ஆளுநர் எதிர்ப்பு உண்மையா? பாசாங்கு அரசியலா?

-சாவித்திரி கண்ணன்

‘சபாஷ்! இப்போதாவது திமுகவிற்கு ஆளுநரை எதிர்க்கும் துணிச்சல் வந்திருக்கிறதே..’ என்று கொஞ்சம் நம்பிக்கை துளிர்விடுகிறது! எனினும், சில மர்மங்களுக்கு பதில் இல்லை! ஏனெனில், பல விவகாரங்களில் திமுக அரசின் செயல்பாடுகள் புதிர் நிறைந்தவையாக உள்ளன!

கள்ளங் கபடமில்லாத பழங்குடிகள் வாழும் நாகலாந்து மாநிலத்தில் ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்த போது, அவர்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் செய்து, அங்கு குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கி அங்கிருந்த நல்லிணக்கத்தை சீர்குலைத்தார்! இவர் நாகலாந்தில் இருந்து தமிழகம் மாற்றப்பட்ட போதே, ‘இது ஆர்.என்.ரவியைக் கொண்டு தமிழக ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கும் நோக்கத்திற்கான பாஜகவின் சதித் திட்டம்’ என நாம் அறத்தில் எழுதினோம்.

அந்தப்படியே அவரும் இயங்கினார்! ஆளுனர் தமிழகத்தில் நாளும்,பொழுதும் துணிச்சலாக ஆர்.எஸ்.எஸ்.பிரச்சாரகர் போல வலம் வந்தார். பிற்போக்குத்தனமான சனாதன கருத்துக்களை முன்மொழிந்தார். திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசினார்! அதற்கு திமுக அரசு சரியாக எதிர்வினை ஆற்றவில்லை! அப்போதே நாம், ‘அறத்தில் அடித்து முன்னேறும் கவர்னர்! அடங்கி பின் வாங்கும் அரசு’ என எழுதினோம்!

தமிழகத்தின் கோடை வாசஸ்தலத்தில் தமிழக அரசின் செலவில் தன்னிச்சையாக ஆளுநர் துணைவேந்தர்களை அழைத்து கல்வி மாநாடு நடத்தி காவிக் கொள்கைகளை வலியுறுத்தினார்! அரசு நிர்வாகம் ஒத்துழைக்காமல் ஆளுநரால் இப்படி ஒரு  மாநாட்டை நடத்த முடியாது! மேலும் இதில் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக அரசு முடிவு எடுத்திருப்பார்களே யானால், எந்த ஒரு துணைவேந்தருக்கும் அங்கு போகும் தைரியம் வந்திருக்காது. இதைச் செய்யும் தமிழக அரசுக்கு இல்லாமல் போனது துர்அதிர்ஷடமாகும்!

மற்றொரு பல்கலை நிகழ்வில் ஆளுனர் பேசிய கருத்துக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதே மேடையில் அழகாகவும், தெளிவாகவும் பதில் தந்தார். இதையடுத்து அடுத்த பல்கலைக் கழக பட்டமளிப்பு நிகழ்வில், ‘நான் பேசிய பிறகு யாரும் பேசக் கூடாது’ என நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைத்தார் கவர்னர். இதற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் பொன்முடி, ”உயர்கல்வி அமைச்சர் இறுதியாக பேசுவது தான் மரபு! அந்த மரபு கவர்னரால் மாற்றி அமைக்கப்பட்டதால் நான் கலந்து கொள்ளமாட்டேன்” என்றார். இது கவர்னருக்கு மேலும் செளகரியமாகிவிட்டது! கல்வி மேடைகளை எல்லாம் காவி மேடையாக்குவதற்கு! ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த விழாவை நடத்துவது தமிழக அரசு தானேயன்றி மத்திய அரசல்ல! தமிழக அரசு நிர்வாகத் தரப்பு, ”நாங்கள் நிகழ்ச்சி நிரலை மரபை மீறி மாற்ற முடியாது” என கவர்னருக்கு கறாராகச் சொல்ல முடியும். ஆனால், சொல்லத் துணிவில்லை!

