மறக்கக் கூடாத மாபெரும் ஆளுமை மால்கம் ஆதிசேசய்யா!

-சாவித்திரி கண்ணன்

உலகப் புகழ் கல்வியாளராக, பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா ஒரு தமிழர். இவர் யுனெஸ்கோ மூலமாக உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்திய கல்வி, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் பங்களித்தவர்! இந்த நூல் இந்திய சமூக, பொருளாதாரம் பற்றிய அவரது அரிய பதிவுகளாகும்!

மால்கம் ஆதிசேசய்யா வேலூரில் பிறந்தவர். லயோலா கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிங்ஸ் காலேஜ், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிஸ் போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்! பிறகு சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் ஆறாண்டுகள் பணியாற்றியவர்!

பிறகு, ஜெனீவாவில் உள்ள உலக பல்கலைக் கழக சேவை மையத்தில் பணியாற்றினார். அதன் பிறகு 23 ஆண்டுகள் இவர் யுனெஸ்கோவில் துணை இயக்குனர் நாயகம் என்ற உயர் பொறுப்பில் இருந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் கல்வி, தொழில், கலாச்சார மீட்டெடுப்புக்கு பெரும் தொண்டுகள் ஆற்றியுள்ளார். யுனெஸ்கோ மூலம் திருக்குறளை முதன்முதலாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்துக் கொண்டு வந்தார்! மேலும் 1970ல் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாவதற்கு யுனெஸ்கோவில் இருந்து நிதி உதவி பெற்றுத் தந்தார்.யுனெஸ்கோ மூலமாக தமிழகத்தின் பாரம்பரிய கோவில்களை புனரமைக்கவும் , பாதுகாக்கவும் வழி வகுத்தார்!

இவ்வளவு உலகளாவிய அனுபவத்தை பெற்று சென்னை வந்த மால்கம் ஆதிசேசய்யாவை சென்னை பல்கலைக் கழக துணைவேந்தராக பொறுப்பேற்கும்படி அன்றைய முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கேற்ப 1975 தொடங்கி மூன்றாண்டுகள் செயலாற்றினார். உண்மையில் அந்த காலகட்டம் தமிழக கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது! இந்த காலகட்டத்தில் தான் அதிகார குவிப்பை தடுக்க கோயம்பத்தூரிலும், திருச்சியிலும் சென்னை பல்கலைக் கழகத்தின் உயர் கல்வி மையங்களை தோற்றுவித்தார். அப்படி அவர் தோற்றுவித்த நிறுவனங்களே பிற்காலத்தில் பாரதியார் பல்கலைக் கழகம் என்றும், பாரதிதாசன் பல்கலைக் கழகம் என்றும் வடிவம் கண்டது. மேலும் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்படவும் முதன் முதலாக இவரே வழிகோலினார்.

பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பாரீஸ் நகரில் நடப்பதற்கு காரணமாக இருந்தவர் மால்கம் ஆதிசேசய்யா என்பது! அவரால் உருவாக்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் உருவாக்கமாக இந்த நூல் வெளிவந்துள்ளது! மறக்கக் கூடாத மாபெரும் ஆளுமை மால்கம் ஆதிசேசய்யா என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் திட்டக் குழு உறுப்பினராக இருந்து தமிழக வளர்ச்சிக்கும் அரும் பெரும் தொண்டுகள் செய்துள்ளார். இந்திய அரசு யோஜனா என்ற பெயரில் ஒரு இதழ் கொண்டு வந்தது. அதை அப்படியே திட்டம் என்ற பெயரில் தமிழில் வரக் காரணமானவர் ஆதிசேசய்யா தான்! யோஜனாவிலும், திட்டத்திலும் அவர் 1980 ல் இருந்து 1994 வரை எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஒரு பெரும் பொக்கிஷமாகும்!

அந்த காலகட்டத்தின் இந்திய பொருளாதார வளர்ச்சியை புரிந்து கொள்ள விரும்பும் எவருக்கும் இந்தக் கட்டுரைகள் ஒரு தெளிவை தரும்! அதுவும் குறிப்பாக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களை பற்றியும் பாரபட்சமில்லாமல் அதன் நிறை, குறைகளை விளக்கி அவர் எழுதிய கட்டுரைகள் காலக் கண்ணாடியாகத் திகழ்கின்றன. அவற்றை இந்த நூலில் நாம் வாசிக்க முடியும். வளர்ச்சியும், சமூக நீதியும் ஒன்றுக் கொன்று பொருந்தாமல் உள்ளன என்றால், அது ஏன் என்பதை புரிந்து கொள்வதற்குச் சென்ற முப்பதாண்டு காலத்தில் யார் வளர்ச்சி பெற்றார்கள் என்பது மட்டுமின்றி, எது வளர்ச்சி பெற்றது என்ற வினாவிற்கு விடை காண வேண்டும் என மால்கம் ஆதிசேசய்யா கூறியுள்ளது கவனத்திற்கு உரியது.

நிலச் சீர்திருத்தங்களை – அதாவது நில உச்ச வரம்பை வலுவாக அமல்படுத்தி, உபரியாக உள்ள நிலங்கலை ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதை  மால்கம் ஆதிசேசய்யா மீண்டும், மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இந்த நூலை வெகு சிறப்பாக தொகுத்துள்ளார் ஆ. அறிவழகன்!

நூல்; இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள்

ஆசிரியர்; மால்கம் ஆதிசேசய்யா

தொகுப்பு; ஆ. அறிவழகன்

வெளியீடு; சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்,

79, இரண்டாவது பிரதான சாலை,

அடையாறு,சென்னை; 600020

தொலைபேசி; 044 -24412589

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time