என்ன தகுதியில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் பழனிச்சாமி?
அதிர்ஷ்ட வசத்தால் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை சாதாரண அளவில் கூட கவனம் பெற்றவரல்ல! தலைவர் என்பது இருக்கட்டும், சிறந்த தொண்டராகக் கூட ஆரம்ப காலம் தொட்டு அறியப்பட்டவரில்லையே…!
முதலமைச்சராகக் கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்யப் பயன்படுத்தவில்லையே! எந்த ஒரு விஷயத்திலுமே இவரது நிர்வாகத் திறமை வெளிப்படவில்லை என்பது மட்டுமல்ல, எதிலும்,குழப்பம்,குளறுபடி என ஆட்சி செய்தவர் தான் பழனிச்சாமி.
இவர் ஆட்சியில் அமர்ந்தது முதல் ஒவ்வொரு துறையிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. எதிலும் கமிஷன்,எதற்கெடுத்தாலும் கமிஷன் என ’கரப்ஷன்’ ராஜ்யத்தில் கைதேர்ந்தவர் தான் இந்த பழனிச்சாமி! இந்த கையூட்டையும், கமிஷனையும் கச்சிதமாக செய்த வகையில் தானே இவர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ‘குட்புக்’கிலே இடம்பெற்றார்.
ஊழல் மன்னன்
நெடுஞ்சாலைத் துறையில் நாடு நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு அதிகபட்ச ஊழலை நிகழ்த்திக் காட்டியவர் தான் பழனிச்சாமி என்று அந்த துறையின் மூத்த பொறியாளர்களே மனம் குமுறுகின்றனர். 2011 ல் இவர் நெடுஞ்சாலைத் துறை பொறுப்பை ஏற்கும் வரை 10% கமிஷன் நிலவிய துறையில் இவர் அதை 20% கமிஷன் துணிச்சலாக ஏற்றி, சாலையின் தரம் எக்கேடுகெட்டால் எனக்கென்ன? என வசூலித்தவர். இதை அந்த காலகட்டத்திலேயே நான் எழுதி இருக்கிறேன்.
முதலமைச்சராகிய பிறகு அந்தத் துறையை மீண்டும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்ட பழனிச்சாமி கமிஷன் பணத்தை 30% அளவுக்கு உயர்த்திக் கொண்டதோடு,இந்த கொரானா காலத்திலும் தேவையற்ற இடங்களில் எல்லாம் மீண்டும் சாலையைப் புதுப்பிப்பதாக 12,000 கோடி பிராஜக்ட் போட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.அத்துடன் தன் மாமனார் உள்ளிட்ட உறவினர்களையும் இதில் ஈடுபடுத்தியுள்ளார்.
பொதுப் பணித்துறையை மிகவும் பொறுப்பற்ற முறையில் நிர்வகித்து வருகிறார் பழனிச்சாமி. ஏரி,குளங்களை தூர்வாரியதாக பேர் பண்ணி, பணம் பார்த்து வருகிறார். பொதுவாகவே அதிமுக ஆட்சி நீர்மேலாண்மை திட்டங்கள் எதையுமே ஒழுங்காக செய்யாத ஆட்சியே! இன்றிருக்கும் பெரும்பாலான பெரிய அணைக்கட்டுகள்,மதகுகள், சிறிய நீர்தேக்கங்கள் ஆகியவை மன்னர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி, திமுக ஆட்சி ஆகியவற்றின் கொடைகளே!
இவ்வளவு மோசமான ஆட்சி செய்யும் பழனிச்சாமி ஆட்சியில் தொடர முடிகிறதென்றால், ஊழல் பணத்தின் ஒரு பகுதியை பங்கு போட்டு சகலமட்டத்திலும் சரிகட்ட தெரிந்த அவரின் சாமார்த் தியத்தால் மட்டுமே ! ஊடகங்களுக்கு விளம்பரமாக அள்ளி வழங்கி,தவறுகளை மறைத்து, விமர்சனங்களையும் தடுத்துவிடுகிறார்.
