அருவெறுக்கத்தக்க அரசியலும், அடிவருடி அரசியலும்!

-சாவித்திரி கண்ணன்

அகங்காரம், அரைவேக்காட்டுத்தனம், வெறுப்பு, வன்மம் இதையே அரசியல் வழிமுறையாகக் கொண்ட அண்ணாமலையின் அருவெறுக்கதக்க அரசியலும், அடிமேல் அடி விழுந்தாலும் அமைதி காத்து, சுயமரியாதையை தொலைத்து பதவி சுகத்தையே குறிக்கோளாகக் கொண்ட ஸ்டாலினின் அடிவருடி அரசியலுமாக தமிழகம் அதகளப்படுகிறது!

பாஜகவின் மீதான மக்களின் குறைந்தபட்ச மரியாதையைக் கூட குழி தோண்டிப் புதைப்பவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்!

எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வது, எதை வேண்டுமானாலும் பேசிவிடுவது, பேசிய அபத்தங்களுக்கு வண்டி வண்டியாக நியாயம் கற்பிப்பது என அரைவேக்காட்டு அரசியலின் அடையாளமாக அண்ணாமலை திகழ்கிறார்!

தடாலடியாக பேசுவது, தாறுமாறாக அதற்கு விளக்கம் தருவது, உளறிக் கொட்டுவது, அவதூறுகளை அள்ளிவீசுவது, மிரட்டுவது, தற்பெருமை கொள்வது…என இவரைப் போன்ற ஒரு அரசியல் தலைமையை இது வரை தமிழகம் கண்டதில்லை.

ஐ.பி.எஸ் பதவியை அடைவதற்கு ஒரு படிப்பு, பயிற்சி இருப்பது போல அரசியலுக்கு ஒரு படிப்போ, பயிற்சியோ தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள்! அதுவும் ஒரு கட்சியின் தலைவராக வருவதற்கு அரசியல், சமூகம் குறித்த பரந்துபட்ட புரிதலும், அனுபவமும் இருந்தால் தான் ஒரு பக்குவமே கைகூடும்.

அரசியல் பயிற்சி பட்டறைகளில் அனுபவஸ்தர்களின் உரையாடல்களை கேட்டு உள்வாங்க வேண்டும். கிளைச் செயலாளர் தொடங்கி படிப்படியாக மக்கள் பிரச்சினைகளில் பங்கெடுத்து வர வேண்டும். சமூகத்தில் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கைபாடுகளை, பழக்க, வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும். அவர்களின் வலியை உணர முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் எதுவுமே இன்றி, மேலிடத்தின் ஆசிர்வாதத்தால் தலைமைக்கு வந்ததால் தலைகால் புரியாமல் ஆடுகிறார்!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அவருடைய செறுப்புக்கு கூட சமானமில்லையாம்!

பத்திரிகையாளர்கள் அறிவாலயத்தின் அடிமைகளாம்!

ஆனால் உண்மை என்ன? இந்திய பத்திரிகை முதலாளிகளில் பெரும்பாலானவர்கள் பாஜகவின் அடிமைகளாகத் தான் உள்ளனர்! முதலாளிகளையே விலைக்கு வாங்கிய கட்சியின் தலைமை தொழிலாளிகளான பத்திரிகையாளர்களை ஏன் மதிக்க வேண்டும்? என்பதே அண்ணாமலையின் புரிதலாக உள்ளது. ஆனால், நிதானமற்று கோபப்படும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்கிறார் என்பது தான் அவருக்கு புரியவில்லை.

உணர்ச்சிவசப்படாமல் கூலாக பத்திரிகையாளர்களை கையாளுவது என்பது ஒரு கலை! அந்தக் கலையை கையாள முடியாதவர்கள் தலைவர்களாக அரசியலில் ஜொலிக்கவே முடியாது. நெருக்கடியான கேள்விகளை பக்குவமாக எதிர்கொண்டு பதில் சொல்வதில் தான் ஒரு தலைவரின் இமேஜ் பற்பல மடங்கு உயரும். கோபமான கேள்விகளைக் கூட நகைச்சுவையோடு எதிர்கொண்டு சமாளிக்கும் கலையில் கைதேர்ந்திருந்தால் மட்டுமே பிரஸ்மீட்டை எதிர்கொள்ள முடியும். பத்திரிகையாளர்களிடம் காட்டும் அன்பும், அன்னியோனியமும் பற்பல புதிய பரிமாணங்களை, வெளிச்சத்தை அரசியல் தலைவர்களுக்கு தரும். மாறாக அகங்காரமும், ஆவேசமும் கொண்டால் அவர் தனிமைப்படவே நேரிடும்.