தமிழக கவர்னர் இன்று வரை 20 மசோதாக்களை நிறைவேற்றாமல் நிலுவையில் வைத்துள்ளார். நாம் அறத்தில் தொடர்ந்து வலியுறுத்தியது என்னவென்றால், இவை அனைத்தையும் பட்டியலிட்டு, இந்த மசோதாக்களை  நிறைவேற்றாததால் தமிழக மக்களுக்கு என்னென்ன இழப்புகள் என ஒரு அறிக்கை பொதுவெளியில் தர வேண்டும் என்றோம். ஆனால், கடைசி வரை இதை வெளிப்படுத்தும் துணிச்சல் திமுக அரசுக்கு வரவில்லை. ஒன்றிரண்டு  நீட் விலக்கு போன்ற ஒன்றிரண்டு மசோக்களை மட்டுமே சொல்லிவிட்டு விட்டனர்.

இந்தச் சூழலில் முதல்வர் மீண்டும், மீண்டும் கவர்னர் மாளிகைக்கு படையெடுத்து சென்று வலியுறுத்திய போதும் கவர்னர் அசைந்து கொடுக்கவில்லை. அப்போது, சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஏப்ரல் 18ல் முதலமைச்சர் ஸ்டாலின் கவர்னரின் தேநீர் விருந்தை தவிர்த்தற்கு சமாதானம் செய்ய இவ்வாறு கவர்னரின் மனம் நோகாமல் பேசினார்.

மாண்புமிகு ஆளுநருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை. தனிப்பட்ட முறையில் தமிழக ஆளுநர் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரான எனக்கும் மிகமிக சுமூகமான உறவு இருக்கிறது. நேரில் பேசும்பொழுது இந்த ஆட்சியின் செயல்பாடுகளை மிகவும் பாராட்டி ஆளுநர் பேசியிருக்கிறார். ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர். எங்களுக்கு அதிகமான மரியாதையை அவர் தருகிறார். ஆளுநர் என்ற முறையில் நாங்களும் அந்தப் பதவிக்கான மரியாதையை அளிக்கிறோம், தொடர்ந்து அளிப்போம்” எனத் தெரிவித்தார்.

இங்கே கவனிக்க வேண்டியது பிரச்சினை தமிழக நலன் சம்பந்தப்பட்டதேயன்றி கவர்னருக்கும், முதல்வருக்குமான தனிப்பட்ட உறவு சம்பந்தப்பட்டதில்லை. தமிழக நலன்களை கவர்னர் அலட்சியப்படுத்துவது ஏற்புடையதல்ல, கண்டணத்திற்கு உரியது என்று தான் பேசி இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் நியமனத்திற்கு ஒரு கமிட்டி அமைத்து தமிழக அரசு பல்வேறு விண்ணப்பங்களை பரிசீலித்து மூவரை சிபாரிசு செய்திருந்தது! ஆனால், கவர்னரோ மாதக் கணக்கில் அந்த பரிந்துரையை பரிசீலிக்காமல், துணைவேந்தரே இல்லாத அவல நிலைமையை உருவாக்கியதோடு, இறுதியில் மூவரையும் நிராகரித்து விட்டு, ஓய்வு பெற்று ராமாயண, மகாபாரத உபன்யாசங்கள் செய்து கொண்டிருந்த சுதா சேஷய்யனையே மீண்டும் தன்னிச்சையாக நியமித்தார். அதற்கு சின்ன எதிர்ப்பு கூட தமிழக அரசிடம் இருந்து எழவில்லை! இந்த அவமானத்தை வெளியில் பேசவும் துணிவின்றி, தமிழக அரசு மெளனம் சாதித்தது! இதையும் நாம் அறத்தில் சுட்டிக் காட்டினோம்.

அயோத்தியா மண்டப விவகாரத்தில் அங்கு நிர்வாகத்தில் இருந்த ஒரு கோஷ்டி பல பொருளாதார முறைகேடுகளை தொடர்ந்து செய்து வந்தததுடன், அங்கு சிலை பிரதிஸ்டை செய்து வழிபாட்டுத் தளமாக்கியதன் விளைவாய் அதை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அற நிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தார். அதை கோர்ட் தீர்ப்பும் உறுதிபடுத்தியது. இதையடுத்து அயோத்தியா மண்டபம் தமிழக அரசு அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் வந்தது! அந்த கோஷ்டி மேல் முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டில் தமிழக அரசு பல ஆவணங்கள் இருந்தும் தன் தரப்பு நியாயங்களை வைக்காமல் விட்டுக் கொடுத்தது! இதையடுத்து அயோத்தியா மண்டபம் மீண்டும் மோசடி கோஷ்டி வசமே சென்றது. இதற்கு பின்னணியில், ‘மோசடி கோஷ்டிக்கு ஆதரவாக கவர்னர் ஆர்.என்.ரவி  தமிழக அரசுக்கு தந்த அழுத்தமே காரணம்’ என தெரிய வந்த போது மிகுந்த விரக்தியே நமக்கு ஏற்பட்டது!