கொள்ளையர்களின் கூடாரமான ஆட்சி
கொரானா காலத்திலும் டாஸ்மாக் மது விற்பனையை சிறிதும் குறைக்காமல் வாரிச் சுருட்டி,ஏழை,எளியோரின் குடும்பங்களை வறுமைக்கும்,வன்முறைக்கும் தள்ளி, பாவப் பணத்தில் பார்ட்டியை வளர்க்கிறார். கல்வித்துறையை களவாணித்துறையாக்கி செங்கோட்டையன் செழிப்படைவதில் இவர் தலையிடுவதில்லை. மின்சாரத்துறையை நன்கு மேய்ந்து,தின்னும் தங்கமணியை தட்டிக் கொடுத்து வளர்க்கிறார்.உள்ளாட்சித் துறையை ஊழல் மிகுந்த துறையாக்கி, அடித்தள துப்புறவு பணியாளர் நியமனத்திலும், சம்பளத்திலும் கூட கையூட்டு பெறும் வேலுமணி இவருக்கு வேண்டப்பட்டவர். பால்வளத் துறையில் பகல் கொள்ளை நடத்தும்- பேட்டை ரவுடி போலப் பேசும் – ராஜேந்திர பாலாஜியை ஊட்டி வளர்க்கிறார். தமிழக கேபிள் தொழிலை கேவலமான நிலைக்கு கொண்டு சென்ற வசூல் மன்னன் உடுமலை ராதாகிருஷ்ணன், உளறுவாயர் திண்டுக்கல்சீனிவாசன், சுகாதாரத் துறையை சூறையாடிக் கொண்டிருக்கும் விஜயபாஸ்கர், கூட்டுறவுத் துறையை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கும் செல்லூர் ராஜீ… இப்படி அவரது அமைச்சரவை சகாக்களைக் கொண்டு, அநீதியான ஆட்சியைக் கொண்டு செலுத்தும் பழனிச்சாமியை அவரால்,ஆதாயம் பெறுபவர்கள் ஆதரிக்காமல் என்ன செய்வர்..?.
ஆனால், மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்!
கிரிமினல்களை பாதுகாக்க நடக்கும் ஆட்சி
பழனிச்சாமி வளர்ந்த விதத்தை வைத்துப் பார்க்கும் போது அவர் மீது மரியாதை கொள்வதற்கு எந்த வாய்ப்பும் எழவில்லை! இவர் ஒரு சாதிப் பற்றாளர் என்பதை கடந்து சாதிவெறியர்.இந்த ஆட்சியில் அவரது சாதிக்கார்கள் மட்டுமே அதிகப் பலன் பெறுவது போலப் பார்த்துக் கொண்டார். அவரது சொந்த ஊரில் பட்டியலின மக்களை மிகத் தரக்குறைவாக நடத்தியவர் என்ற பெயர் அவருக்குள்ளது! பணம்,சொத்து தகராறில் தன் நெருங்கிய உறவினர் மூவரை ஈட்டியால் குத்திக் கொன்ற வழக்கில் இவர் நீண்ட நாட்கள் தேடப்படும் குற்றவாளியாக இருந்துள்ளார் என அன்றைய போலீஸ் டைரி சொல்கிறது. அதைவிடுங்கள் தற்போது கொடை நாடு கொள்ளை நிகழ்த்தியவர்களே பழனிச்சாமியின் தூண்டுதலில் தான் அதைச் செய்தோம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர். இதில் நடந்த கொலைகளிலும் இவர் சம்பந்தப்பட்டுள்ளதாக பேச்சு அடிபட்டது. எல்லாவற்றையும் தன் அதிகார பலத்தால் மூடி மறைத்து வருகிறார்.
அரசு நிகழ்ச்சிகளில் எழுதிக் கொடுத்தவற்றைக் கூட தப்பும்,தவறுமாக பேசக் கூடிய பழனிச்சாமி பாஜக மேலிடத்தைப் பகைத்துக் கொள்ளாமல் பவ்யம் காட்டி,அகில இந்திய அளவில் பல அக்கிரமான சட்டங்கள்,மசோதாக்கள் நிறைவேறக் காரணமானவர்.இந்த வகையில் பாஜகவின் தன் பாவங்களை மறைத்துக் கொள்ள பாஜகவின் பாவங்களுக்கு துணை போகிறார். சாத்தான்குள தந்தை,மகன் படுகொலை சம்பவத்தில் இன்று வரை சம்பந்தப்பட்ட காவல்துறையினரை காப்பாற்றி வருகிறார்.பொள்ளாச்சி சம்பவத்தின் பொல்லாதவர்களை காப்பாற்றி வருகிறார்.பழனிச்சாமி ஆட்சியில் நல்ல காவல்துறை அதிகாரிகள் ஓரம்கட்டப்பட்டு,கிரிமினல் அதிகாரிகளே கோலோச்சுகின்றனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்!
Also read
ஆகச் சிறந்த கொத்தடிமை!