பாஜகவின் தமிழக தலைமை பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டால், அடுத்த நிமிடம் அவர் சராசரி மனிதர் தான்! அவரது கட்சிக்குள்ளேயே அவருக்கு காலணா மரியாதை கிடைக்காது. பதவியில் இருக்கும் போது காட்டும், பணிவும், பக்குவமுமே காலாகாலத்திற்குமான உண்மையான நட்புகளை பெற்றுத் தரும். அண்ணாமலையை பாஜக டெல்லித் தலைமை கடைசி வரை தூக்கி சுமக்குமா? அல்லது இடைக்காலத்தில் இறக்கிவைத்து விடுமா? என்பது தெரியாது.

தமிழக உளவுத்துறையில் 60 சதவிகித உயர்பதவியில் கிறிஸ்துவர்கள் தான் உள்ளனராம்! இது அப்பட்டமான பொய்! உண்மையில் 20 சதவிகிதம் கூட இல்லை என்பதே உண்மை! ஆனால், காவல்துறையில் மதக் கண்ணோட்டத்தை செலுத்துவது எவ்வளவு பெரிய அநீதி! தமிழக காவல்துறை தலைவராக டேவிட்சன் ஆசிர்வாதம் இருப்பதை பாஜகவால் பொறுக்க முடியவில்லை! அதனால், கண்மூடித்தனமாக அவர் மேல் களங்கம் கற்பித்துக் கொண்டே உள்ளார் அண்ணாமலை!

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆயிரம் தவறுகள் நடந்தன! அவை எல்லாவற்றுக்கும் வாய்மூடி மெளன சாட்சியாக இருந்தவர் தான் அண்ணாமலை. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 உயிர்கள் அநீதியாக குருவி போல சுட்டுக் கொல்லப்பட்ட போது கொதித்து எழுந்தாரா அண்ணாமலை. சாத்தான் குளத்தில் தகப்பனையும், மகனையும் காவலர்கள் அணுவணுவாக சித்திரவதை செய்து கொன்ற போது பாஜகவிற்கு எந்த அறச்சீற்றமும் வரவில்லை. அன்றைக்கு டாஸ்மாக் மது கரைபுரண்டு ஓடிய போது கண்டிக்க துப்பில்லை.

ஏனென்றால், அ.திமுகவின் தயவில் மட்டுமே தமிழகத்தில் பாஜகவில் யாருமே எம்.பியாகவோ, எம்.எல்.ஏவாகவோ ஆக முடியும் என்ற நிலை. எல்லாவற்றுக்கும் மேலாக பாஜகவின் மேலிடத்திற்கு எடப்பாடி கப்பம் கட்டி வந்தார்! தமிழக பாஜகவினர் சிபாரிசுகளுக்கு அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டது.

உண்மையில் திமுக ஆட்சி பாஜகவிற்கு எதிராக இல்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாம் கண்ட திமுகவிற்கும், வந்த பிறகு கண்டுவரும் திமுகவிற்கும் மலைக்கும், மடுவிற்குமான வேறுபாடுகள் உள்ளன. ‘பாஜக அடிக்கும் அடிகளை எல்லாம் அமைதியாக வாங்கிக் கொண்டு, ஏச்சு, பேச்சுக்களை எல்லாம் எதிர்ப்பின்றி தாங்கிக் கொண்டு ஐந்தாண்டு ஆட்சி அதிகாரத்தை முழுமையாக சுவைத்துவிட வேண்டும்’ என்ற ஒரே குறிக்கோளில் தான் இன்று திமுக ஆட்சி செய்கிறது!

