ஆரியமும், திராவிடமும் கைகோர்க்கும் தேர்தல்!

-சாவித்திரி கண்ணன்

நடக்கப் போகும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 15 லட்சமாம்! பி.சி.சி.ஐ தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் ஆதரவாலும், பிராமணர்கள் வாக்கு வங்கியை வாங்கித் தர உத்தரவாதம் தந்துள்ள சீனிவாசன் ஆதரவாலும், பொன்முடி மகன் அசோக் சிகாமணி களம் இறக்கப்பட்டு உள்ளார்!

பிராமணர்கள் மட்டுமே கோலோச்சிய இடத்தில் இந்த முறை பொன்முடியின் மகன் அசோக் சிகாமணியை தலைவருக்கு களம் இறக்கியுள்ளார் தமிழக மற்றும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டுகள் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த சீனிவாசன்! இவர் தலைவரானது முதல் பல ஆயிரம் கோடி வருமானத்தை ஈட்டித் தரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு தமிழக அரசிற்கான வாடகை பணத்தை கூட ஒழுங்காக கட்டவில்லை. இன்று வரை சில ஆயிரம் கோடிகள் தமிழக அரசுக்கு இதனால் வருமான இழப்பு தான்!

உலகிலேயே அதிக பணம் புழங்கும் விளையாட்டாக திகழ்கிறது கிரிக்கெட்! அதிலும் பல லட்சம் கோடி பணம் புழங்கும் விளையாட்டு அமைப்பு இந்தியக் கிரிக்கெட் வாரியம்! இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அகில இந்தியாவையும் மிரள வைக்கும் பலம் பொருந்தியது! இதில் நடக்கும் ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் பஞ்சமில்லை! வருமானங்களோ பல்லாயிரம் கோடிகள்! ஒரு மெழுகுவர்த்தி தயாரிக்கும் குடிசை தொழிலுக்கு கூட ஜி.எஸ்.டி வரி போட்டு, துன்புறுத்தி வரும் மத்திய அரசு, இந்த கிரிக்கெட் விளையாட்டு வருமானத்திற்கு மாத்திரம் வரி விலக்கு தந்துள்ளது என்பது தான் கொடுமை!

‘யாரும் கேள்வி கேட்க முடியாது, கேட்டாலும் செல்லுபடியாகாது, அரசாங்கமோ, நீதிமன்றங்களோ கூட எங்களை நிர்பந்திக்க முடியாது’ எனச் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் தான் ஒரு ஓட்டுக்கு ரூ 15 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு உள்ளது. இது பற்றிய முழுமையான விபரங்களை பார்ப்போம்;

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கீழ் 27 மாவட்ட கிரிக்கெட் சங்கங்களும், கிளப்புகளும் உள்ளன! அந்த வகையில் மொத்தம் 177 பேர் இந்த சங்கத்தில் ஓட்டுப் போடும் உரிமையுள்ளவர்களாக உள்ளனர். இவர்களின் ஓட்டை அள்ளத் தான் இந்த 15 லட்சம் பேரம் பேசப்படுகிறதாம்! இதற்காக நாள்தோறும் பல மது விருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறதாம்!

2018 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் மேக்ஸ் பிக்சிங் சூதாட்டம் பெரிய அளவு வெளிச்சத்திற்கு வந்தது! அதில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் பெரிய அளவுக்கு சம்பந்தப்பட்டு மாட்டிக் கொண்டார்! அவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஒவாக இருந்தார். சூப்பர் கிங்ஸ் அணி மூலமாகவே பல நூறு கோடி வருமானம் கொட்டுகிறது. ஆனால், பேராசைப்பட்டு சூதாட்டத்திற்கு துணை போவதன் மூலம் மேலும் பல நூறு கோடியை ஈட்டி வந்தார் சீனிவாசனின் மருமகன்! மருமகனின் சாமார்த்தியம் கண்டு புளகாங்கிதத்தில் மிதந்து கொண்டிருந்த சீனிவாசன், விவகாரம் அம்பலப்பட்டு உச்சநீதிமன்றம் போனதும், ‘’என் மருமகனுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு கிரிக்கெட் ஆர்வலர் அவ்வளவு தான்’’ என ஒரே போடாகக் போட்டார்! ஆனால் நீதிபதிகள் நம்பத் தயாரில்லை.

குருநாத் மெய்யப்பன்

வழக்கை விசாரித்த நீதிபதிகள். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் நடவடிக்கைகள் மிக வெட்கப்பட வேண்டியதாக உள்ளது எனக் கூறி சீனிவாசன் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டனர். நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் சீனிவாசன் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். மறுக்கும் பட்சத்தில் நாங்களே ஆணை பிறப்பிக்க வேண்டியதாக இருக்கும். பதவி விலகும் வரை சீனிவாசன் தரப்பின் வாதங்கள் எதையும் காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை. இவர் பதவி விலகாமல் இருப்பது அருவருக்கத்தக்கது. ஏன் இவர் இன்னும் இந்த நாற்காலியில் இருக்க விரும்புகிறார் ? என கோபமாகக் கேட்டனர்.

இது மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய “லோதா கமிட்டி” பரிந்துரைத்தது உச்ச நீதிமன்றம். அதன்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது. ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால், அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் பதவிக்கு வர முடியும். கிரிக்கெட் அமைப்பில் ஒரே  நேரத்தில் ஒருவர் இரண்டு பதவி வகிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தனர். இதன்படி தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம், இந்தியக் கிரிக்கெட் வாரியம் , சர்வதேச கிரிக்கெட் அமைப்பு என அனைத்திலும் தலைமை வகித்த சீனிவாசனின் ஆதிக்கத்திற்கு ஒரளவு முற்றுபுள்ளி வைத்தனர்! ஆனாலும், இன்னும் இங்கே சீனிவாசன் தான் முடிசூடா மன்னர். அவர் தான் தலைவராக முடியாத நிலையில் தன் மகள் ரூபா குருநாத்தை 2019 ல் போட்டியின்றி தலைவராக்கினார்.