இவர் எம்.பியாக இருந்த காலத்திலும் சரி, எம்.எல்.ஏவாக இருந்த காலத்திலும் சரி தொகுதிக்குச் சிறப்பாக பணியாற்றியவரல்ல! நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நல்ல கேள்விகள் கேட்டவரல்ல, கட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் மாவட்ட அளவில் கூட தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தவரல்ல! ஒரு தாமரைக்கனியைப் போலவோ, ஜேப்பியாரைப் போலவோ…நல்ல களப் பணியாளரல்ல! வேலூர் விஸ்வநாதனைப் போலச் சிறந்த நிர்வாகியல்ல! கே.கே.எஸ்.ஆர், திருநாவுக்கரசு, செல்வகணபதி போலச் சுற்றிச்சுழன்று வேலை பார்த்து கட்சியைக் கட்டியரல்ல! ஆனால்,அதிமுகவில் முன்னிலைக்கு வருவதற்கு இதெல்லாம் தேவையில்லாத தகுதிகள் முதுகுத் தண்டு வளையப் பணிந்து கும்பிடு போடத் தெரிந்தால் போதும் முட்டாள்களைக் கூட மந்திரியாக்கும் கட்சி அது! ஆனால்,அதில் குனிவதற்கும் மேலாகத் தவழ்ந்து சென்று காலில் விழும் கலையைக் கையாண்டு அவர் கைப்பற்றியது தான் முதல்வர் பதவி!
கொரானா காலத்தில் இவர் செய்த குளறுபடிகள் கொஞ்சமா? நஞ்சமா? நீட் தேர்வை எதிர்ப்பது போல வேஷமிட்டு,மறைமுகமாக ஆதரித்த வகையில் 14 மாணவர்களின் சாவுக்கு காரணமானவர் என்பதை மறக்க முடியுமா? சட்டமன்ற ஜனநாயகத்தைச் சவக்குழிக்குள் தள்ளி அவசர அவசரமாக திட்டங்களை,சட்டங்களை அறிவித்தவர் என்ற வகையில் ஜெயலலிதாவையும் விஞ்சிவிட்டார்.
பாதந்தாங்கி பன்னீர் செல்வம்
சரி தற்போது பன்னீர் செல்வம் விஷயத்திற்கு வருகிறேன்.எடப்பாடிக்கு எந்த வகையிலும் ஊழலிலோ,முறைகேட்டிலோ குறைந்தவரல்ல, பன்னீர். மிகக் குறுகிய காலத்திலேயே சி.எம்.டி.ஏ வில் ஆயிரம் கோடியளவிற்கு முறைகேடாகச் சம்பாதித்தவராக அத் துறையில் உள்ளவர்களே .உறுதிப்படுத்துகின்றனர். இவர் பாஜகவின் பாதந்தாங்கி அல்லது கொத்தடிமை! மத்தியில் மகனுக்கு மந்திரி பதவி கிடைக்குமென்றால்,தமிழ் நாட்டையே டெல்லிக்கு அடமானம் வைத்துவிடக் கூடியவர்! தலைவனுக்குரிய எந்த ஆளுமைப் பண்பும் இல்லாதவர்! தலைமையை மீறத் துணியாத அடிமை என்ற வகையில் தான் இவர் ஜெயலலிதாவால் மீண்டும்,மீண்டும் முதலமைச்சர் ஆக்கப்பட்டாரேயன்றி ,தகுதியின் காரணமாகவல்ல! அத்துமீறிச் செல்லமுடியாத அடிமை, அடக்க சுபாவமுள்ள பேராசைக்காரர் என்பது தான் பன்னீர்செல்வத்தின் அடையாளமாகும்! இவரது பேராசைக்கான தீனியை விட்டெறிந்தால் பாதம் பணிந்திடுவார். உண்மையில் இவருக்கு ஏதாவது தகுதி இருந்திருக்குமானால்,ஜெயலலிதா இவரை தேர்ந்து எடுத்திருக்கவே மாட்டார் என்பது தான் உண்மை!
ஆட்சி பலத்தினால் மட்டுமே கட்சி வாழ்கிறது.
ஆதாயம் தேடும் அற்பர்களின் கூடாரம் தான் அதிமுக.எடப்பாடிக்கும் ,பன்னீருக்கும் ஆட்சியின் அதிகாரப் பதவிகளால் தான் மரியாதை.ஆட்சியில் கிடைக்கும் அனுகூலங்களை அனைவரும் சேர்ந்து பங்குபோட்டுக் கொள்ள வேண்டும் என்பதாலேயே இவர்கள் தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடங்கி அடிமட்ட நிர்வாகிகள் வரை காசு,பணத்தைக் கொண்டு கட்டுக்குள் வைத்துக் கொள்ளமுடியும் என்ற புதுபார்முலாவில் அதிமுக தற்போது நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
ஆட்சியில் இருக்கும் போதே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து கொள்ள பழனிச்சாமி தவித்ததற்குக் காரணம்,அதற்குப் பின் அவர் சொல் கட்சியில் எடுபடாது என்பதால் தான்! இன்னும் அறேழு மாதத்திற்கு அடிக்க வேண்டிய கொள்ளைகள் பாக்கியிருப்பதால் மட்டுமே இன்றைக்கு ஒற்றுமை சாத்தியப்பட்டுள்ளது.
முந்தைய கூட்டத்தில் நானே அடுத்த முதல்வர் என இருவரும் மோதிக் கொண்டனர்.