ஆனால், அதற்காக அண்ணாமலை ஒரேயடியாக திமுக வெறுப்பையே உமிழ்ந்து கொண்டிருப்பது அரசியல் நாகரீகமே இல்லை. கோவை கார் வெடிப்பில் மிகத் துரிதமாக செயல்பட்ட தமிழக காவல்துறை மீது அபாண்டமாக தொடர்ந்து அவதூறு பரப்பி வருவது அகங்காரத்தின் உச்சமாகும்! அதே சமயம் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தில் கள்ளமெளனம் சாதிக்கிறது பாஜக. ஏனென்றால், அங்கே குற்றவாளியே அவங்க கட்சிக்காரர் தான்! அந்த குற்றவாளியைக் காப்பாற்றத் தான் திமுக அரசு பாஜகவிற்காக பம்மி, பதுங்கி மக்களிடம் கடுமையான அவப் பெயரை பெற்று வருகிறது. அதற்கு குறைந்தபட்ச நன்றியைக் கூட காட்டத் தயாரில்லை பாஜக என்பது தான் யதார்த்தம்!

திமுகவின் மீது அளவற்ற வெறுப்பையும், வன்மைத்தையும் மட்டுமே காட்டியும், பேசியும் தமிழகத்தில் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை படிப்படியாக அணிதிரட்டி வருகிறது பாஜக! அதை எப்படி எதிர்கொள்வது என்ற குறைந்தபட்ச செயல்திட்டம் கூட இல்லாமல் திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலினின் போதாமையும், கோழைத்தனமும் திமுகவினருக்கே கடுமையான மன உளைச்சலை உருவாக்கி வருகிறது! இந்த லட்சணத்தில் தான் இன்னும் பாக்கியுள்ள காலகட்டத்திலும் திமுக ஆட்சி நடக்கும் என்றால், இந்த ஆட்சி முடியும் போது, இந்த கட்சி தன் அடித்தளத்தையே முற்றிலும் இழந்துவிட்டிருக்கும் என உறுதிபடச் சொல்வேன்.

இஸ்லாமியர்களை கருவறுக்க வாய்ப்பு கிடைக்காதா? என்று காத்திருக்கும் பாஜகவிற்கு தோதாக அமைந்துவிட்டது கோவை கார் வெடிப்பு…! எடுத்த எடுப்பிலேயே அதற்கு ஒரு தீவிரவாத முத்திரை குத்தி, வேக,வேகமாக பதட்டத்தை ஏற்படுத்தும் வண்ணம் திரைக்கதை எழுதி, கோவில்களை தாக்க திட்டமிட்டது போலவும், மக்கள் பெரும் திரள் மீது தாக்கத் திட்டமிட்டது  போலவும் சொல்லுவது வன்மம் அல்லவா?

காவல்துறை தீரவிசாரித்து ஒவ்வொரு உண்மையாக வெளிப்படுத்தி வருகிறதே! நான்கே நாட்களில் தமிழக காவல்துறையை களத்தில் இருந்து விலக்கிவைத்து என்.ஐ.ஏவிடம் தரச் சொல்லி நிர்பந்தம் ஏன்? அப்புறம் எதற்கு தமிழகத்தில் இவ்வளவு பெரிய கட்டமைப்பு கொண்ட காவல்துறை? என்.ஐ.ஏவின் விசாரணை ஒரு பக்கம் நடக்கட்டும். தமிழக போலீசும் களத்தில் இறங்கினால் தான் உண்மையான முழுப் பரிமாணமும் இதில்  தெரிய வரும். ஏனென்றால், கள நிலவரத்தை நன்கு அறிந்தவர்கள் தமிழக காவல்துறையினர் தானே! இதையெல்லாம் சொல்வதற்கு திமுக தலைமையில் ஆளுமை கொண்ட ஆட்கள் இல்லையே! போயும், போயும் அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளிடமா திமுக அவமானப்பட வேண்டும்!

திமுக தன் கண்ணியத்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும்! நியாயமான விவகாரங்களில் பாஜகவை எதிர்க்க வேண்டும். போதும் உங்கள் கள்ள மெளனம் கலையட்டும். எதிர்க்க துணிவில்லை எனில், அடிவருடி அரசியலை திமுக வெளிப்படையாகச் செய்துவிடுவது உத்தமம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time