ஆம் ஆத்மியின் அந்தர் பல்டி அரசியல்! ஏன்? எதற்கு?

-சாவித்திரி கண்ணன்

நேர்மை, நிர்வாகத் திறன், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கரை ஆகியவற்றின் அம்சமாக பார்க்கப்பட்டவர் கெஜ்ரிவால்! சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசிலை விரும்பாதவர்! ஆனால், சமீப காலமாக இந்துத்துவர்களையே மிரள வைக்கும் மத அரசியலுக்கு மாறி வருகிறார்! இதன் பின்னணி என்ன?

மாற்று அரசியலுக்கு உதாரணமாகவும், ஊழற்ற நிர்வாகத்திற்கு முன் மாதிரியாகவும் பேசப்பட்டு வருபவர் அரவிந்த் கேஜ்ரிவால்! ஆனால், சமீப காலமாக இந்துத்துவ அரசியலில் பாஜகவின் போட்டியாளராக தன்னை அடையாளம் காட்டி வருகிறார்! பாஜகவையே அதிர வைக்கும் வகையில், ‘இந்துத்துவ ஸ்டண்ட்’ அடிக்கிறார்.

குஜராத்தில் பாஜகவை வீழ்த்த அவர் சுழட்டிக் கொண்டிருக்கும் சாட்டையில் அவர் சட்டையே கிழிந்து விடும் போல! சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி  ஆட்சி அமைத்தால், “குஜராத்தில் இருந்து அனைத்து மக்களுக்கும்” “அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவச பயண வசதி செய்யப்படும்” என்கிறார்!

”டெல்லியியிலும் ராமச்சந்திரஜியை வழிபட பல்லாயிரம் ராம பக்தர்களை அயோத்திக்கு நான் இலவசமாக அழைத்துச் செல்கிறேன். அதே போல உங்களை உங்கள் வீட்டிலிருந்து அழைத்துச் செல்வது முதல் அயோத்தியில் தங்குவது, உணவுகள், தரிசனம் மற்றும் உங்களை வீட்டில் இறக்கி விடுவது வரை அனைத்தும் இலவசம். ​​இது  ராமபக்தர்களின் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான அனுபவமாகும்!” என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார். ஒரு காலத்தில் இஸ்லாமிய மக்களின் மனங்களை நோகடித்து மசூதியை இடித்த இடத்தில் ராமர் எப்படி காட்சி தரமுடியும்?” எனக் கேள்வி எழுப்பியவரா இவர்? என திகைக்க வைக்கிறார்!

டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் கூட ஆம் ஆத்மி கட்சியினர், ”ஊழல் அரக்கனை அழித்து ராமரஜ்ஜியம் அமைக்க ஓட்டுப் போடுங்கள்” என்று தான் கேட்டனர்.

அரவிந்த் கேஜ்ரிவால் மூன்றுமுறை மக்களால் ஏகோபித்த முறையில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்! இந்த மூன்று தேர்தல்களிலும் பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் பெரும் தோல்வியை பரிசளித்து, மக்கள் ஆம் ஆத்மிக்கு அமோக வெற்றியை தந்ததற்கு காரணம், அவர் ஊழற்ற ஆட்சியைத் தருகிறார். குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் ஆகியவற்றை சிறப்பாக செய்து தருகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கல்வியும், மருத்துவமும் பெரும் சுரண்டலாக மாறி நிற்கும் இந்திய சமூகத்தில் இவை இரண்டையும் தரமான முறையில் கட்டணங்களின்றி டெல்லி மக்களுக்கு சாத்தியப்படுத்தி உள்ளார். இந்த காரணத்திற்காகவே நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஓட்டுப் போடும் வாக்களார்கள் கூட, சட்டமன்ற தேர்தல் என்று வந்தால் ஆம் ஆத்மிக்கு மட்டுமே ஓட்டுப் போடுகின்றனர்! அந்த வகையில் சிலபல குறைகள் இருந்தாலும், அரவிந்த் கேஜ்ரிவால் மக்களுக்கான முதல்வர் என்றே நம்மப்படுகிறார்.

இத்தனை நல்ல அம்சங்களோடு நன்றாக ஆட்சி செய்து வந்த அரவிந்த் கேஜ்ரிவால் சமீப காலமாக தடம் மாறிப் பயணிக்கிறார்! பாஜகவை வீழ்த்த நினைத்தாரா என்னவோ தெரியவில்லை. அதன் பாணியிலான இந்துத்துவ அரசியலை அதைவிட தூக்கலாக கையில் எடுத்துள்ளார்!

