பத்தாண்டுகள் பாடுபட்டு வேலை செய்தாலும், பணி நிரதரப்படுத்தாமல் தொழிலாளர்களை அத்துக் கூலிகளாகவே வைத்திருப்போம் என்பதாக தமிழக அரசு ஆணை என்று வெளியிட்டுள்ளது. காண்டிராக்ட் முறையை ஊக்குவித்து கமிஷன் பெறும் அணுகுமுறையானது உள்ளாட்சித் துறையை ஊழல்மயமாக்கி வருகிறது!
உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணி செய்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். பெரும்பாலும் பட்டியலின மக்கள்தான் அந்த வேலையைச் செய்கின்றனர். இவர்களின் வேலைவாய்ப்பை ஒழித்துக் கட்டுவது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது. கல்வியின்மை, வாழ்நிலை, சாதியம் போன்ற காரணிகளால் தூய்மைப் பணியாளர்களை சங்க ரீதியாக திரட்டுவதில் பாரபட்சம் நிலவுகிறது. எனவே அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் ஊடகங்களையும், குடிமைச் சமூகத்தையும் எட்டுவதில்லை. ஒட்டு மொத்தமாக எத்தனை தொழிலாளர்கள் தற்காலிகமாகவும், தினக்கூலிகளாகவும், ஒப்பந்தக்காரர்கள் மூலமாகவும் இருக்கின்றனர் என்ற விவரங்கள் கூட அரசிடமும், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமும் இருக்குமா என்பது தெரியவில்லை.
“அறநிலையத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், மின்சார வாரியம், கூட்டுறவு ஆலைகள், காகித ஆலைகள், உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வாரியம், குடிநீர் தொட்டி பராமரிப்பு போன்ற அரசுத்துறை சார்ந்த நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாகவும், தற்காலிக தொழிலாளர்களாகவும் பணிபுரிபவர்கள் நிரந்தரமாக்கப்படுவர் ” என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, இனிமேல் மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்கள் எதனையும் நிரப்பக் கூடாது, புதிய பணி இடங்களை உருவாக்கக் கூடாது. வெளிமுகமை மூலமாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று விசாரித்தோம்.
கோவை மாநகராட்சி தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டி கடந்த மாதம் இரண்டு முறை வேலைநிறுத்தம் செய்தனர். தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர் சங்கத்தின் இரா.தமிழ்நாடு செல்வம் கூறியதாவது “கோவை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 4,500 பேருக்கு மேல் துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள், மலேரியா பணியாளர்கள், தோட்ட வேலை செய்பவர்கள் தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் கோவை மாநகராட்சியால் பணி அமர்த்தப்பட்டவர்கள். செம்மொழி மாநாட்டின்போதும் 416 பேர் தேர்வு நடத்தி பணி அமர்த்தப்பட்டனர். மாநாடு (2010) முடிந்தவுடன் உங்களை நிரந்தரம் செய்வோம் என்று அப்போதைய மேயர் உறுதி அளித்தார்.
பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று 21 சங்கங்கள் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பை உருவாக்கி வேலைநிறுத்தம் செய்தோம். முதலில் 3 நாள், பிறகு 2 நாள் என ஐந்து நாட்கள் வேலைநிறுத்தம் செய்தோம். அரசாங்கத்திடம் உங்களை பணிநிரந்தரம் செய்வது குறித்து பேசுகிறோம், நவம்பர் 5ம் தேதிவரை அவகாசம் கொடுங்கள் என்றார்கள். அந்த அடிப்படையில் போராட்டத்தை திரும்பப் பெற்றோம். இப்போது மாநில அரசாங்கமானது இனி, புதிதாக யாரையும் நிரந்தர வேலைக்கு எடுக்கக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணிபுரிபவர்களும் இங்கு உண்டு. அப்படியே அவர்கள் இருக்க வேண்டியதுதானா ? ” என்று கவலைப்பட்டார்.
அக்டோபர் 20 ந்தேதி, ‘சென்னை தவிர்த்த அனைத்து மாநகராட்சிகளும் நிரந்தரப் பணியிடங்களை நிரப்பக் கூடாது’ என தமிழக அரசு வெளியிட்டுள்ள (ஆணை எண் 152 ) உள்ளாட்சி அமைப்புகளை பலவீனப்படுத்தி உள்ளது. இந்த ஆணை உள்ளாட்சி அமைப்புகளோடு தொடர்பு கொண்டவை என்ற வகையில் இந்த ஆணையை வெளியிடுவதற்கு முன்பு மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள் போன்ற அமைப்புகளோடு, விவாதம் நடத்தவில்லை.