இப்படியாக ஒன்றல்ல, இரண்டல்ல, பல விவகாரங்களில் தமிழக அரசு கவர்னருக்கு பணிந்து போனது! இது போதாது என்று மோடியுடம் தமிழக முதல்வர் செஸ் விளையாட்டு போட்டியின் போது காட்டிய மிதமிஞ்சிய அன்னியோன்யம் கடும் விமர்சனங்களை திமுக அரசுக்கு பெற்றுத் தந்தது! ஏற்கனவே ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அடக்கி வைக்கப்பட்ட நிகழ்வையும் தமிழகம் கண்டது!

சமீப காலமாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத சட்ட, திட்டங்களையும் தமிழக அரசு சத்தமில்லாமல் அமல்படுத்தி வருகிறது. இங்கே குறிப்பாக ஒரு சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறோம்.

# தேசிய கல்விக் கொள்கை சத்தமில்லாமல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது

# 2019 ல் ஒன்றிய அரசின் மோட்டார் வாகனச் சட்டத்தை தற்போது சிரமேற்கொண்டு அமல்படுத்தி, மிக கடுமையான அபராதங்களை வாகன ஓட்டிகளின் மீது திணித்துள்ளது.

# எல்லாவற்றுக்கும் சிகரமாக மத்திய அரசு கொண்டு வரவுள்ள பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஏதுவாக ஒரு கமிட்டியை அமைத்துள்ளது திமுக அரசு. அந்த கமிட்டியின் தலைவர் முன்னாள் நீதிபதி சத்திய நாராயணன். இதில் உள்ள மேலும் இரண்டு உறுப்பினர்கள் ஓம் பிரகாஸும், பிரபுவும் தீவிர இந்துத்வர்கள்! இந்த நிலையில் பெயரளவுக்கு அப்துல் முபீன் என்ற ஒரு முஸ்லீம் பெயர் தாங்கியையும் நியமித்து உள்ளது தமிழக அரசு! முதலாவதாக இதற்கு ஒரு குழு அமைக்கும் முடிவே கண்டணத்திற்கு உரியது. அதையும் இந்துத்வர்களை பெரும்பான்மையாகக் கொண்டு அமைத்திருப்பதை எப்படி புரிந்து கொள்வது?

அதே போலத் தான் கல்வி தொலைக்காட்சிக்கு ஆர்.எஸ்.எஸ்காரான மணி கண்ட பூபதியை நியமித்தது தமிழக அரசு. அதை ஆதாரங்களுடன் அறம் இதழில் நம் அம்பலபடுத்தியதைத் தொடர்ந்து எழுந்த கண்டணங்களை அடுத்து வாபஸ் வாங்கியது திமுக அரசு!

ஆகவே தான் நமக்கு தற்போது தீடீரென திமுக அரசு கவர்னரை எதிர்ப்பதையும், அவரை வாபஸ் வாங்கக் கோரி போராடுவதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘திமுக அரசு பாஜகவிற்கு பணிந்து போகிறது’ என்ற பரவலான குற்றச்சாட்டை ‘மடை மாற்றும் யுக்தியா?’ என்ற சந்தேகமும் வலுக்கிறது.

கவர்னர் என்பவர் தனிமனிதரல்ல, அவரை இயக்குவது பாஜக அரசு. மோடியும்,அமித்ஷாவுமே கவர்னரை இயக்குகிறார்கள்! பாஜக தலைமையின் விருப்பதையே கவர்னர் நிறைவேற்றுகிறார். பாஜவின் மீதான எதிர்ப்புகள் மழுங்கிப் போன நிலையில், அது எய்த அம்பை எதிர்த்து போராடுவது எங்கனம் சரியாக இருக்கும்?  ‘கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்ப்பது என்பது, தமிழக மக்களிடம் திமுக அரசு, தான் இழந்த செல்வாக்கை மீட்டு எடுக்கும் பாசாங்குத்தனமா?’ என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time