”இந்திய ரூபாய் நோட்டுகளில் வினாயகர், சரஸ்வதி படங்களை போட்டல் பொருளாதார பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்” என்கிறார். ஏராளமான இலவச திட்டங்களை அறிவிக்கிறார்! டெல்லி ஆம் ஆத்மியின் அமைச்சர் ராஜேந்திரபால் கெளதம் அம்பேத்கரின் தீவிர பற்றாளர். அவர் அம்பேத்கர் வழியில் இந்து தெய்வங்களை பிரார்த்தனை செய்ய மாட்டோம் என கூறி, 10,000 பேர் பெளத்த மதத்திற்கு மாறும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார் என்பதால் அவரை பதவியில் இருந்தே தூக்கி எறிந்துள்ளார்! ஒருவர் தான் விரும்பிய கொள்கையின்படி ஒரு மதத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், மற்றொரு மதத்தை பின்பற்றவுமான சுதந்திரம் இல்லையா? அது தண்டிக்கபட வேண்டிய குற்றமா? இதற்காக அமைச்சர் ஒருவரின் பதவியை பறிப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இது இந்துத்வ வெறி கொண்டவர்களின் ‘குட்புக்’கில் இடம் பெறும் முயற்சியா?

”இராமாயணத்தில் ராமர் கூறியபடியும், மகாபாரதத்தில் கிருஷ்ணர் கூறியபடியும் செயல்படுவதே ஆம் ஆத்மியின் நோக்கம்” என்கிறார்!

ஒரு காலத்தில், ”காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை தந்திருக்க வேண்டும்” எனப் பேசியவர் அரவிந்த் கேஜ்ரிவால், ஆனால், தற்போது காஷ்மீர் விவகாரத்தை 370 விஷேச பிரிவை நீக்கி கந்தர்வ கோலமாக்கிய பாஜகவின் செயலை ஆதரிக்கிறார்! டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக் கழகத்தில் செக்குலரிஷ மாணவர்கள் அதிகார வர்க்கத்தால் வேட்டையாடப்படுவதை கண்டும், காணாமல் மெளனம் சாதிக்கிறார்.

மேலும் சமீப காலமாக அவருக்கு இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற பெரும் கனவு பின் தொடர்ந்து வந்து உலுக்கிறது போலும். அதனால் பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்தார். கோவாவில் முயன்று தோற்றுப் போனார். உத்திரகண்டில் வெற்றி பெற்றால் அதை இந்துக்களின் புனிததலமாக்குவேன் என்கிறார்! தற்போது குஜராத்தில் ஹனுமார் பாணியில்  குட்டிக்கரணம் போட்டு வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசு ஆம் ஆத்மிக்கு தந்து கொண்டிருக்கும் நெருக்கடிகள், சொல்லொண்ணா சோதனைகளை எதிர்கொள்ள அவர்கள் வழியிலேயே பயணித்து, அவர்களை பலம் இழக்க செய்யும் யுத்த தந்திரமா இது? ஒரு பலமான எதிரியை வீழ்த்த அவனது ஆதரவு தளத்தை அபகரிப்பதும் ஒருவித அரசியல் யுக்தி தான்! எனவே தான்  கெஜ்ரிவால் பாதை மாறிப் பயணிக்கிறாரா? என்றும் யோசிக்கத் தோன்றுகிறது! அதே சமயம் ‘கெஜ்ரிவால் எந்த இடத்திலும் இஸ்லாமிய விரோத பேச்சுகளை பேசவில்லை’ என்பதும் கவனத்திற்கு உரியதாகும்!

இந்தியாவின் பிரதமராகராக வர விரும்புபவர் தனக்கான தோழமை சக்திகளை அடையாளம் காண வேண்டாமா? எதிர்கட்சிகளில் ஓரளவாவது ஒத்த கருத்துள்ளவர்களோடு ஒன்றுபட வேண்டாமா? ஆனால், கேஜ்ரிவலோ,”எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நோக்கம் அல்ல” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்!  ”மற்ற கட்சிகள் அந்த நோக்கத்திற்காக அதை விரும்பினாலும் கூட, எங்கள் முக்கிய நோக்கம் அது இல்லை” என்று கூறுகிறார்!

அதுமின்றி “ஒரு ஓட்டு கூட காங்கிரஸுக்குப் போகக் கூடாது” குஜராத் மக்களை வலியுறுத்திய அரவிந்த் கெஜ்ரிவால், “என் கணிப்பின்படி காங்கிரஸுக்கு 10 இடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கும்! காங்கிரஸுக்கு ஒரு ஓட்டுக் கூட கொடுக்க வேண்டாம். அனைத்து காங்கிரஸ் ஓட்டுகளும் ஆம் ஆத்மிக்கு வர வேண்டும்,” என்று கேட்டுக் கொள்கிறார் என்றால், என்னவென்பது?

“காங்கிரஸ் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு வருவதால், அவர்கள் களத்தை இழந்துள்ளனர். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆளும் கட்சிகளாக இருந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை மட்டுமே சாத்தியமான எதிர்க்கட்சியாக மக்கள் கருதுவதால் ராகுலின் யாத்திரை எந்த விளைவையும் ஏற்படுத்தாது,” எனக் கூறுவதை வைத்து பார்க்கும் போது, இந்தியாவில் பாஜக vs ஆம் ஆத்மி என்ற களத்தை உருவாக்கிடவும், மற்ற எதிர்கட்சிகளே இல்லாத நிலையையும் சேர்த்தே கெஜ்ரிவால் விரும்புவது போலத் தெரிகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time