” நிரந்தரப் பணியிடங்களை நிரப்பக் கூடாது என்று கூறியுள்ளதானது அநீதி! நிதி நிலைமை, மக்கள்தொகை, முன்னுரிமை போன்ற காரணிகளுக்கு ஏற்ப என்ன செய்ய வேண்டும் என்பதை அந்தந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் முடிவு செய்து கொள்வது தான் சரியாக இருக்கும். தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒரு ஆணையை பிறப்பிப்பது சரியல்ல. வெளிமுகமை( Out Sourcing) மூலம் ஒப்பந்தம் கொடுத்தால், குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்தக்காரர்கள் பணி அமர்த்தக்கூடும். அப்படி செய்தால் தமிழ்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்” என்றார் உள்ளாட்சிகளில் ஜனநாயகத்தை வலிமைப்படுத்த பணிபுரிந்து வரும் ‘தன்னாட்சி’ அமைப்பின் தலைவரான க.சரவணன்.
” ஆந்திராவில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 21,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. ‘ஆந்திர அரசு வெளிமுகமை தொழிலாளர் கழகம்’ என்ற அரசு அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழிலாளர்களை தருகிறது. இதனால் ஒப்பந்தக்காரர்களின் சுரண்டல் தடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசு உருவானவுடன் அங்கும் இந்த முறை தொடர்கிறது.
திடக்கழிவு, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, பூங்கா பராமரிப்பு, மருத்துவமனை, உடற்பயிற்சி கூடம், நூலகம் உள்ளிட்ட பலவிதமான பணிகளை செய்வதற்காக அமைக்கப்பட்டவை தான் உள்ளாட்சி நிறுவனங்கள். தல அரசாங்கங்கள் என அழைக்கப்படுகின்றன. இவைதான் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி போன்ற அமைப்புகளின் அடிப்படையான பணிகளாகும். இத்தகைய பணிகளை தனியாருக்கு கொடுப்பது என்பது உள்ளாட்சி அமைப்புகள் எதற்காக அமைக்கப்பட்டதோ அவைகளின் நோக்கத்திற்கே விரோதமாகப் போய்விடும். இத்தகைய தனியார்மயம் பொதுமக்களுக்கும் எதிரானது; தொழிலாளர்களுக்கும் எதிரானது” என்றார் உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனத்தைச் (ஏஐடியுசி) சார்ந்த ம.இராதாகிருஷ்ணன்.
“உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம், நெருக்கடியான காலகட்டங்களில் தான் தெரிய வரும். கொரோனாவின் போது, தூய்மைப் பணியாளர்களின் சேவையை யாரும் மறக்க முடியாது. மக்களுக்கு நேரடியாக சேவை தரும் பணிகளை தனியாருக்கு விடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது ” என்கிறார் தமிழக ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளரான கே.ஆர். கணேஷ்.

“தொழிலாளர் பிரச்சினைகளில் தமிழக அரசின் செயல்பாடு சரியல்ல. ஈரோடு மாநகராட்சியில் 300 க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை என்ன ஆகும். கிட்டத்தட்ட 1,200 தொழிலாளர்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் எனத் தெரியவில்லை. இந்த அரசு ஆணையை எதிர்த்து ஈரோடு மாநகராட்சியில் நான்கு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சரோடு பேசுவதாக கூறியுள்ளார். வருகிற 13 ந்தேதி அனைத்து சங்கங்களும் சேர்ந்து கோரிக்கை மாநாடு நடத்துவது என முடிவெடுத்துள்ளோம்” என்றார் ஈரோடு மாவட்ட, ஏஐடியுசி ஊரக உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கத் தலைவரான எஸ்.சின்னசாமி.

” இந்த ஆணையினால் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும். வேலை வாய்ப்பு பறி போகும். தமிழக அரசு இந்த ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாமன்றத்தில் குரல் எழுப்பினோம். இந்த ஆணைக்கு எதிராக மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் குரல் எழுப்புவது அவசியம் ” என்கிறார் திருச்சி மாமன்ற உறுப்பினரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த க.சுரேஷ்.
“ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களை காலமுறை ஊதியம் நிர்ணயித்து பின்பு அவர்களை நிரந்தரப்படுத்துவது என்ற வழக்கம் இருந்தது. புதிதாக மாநகராட்சிகள் உருவாக்கும்போது அதன் அருகில் இருக்கும் ஊராட்சி, பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டன. செம்பாக்கம், சிட்லப்பாக்கம், பீர்க்கங்கரணை, பம்மல், பல்லாவரம் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தாம்பரம் நகராட்சியோடு இணைக்கப்பட்டன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாக பணிபுரிந்த தற்காலிக தொழிலாளர்களும் உண்டு. இவர்களை நிரந்தரப்படுத்துவோம் என்று ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை, இந்த அரசாணை கண்டு கொள்ளவில்லை” என்கிறார் செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்க தலைவரான ஆர்.தேவராஜ்.
