அப்பன் – ‘அப்பப்பா’ என அலற வைக்கும் குரூர காவியம்!

-தயாளன்

குடும்பத்தில் தந்தை என்ற மிக சக்தி வாய்ந்த ஸ்தானத்தில் ஒரு அப்பன் பேரன்மையும் விதைக்க முடியும். பெருந் துன்பத்தையும் திணிக்க முடியும். சுய நலமிக்க தந்தையால் ஒரு குடும்பம் சந்திக்கும் இன்னல்களை அணுவணுவாக காட்சிப்படுத்தி, குடும்ப வன்முறை களத்தை தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர்!

சோனி ஓடிடியில் வெளியாகியிருக்கும் அப்பன் என்னும் மலையாள சினிமா கொடூரமான, சுயநலமான தந்தை கதாபாத்திரத்தின் மூலம், வாழ்வின் இருத்தலை கேள்விக்குள்ளாக்குகிறது.  வழக்கமாக, செண்டிமெண்டல் பாத்திரமாக மட்டுமே வடிவமைக்கப்படும் அப்பா பாத்திரத்தை, இப்படியும் ஒரு மனிதனா? என்று நினைக்கும் அளவுக்கு சுயநலமும், ஆணாதிக்க வன்மமும் கலந்த பாத்திரமாக வடிவமைத்து இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் மஜூ.

படம் துவங்கும் போதே அப்பனின் கொடூர இயல்பை நேரடியாக காட்சிப்படுத்துகிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் அப்பனை விசாரிப்பதிலிருந்தே தொடங்குகிறது. இப்படியாக நமக்குள் அதிரும்படியாக அறிமுகம் ஆகும் அப்பன், குடும்பத்தின் அத்தனை உறவுகளையும் எப்படி சுயநலமாக கையாள்கிறார் என்பதை படத்தின் பரபரப்பான திரைக்கதையின் மூலம் நம்மை கட்டிப் போடுகிறார்.

அப்பன் கால் செயலிழந்ததால், படுத்த படுக்கையாக கிடக்கிறார். யாராவது உதவினால் மட்டுமே, அவரால் அமர முடியும். ஆனாலும், அந்த குடும்பத்தின் மொத்த அதிகாரத்தையும் தனது சுயநலனுக்காக ஈவிரக்கம் எதுவும் இல்லாமல் ஆட்டிப் படைக்கிறார்.  பெண்களை துச்சமாக மதித்து கேவலப்படுத்துவது, அவர்களை தனது பாலியல் இச்சைக்காக எதையும் செய்வது, அவர்களை அடைவதற்காக எல்லா வழிகளையும் பயன்படுத்துவது என்று அனைத்து மிருக குணங்களின் மொத்த வடிவமாகவே அப்பன் இருக்கிறான்.

அந்த அப்பனால் அவனைச் சுற்றியிருக்கும் உறவுகள் எப்படி காயமடைகின்றன, ஒரு கட்டத்தில் அவனை கொலை செய்து விடலாம் என்று கூட முடிவு எடுக்கும் அளவுக்கு செல்கிறார்கள்.  இந்த நிலையில் அப்பன் ஏற்கனவே செய்த பாவத்திற்காக அவனை கொலை செய்யும் முடிவோடு ஒருவன் வருகிறான்.  அப்போதும் அப்பனை காப்பாற்ற போராடுகிறான் மகன். ஆனால், இறுதியில் அதிரவைக்கும் காட்சியில் படம் முடிகிறது.


“அப்பன்” வழக்கமாக தமிழ் சினிமாக்களில் புனிதமாகவோ, உழைப்பின் வடிவமாகவோ, நிலை நிறுத்தப்படுவார்.  ஆனால் இந்த அப்பன் கொடூரமானவன். அவலங்களின் உச்சம். மனைவி, மகன், மகள், மருமகள், பேரன் என்று யாரையும் துச்சமாக தூர எறிவதும், தேவையென்றால் அவர்களிடம் குழைவதுமான பாத்திரம்.  இந்த யதார்த்தக் களத்தில் திரைக்கதையை அனாயசமாக நகர்த்துகிறார் இயக்குனர்.

படத்தின் கதை நாயகன் மகனாக வரும் சன்னி வெயின் என்றாலும் படத்தின் டைட்டில் கேரக்டராக வரும் அலென்சியர் லே லோபஸ் படத்தின் தூண். மிரட்டும் கண்களும் அச்சுறுத்தும் குரலுமாக தனிமையில் ஒரு கட்டிலில் கடந்து எல்லாரையும் துன்புறுத்தும் “மிருகத்தனமான” பாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். முதல் ஷாட்டிலேயே லோபஸ் தனது மிரட்டலான நடிப்பின் மூலம் தன்னை கதைக்குள் நிலை நிறுத்துகிறார். இப்படி ஒரு சவாலான பாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு குரூரத்தையும், சுயநலத்தையும் தனது கண்களாலும் ஆவேசமான சிரிப்பினாலும், அதிரும் பாடலாலும் வெளிப்படுத்துகிறார். மிக  அபூர்வமான பாத்திரத்தில் அதி நுட்பமாக நடித்திருக்கிறார்.

 இரவுகளில் மற்றவர்களை தூங்கவிடக் கூடாது என்று காட்டுத்தனமாக பாடுவதாகட்டும்,  அதிகாரத்துடன் அலறுவதாகட்டும், தன்னை கொலைசெய்யப் போவதாக கூக்குரலிடும் போதாகட்டும் லோபெஸ் நடிப்பின் டிக்‌ஷனரியாகவே மாறிப் போயிருக்கிறார்.  லோபெஸ் ஏற்கனவே தொண்டி முதலும் திரிக்‌ஷாஷ்யமும், டேக் ஆப் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படமும் இந்த பாத்திரமும் காலத்திற்கும் அவரது பெயரை சொல்லி நிற்கும். விருதுகள் அணிவகுக்கப் போகிறது.  படத்தின் மொத்த கேரக்டர்களும் இவரைச் சுற்றியே நிகழ்கின்றன.

