திலகவதி மருமகள் ஸ்ருதி திலக் கொடுமைப்படுத்தப்பட்டாரா..?

-சாவித்திரி கண்ணன்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி பெண்ணுரிமையாளராக அறியப்பட்டவர். ஆனால், தற்போது அவரது மருமகள் ஸ்ருதி என் 170 பவுன் நகைகளையும், ஒரு கோடி பணத்தையும் பிடுங்கி கொண்டனர். என் உயிருக்கே ஆபத்து எனக் கூறியுள்ளார். இந்தச் சூழலில் ஸ்ருதி கைதாகி, அவர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டு உள்ளது.

திலகவதி இலக்கியவாதியாக அறியப்பட்டவர். அவர் போலீஸ் அதிகாரியாக இருந்த காலத்திலேயே 12 நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள், ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதி குவித்தவர்! ஒரு முழு நேர இலக்கியவாதியாலேயே கூட இவ்வளவு எழுத முடியுமா? என வியக்கும் அளவுக்கு எழுதிக் குவித்தவர்! போதாக்குறைக்கு பணியில் இருக்கும் போதே அம்ருதா என்ற இலக்கிய இதழை தன் மகனை ஆசிரியராக வைத்து நடத்தினார்! அந்த அளவுக்கு காவல்துறை பணியைக் காட்டிலும் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்தவர். இப்போதும் அந்த இலக்கிய இதழ் வந்து கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் திலகவதி பல சர்ச்சைகளுக்கு பேர் போனவர்! அன்றைய புலனாய்வு இதழ்கள் நிறையவே அவற்றை எழுதியுள்ளன! திலகவதியைப் போலவே அவரது மகனும் தற்போது சர்ச்சையின் நாயகனாக செய்திகளில் அடிபடுகிறார். மருத்துவரான பிரபு திலக் முதலில் அனு என்ற பல் மருத்துவரான பெண்ணை திருமணம் செய்தார்! அந்தப் பெண் கண்ணீருடன் திலகவதி மீதும், அவரது மகன் பிரபுதிலக் மீதும் குற்றச்சாட்டுகள் கூறி அளித்த பேட்டி அப்போதைய குமுதம் ரிப்போர்ட்டரில் கவர் ஸ்டோரியாக வந்தது. அனு ஒரு வழியாக மண வாழ்வை முறித்துக் கொண்டு டாக்டர் விவாகரத்து வாங்கிச் சென்றது அன்றைக்கு பரவலான விவாத பொருளாகியது.

இதற்குப் பிறகு தன் மகன் டாக்டர் பிரபு திலக்குக்கு சேலத்தைச் சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார் திலகவதி. இந்த தம்பதிக்கு ஒரு பெண் (14) மற்றும் ஒரு ஆண் (7) குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீப காலமாக ஸ்ருதி, பிரபு திலக்கை பிரிந்து தனித்தே வாழ்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதி ஒரு பெண் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பாக ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு பேசினோம். ”உங்கள் மண வாழ்க்கை ஏன் பிரச்சினையானது? எதற்காக நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள்?” எனக் கேட்டோம்!

”சார், எனக்கு முதல் திருமணம் மிகக் கசப்பாகவே அமைந்ததால், ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் மருமகளாக வாழ்க்கைப்பட போகிறோம் என்ற பெருமிதத்தில் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தேன். எங்கள் குடும்பம் வசிதியான குடும்பம். கல்யாணத்தின் போதே நகை, நட்டு விவகாரத்தில் அதிக நச்சரிப்பைக் காட்டினார் என் மாமியார். இதனால் சுமார் 100 பவுன் நகைகளை போட்டுத் தான் எங்கள் வீட்டில் அனுப்பினர். 10 பிளஸ் 5 என 15 லட்சம் வரதட்சிணையாக வாங்கினர். பிறகு படிப்படியாக 70 பவுன் நகையை என் தகப்பனார் தந்துள்ளார். இன்று என்னிடம் அவை எதுவுமே இல்லை.

டாக்டர் தொழிலைச் செய்து வந்த என் கணவருக்கு சினிமா மோகம் வந்தது.  அடுத்த சாட்டை என்ற படம் தயாரித்தார். பல லட்சம் நஷ்டம். மீண்டும் படம் தயாரிக்க ஆசைப்பட்ட அவரிடம் அதற்கு தேவையான பணம் இல்லை. அதனால் என் தந்தை 75 லட்ச ரூபாய் பணமும், என்னுடைய ஏராளமான நகைகளும் வைத்து வால்டர் என்ற படம் தயாரிக்கப்பட்டது. இப்போதும் கூகுளில் அந்த படத் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் என என் பெயர் தான் இருக்கிறது. அந்த பட டைட்டிலில் வால்டர் தேவாரத்துக்குச் சமர்ப்பணம் என்று போட்டார்கள்.

