தொடர்ந்து நல்லெண்ணெய், கடுக்காய்த்தூள் சேர்த்து மெழுகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். இந்த நிலையில் ஏற்கெனவே கொதிக்க வைத்திருந்த புங்கன் கசாயத்தை அதனுடன் சேர்த்து நன்றாகச் சூடாக்கி அடுப்பிலிருந்து கீழே இறக்கி பத்திரப்படுத்திக் கொள்ளவும். இந்த எண்ணெயை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வாயில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து வாய் கொப்பளித்தால் பல் சொத்தை சரியாகும். அதே நேரத்தில் பல் வலி வராமலிருக்க கொட்டைப்பாக்கை தீயில் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் காசுக்கட்டி, லவங்கப்பட்டை சேர்த்து பல் துலக்குவது நல்லது. இதனால் பல் வலி நீங்குவதுடன் பல் நோய்களும் வராது.இதே போல் கேரட்டையும் பச்சையாக மென்று சாப்பிட்டால் ஈறுகள் வலிமைபெறுவதுடன் பற்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

துத்தி இலை எல்லா இடங்களிலும் மிகச்சாதாரணமாக வளர்ந்து காணப்படும். அதன் இலை மற்றும் வேரினை கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் கூச்சம், பல் ஆட்டம் போன்ற பிரச்சினைகள் சரியாகிவிடும். பல் பொடியுடன் பூந்திக்கொட்டை, உப்பு சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். மகிழ மரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கினால் எவ்வளவு கடுமையான பல்வலியும் சரியாகிவிடும். புதினா இலைகளை காயவைத்து அதனுடன் சம அளவு உப்பு சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை வேளைகளில் பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் உள்ளிட்ட பல் நோய்கள் சரியாகும். கொய்யா இலையை மென்று துப்பினாலும் பல் கூச்சம் விலகும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றின் தோலின் உள்பகுதியை பற்களில் படுமாறு தேய்த்து வாய் கழுவிவிட்டு பிறகு வழக்கமான பல்பொடி அல்லது பேஸ்ட்டினைக்கொண்டு பல் துலக்குவதன்மூலம் பற்களை பாதுகாக்கலாம்.

வாழைப்பழத்தின் தோலில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் இருக்கின்றன. எனவே வாழைப்பழத்தோலினைக் கொண்டு பல் துலக்கினால் பல் வெண்மையாகும். குறிப்பாக தோலின் உள்பகுதியைக் கொண்டு பற்களைத் தேய்த்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன் ஈறுகள் வலிமை பெறும். பேஸ்ட் மூலம் பல் துலக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் தூளினை அதனுடன் சேர்த்து பல் துலக்கினால் பல் பாதுகாக்கப்படும். இதேபோல் சில உணவுகளை உட்கொண்டால் பற்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். எள்ளில் துவையல், பொடி செய்து சாப்பிட்டால் பற்கள் உறுதிபெறும். விளாம்பழத்தில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது சாப்பிட்டால் பற்கள் உறுதிபெறும். கரும்பை நன்றாகக் கடித்து சாப்பிட்டால் பற்களின் அழுக்குகள் நீங்கி பளபளப்புடன் இருக்கும். பற்களின் இடுக்குகளில் காரை படியாமல் தடுக்க நல்லெண்ணெயைக்கொண்டு வாய் கொப்பளிக்கலாம்.

வெண்டைக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்; ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும். வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக முந்தினநாள் இரவில் நறுக்கிப்போட்டு நீர் ஊற்றி மறுநாள் காலை அந்த நீரை மட்டும் வடிகட்டிக் குடித்தால் கால்சியம் சத்துகள் நமக்குக் கிடைக்கும். இதுவும் பல் பாதுகாப்புக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். குழந்தைப்பருவத்தில் இருந்தே கேரட்டை மென்று சாப்பிட பழக்கவேண்டும். மென்று சாப்பிடக்கூடிய பச்சைக் காய்கறிகள் வரிசையில் வெண்டைக்காயும், கேரட்டும் முக்கியமானது. இவற்றைச் சாப்பிடும்போது உமிழ்நீரும் சுரக்கும். இதனால் செரிமான சக்தியும் தூண்டப்பெறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பல் வலிக்கும்போது கிராம்பு அல்லது கிராம்புத் தைலத்தை அந்த இடத்தில் வைத்துக் கடித்துக் கொள்வது வலியைப் போக்கும். சிலர் இஞ்சி, சுக்கு, ஏலக்காய் போன்றவற்றை பல் சொத்தை உள்ள இடங்களில் வைத்து கடித்துக் கொள்வதன்மூலம் வலி தீருகிறது என்பார்கள். ஆனால், இவற்றை பல்லில் வைத்து வலி தீர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரினைக்கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டாம். இல்லாவிட்டால் அவை பற்களின் இடுக்குகளில் தேங்கி கூடுதல் வலியை உண்டாக்க நேரிடும். எனவே, அதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பல் சொத்தை உள்ளவர்கள் ஒவ்வொருவேளை உணவு அல்லது தேநீர், ஜூஸ் போன்றவற்றை அருந்தி முடித்ததும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

நாயுருவி வேர், ஆலம் விழுது

மேலும் பொதுவாக நாயுருவி வேர், ஆலம் விழுது, வேப்பங்குச்சி, புங்கை மரத்துக்குச்சி போன்றவற்றைக் கொண்டு தனித்தனியாக பல் துலக்குவதை பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இயற்கை பல் துலக்கிகளான இவற்றைக் கொண்டு பல் துலக்கினால் பல் நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது உண்மையே.

இவை எல்லாவற்றையும்விட பல் நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுத்துக்கொள்ளவும், பல் கூச்சம், வாய் நாற்றம் உள்ளிட்ட மேலும் பல பிரச்சினைகள் வராமலிருக்க நாமே ஒரு பல்பொடி தயார் செய்யலாம். இங்கே நாம் சொல்லக்கூடிய பொருட்கள் அனைத்தையும் கொண்டுதான் தயாரிக்க வேண்டுமென்று இல்லை. இதில் கிடைப்பவற்றைக்கொண்டு எளிய முறையில் பல்பொடி தயாரித்து பலன் பெறுங்கள். திரிபலா என்று சொல்லப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை முக்கியமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

இவை மட்டுமல்ல கீழே சொல்லப்போகும் வேறு சில பொருட்களும் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இதேபோல் கருவேலம்பட்டையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். படிகாரம், லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மாசிக்காய், கல் உப்பு, இந்துப்பு சேர்த்துக்கொள்ளலாம். ஆலம் விழுது, நாயுருவி வேர், மஞ்சணத்தி காய், புதினா இலை, வேப்பங்குச்சி போன்றவற்றை சேகரித்து காய வைத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் மரக்கரி, நெல் உமியை தீயில் எரித்து சேர்த்துக்கொள்வதும் நல்லது.

இங்கே சொல்லப்பட்டிருப்பவற்றில் உங்களுக்கு எவையெவை கிடைக்கிறதோ அவற்றைக்கொண்டு பராமரியுங்கள். நம்பிக்கையுடன் முயற்சியுங்கள், நிச்சயம் பலன் கிடைக்கும்.

கட்டுரையாளர்; எம். மரியபெல்சின்

இயற்கை வழி மருத்துவர், உடல் நல ஆலோசகர், மூத்த பத்திரிகையாளர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time