அப்பன் என்ன செய்தாலும் சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் மிருகத்தனத்தை வெளிப்படுத்துகிறார். அவரது நடிப்பைப் பார்த்தால் குலை நடுங்குகிறது.  இந்த கேரக்டரில் லோபஸ் தன்னை வெளிப்படுத்தி இருக்கும் விதமே படத்தை வெற்றிப்படமாக மாற்றுகிறது.

மகனாக சன்னி வெயின், அப்பனின் குரூரத்தால் அவமானப்பட்டு கூசிக் குறுகி, மறுகி அம்மாச்சிக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.  அப்பனை கொன்று விடலாம் என்று வெடிக்கும் போதும், தனது மகனை அப்பனின் கண்களிலிருந்து விலக்கி வைக்கும் போதும், மகனிடம் பாசத்தில் உருகும் போதும், சன்னியின் நடிப்பு அட்டகாசம். மகனின் மனைவியாக வரும் அனன்யா நிறைய தமிழ்ப் படங்களில் துடுக்கான ஹீரோயினாக வலம் வந்தவர், இந்தப்படத்தில் வீட்டு வேலை செய்யும் மருமகளாக மிக எளிமையான பாத்திரத்தில் வருகிறார்.


சமையலறையில் புழங்கிக் கொண்டே, குடும்பத்தில் நிகழும் அவலங்களையும் சகித்துக் கொண்டு சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் உணர்ச்சியைக் கொண்டு வருகிறார். அவருக்கும், அந்த வீட்டு மருமகளுக்கும் நிகழும் உரையாடல்களில் குடும்ப அரசியல் போகிற போக்கில் தெரிகிறது. அப்பனின் மனைவி குட்டியம்மா பாத்திரத்தில் பாலி வல்சன் நேர்த்தி.  இது போல படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுமே திரைக்கதையோடு தொடர்புள்ளவர்களாகவும், நினைவில் நிற்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.

திரைக்கதையின் வடிவம்தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது.  எந்த காட்சியும் வன்மமாகவோ, குரூரமாகவோ, ஆபாசமாகவோ காட்டப்படவில்லை.  பாலியல் துன்புறுத்தல் காட்சிகள் கூட நேரடியாக திரையில் இல்லை. ஆனால், அந்த காட்சியின் குரூரத்தை, மன விகாரத்தை காட்சிகளின் வழியாக நமக்குக் கடத்தியிருக்கிறார்கள்.  குமட்டக் கூடிய உணர்வை நமக்கு தருகிறார்கள்.  மனித மனம் எவ்வளவு நுட்பமானது என்பதை நமக்கு பாத்திரங்களின் இயல்பில் புரியவைக்கிறார்கள்.  ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கும் போது, அந்த பாத்திரங்களின் இயல்பையும் வடிவத்தையும் போகிற போக்கில் நுட்பமாக சொல்கிறார்கள்.

வெளித் தோற்றத்திற்கு அப்பன் மட்டுமே சுயநல மிருகம் போல தோன்றினாலும், படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களுமே வாழ்வின் இருத்தலுக்காக சுயநலத்தோடுதான் இருக்கிறார்கள் என்பதை காட்சிக் கோர்வைகளில் நமக்கு சொல்கிறார்கள்.  மகன், மனைவி, மருமகள், அபலைப் பெண், பாதிரியார் என்று எல்லோருமே ஒரு விதத்தில் சுய நலம் மிக்கவர்கள் தான் என்பதை சிடுக்குகளாக விவரிக்கிறார்கள்.  அதிகாரமும், சொத்தும் மனிதர்களை எப்படி இயக்குகிறது என்பதையும், குடும்பம் என்பது எவ்வளவு பெரிய வன்முறைக் களம் என்பதையும் திரைக்கதையில் பொதிந்து வைத்திருக்கிறார்கள்.  குடும்ப அமைப்பு முறை என்பதே சுயநலமிகளின் தொகுப்புதான் என்பது உணர்வுப்பூர்வமாக விவரிக்கப்படுகிறது.  உறவுகள் என்பதும் தேவைகளின் உறவே.

படம் முழுக்க ஒரு வீட்டிலேயே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வீடு, அதைச் சுற்றியுள்ள இரப்பர் தோட்டம் என்ற களத்திற்குள்ளாகவே அனைத்துக் காட்சிகளும் நடக்கின்றன.  ஆனால், ஒவ்வொரு ஷாட்டும் புது விதமாக கட்டமைக்கப்படுவதால் நமக்கு அயர்ச்சி ஏற்படவே இல்லை.  மொத்தப் படமும் ஒரு வீட்டிற்குள்ளும், பெரும்பாலான காட்சிகள் ஒரு அறைக்குள்ளும் நிகழ்ந்தாலும் சலிப்பு ஏற்படாதவாறு கோணங்களும், நகர்வுகளும் துல்லியமாக தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் இசையும் படத்தொகுப்பும் திரைக்கதைக்கு உதவி செய்கின்றன.  படத்தின் இயக்குனர் மஜு கதை சொல்வதிலும், அதற்குள் மனித மனங்களின் நுட்பத்தை வெளிப்படுத்துவதிலும் கை தேர்ந்து நிற்கிறார்.  திரைப்படம் சோனி ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

விமர்சனம்; தயாளன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time