’’நீ வார்த்தை தவறிவிட்டாய்…எனப் பன்னீரும், ’’நீ துரோகம் செய்தவன்’’ என எடப்பாடியும் எகிறி அடித்துக் கொண்டனர். பன்னீர் ஏதோ மான ரோஷம் உள்ளவர் போல…சிலிர்த்துக் கொண்டு படை திரட்டிக் காட்டுகிறேன்…எனச் சாதி ஆட்களை வரவழைத்துப் பேசி,சதுரங்கம் விளையாடினார். இதெல்லாம் அவர் தன் பேரத்தை அதிகரிப்பதற்காக செய்த கண்ணாம்பூச்சி விளையாட்டு எனத் தெரிந்து கொண்ட பழனிச்சாமி, பன்னீருக்குத் தர வேண்டியதைத் தந்து பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டார்.
கட்சியினர் ஒத்துக் கொள்வது போலத் தெரிந்தாலும்,பதவி இல்லாத காலத்தில் இவர்கள் தலைவர்களாக நின்று நிலைக்கவே வாய்ப்பில்லாதவர்கள். வெற்றிபெறவே வாய்ப்பற்ற ஒரு கட்சியின் அவசரக் காலத் தலைவர்கள் தங்களை அடுத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர்…என்று தம்பட்ட மடித்துக் கொள்வது நல்ல வேடிக்கை தான்!
சசிகலாவையும்,தினகரனையும் பாஜக கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் எடப்பாடியும், பன்னீரும் இவ்வளவுக்குத் தலை எடுக்க முடிந்தது. பாஜக இதில் தலையிடாமல் வேடிக்கை பார்த்திருக்குமானால், பன்னீரும்,எடப்பாடியும் தலை நிமிராமல் சசிகலாவின் பாதத்தை பணிவதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்திருப்பார்கள்.
சசிகலாவின் சிறையிலடைத்து,அவரது சொத்துக்களை முடக்கி,தினகரனை ஒதுங்க வைத்து, மன்னார் குடி கூட்டத்தை மட்டுப்படுத்தி வைத்திருக்கும் காரணத்தால் தான் அதிமுக ஆட்சி பிழைத்திருக்கிறது.தமிழகத்தில் திமுக தலையெடுக்காமல் தவிர்ப்பதற்கு பாஜக, அதிமுகவை பாதுகாக்கிறது என்றால், அதற்குப் பரிகாரமாக நாடாளுமன்றத்தில் பாஜகவின் பாவங்களுக்கு துணைபோகிறது அதிமுக!
வழிகாட்டுக் குழுவா? வழிப்பறி குழுவா?
வழிகாட்டிக் குழுவில் உள்ளவர்களின் லட்சணத்தை எழுதி,பக்கங்களை வீணடிக்க விரும்பவில்லை! நாற்றமெடுக்கும் கூவத்தில் ஓடி வரும் அழுக்குகளின் தராதரத்தை பேசுவதில் பயனில்லை.
சுருக்கமாகச் சொல்வதென்றால்,இது கட்சியை வழி நடத்த அமைக்கப்பட்ட குழுவல்ல! இருவரும் தங்களைப் பாதுகாக்க அமைத்துக் கொண்ட செக்குயூரிட்டிகள்!
தேர்தல் காலத்தில் எம்.பி,எம்.எல்.ஏ சீட்டுபெறுவதற்கு இவர்களின் தயவு கட்சிக்காரர்களுக்கு தேவைப்படலாம். மாவட்ட,ஒன்றிய,கிளை செயலாளர் நியமனங்களில் அதிகாரம் செலுத்தலாம்! ஆக,இது ஒரு வசூல்குழுவாக மாறவும் வாய்ப்புண்டு.
’’வழிகாட்டிக் குழுவிற்குள் வந்தமரும் தகுதி எனக்கில்லையா?’’ என்று மூத்த தலைவர்களில் ஒருவருக்கேனும் ரோஷம் வந்ததாகத் தெரியவில்லை.இருக்கும் இடத்தையும் இல்லமலாக்கி கொள்ள சுயநலவாதிகள் விரும்புவதில்லை!
கூட்டுக் களவாணிகள் எப்போதுமே ஆதாயத்திற்கு மட்டுமே ஒன்று சேர்வார்கள்! ஆதாயம் இல்லையென்றால்,பிரிந்துவிடுவார்கள்..! இவர்களை ஆட்சியிலிருந்து இறக்கி,ஆறுமாதம் இங்கு கவர்னர் ஆட்சி நடக்குமென்றால்,அதற்குள் இவர்கள் சண்டையிட்டு சிதறிப் போய்விடுவார்கள்.
இன்னும் ஆளும் காலம் கொஞ்சம் தான்! ஓயும் காலம் நெருங்கிக் கொண்டுள்ளது.
Leave a Reply