தமிழக அரசின் ஆணை வெளிவந்த அதே தீபாவளி சமயத்தில், இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யும், சிறப்பு திட்டத்தை அமலாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் 57, 000 ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த ஆவண செய்துள்ளார். இனி ஒரிசா மாநிலம், ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்காது என்று தெரிவித்துள்ளார். மாநில சுய ஆட்சிக்காக குரல் கொடுக்கும் திமுக அரசு உள்ளாட்சிகளின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளது. சமூகநீதி பேசும் திமுக அரசு, சுரண்டல் முறையை நிறுவனப்படுத்தும் ஒப்பந்த முறைக்கு ஆணையிட்டுள்ளது !
உழைப்பாளிகளை மதித்து உழைப்பிற்கு தக்க உரிமையுடன் வாழ்வதை உத்திரவாதப்படுத்தாமல், எப்போதும் ஓட்டாண்டிகளாகவே அவர்களை அழுத்தி வைப்பது என்ன நியாயமோ?
மற்றொருபுறம் ஊழல் கரைபுரண்டோடும் துறையாகவும் உள்ளாட்சிதுறை உள்ளது. சென்ற ஆட்சியின் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உள்ளாட்சி துறையை ஊழல்மயமாக்கி ஆண்டுக்கு ரூபாய் 4,000 கோடி கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஊழல் வழக்குகளை சந்தித்து வருகிறார்!
Also read
இந்த அடித்தள தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தாமல் காண்டிராக்டர்கள் சுரண்ட அனுமதிப்பதன் மூலம் கமிஷன் பார்ப்பது, 600 ரூபாய் எல்.இ.டி பல்ப்பை 4,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது,50 ரூபாய் பினாயிலை 250 என பில் போட்டது..என குப்பை தொட்டிகள் வாங்குவது தொடங்கி குழாய் பதிப்பது வரை என ஒவ்வொன்றிலும் மனசாட்சியில்லாமல் கொள்ளை அடித்தார் வேலுமணி! அவர் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. அவர் வழியில் தான் இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேருவும் செயல்படுகிறார் என சொல்லப்படுகிறது! சுரண்டிக் கொழுப்பவர் வாழ்வதும், உழைத்து வாழ்பவர் உருக்குலைந்து வீழ்வதும் என்று தான் முடிவுக்கு வருமோ?
கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்
இந்திய ஒன்றியத்தில் தூய்மைப் பணியாளர்கள் இந்தியாவின் ஒரு தூண் என்று சொல்லவேண்டும். இவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றியது பெரும் அவலமே.
இதனை தொடர்ந்து எல்லா மாநிலம் பின்பற்றுவது இன்னும் பெருந்தீங்கு என்றே சொ ல்ல வேண்டும்.
அவர்களை முழு நேர அரசு ஊழியர்களாக ஆக்குவதே நாம் அவர்களுக்கு செய்வதே மரியாதை. இதனை செய்வதை விட்டு அன்றாட கூலிகளாக ஒப்பந்த கூலிகளாக ஆளுவதே அரசுகள் செய்யும் பெரும் குற்றம்..
இதனை முன்னிருத்தியே தூய்மைப் பணியாளர்கள் போராட வேண்டும்.
– எழில்
இதனை மெய்யாலும் அவர்கள் மீது கொண்டுள்ள அரசியல் கட்சிகள் முன்னிறுத்த வேண்டும்.
Permanent Staffs are not working, who are receiving Government Scale. So they employ Contract staffs to work. Let us pay them equally like govt staff, that is the Immediate Solution. Making them permanent again will make them lazy and again they will employ contract staff. This is a vicious cycle. Hence who ever is employed for a particular JOB pay equal as per Govt pay structure. The fight for Permanency will go on.
உலகம் முழுக்க தொழிலாளர் வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் கைகளில் சிக்கித் தவிக்கிறது இதில் எந்த துறையும் எந்த பொறுப்பும் விதிவிலக்கு இல்லாமல் ஒரே கோணத்தில் இயங்கி வருகிறது உலகம்.
துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலையை படம் பிடித்து காட்டியுள்ளார். மற்ற மாநில அரசுகளோடு ஒப்பிடும்போது தமிழக அரசின் சமூக நீதி துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் காணாமல் போய்விட்டது. சுரண்டலின் அடுத்த வடிவம் தான் ஒப்பந்த முறை ஊக்கப்படுத்துவது சரியாகாது.
இந்து அறநிலையத்துறை கட்டு பாட்டில்உள்ள கோவில்களில் 5ஆண்டுகளுக்கும் மேல் பணி ஆற்றும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தது போல் மற்ற து றை களில் உள்ள தினக் கூலி அடிப்படையில் பணி புரியும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தமிழக அரசு