ஊழல், கமிஷன், உலுத்துப் போன நிர்வாகம்! = 140 பேர் பலி! கண்டெடுக்கப்பட்ட உடல்களை விட, காணாமல் போனவை அதிகமாம்! குஜராத் மோர்பி மச்சு ஆற்றின் தொங்கும் பாலம் அறுந்து விழுந்த விபத்து பல உண்மைகளை நமக்கு முகத்தில் அறைந்தாற் போலச் சொல்கிறது!
143 வருடமாக விபத்தின்றி உறுதியாக இருக்கும்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கியது, மச்சு ஆற்று மேம்பாலத்தை! அதை புதுப்பித்த குஜராத் பாஜக அரசாங்கத்தால் ஐந்து நாட்கள் வரை தான் அதன் உறுதி தன்மைக்கு பொறுப்பேற்க முடிந்துள்ளது!
எல்லாவற்றையும் தனியாரிடம் காண்டிராக்ட் விட்டு காசு, பணம் பார்க்கும் அம்சமாகவே இன்றைய அரசுகள் அணுகுகின்றன! எவ்வளவு கமிஷன்? யார்யாருக்கு அதில் பங்கு பிரிப்பது என்பதாக மட்டுமே இவர்கள் செயல்கள் உள்ளன! தரமாக கட்டுமானம் குறித்த அக்கறை அறவே இல்லை!
ஒப்பந்தம் பெறும் ஒப்பந்தராரருக்கு அதில் முன்அனுபவம், திறமை இருக்கிறதா எனப் பார்ப்பதே இல்லை. வேண்டப்பபட்டவர் என்ற அடிப்படையிலோ, அதிக கமிஷன் அடிப்படையிலோ அனுபவமில்லாத ஒப்பந்ததாரருக்கு தருகிறார்கள். அவர் சப் காண்டிராக்ட் விட்டு கமிஷன் அடித்துக் கொள்கிறார். இதனால் உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய பணம் கிடைப்பதில்லை. இதனால்,வேலைகள் ஏனோ, தானோவென்று தான் நடக்கின்றன!
பாலம் உறுதியாக இருப்பதற்கான எந்த வேலையையும் இவர்கள் செய்யவில்லை. பாலத்தை தாங்கி பிடிக்கும் இரு முனைகளில் உள்ள இரும்பு தூண்களும், கேபிள்களும் துருப்பிடித்த நிலையில் இருந்ததை பொருட்படுத்தவில்லை. அவை மாற்றப்பட வேண்டும் அல்லது அவற்றை கிரிஷ் எண்ணெய்விட்டு தேய்த்து துருவையாவது அகற்றி பாதுகாக்கலாமே என இந்த ஏழுமாத வேலை திட்டத்தில் சிறுமுயற்சி கூட செய்யவில்லை. மாறாக பாலத்தின் எடையை மேலும் அதிகரிக்கும் வண்ணம் நடைமேடையை நான்கு அடுக்கு அலுமினிய தகடால் போட்டு உள்ளனர்.
இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் வரை அனுமதிக்கலாம் என திட்டவட்டமாக முடிவெடுத்து, அதை உறுதிபடச் செயல்படுத்தும் அக்கறையும் இல்லை. பண்டிகை நேரங்களில் கூடுதலான ஆட்களை ஏற்றி, அதிக பணத்தை அள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் தொங்குபாலத்தில் சுமார் 500 பேர் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இது வரை சுமார் நூறுபேர் வரை தான் உயிரோடு மீடக்கப்பட்டு உள்ளனர். இன்னும் பலரது சடலங்கள் மீடக்கபடவே இல்லை. பாலத்தில் நடப்பது மனித உயிர்கள் என்ற மனிதாபிமானமே இல்லை.
கொடூர விபத்து நேர்ந்து விட்டது! ஆனால், உண்மையில் இது கொலை பாதகச் செயலே! தற்போது அந்த பாதகத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் யாருமே கைதாகவில்லை. நேரடி ஒப்பந்ததாரர் கைதாகவில்லை. அதாவது, இந்த ஒப்பந்தத்தை வாங்கி அஜந்தா நிறுவனத்தின் உரிமையாளர் கைதாகவில்லை! வாட்ச் தயாரிக்கும் கம்பெனி சம்பந்தமில்லாமல் ஏன் இந்த காண்டிராக்டை எடுத்தது? அதற்கு ஆர்டர் வழங்கிய அரசியல்வாதி யார்? அந்தத் துறையின் அமைச்சர் யார்? மாவட்ட கலெக்டர், நகராட்சி அதிகாரி யார்? யார்? இவர்களில் ஒருவருமே கைது செய்யப்படாமல் சாதாரண நிலையில் உள்ள 2 மேலாளர்கள், 2 துணை ஒப்பந்ததாரர்கள், டிக்கட் கிழித்து தந்த கிளர்க், வாட்ச்மேன் ஆகியோரை கைது செய்துள்ளனர்! இந்த லட்சணத்தில் ”இவர்களுக்காக கோர்டில் நாங்கள் யாரும் ஆஜராகமாட்டோம்” என மோர்பி மற்றும் ராஜ்கோட் மாவட்ட பார் கவுன்சில் முடிவெடுத்துள்ளது!
சம்பந்தப்பட்ட ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக் என்பவர் கோர்ட்டில், ”கடவுளின் விருப்பத்தால் இது போன்ற ஒரு துரதிர்ஷ்டமான விபத்து நடந்துள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்! அப்படியானால், கடவுளின் விருப்படியே அவரையும், சம்பந்தப்பட்டவர்களையும் சிறையில் தள்ளுவதே உத்தமமாகும்!
நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் பேர் போன பிரதமர் மோடியின் சீடர்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் தான் இவை யாவும் நடந்துள்ளது! சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இந்த நேரம் ராஜீனாமா செய்திருக்க வேண்டாமா?
Also read
சொந்த மண்ணில் நடந்த விபத்தை விசாரிக்க மோடி மூன்று நாட்கள் ஏன் எடுத்துக் கொண்டார் என்பதற்கான காரணம், அவர் வரும் போது அந்த ஹாச்பிட்டல் பளபளப்பாக இருக்க வேண்டும் என பெயிண்ட் அடித்து புதுப்பிக்கும் வரை காத்திருந்தாராம்! ‘இப்படியான பிரதமர் இனிமேல் இது போல பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லக் கூடாது’ என ஒரு விதியே கொண்டுவர வேண்டும். ஏனென்றால், மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சையில் அக்கறை கட்டுவார்களா? அல்லது பிரதமர் விசிட்டுக்கான ஏற்பாடுகளில் பதைபதைப்புடன் இருப்பார்களா? இடைப்பட்ட இந்த மூன்று நாட்கள் அந்த மருத்துவமனையில் பிரதமர் விசிட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நோயாளிகளுக்கு எவ்வளவு சிரமங்களை தந்தது என்பதை தனி ஸ்டோரியாகப் பண்ணலாம். அவ்வளவு அபத்தங்கள் நடந்துள்ளன!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
உயிர் முக்கியமா மருத்துவமனைக்கு பெயிண்ட் அடிப்பது முக்கியமா? நாடு இந்த நிலையில் போனால் ரொம்ப கடினம் தான்
இடிந்த பாலம், குஜராத்தில் கெஜ்ரிவாலின் ஆட்சிக்கு பாலம் அமைத்து கொடுத்துள்ளது.