சீனிவாசனின் மகள் ரூபா குருநாத்

இது போல மும்பையிலோ, கொல்கத்தாவிலோ நினைத்து கூட பார்க்க முடியாது. அங்கே தேர்தல்கள் நடக்கும். அதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்களும் இருக்கும். உதாரணத்திற்கு தற்போது மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் சரத்பவாரும், தேவேந்திர பட்னாவிஸும்,ஏக் நாத் ஷிண்டேவும் ஒரு வேட்பாளரை கூட்டாக நிறுத்தி உள்ளனர். இவர்களை எதிர்த்து நிற்பவர் கிரிக்கெட் வீரர் சந்தீப் பட்டேல். ஆனால், இங்கே எந்த அரசியல் தலைவரோ, கட்சிகளோ வர முடியாதபடிக்கு தன்னுடைய இரும்புக் கோட்டையாக தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தை வைத்துள்ளார் சீனிவாசன்! அதற்கு முக்கிய காரணம் அவர் சார்ந்த பிராமண சமூக ஓட்டுகள் என்றும் சொல்லலாம்! உண்மையில் இந்த சங்கத்தில் உள்ள நிறைய பிராமணர்களே சீனிவாசனின் கோல்மால் பிடிக்காமல் வெளியேறிவிட்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆனாலும் தற்போது 50 பிராமண ஓட்டுகள் இருக்குது. அத்துடன் அவருக்கு திமுகவின் ஆதரவும் கிடைத்துள்ளது. ஆகவே, பொன்முடியின் மகன் அசோக் சிகாமணியை ஒரு டம்மி தலைவராக்கி தன் அதிகாரத்தை செலுத்தும் வகையில் நிற்க வைத்துள்ளார்.

இந்தியா சிமெண்ட் சீனிவாசன், பொன்முடி மகன் அசோக் சிகாமணி

நியாயப்படி பொன்முடியின் மகன் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி அற்றவர். காரணம், அவர் விழுப்புரம் கிரிக்கெட் சங்க தலைவராகவும், தமிழ் நாடு கிரிக்கெட் சங்க துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் இருக்கும் நிலையில் லோதா கமிட்டி வகுத்த விதிமுறைப்படி தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், ஸ்டாலினிடம் தனக்குள்ள  நெருக்கத்தை பயன்படுத்தியும், பொன்முடியின் மகன் என்ற காரணத்தை சொல்லியும் அமித்ஷாவின் மகன் தான் பி.சி.சி.ஐயின் தலைவராக உள்ளார் என்ற வகையிலும் அரசியல் ரீதியாகவும் காய்களை நகர்த்தி தான் நினைத்ததை சாதிக்கிறார் சீனிவாசன்! ஒரு ஓட்டுக்கு 15 லட்சம் அவருக்கு ஒரு மாலை நேர தேனீர் செலவைவிட குறைவான தொகையே! பல்லாயிரம் கோடி வருமானத்தை பார்க்கும் சீனிவாசன் யார், யாரை எப்படி சரிகட்டுவது என்பதில் கைதேர்ந்தவர் என்பதும் கவனத்திற்கு உரியது!

இது தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத ஒரு நிர்வாகி நம்மிடம் பேசிய போது, ”கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் காரணமாகத் தான் சங்கத்தில் உள்ளேன். ஆனால், நடக்கும் சகிக்க முடியாத ஊழல், முறைகேடுகளை காணும் போது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே போய்விடலாமா என்று கூட எங்களில் சிலருக்கு தோன்றும்! எம்.ஏ.எம். ராமசாமி தலைவராக இருந்த போது ஓரளவு பரவாயில்லை. ஆனால், இந்தியா சிமெண்ட் சீனிவாசன் வந்த பிறகு இது ஊழல் கோட்டையாகிவிட்டது! இத்தனைக்கும் எம்.ஏ.எம்.ராமசாமியால் உள்ளே வந்தவர் தான் சீனிவாசன். பிறகு அவரையே காலி செய்து தலைமை பதவிக்கு வந்துவிட்டார்! அப்புறம் இவரை அசைக்க முடியவில்லை.

சுமார் 15 முறை மீண்டும், மீண்டும் இவரே தலைவரானார்! பிறகு தன் மகளை தலைவராக்கினார். தற்போது அவரே பொன்முடியின் மகன் அசோக் சிகாமணியை நிறுத்தி உள்ளார்! அவரது விரலைசை மீறி அசோக் சிகாமணியால் ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால், ஆனானப்பட்ட கவாஸ்கர் பி.சி.சி.ஐ தலைவரான போது அவரையே தன் விரலசைவில் வைத்தவர் தான் சீனிவாசன்! எதிர்த்து நிற்கும் பிரபு வெற்றி பெற்றாலும் ஒரளவு மாற்றங்கள் நடக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பு குறைவு” என்றார்!

அமித்ஷா மகன் ஜெய்ஷா நினைத்தால், லோதா கமிட்டி விதிமுறையை காட்டி அசோக் சிகாமணி போட்டியிடுவதையே நிராகரிக்க முடியும். ஆனால், இது வரை நிராகரிக்கவில்லை. இனியும் நிராகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரியவில்லை! ஆக, திமுகவின் பிராமண எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்பதெல்லாம் வெற்று அரசியல் முழக்கம் தான் என்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் மிகச் சிறந்த சாட்சியாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time