வால்டர் படமும் தோல்வி. என் பணமும், நகைகளும் மூழ்கின. பத்மா என்ற மற்றொரு வயதான உறவின மூதாட்டியிடமும் 30 சவரன் நகைகளை வாங்கி இன்று வரை அதை திருப்பி தரவில்லை. அவரும் சமீபத்தில் இறந்து விட்டார். இப்படியாக சினிமா விநியோகப் பணிகளில் ஈடுபட்ட பிரபுதிலக் அதிலும் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதால் என்னை பணம் கேட்டு நச்சரித்தார்.

முதல் குழந்தை பிரசவத்தின் போதே எனக்கு பிரசவத்தில் துணைக்கிருந்த என் அம்மாவை மிகச் மரியாதைக் குறைவாக திட்டி ஹாஸ்பிட்டலில் இருந்து கண்ணீரோடு அனுப்பினார் என் கணவர்! அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தாய் வீட்டிற்கு சென்றதற்காக பிள்ளைதாச்சி உடம்புன்னு கூட பார்க்காமல் கண்மூடித்தனமாக அடித்தார். என் கணவருக்கு கோபம் வந்தால் கையில் எது கிடைக்கிறதோ அதை வீசி எரிந்து, துவம்சம் செய்திடுவார்! ஆணாதிக்கத்தின் உச்சம் என்றால் என்ன என்பதை அவரிடம் தான் பார்த்தேன். என் மாமியார் பெண்ணுரிமையாளராச்சே என நான் நம்பி ஏமாந்தது தான் மிச்சம்! ’’பெண்டாட்டிய அடக்கி வைடா’’ என்பது தான் அவர் தன் மகனுக்கு சொல்லும் அட்வைஸே!

இதையெல்லாம் விடக் கொடுமை அவருக்கு முறையற்ற வகையிலான பல பெண்களுடான தொடர்புகள்! அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர் வீட்டிற்கே வந்து இரவில் தங்கி சென்றதை என் மாமியாரே ஆதரித்தது தான் என்னை நிலைகுலைய வைத்தது! இதையெல்லாம் நான் மனம் பொறுக்காமல் கேட்டவுடன் அவருக்கு தாங்க முடியாத கோபம் தான் வந்தது! சமயம் பார்த்து என்னை தாக்க காத்திருந்தார்!

ஒருமுறை எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் தன் தாயின் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பணம் தேவைப்படுவதாக கேட்டார். நானும் மனிதாபிமானத்துடன் ரூ 50,000 தந்து உதவினேன். அது தொடர்பாக இவர் கேட்ட போது உள்ளதைச் சொன்னேன். ஆனால், இவர்களோ போலீசை வைத்து அந்த நபரை தூக்கி வந்து வீட்டில் பெல்டால் அடித்து நொறுக்கினர். அத்துடன் நில்லாமல் என்னோடு அவருக்கு தகாத உறவு இருப்பதாக அடித்து உதைத்து சொல்ல வைத்து, அதை பதிவு செய்து கொண்டனர். இந்த காரியம் முழுக்க என் மாமியாராலும் சேர்ந்தே செய்யப்பட்டது. உனக்கு அவனை ரொம்ப பிடிக்குமா? என அசிங்கமாக கேட்டார் என் மாமியார்! அருவெறுக்கதக்க இந்த பேச்சு என் நெஞ்சை ரணப்படுத்தியது. கிடைத்த வாழ்க்கையை இழந்துவிடக் கூடாதே என நான் பொறுமை காத்தது அவர்களுக்கு மேன்மேலும் அராஜகத்தை செய்யத் தூண்டியது. ‘’அவகிட்ட இருக்க எல்லாவற்றையும் பறிச்சுட்டு வெளியே அனுப்புடா’’ என்பார் என் மாமியார்.

என் மாமியாருக்கு எப்போதுமே சூப்பிரியாரிட்டி காம்பளக்ஸ் உண்டு. எனக்கு கீழே ஒரு லட்சம் காவலர்கள் வேலை பார்த்திருக்காங்க தெரியுமா? என அடிக்கடி சொல்வார்! இப்போதும் கூட தனியாக வீடெடுத்து வசிக்கும் என்னை தன் ஆர்டர்லிகளை வைத்து வேவு பார்த்து வருகிறார். அட்வகேட்டாக பிராக்டிஸ் செய்து வரும் நான் யாராவது ஒரு ஆணிடம் பேசினாலே அது அவர்களை பொறுத்த அளவில் கள்ளக் காதலன்! பெண்ணுடன் பேசினாலோ அவள் திருடி! இது தான் அவர்கள் பார்வை! சென்னையிலும், சேலத்திலும் நான் போலீசில் தரும் எந்த புகாருக்கும் மதிப்பிருப்பதில்லை.

சமீபத்தில் ஒரு வி.ஆர். ஷாப்பிங் மாலில் என் கணவர் வேறொரு பெண் டாக்டருடன் நெருக்கமாக இருப்பதை பார்த்தேன். அந்தப் பெண் 50 வயதைக் கடந்தவர். என் கணவரை விட வயதானவர். ஏற்கனவே நான் கையும், களவுமாக பிடித்த போது என்னிடம் மன்னிப்பு கேட்டவர். ஆனால், அன்று மிகத் திமிராக அவர் என் கணவை உரிமை கொண்டாடி நீ என்ன வேணா செய்து கொள் என்றார். என் கணவரோ கூட இருந்த என் பெற்றோரை அசிங்கமாகத் திட்டினார். இதற்கிடையில் அந்தப் பெண்ணுக்கும், எனக்கும் கைகலப்பு ஏற்பட்டுவிட்டது. அது சோசியல் மீடியாவிலும் வைரலாகிவிட்டது. இதில் நான் தான் முதலில் புகார் செய்தேன்.

ஆனால், என் மாமியார் தன் செல்வாக்கை பயன்படுத்தி தன் மகனின் கள்ளக் காதலி கொடுத்த புகாரில் ஏதோ ஒரு தீவிரவாதியை கைது செய்வது போல 10 போலீசாரை என் வீட்டிற்கு அனுப்பி என்னை தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்ய வைத்துள்ளார்! என் இரண்டு குழந்தைகளையும் அள்ளிக் கொண்டு சென்றுவிட்டனர். தற்போது நான் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். தப்பு செய்தது அவர்களாக இருந்தும் தண்டிக்கப்படுவது நானாக இருக்கிறேன். அது தான் அதிகாரத்தின் சக்தி! நான் நேர்மையை மட்டுமே முதலீடாகக் கொண்டு போராடி வருகிறேன். இனி ஆண்டவன் விட்ட வழி என்றார் ஸ்ருதி!

நாம் இது தொடர்பாக மருத்துவர் திலக்கிடம் விளக்கம் கேட்டோம். அவர் கூறியதாவது; என் மனைவி எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். என் கல்யாணமே எளிமையாகத் தான் நாட்ந்தது. அவர்கள் தந்ததாகச் சொல்லும் நகை, பணம் அவ்வளவும் பொய். நாங்க இரண்டு பேரும் சந்தோஷமாகத் தான் வாழ்ந்தோம். நான் என்  மனைவியை அழைத்துக் கொண்டு சிங்கப்பூர், மலேசியா எல்லாம் சென்றுள்ளேன். சென்ற வருடம் டிசம்பரில் கூட பாண்டிச்சேரி சென்றோம். இந்த வருடம் செப்டம்பர் 25 வரை ஸ்ருதி என்னோடு தான் இருந்தாங்க. தீடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்!

அவர்களை சட்டப் படிப்பு படிக்க வைத்ததே நான் தான்! நான் அவர்களை அடித்ததாகச் சொல்வது உண்மையில்லை. அவர்களை பற்றி என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. நீங்கள் நேரில் வந்தால் காட்டுவேன். அதிர்ந்துவிடுவீர்கள். அவை அனைத்தையும் நான் கோர்ட்டில் சமர்பிக்க உள்ளேன். என் தோழி என்று அவங்க சொல்வது எனக்கு வேலை தந்துள்ள முதலாளி அம்மாவை! அவங்க மருத்துவமனையில் தான் நான் வேலை பார்க்கிறேன். ஸ்ருதி என் தாயின் பெயரை கெடுப்பதற்காக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்! என் குழந்தையின் தகப்பனாக இந்த விஷயத்தை பார்க்கிறேன். மனம் வலிக்கிறது. என் குடும்ப விஷயத்தை பொதுவெளியில் அதிகம் பேச வேண்டாம் என்று அமைதியாக உள்ளேன். இந்த பிரச்சினை குறித்து நீங்கள் எழுதாமல் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து”என்றார்

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time